Showing posts with label கண்ணம்மா. Show all posts
Showing posts with label கண்ணம்மா. Show all posts

Saturday, 15 August 2015

கனவுலகின் காவலன்





அகண்ட தோள்கள்
ஆழமான கண்கள்
மிடுக்கான தோற்றம்
நின் மேல் 
என் நாட்டம் 

யார் இவன்?
கனவுலகின் காவலனா
இல்லை,
காவியம் சொல்லும்
காதலனா?

தோழிகளின் உச்சரிப்பும்
தொலைக்காட்சியின் நச்சரிப்பும்
உள் ஊடுருவா நிலை!!!
நீ வரும் நேரமாகிவிட்டது...

பதிந்திடா கால் தடமும்
பகிர்ந்திடா பல் மொழியும்
பாவையன்றி,
நீ அறிவாயோ?

ஏனோ 
வழக்கம் போல்
இன்றும் நீ வரவில்லை!!
இதயம் இடியிடிக்க
இமைகள் மழையடிக்க
கன்னமிரண்டும்
கரைந்தே விட்டது.

கண் கானா ஏக்கமும்
தரை தட்டும் தாக்கமும்
என்னை முட்ட
கனவலைகளில்  கால் பதிக்கிறேன்.

மீண்டும்,
அதே ஒற்றை ரோஜாவுடன்
மொட்டை மாடியில் நீ!

நிஜத்தில் வராத
நெருடல்களை மறைத்து
நின்னருகில் நான்!

நீ கனவுலகின் காவலன்
நான் உனதருமை நாயகி

Thursday, 24 April 2014

கவிதைக் காதல்




கவிதையே !
எந்தன் காதலே !
காற்றில் அலைந்த 
என் எண்ணங்களுக்கு
முகவரி ஒன்றை 
முன் நிறுத்தினாய்
காகிதத்தை ஆயுதமாக்கி
பேனாவைப் போர்வாளாக்கும்
புது வித்தை
நீ புகட்டினாய்

சிந்தனையினைச் செம்மையாக்கி
செயல்பாட்டைச் செழுமையாக்கி
கவிதை உந்தன் 
காதலினால்,
கண்ணம்மாவினைக் கண்டறிந்தவள்
எனதருமைக் காதலி
நீ அன்றோ .. !

அடைமழையில் நனைந்திருந்தேன் 
அயராதுன்னை நினைத்திருந்தேன்
காலன் வந்து 
கல் வீசவோ 
நகர்ந்துனை நான் சென்றேன்

கடலில் தத்தளித்தேன் 
காலத்தின் சுழலில்
சுற்றித் திரிந்து
உனைத் தொலைத்தேன்
என் பிழை பொறுத்த
தமிழ்த் தாய்
அல்லவே நீ !
கட்டுமரம் தந்து 
எனைக் காத்தாய்
கரையேறி,
மீண்டும் உன் 
கரம் சேர்ந்தேன் 

கவிதையே !
எந்தன் காதலே !
தாய் மடி
தரும் சுகம் நீ
சூனிய வாழ்வின்
வரம் நீ
மூச்சுள்ள மட்டும்
முயற்ச்சிக்கின்றேன்
நீ எனக்களித்த 
பேரின்பம்
பகுதியேனும்
நான் உனக்களித்திட 




Thursday, 17 October 2013

உன்னாலே தன்னாலே மாறினேன்.!




உன்னைக் கண்ட நொடிப் பொழுதினில் 
உருண்டோட ஆரம்பித்தது
எனது மாறுதல் சக்கரம்
என்னவென்று உரைப்பேன்
எனக்கான மாற்றங்களை ..!

இரவுகளைப் பகலாக்கினேன்
பகல்ப் பொழுதினில்
உன் நினைவை ஊற்றினேன்
நீல வானின் மேகங்களாய் 
உன் நினைவுகள்
உள்ளங்கையின் ரேகைகளாய் 
உன் உறவுகள்

கடிகாரச் சத்தத்திலோ 
சட்டென்று உன் இதயத்தினோசை
காதோரத்தில் வீசிடும் காற்றதுவோ 
உன் காதலையே கீச்சிடுகின்றது
வாசமில்லா மூங்கிலாய் 
புதைக்கப்பட்ட உணர்ச்சிகளோ
உன் எதிரில் மட்டும் 
ஒரு தலை உரையாடல் செய்கின்றன

கூரிய பார்வை கொண்ட
எனது கண்கள் ஏனோ
உன் கண்களைக் கண்ட வேளைகளில்
உருட்டிவிட்ட சோழியாய்
உருண்டோடிய படியே இருக்கின்றன

நீயும்,உன் காதலும்
உடனிருப்பதால் தானோ என்னவோ
தனிமையினை உணர்ந்ததில்லை நான்

என்ன விந்தையிது
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
என் காதலும்,கவிதைகளும்
புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன

நாள்தோறும்,
நான் படித்து வரும்
மந்திரம் ஒன்று உரைக்கவா?
மாற்றம் உனக்கானதென்றால்
மாறியபடி இருப்பேன்
என் மரணம் வரை.!

பெண்ணியம்



"பெண்ணியம்",
அரிதாரத்தால் அலங்கரித்து 
பொய்மையினால்  
முலாம் பூசப்பட்ட 
அழகுச் சொல்


குறிப்பிடப்பட்டது 
பெண்ணாயினும் 
குறிப்பிட்டவன் ,
ஆணென்பதால் தான் 
உட்குறிப்புகளையும்
உடன் சேர்த்து விட்டானோ?


நாளுக்கொரு 
நவநாகரீகப் போராட்டம் அவளுக்கு,
அவள் எதிர்கொள்வது 
தனிப்பட்ட ஆணையல்ல 
ஆயிரம் ஆண்டுகளாய் 
அசையாதிருக்கும் 
ஆணாதிக்க சமூகத்தை


அழுகைகளும், ஆதங்கங்களும் 
நிரம்பிய விழிகளுக்குள்ளிருக்கும்

வேள்வித் தீயே 
அவளது,
ஒவ்வொரு விடியலையும் 
உண்டாக்கித் தருகிறது


பெயரளவிலாவது 
பெண்ணியம் காத்திருக்கப்படின் 
பல ,
பெயரறியா சகோதரிகள் 
பிரியா விடை பூண்டிருப்பரோ?


என் செய்ய,
உண்மைகள் மறைக்கப்படுவதும் 
ஊமைகள் உருவாக்கப்படுவதும் 
பாரத தேசத்திற்கு 
புதிதல்லவே !


பெண்ணவளை,
போகப் பொருளாக்கும் 
வஞ்சக நெஞ்சமே !
உம்மை ஈன்றவளும் 
உடன் பிறப்பாய் உள்ளவளும் 
பெண் தான் என்பதனை 
என்று தான் 
நீவீர் உணரீரோ ?


போலிப் பெண்ணியமதனை
மாற்றித் தாரீரா..
இல்லை,
புது விதிகளதை
நாங்களே,
புகுத்திக் கொள்ளவா?



தோழரே ! தோழியரே !

"பெண்ணியம்"
அது உண்மையாய் உருப்பெற 
வேண்டும் கொஞ்சம்,
உங்கள் "கண்ணியம்"

Monday, 14 October 2013

சிமிட்டல்கள்


 


உரையாடல்களினிடையே,
ஒரு நொடி மௌனம்
காதல் உரைத்து விட
உனக்கு நானளிக்கும் 
இடைவேளை..


நமக்கான இடைவெளியினை 
அதிகம் செய்தது
காலமா? 
அல்ல,
காலம் கடந்த 
என் காதலா?


அலட்சியத்தால் 
உன் கைகள் கோர்க்காமலேயே
அருகிலிருந்து வந்தேன்
அதிர்ந்து போனேன் 
நம் பாதைகள்
மாறியதை அறிந்த பின்னர்


ஆம் !
உதடுகளை ஊமையாக்கியவள் 
நான் தான்,
எப்படியேனும் நீ ,
உண்மை உதிர்த்துவிடுவாய்
என்ற உறுதியினால்


காதலில்லை என்று 
இதயத்தை 
இறுக்கிக் கொண்டவள்,
கனவுகளில் மட்டும் 
கண்ணீருடன் கலங்குவதேனோ?


நீ இல்லாத நான்,
காற்றில்லாக் குழலென்றால்
மிகைதானோ ?
இல்லை
இனிப்பில்லா விருந்தென்றால் 
குறைதானோ?


Saturday, 12 October 2013

நிலவுடன் சில நிமிடங்கள் ..

 

கெஞ்சிக் கெஞ்சி
கொஞ்சல் கதை பேசும்
குளிர் காற்று
நீள நிலப்பரப்பாய்
நெடுந்தூர,
நீலப் புல் விரிப்பாய்
வானம்
சுற்றிச் சூழ்ந்திருக்க
தனிமையில் நான்





தோழனுக்குத் தோழியாய்
காதலனுக்குக் காதலியாய்
கன்னியவள்,
கலைந்த மேகங்கள்
நடுவே
காட்சி தந்து
என்
கண்கள் நிறைத்தாள்





அடடா,
அவளை,
கண்டு மகிழாக்
கண்கள் இல்லை
தன்னை மறவா
நெஞ்சம் இல்லை
கசிந்துருகாக் கவிஞன்
தரணியில்,
இல்லவே இல்லை





ஓயாமல் என்னை
உற்று நோக்குமவள்
ஓரிரு கணங்கள்
மட்டும்
ஓடி ஒளிவது
ஏனோ ?
என்னுடன்
விளையாட விழைகின்றாளா?
இல்லை,
என்னை
விந்தை காண
அழைக்கின்றாளா?





மங்கையவள் மயக்கத்தில்
எந்தன் நிலை
நான் மறந்தேன்
இராகமொன்று
நான் இசைக்க
தாளம் தட்டி
அவள்,
தலை அசைக்க
தரணியில் தனித்திருப்போர்
நாங்களென்ற
நாடகமொன்று அரங்கேறியது





கயவனவன்
கருமேகங்கள் வழி
கழகம் செய்ய
என்னவள்,
எங்கோ பறந்தோடினாள்
என்னைத்
தனிமைச் சிறையில்
தத்தளிக்க விட்டு





ஏக்கம் தாக்கியதால்
விடியலை வெறுத்து
வேற்று வீதிகளில்
உலா வருகிறேன்
அவள் துணை நாடி ..

Sunday, 7 July 2013

சந்தோசத்தின் சாகா நிமிடங்கள்...


தேயாத வெண்ணிலவை
கேட்டேன்
தேய்ந்து வளரும்
விண்ணிலவைக் கண்டு
வினவ  வைத்தது
வாழ்க்கை

மாறா மணமும்
தீரா கணமும்
நொடிக்கு நொடி
நிறைந்து வழிய
நிந்தித்தேன்
தேறிய மனங்களையும்
கூரிய குணங்களையும்
கண்டு
வியந்து நின்றன விழிகள்

கவலைகளை ,
கண்ணீரினால்
கழுவிய விழிகள்
காலங்கள் கடக்க
புன்னகையினால் ,
பூசி முழுகப்
பழகிக் கொண்டன

பாதையெங்கும் பூக்களையும்
தேதியெங்கும் தீஞ்சுவையையும்
நாடி நின்ற வேளைகளில்
தேடலையும் , தன்னம்பிக்கையையும்
சுமந்து நின்ற முகங்கள்
தன்னிலை அறியச் செய்தன

இன்பங்களைத் தேடி
எட்டு திசைகளிலும்
ஓடித் தேய்ந்த
கால்கள் ,
ஓய்ந்த பின்னரே
உணர்ந்து கொண்டன,
உயிர் துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஞாலத்தில் நிறையா இன்பங்கள்
நாடி வருமென்று ..

Friday, 7 June 2013

ஆற்றங்கரை...



ஆழமான அமைதி
அவளின்
அந்தரங்கங்கள் மறைக்கும்
அழகிய நீரலைகள்

கொஞ்சிக் கொஞ்சி
கெஞ்சல் பேசும்  
குருவிகள்

காற்றின் கானத்திற்கு
இசையமைக்கும் குயில்கள்

மண் மணத்தில்
மயங்கித் தள்ளாடும்
மரங்கள்
இவையே ஆற்றங்கரையின்
அப்போதய அடையாளங்கள்

அன்று
காதல் செய்வோர்
களைத்து வருவோர்
கண்ணாமூச்சி
விளையாடும் மழலைகள்
காற்றோடு கானம்
கடத்தும் கன்னியர்கள்
என ,
இவளிடம் அடைக்கலமானவர்
எண்ணிக்கை
அதீதமாகவே இருந்து வந்தது

இன்று,
அழகு தேவதையவள்
அலங்கோலக் காட்சிகளை
அழுது புலம்பும்
அவல நிலை
அறிந்து விட்டோம்
மண்மேடுகள் மாயமாயின
மரங்கள் மறைந்து போயின
குளங்களும்,குட்டைகளுமோ
குன்றியே போயின

அன்றாடம்
கடந்து தான் செல்கின்றோம்
அவளை
நேர்கோட்டில் நிற்கையில்
ஏனோ ஒரு கணம்
விக்கித்தான் நிற்கின்றது நெஞ்சும்

பாவி அவளுக்கு
பாஷை தெரிந்திருந்தால்
பார்ப்போரிடமெல்லாம்
புலம்பியல்லவா தீர்த்திருப்பாள்
நமக்கு விளக்கி வைக்கத்தான்
வீனழித்துக் கொள்கின்றாளோ
தன்னைத் தானே ..?

காற்றை மாசுபடுத்தி
கரைகளைக் காயப்படுத்தி
இயற்க்கையினைத் தீண்டி
வரைமுறைகள் தாண்டி
மார்தட்டிக் கொள்கின்றோம்
நாமும் மனிதரென்று

என்னவளின் அவல நிலை
என்னாலும் உருவானதால்
வெட்கித்
தலை தாழ்த்துகிறேன் இன்று
மனிதனாய்ப் பிறப்பெடுத்ததற்க்காக மட்டும்

Saturday, 18 May 2013

மணப்பெண்





அன்றைய தினத்தின்
நாயகி அவளே!
சிரிப்பொலிகளும்
சின்னஞ்சிறு கேலி,கிண்டல்களும்
அவள் செவிகளை நிரப்ப
பதிலாய்
ஒரு அங்குலப்
புன்னகை மட்டும்
அழகாய்ச் செலுத்தி
அவளின் கண்களும்,இதயமும்
தனித்தொரு தீவினுள்
ஏனோ உலாவல் செய்கின்றன

அவள் மன நடுக்கமதின்
காரணம் தான் என்னவோ?
புதியதொரு உலகினில்
பூத்தெழும் படபடப்பா?
உற்றாரையும்,சுற்றாரையும்
பிரிந்து செல்லும் துடி துடிப்பா?
அம்மம்மா,
புன்னகையும்,பூகம்பத்தையும்
பெண்ணவளைத் தவிர
வேறு எவரால்
ஒரு சேரத் தாங்க முடியும்?

அன்று,
அவள் இதயத்திலேயே
இறுகிவிட்ட
வார்த்தைகளின் எண்ணிக்கை
ஏராளம் உண்டு
மனத்தோடு மறிக்கப்பட்ட
இரகசியங்கள்
தாராளம் உண்டு

விட்டு விட்டுத் துடிக்கும்
இதயத்தின் இடையினில்
இடறித் தவிக்கும்
நினைவுகளின் சுமையினை
யாரிடம் தான்
இறக்கி வைக்க அவள்?

மணப் பந்தலினில்,
மங்கையவள் சிந்தும்
ஒவ்வொரு கண்ணீர்த் துளிகளும்
ஓராயிரம்
உண்மைக் கதைகள் கூறும்

வாழ் நாளெல்லாம் 
வழி நடத்தும்  
புன்னகைப் பூச்சுகளுக்கும்
கண்களில் உரைந்த
கண்ணீர்த் துளிகளின்
காயச்சல்களுக்கும்
ஒரு நாள்
ஒத்திகை பார்த்து விட்டாள் இன்று
அவள் தான்,
மணப்பெண்.!

ஆடுகளம்





வன்மை வெல்வதும்
மென்மை மறைவதும்
பகைமை பகிர்வதும்
உயிரணுக்கள் உரைவதும்
இங்கே  தான் 

மெல்லிதயம் கொண்டார்க்கும்
கண்ணீரில் கரைவார்க்கும்
காரியம் மறந்தார்க்கும்
தன்னிலை உணரார்க்கும்
தாகம் தனிந்தார்க்கும்
இங்கே இடமில்லை 

தற்பெருமை பேசுவாரிடையே 
தன்னம்பிக்கையும்
இலட்சங்களைப் போற்றுவாரிடையே
இலட்சியங்களும்
கொழுத்தாடும் பொய்களிடையே
மெய்களும்
மறைந்து,மறித்த கதைகள்
ஏராளம் இங்குண்டு 

ஆடுகளமதில் ,
அழகாய்க் காய் நகர்த்தி
அறியாரைப் பேதையாக்கி
அண்டம் ஆள்கின்ற கூட்டம்
அன்றாடம் அதிகரிக்கின்றது

இங்கே,
மனம் தளராதவனும்
தலைக்கனம்  கொள்ளாதவனும்
தனிப்பாதை வகுத்தவனும்
தனித்து நின்றவனுமே
வான் புகழ் அடைகின்றான் 

சகுனிகள் பலருண்டு
சாணக்கியனும் அதிலுண்டு
இவர்களின் இன்னல்களை
கொன்று கொண்டு வருவார்க்கே
வெற்றிக் கனி கிடைப்பதுண்டு 

வாழ்வும்,வீழ்வும்
தரும் ஆடுகளம்
வழி காட்டி
நடத்திச் செல்லும்
ஆடுகளம்
விடியலை
நமதாக்கும் ஆடுகளம்
விண்ணையும்,
வளைத்துக் காட்டும் ஆடுகளம்

இது ,
உணர்வையும்,உயிரையும்
பணயம் வைத்து
ஆடும் களம்

Saturday, 27 April 2013

காதல் காலங்கள் - முகவுரை



காதல் காலங்கள்..


எங்கு நோக்கினும் ஒரே வாகன இரைச்சல்,எதிர் வரும் மனித முகங்களைக் கூட , ஒரு கணம் காண நேரமில்லாது , மக்கள் அலுவலகங்களுக்கோ , அன்றாட அலுவல்களுக்கோ அறக்கப் பறக்க சிதறி ஓடிக் கொண்டிருக்கும் காட்சியினை , ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வருகை தந்தவனைப் போல் முகம்  சுளித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம் .

             "
என்னடா?" என்ற நண்பனின் குரல் அவனை, மீண்டும் இவ்வுலகிற்கு கொண்டு சேர்த்தது. சலித்துக் கொண்டே "பஸ் இன்னும் வரலையே டா , முதல் நாளே காலேஜ் கு லேட் ஆ தா போக போறோம்"  என்றவன் மீண்டும் வெற்று சாலையினையே உற்று நோக்கினான் . அவன் நண்பனோ சற்றும் அசரதவனாய் , "உன்னோட அவசரத்துக்கு பஸ் வந்துருமா கொஞ்சம் வெயிட் பண்ணுடா " என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே பேருந்து ஒன்று பக்கம் வந்து பட்டென்று நின்றது . கௌதமின் இறுகிய முகத்தை பேருந்தின் தரிசனம் புன்னகயினால் அலங்கரித்து விட்டது .

                 
சக பயணிகளுடன் ஏதோ மல்லுக்கட்டிக் கொள்வதைப் போன்று முட்டி மோதி பேருந்தின் ஓரமாய் ஒரு இடத்தைப் பிடித்து , மூச்சு வாங்கிய படியே நண்பனைக் கண்டு கௌதம் ஒரு குறும் புன்னகை பூத்தான் . தட தட வென சக்கரங்களைச் சுழற்றி ஓட ஆரம்பித்த பேருந்து , ஓரிரு அடிக்குள் மீண்டும் நின்றது . "இப்ப என்னடா?" என்று நண்பனை வினவிய படியே பேருந்தின் வெளியே எட்டிப் பார்த்த போது , " நந்தினி சீக்கரமா வா, பஸ் கெளம்பப்  போகுது ..!" என்று தோழி ஒருத்தி கூச்சலிட , ஓட்டமும் நடையுமாய் ஒருத்தி ஓடி வந்து பேருந்துப் படிகளில் கால் வைத்தவுடன் பேருந்து மீண்டும் சக்கரங்களைச் சுழற்றி பயணத்தை ஆரம்பித்தது .

             
அவசர அவசரமாய் பேருந்தினுள் ஏறி , கம்பி ஒன்றைப் பிடிக்க கைகளை நீட்டும் வேகத்தில் யாரோ ஒருவர் பயணச் சீட்டிற்காக கைகளில் வைத்திருந்த சில்லரையினை கீழே தட்டினாள் நந்தினி . "I am extremely sorry" என்று அவள் கூறி தலை திருப்பும் வேலையில் அவள் விழிகள் கௌதம் அவளை முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டன. மீண்டும் அவள் "I am sorry " என்று கூற கோபத்தினை அடக்கிக் கொண்டு , பெயரளவில் மட்டும் "Its ok" என்று கூறி முடிக்கும் தருணத்தில் , நந்தினி தடுமாறி பேருந்தின் வெளிய தவறி விழப் பார்த்தாள் , அருகிலிருந்த கௌதம் பட்டென்று அவள் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்தான் . பதற்றத்திலிருந்து மீளாத நந்தினி ,"" என்று வெறித்த கண்களுடன் கூறினாள் . கௌதம் ,"உள்ள போய் பத்தரமா நில்லுங்க " என்று கூறி விட்டு தன் நிறுத்தம் வந்தவுடன் , நண்பனுடன் இறங்கிக் கல்லூரி வளாகத்தினுள் நடக்க ஆரம்பித்தான் .

               
நண்பன் "டேய் கௌதம்" என்று ஆரம்பித்த உடனே , " கொஞ்சம் அமைதியா வரயா கீழ விழும் போது பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும் " என்று வாயை அடைக்க , பதிலுக்கு அவன்  " ம் .. ம் .." என்று சிரித்துக் கொண்டு கௌதமின் தோள்  மீது கைகளை போட்ட படி நடந்து சென்றான் . தூரத்தில் பேருந்து புறப்படும் ஓசை கேட்டவுடன் , கௌதம் பேருந்தினை நோக்கி அக்கரைப் பார்வை ஒன்று வீசினான் .

       "
அவ உன்ன தாண்டி பாக்கறா " என்று பக்கம் இருந்த தோழி நந்தினியின் தோள்களைத் தட்ட , அவள் கோபமாய் "அடிதா வாங்கப் போற " என்றாள் . முறைத்துக் கொண்டே , "சரி சரி இப்பவாவது பாத்து நில்லு " என்ற தோழியின் பேச்சைக் கண்டு கொள்ளாதவளாய் , நண்பனுடன் நடந்து சென்ற கௌதமை அவள் விழிகள் உற்று நோக்கின . பார்வைப் பகிர்வின் பகைவனாய் பேருந்து புறப்பட்டது ..

                                                                                 
காட்சிகள் தொடரும் ..