Showing posts with label குறள் மழை. Show all posts
Showing posts with label குறள் மழை. Show all posts

Saturday, 20 July 2013

குறள் மழை - 8


இந்த பகுதியில் நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான அதிகாரத்தை நாம் காணவிருக்கிறோம். அறத்துப்பாலின் எட்டாவது அதிகாரமும் இல்லறவியலின் நான்காவது அதிகாரமுமான, "அன்புடைமை"

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர்  பூசல் தரும்.

அன்பை மறைக்கவும்  முடியுமோ?
நம்மால் அன்பு கொள்ளப்பட்டவருக்கு
சிறு துன்பம் நேரினும்
நம் விழி வடிக்கும் கண்ணீரே காட்டிவிடுமே!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லை ...
எல்லாம் எனக்கே !!
அன்பு உண்டு......
என் உடலையும் சேர்த்து எல்லாம் உனக்கே!!

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

உடலும் உயிரும் போல
அன்பும் செயலும் இணைந்திருத்தாலே சிறப்பு

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு


அன்போடு உறவாடு ....
அது வெற்று உறவோடு நில்லாது
நட்பு என்னும் சிறந்த செல்வத்தை நமக்கு ஈட்டித் தரும்!

 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு


சிறப்பு அனைத்தும்
சிரந்தாழ்த்தி வந்தடையும்
அன்பு என்னும் மந்திரச் சொல் உரைப்பின்!

அறத்திற்கே அன்புசார் பென்ப  அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

ஒழுக்கச் செயலுக்கு மட்டும் வேண்டுமாம் அன்பு ....
விழுப்புண் தரும் வீரத்திற்கு வேண்டாமா?
வேண்டும்!!!

என்பி லதனை வெயில்போலக்  காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பில்லா புழுவை
வெயிலானது வாட்டி வதைப்பதைப் போல....
அன்பில்லா மனிதனை
அறக்கடவுள் வாட்டி வதைப்பார்!

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பாலைவனத்து மரமும் பூக்குமோ
இலையும் காய்க்குமோ!!
அது போல...
அன்பில்லா நெஞ்சம்
இன்பத்தையும் காணுமோ!!!

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

கண்கள் அழகாய் இருப்பினும்
இதழ்கள் எழிலோடு கொஞ்சினும்
தேகம் எல்லாம் அழகோவியமாய்க் காட்சியளிப்பினும்
என்ன பயன்!!
அன்பு என்னும் அக அழகு இல்லாவிடில்!

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

வெறும் எலும்பும் சதையும் சேர்த்தால்
மனிதன் என பெயரிட்டுவிடலாமா?
இல்லை.....

அன்பு என்னும் அக அழகு பூண்டவனே முழு மனிதன்!!!

குறள் மழை - 7


இந்த பகுதியில் நாம் காணவிருக்கும் அதிகாரம், அறத்துப்பாலின்  ஏழாவது அதிகாரமும் இல்லறவியலின் மூன்றாவது அதிகாரமுமான, "புதல்வரைப் பெறுதல்"


பெறுமவற்றுள்  யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

அறிவும் திறனும் வாய்ந்த பிள்ளையேனும்
பொன்னும் பொருளும் பெரிதோ!
அண்டம் எல்லாம் அலையினும்
இப்பிள்ளைச் செல்வம் எளிதோ!


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட்  பெறின்

பண்பும் பணிவும் நிறைந்த என் மகனை ஈன்றதால்
முப்பிறப்பும் இப்பிறப்பும் எப்பிறப்பும்
பழியும் பிணியும் என்னைத் அண்டா!


தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

என் பிள்ளை என் செல்வம் என்பார் அறிந்தோர்
ஏன் எனில் ,
நம் வினையின் பயனை நாமே பெறுவோம்


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

என் பிஞ்சின் பஞ்சுவிரல்கள்   தொட்டு ஊட்டியக்
கூழும் இனிமையே 
வானோர்கள் கடைந்த அமிழ்தைக் காட்டிலும்!


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம்  செவிக்கு

எம்மகன் அவன் தேகம் தீண்டி
அவனை அள்ளித் தழுவிக்கொண்டதில் 
என் உடல் சிலிர்த்துப்போனேன்....
மழலையில் கொஞ்சித் தவழும் அவன் சொல்லைக் கேட்டு
செவி குளிர்ந்து போனேன்....


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

மூங்கில் கொடுத்த புல்லாங்குழலும்
மேலானவர் தீண்டும் யாழும் இனிதோ!
என் பிள்ளையின் மழலையைக் காட்டிலும்!


தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

அவையில் முதனிலையாம் என் மகன்...
ஆகா! இதனினும் ஒரு நன்றி அவனுக்கு செய்யத் தகுமோ!


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

சான்றோனான என் மகன் !
என்னையும் சேர்த்து
மண்ணுலக உயிர்க்கெல்லாம்
பெருமை சேர்க்கிறான்!
சான்றோனான என் மகன் !


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

கோடி நிலவுகள் என்னை சூழ்ந்ததினும்
பேருவகைப் பெற்றேனடா நீ பிறந்த அக்கணம்!
அதனினும் இன்பம் இப்போது உன்னை
சான்றோன் என  கேட்கும் இக்கணம்!


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கோல்எனும் சொல்.

புண்ணியம் பல செய்தானோ ?
திண்ணிய அறிவுடைய இத்தகையப் பிள்ளையைப் பெற ...
என
எண்ணி எண்ணி அனைவரையும் வியக்க வைப்பான்
நன்றியாய்....

தன்னைச் சான்றோனாக்கிய தந்தைக்கு!

Saturday, 11 May 2013

குறள் மழை - 6



இல்லறவியலின் இரண்டாவது அதிகாரமும் அறத்துப்பாலின் ஆறாவது அதிகாரமுமான, "வாழ்க்கைத் துணை நலம்" இந்த மாத இடுகையாக!


மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பிறந்த வீட்டுக்கும்
புகுந்த வீட்டுக்கும்
பெருமை சேர்த்து
புதுமை பொதித்து
பெற்றப் பணத்தில்
பெருமிதமாய் வாழ்பவளே
இனிய வாழ்க்கைத் துணையாள்!


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

கோடி கொடியாய்க் கொட்டிக்கிடப்பினும்
கட்டிக்கொண்டவள் குணமற்றுப் போனால்
இல்லறம் மணமற்றுப் போகும்


இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

நற்குணம் கொண்ட கொண்டவளைக் கொண்டவன்
கொள்ளாதது தான் என்ன!
நற்குணம் கொள்ளாக் கொண்டவளைக் கொண்டவன்
கொண்டது தான் என்ன!


பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

ஒருவனுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்க
கற்பென்னும் கருமணியை
கருத்தாய்க் காத்து
கொண்டவனுக்கேக் கொடுப்பவளைக் காட்டிலும்
அவனுக்கு எதுவும் பெரிதல்ல!


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

திடமான தெய்வமென
தினம் தினம்
உன்னை மட்டுமே தொழுதெழும்
உன்னுயிர்த் தோழி
பெய் என்றால்
மழையும் பொழியும்
இயற்கைப் பணியும்


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

மனம் காத்து
குணம் காத்து
தன்மானம் அதைக் காத்து
கணவன் தன் புகழ்க் காத்து
குடும்பக் கோவிலைச் செய்பவள் தான் மனைவி!


சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

நல்லொழுக்க நகை சூடி
கரும்பெட்டியிலே அவளைப் பூட்டி வைத்து
பெரும் சாதனைப் புரிந்துவிட்டதாய் நினைக்கும் கணவனே கேள்!
அவள் ஒழுக்கத்தை அவளாலன்றி வேறு யாராலும் காக்க முடியாது.


பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

சீரும் சிறப்பும் கொடுத்து
சீக்கில்லா செம்மையான வாழ்க்கையை
தன் கணவனுக்குக் கொடுக்கும் மனைவிக்கு
மேலுலக எட்டாக் கனியும் எட்டும்!


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழ்ப் போற்றும் பெண் கிட்டாதவன்
பழித் தூற்றும் படையர் முன்
புழுதி நோக்கி பயனிக்கலாகிறான்!


மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

நர்குணமாம் அவள் அழகு
நற்பேறு அவள் அணிகலன்
இவை முன் புற அழகு புரண்டோடும்
அக அழகு நிறைந்தாடும்!

Monday, 1 April 2013

குறள் மழை - 5


திருவள்ளுவரின் அடுத்த அதிகாரம், இல்வாழ்க்கை. இது  இல்லறவியலில் அடங்குகிறது. இது திருக்குறளின் 5-வது அதிகாரமாகவும் இல்லறவியலின் முதல் அதிகாரமாகவும் திகழ்கிறது. இதனை இப்போது ருசிப்போமா? ஆயிரம் உறவுகள் கிடைப்பினும் ஒரு மனிதனின் வாழ்வு முழுமை பெறுவது அவன் இல்லறத்தில் தான். இல்வாழ்க்கையை சுபமாக அமைப்பதெப்படி? இதோ வள்ளுவனே கூறுகிறான் கேளுங்களேன்.

'
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

மங்கையை மணந்தான்,
மாசிலா பெற்றோரையும்
மதிப்பில்லா பிள்ளையையும்
மறியாதைத் தவறா உறவுகளையும்
பேணிக் காப்பான்!



துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

பெண்ணின் கரம் பிடித்து 
அவளின் மனம் பறித்தவன் என்பவன்....
துறவு கொள்ளும் துறவியர்
இறவு கொள்ளும் இல்லாதவர்
இறப்பின் மடியில் உறங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும்
உதவும் பொருட்டு
இப்பூவுலகில் பிறந்த நல்லவன்....



தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

கணவன் என்பவன் 
கீழ்வரும் ஐவரை ஓம்பி ஒழுக வேண்டும்!
அவர்கள்....
இறப்பைத் தழுவியோர்
மேல் உலகின் தேவர்
வாசல் தேடி வரும் விருந்தினர் 
நம் நலம் நாடும் சுற்றத்தார்
கணவன் ஆகிய தான்!!




பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பழி ஒன்றும் பட்டுவிடுமோ என 
பற்றற்று பொருள் சேர்த்து
பரந்த மனத்துடன் 
பலருக்கும் பகிர்ந்தளிப்பான் பரம்பரை
என்றும் அழியா!
அறிவோம் இதை அவன் வழியாய்!



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


பெற்றப் பிள்ளை மீது அன்பு
மற்ற உற்றார் இடத்து அறன்
இவ்விரண்டும் பேணி இல்லறம் நடத்தும்
இவன்
 வாழ்வின் பண்பும் பயனும் அதுவே!
காணலாம் இந்தப் படைப்பை பேருந்துகளில்
எனினும் இதுவும் ஒன்று நம் மனதில் புணைய வேண்டிய பெரிய உந்துகளில்




அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப்
 பெறுவ எவன்.

பிழையாமல்
பிறரை பிழைக்காமல்
அற வழியில்
அன்போடு இல்லறம் நடுத்துபவன்

இல்வாழ்க்கையைத் தவிற பிற இன்பங்களைத் தேடுதல் அரிது!


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை. 


இறைவனை நாடி 
அவனிடத்து சேரும் வழிகளுள் 
தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்க்கெல்லாம் முதலானவன்!
கணவன் என்னும் கொள்கை பிழைக்காமல் பிழைப்பவன்!!


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 

நோற்பாரின் நோன்மை உடைத்து. 


முற்றிலும் பற்றற்று 
எல்லாவற்றையும் துறந்த 
துறவப் பொறுமையின் தலைகனமும் குறைந்திற்று 
இல்லறம் புகுந்து 
நல்லறம் புணர்ந்து
சொல்லும் வண்ணம் வாழும் 
கணவன் இவன் தன் வாழ்க்கையைக் கண்டு


அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

இல்ல அறத்தில் இல்லை துறம் 
துறவும் பிழையுமானால் அதில் எங்கே அறம் !
எனவே தான் 
இல்லற அறம் துறவைக் காட்டிலும் ஓங்கி நிற்கிறது!



வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் 
தெய்வத்துள் வைக்கப் படும். 


கீழ் உலக இல்லத்தில் 
அறம் பூண்டு வாழும் இவன்
மேல் உலகின் 
தேவர்களுள் ஒன்ரெனக் கருதப்படுவான்!

ஜெய கீதா

Wednesday, 6 March 2013

குறள் மழை - 4



ஒழுக்கத்திற்கு பெயர் போன முனிவர் தம் பெருமையை அழகாய் சொல்லி இருக்கிறார் வள்ளுவர் அவரது மூன்றாவது அதிகாரத்தில். இதோ அறத்துப்பாலின் பாயிரவியலில் மூன்றாவது அதிகாரமான, 'நீத்தார் பெருமை" , என்னே அருமை.

ஆசைகள் அனைத்தும் துறந்து
நன்னெறி எதுவென அறிந்து
அதன்படி நின்றும் நடந்தும் காட்டும் முனிவர் தம்  அருமை
அதை நூல்கள் தம்முள் ஏற்று கற்பிப்பதே அவைகளின் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
 -
எண்ணிலும் அடங்குமோ
முனிவரின் புகழும் அது
இதுவரை
பிறந்தார் எத்தனைப் பேரோ
இறந்தார் எத்தனைப் பேரோ
அவர் புகழின் எண்ணிக்கையும் அதைப் போன்றது

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து 
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
-
பிறப்பு பேறு என்னும்
இரண்டின் இன்ப துன்பங்களை எண்ணியும்
திண்ணிய நெஞ்சம் கொண்டு துறவறம் ஏற்ற  முனிவரின் பிறப்பு
இவ்வுலகின் சிறப்புகளுளெல்லாம் சிறப்பு!

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
-
அன்குசமாம்  நம் அறிவு
அதைக் கொண்டு புலன்கள் ஐந்தும்
நலன்கள் அற்று துறந்திட்ட
முனிவனுக்கே கிட்டும்
முக்தி அது எட்டும்

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
-
புலன் ஐந்தும் புதைத்தவன்
தேவாதி தேவனான இந்திரனுக்கு நிகர்
இதனை அறியாதவனே
உன் அறியாமையைத் தகர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
-
புலன்களை அடக்கி ஆளுதல்
புவியை அடக்கி ஆளுதலை ஒத்தது
கடினமான இதனை எளிதாய் செய்வர் முனிவராகிய பெரியர்
எளிதானதை கடினமென காண்போர் சிறியர்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
-
சுவை
ஒளி
தொடு உணர்வு
ஓசை
மணம்
இவை ஐந்தின் வகை அறிவான்
இவ்வுலகையே  தன் வசமாக்கிய துறவன் அவன்

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
-
தந்திரம் இல்லா மாந்தர் இவரின்
மந்திரம் பூண்ட சொற்கள் அவை
எந்திர வேகத்தில் திக்கெட்டும் தீட்டிவிடும்
இவர்களின் புகழோவியத்தை காட்டிவிடும்!

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
-
குணமென்னும் மலையின் உச்சியில் நிற்பினும்
தடுத்திடவும் முடியுமோ
நொடிப்பொழுதே ஆயினும்
தடித்தெழுந்த இவரின் சினத்தையும்!

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
-
உயிர்கள் அனைத்தும் ஒத்தவை என
அருள் அதன் அளவு ஒரேபோல் காண்பித்து
உச்சியில் நிற்கும் முனிவன்
நிச்சயம் ஒரு மேன்மையானவன்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


                                                                             ஜெய கீதா

Thursday, 17 January 2013

குறள் மழை - 3



தென்னவன் எவனாயினும் தன்னைத் தலை நிமிர்ந்தே பார்க்க வேண்டும் என வரம் பெற்று வந்திருப்பானோ என்னமோ ... இந்த நீல மேனி கொண்டவனின் பெருமையை என் வள்ளுவனைத் தவிர எவரால் இத்தனை சிறப்பாய்க் கூற முடியும். இதோ அறத்துப் பாலின் இரண்டாவது அதிகாரமான "வான் சிறப்பு" அவன் மொழியாய் என்னில்!

நம் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழுக வைக்க
தான் முழுகாமல்இருந்து
மழைப் பிள்ளையை ஈன்றெடுத்து
நம் வாழ்வின் அமிழ்தத்தை நமக்கு ஊட்டிய
இவளின் சிறப்பு
இவனின் உற்ற படைப்பு...

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

சல சலவென சாரல் அடிக்க
தள தளவென செடிகள் திளைக்க
மள மளவென திண்டிகளைத் தயாரித்தருளும்
மழை உணவு
வற்றிய பூமிகளின் பெரும் கனவு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

அண்டங்காக்கும் கடவுள் கடலாய் திகழ்ந்தாலும்
ஆகாயம் கொடுக்கும் மழை பொய்த்துவிடின்
நம் பிழைப்பும் நிலைக் குலைந்துவிடும்
மழையைக் கடவுளாய் வணங்கும் என் ஆசான்
என்றும் பொய்த்து பேசான்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

மழை இல்லையேல் உழவில்லை
இதனை விழையோடு விரும்பி விளித்திருக்கும்
வள்ளுவன் வியப்பின் விளிம்பு

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

பொழிந்தால் பலனும்
பிழைத்தால் பளுவும்
கொடுப்பது மழையே
இவன் தந்த இவ்விரண்டடி குறள்
இப்பொருள் பொதித்து பொறித்து வைத்திருக்கிறது
இந்த அரிய கருத்தை...

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

துளியின் துள்ளல் துளியும் தன்னைத் தொடாவிடில்
புல்லுக்கும் பாலூட்டுமோ இப்பரந்த புவி!
துல்லியமாய் தந்திருக்கும் இக்கருத்து
இணையில்லா இவனின் செருக்கு!

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைக்காண் பரிது

அளவில்லா ஆழியும் அழிந்து போகும்
அதனிடமிருந்து கொணர்ந்த நீரை அதனோடு சேர்க்காவிடில்
இதனை எளிதாய் செய்து பேராழிக்கு பெரும் எழில் சேர்ப்பது மழையே!
இது வள்ளுவனின் சிந்தனையே!

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

அவனுக்கென நாம் செய்யும் அன்றாட பூசைகளும்
ஆர்பாட்ட திருவிழாக்களும்
இல்லாது போகும்
நில்லாது பெய்யும் மழை
பெய்யாது போனால்!!
பொய்யா புலவனின் கையில் தான் எத்தனை எத்தனை விந்தை
அவன் சொல்லில் தான் எத்தனை எத்தனை சிந்தை.....

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வரைக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

நல்வினை இரண்டும் நல்காதாகிவிடும்
பல்வினை ஈயும் பளிங்கு துளி பல் காட்டி இளிக்காவிட்டால்
சிந்தனை சிற்பியான என்னவன் தூவிய
எழில்மிகு சொல்லோவியம் இதோ என்னில்.....

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

நீரில்லா பூமி நிலை இல்லாது போகும்
அந்நீருக்கு ஆதாரமான மழை இல்லாது போனால்
பூமியே இல்லாது போகும்!

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

                                                           
ஜெய கீதா