Showing posts with label கனவு திருடன். Show all posts
Showing posts with label கனவு திருடன். Show all posts

Thursday, 5 December 2013

விடியும் முன்:




கடந்த ஒரு மாதகாலமாக வேலைப் பளு காரணத்தால் படங்கள் பார்ப்பதும் பதிவுகள் எழுதுவதும் வெகுவாகுவாக குறைந்துவிட்டது.. இடையில் வேலையை சற்றே சரிக்கட்டி ஓரிரண்டு படங்கள் பார்த்தேன். ஆனால் அப்படி ஒரு படம் பார்த்ததே என் நினைவில் இல்லாமல் போகும் அளவுக்கு அந்த திரைப்படங்கள் இருந்தது என் துரதிஷ்டம். அதனால் பதிவு எழுதுவதற்கான தூண்டுதலும் இல்லாமலே இருந்தது.. ஆனால் நேற்று வேலைப் பளு சற்றே குறைந்ததால் “விடியும் முன்” பார்ப்பதற்கான வாய்ப்பு.. ஊடகங்கள் வெகுவாக பாராட்டிக் கொண்டு இருந்தாலும் ஆங்காங்கே ஒரு சிலர் இதனை மலையாளப் படமான “திரா” மற்றும் பிரிட்டிஸ் படமான “ LONDON TO BRIGHTON” ஆகிய இரண்டு படங்களில் ஏதோ ஒன்றின் தழுவல் என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.. நான் இரண்டையுமே பார்த்ததில்லை என்பதால் “விடியும் முன்” திரைப்படத்தை தழுவல் திரைப்படமாக அணுகவா..? வேண்டாமா…? என்பதில் எனக்கு ஒரு குழப்பம் இருந்தது… ஆனாலும் இது தழுவல் திரைப்படமாக இருக்கின்ற பட்சத்தில், என்ன சொல்லத் தோன்றும் என்றால், “குறை சொல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது, ஒரே ஒரு காரணம் மட்டும் தான் கிடைத்திருக்கிறது” என்பது மட்டுமே. அதுவே இந்தப் படத்தின் வெற்றிக்கு சான்று பகிர்வதாக இருக்கும்..
படம் பார்த்ததில் இருந்து பதிவு எழுதும் இந்த நேரம் வரை ஒரு நாள் கடந்து இருக்கிறது… ஆனால் இந்த இடைப்பட்ட ஒரு நாளில் பல இடங்களில் இந்த திரைப்படம் என் ஞாபகத்தை தட்டிக் கொண்டே இருந்தது என்பது உண்மை. இது போன்ற திரைப்படங்கள் பார்த்து உண்மையாகவே வெகுநாட்கள் ஆகிறது.. சமீபத்தில் இது போன்ற மனவெழுச்சியைக் கொடுத்த படங்கள் இரண்டே இரண்டு. “தங்கமீன்கள்” மற்றும் ”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” ஆனால் இந்த இரண்டிலும் இல்லாத ஏதோ ஒரு விசயம் இந்த திரைப்படத்தை பூர்த்தி செய்து இருக்கிறதோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. மேற்சொன்ன இரு படங்களிலும் ஓரிரு இடங்களில் ஒரு சின்ன செயற்கைத் தன்மையும், கதையை மீறிய ஒரு தொழில்நுட்பமும் கண்ணை உறுத்தும்.. மேலும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்வையாளனை உணர்வு ரீதியாக மீட்ட வேண்டிய தளத்தில் பாதி திரைப்படத்துக்கு மேல் தோற்றிருக்கும்.. தங்கமீன்களோ அதே தளத்தின் யதார்த்த எல்லைகளை சில இடங்களில் மீறி செயற்கை சாயம் பூசி அயர்ச்சியைக் கொடுத்திருக்கும்.. அது தவிர்த்து இயக்குநர்களின் தனித்தன்மையும் ஒரு சின்ன குறையாக ஓரிரு இடங்களில் தென்பட்டு இருக்கும்.. இப்படிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து வந்திருப்பதாலும் இது இயக்குநருக்கு முதல்படம் என்பதாலும் தான் இது போன்ற திரைப்படங்கள் பார்த்து வெகுகாலம் ஆகி விட்டது என்று மேலே கூறினேன்… அதிலும் குறிப்பாக இது போன்ற தமிழ் திரைப்படம் பார்த்ததாய் எனக்கு சற்றும் நினைவில்லை..
கதை முற்றிலும் புதியது என்று சொல்லமுடியாது… ஆங்காங்கே தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போல் இதன் கதைமாந்தர்களை தமிழ் சினிமா பயன்படுத்தி இருக்கிறது. உதாரணமாக வானம் படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம், ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில் ஷியாம் காப்பாற்றும் அந்த மாணவியின் கதாபாத்திரம் இப்படி ஒரு சில இடங்களில். இது போன்ற கதாபாத்திரங்களை அதன் உண்மையான வலியோடு, ஆக்ரோசமாக வெளிப்படுத்திய திரைப்படம் என்றால் ”மகாநதி”யைக் கூறலாம். கதைக்களம் ஒன்றாக இருந்தாலும் அது பயணித்த பாதை வேறு. விடியும் முன் பயணிக்கும் பாதை வேறு… இப்படி அவ்வபோது நமக்கு சற்றே பரிச்சியமான ஒரு கதைக்களம் தான். ஆனால் அது பயணிக்கும் பாதைகளின் தடம்தான் அவ்வளவு சுவாரஸ்யமானது… சுவாரஸ்யமானது மட்டுமல்ல உணர்வு ரீதியாக நம்மை மீட்டக்கூடியதும் கூட…
ஒரு பாலியல் தொழிலாளி, அந்த தொழில் வட்டத்தின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கும் ஒரு பதின்ம வயது சிறுமி, இவர்கள் இருவரும் எங்கோ….? எதனாலோ…? ஓட எத்தனிக்க… இவர்கள் கடைசியாக சேவை புரிந்து வந்த வாடிக்கையாளரின் மகன் எதனாலோ…..? இவர்களை தேட…? அவர்கள் கிடைக்காத பட்சத்தில் உங்களைக் கொன்றுவிடுவேன் என்று அவர்களை அனுப்பி வைத்த வாடிக்கையாளரை மிரட்ட… அவனும் கொலை வெறியோடு அந்த சிறுமியையும் அந்தப் பெண்ணையும் இன்னோரு கூலிக்காரனுடன் தேட… இதற்கு மத்தியில் அந்த சிறுமியை ஒரு நாள் வாடகைக்கு கொடுத்திருந்தவனும்  இந்த கொலைக் களத்தில் அவர்களோடு சேர்ந்து தேடல் பயணத்தைத் தொடர… தேடிக் கொண்டிருந்த இவர்களுக்கு அந்த சிறுமியும் பெண்ணும் கிடைத்தார்களா…? என்பதை இங்கு என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது… ஆனால் இந்த தேடுதல் படலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு என்ன கிடைத்தது என்பதை என்னால் சொல்லமுடியும்… சுவாரஸ்யமான, முகத்தில் அறையும் யதார்த்தத்துடன் கூடிய, கதையென்று நினைத்து கடந்து போக நினைப்பவருக்கு காட்சிப் படலமாகவும், எங்கோ..? எப்போதோ…? நடந்த, நடக்கின்ற, நடக்கப் போகின்ற உண்மைச் சம்பவங்களின் திரட்டு என நம்புபவர்களுக்கு அவ்வாறும் காட்சியளிக்ககூடிய ஒரு மறக்கமுடியாத புதையல் என்றேதான் நான் உங்களுக்குச் சொல்லுவேன்…
நம் கண்ணை உறுத்தாத நம் வாழ்க்கையில் சாதாரணமாக நாம் கடந்து வந்த ஒளிச் சிதறல்கள், நாம் நடந்து வந்த அழுக்குப் படிந்த இடங்கள், நாம் பார்த்துப் பழகிய மிக இயல்பான கரடுமுரடான, கனிவான மனிதர்கள் என்று ஒவ்வொன்றும் அத்தனை கச்சிதம். இது போன்ற ஒளியமைப்புகளையும், கதை நடக்கும் இடங்களையும், அற்புதமான கதாபாத்திர தேர்வையும் நான் தமிழ் திரைப்படங்களில் பார்த்ததே இல்லை.. மிகமிக அற்புதமான எடிட்டிங்.. எந்தவொரு காட்சியையும் தேவையில்லாதது என்று நம்மால் நீக்கிவிட முடியாது… ஒவ்வொரு காட்சியிலும் கதை மெதுமெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.. இதுபோக கதையின் சுவாரஸ்ய முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் முறை.. மிகதேர்ந்த நடிப்பு… மிகமிக சுருக்கமான வீரியமான கதை சொல்லும் வசனங்கள், புதுமையான அற்புதமான பிண்ணனி இசை என எல்லாமே அதி அற்புதம்..
பாலியல் தொழிலாளியாக பூஜா. இந்தப் படத்தில் நடிப்பதற்காகத்தான் பரதேசி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தாராம்… படம் பார்த்தப் பின்னர் தோன்றுகிறது… மிகமிக நல்ல காரியம் செய்திருக்கிறார்.. காதலனின் பின் கசிந்துருகி காதலுக்குப் பலியாகி கருவை சுமக்கும் ஒரு வழக்கமான பரதேசிக்கு இந்த மாற்றுக் கதாபாத்திரம் எவ்வளவோ மேல்… அதுவும் சிறுமி மாளவிகா மணிக்குட்டனுடனான ரயில்வே ப்ளாட்பார்ம் வசனத்தின் போதும் சரி, ஓடும் காரிலிருந்து இறங்கி ரோட்டோரமாக அமர்ந்திருக்கும் சிறுமியை சமாதானம் செய்யும் போதும் சரி மிகச்சிறப்பான நடிப்பு.. ”ஏன் அந்தப் பொண்ண தத்தெடுக்கப் போறாரா…?”  என்று விசமத்துடன் சிங்காரத்திடம் வினவும் இடமும், சிறுமிக்காக உயிர்பிச்சைக் கேட்டு அழும் இடத்திலும்…. கண்டிப்பாக பூஜாவுக்கு பேர் சொல்லும் படம் இதுதான். நந்தினியாக வரும் மலையாளச் சிறுமியின் நடிப்பும் க்ளாஸ்.. வெகு அலட்சியமாக பதில் பேசும் அந்த சிறுமியின் நடிப்பும் உடல்மொழியும் மிதமிஞ்சிய பெரிய மனுஷியின் தோரணையை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தாலும், வாழ்க்கையின் கசப்பை சிறு வயதிலேயே ருசித்தவர்களின் நடவடிக்கைகள் அப்படி இருப்பதில் வியப்பேதும் இல்லை.. சின்னையாவாக வரும் வினோத் கிஷன் (நந்தாவில் சூர்யாவின் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்தவர்) அவரது அமைதியும், பேச்சும் கொடூரமும் படத்தின் த்ரில்லருக்கான நுண் தன்மையை மேலும் அதிகமாக்கிவிடுகிறது..
புரோக்கராக வரும் அமரேந்திரனுக்கு படத்தில் ஒரு இடத்தில் கதை சொல்லும் இடம் வரும். அற்புதமான இடம்.. அவர் கதை சொல்லி முடிக்கும் முன் அதன் பிண்ணனியில் காட்சிகள் நகர்வதும், அந்தக் கதை ஆரம்பிக்கும் இடமும், முடிக்கும் இடமும் அதைச் சொன்ன முறையும் எனக்கு அத்தனை பிடித்திருந்தது.. அந்த இடத்தை நிறைக்கும் பிண்ணனியிசையும் க்ளாஸ்.. அந்த இடத்தில் வரும் கதைசொல்லும் உத்தி, ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வரும் அந்த கதை சொல்லும் காட்சிக்கு ஈடானது. மேலும் பூஜாவின் கனவில் வந்து மிரட்டும் அந்த உருவங்களும், அந்த நடைப்பாதையும், அங்கு போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருக்கும் கிழவியும் அதி அற்புதமான உருவாக்கம்.. கூலியாளாக புரோக்கர் அமரேந்திரனிடம் சேர்ந்து கொள்ளும் லங்கேஸ்வரனாக வரும் ஜான் விஜய்யின் கதையையும் அவரது குணாதிசயத்தையும் ஒரு இடம், ஒரு சம்பவம், ஒரு வசனத்தால் கடந்து இருப்பது இயக்குநரின் மீதான மரியாதையையும், கலையை கற்றுக் கொள்ள வேண்டிய தாகத்தையும் கூட்டுகிறது.. அதற்கு இன்னும் பல சான்றுகள் படம் நெடுக வருகிறது. துரைசிங்கமாக வரும் மற்றொரு புரோக்கரின் இருப்பிடமும், அவனது தோற்றமும், அவனது அடியாட்கள் பாம்புடன் விளையாடிக் கொண்டு இருக்கும் காட்சியும், ட்ரெயினில் வரும் அந்த சாமியார் கதாபாத்திரமும், கொய்யாப் பழ கிழவியும்… சிங்காரத்தின் உதவியாளாக வரும் இளைஞனும்,…. சின்னய்யாவின் அடியாட்களும்.. இப்படி எத்தனையோ விசயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..
சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவும், க்ரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசையும் பிண்ணனியிசையும் இப்படி ஒரு படத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக கொடுத்திருக்கின்றது.. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகத்துக்கான மிக நல்ல வரவுகள்.. இதில் கோபாலகிருஷ்ணன் மெரீனா மற்றும் வணக்கம் சென்னை படத்துக்கு ஏற்கனவே இசையமைத்தவர். இயக்குநரோடு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்… படத்தின் முடிவு ஒரு கட்டத்து மேல் யூகிக்கமுடிவது போல் இருக்கிறது என்றாலும் அந்த முடிவுக்கான Cause and effect மிகச் சரியாக இருப்பதால் அந்த முடிவை எந்தவிதமான முனகலும் இன்றி ஏற்றுக்கொள்ள முடிவதுடன்… சராசரி பார்வையாளனையும் அது அதீதமாக கவருவதோடு திருப்திபடுத்தியும் விடுகிறது…
ஆரம்பத்திலேயே படம் பார்வையாளனை உணர்வுரீதியாக தொட்டுவிடுவதும் படத்தின் வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறது… சி க்ளாஸ் ஆடியன்ஸ் என்று சொல்லக்கூடிய பார்வையாளர்களால் மட்டும் பெரும்பாலும் நிரம்பக்கூடிய உதயம் திரையரங்கினிலேயே மிக அமைதியாக கூச்சல் இல்லாமல் திரைப்படத்தை ரசித்த பார்வையாளர்களைப் பார்க்கும் போது படத்தின் வெற்றி புலப்படுவதோடு மனதுக்கும் சந்தோசமாக இருந்தது. பெரும் பொருட்செலவைக் கோராத மிகச் சாதாரணமான இடங்கள், மிகச் சாதாரணமான நடிகர்கள்…. இப்படி எல்லாவற்றையுமே மிகச் சாதாரணமாக வைத்துக் கொண்டு அசாதரணமான வெற்றியைப் பெற்று இருக்கிறது இந்தப் படக்குழு… வாழ்த்துக்கள்…
இந்த திரைப்படம் உங்களுக்கு தெரியாத எதையும் புதிதாக சொல்லிவிடாது… அதே நேரத்தில் உங்களுக்குத் தெரிந்த விசயத்தை மிக மிக சுவாரஸ்யமாக கொஞ்சம் கொஞ்சமாக திரைக்கதை சொல்லிக் கொண்டே இருக்கும்.. அதே நேரத்தில் திரைப்படத்தை ஒரு கலையாகக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த திரைப்படம் எத்தனையோ விசயத்தை ஆழமாக கற்றுக் கொடுக்கும்.. இயக்குநர் பாலாஜி கே.குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…

Friday, 8 November 2013

திரைப் பார்வை - ஆரம்பம்



இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்திற்கு கிடைத்த தோல்வியும், அஜீத்தின் பில்லா-2 திரைப்படத்தின் தோல்வியும் சேர்ந்து, பில்லா-1ன் வணிகரீதியான வெற்றியை பின்னோக்கிப் பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க… அதுவே ”ஆரம்பம்” திரைப்படத்திற்கான அச்சாரம் ஆனது. அஜீத், நயன்தாரா, தாப்ஸியோடு நண்பர் என்கின்ற ரீதியில் ஆர்யாவின் கால்ஷீட்டும் சேர்ந்து கொள்ள படத்தின் ஸ்டார் வேல்யூவும் கூடிப் போனது. இதைத் தவிர்த்து, மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவின் மரணத்துக்குப் பின் இருந்த மர்மத்தைக் கொண்டு ஒரு நல்ல ஒன் லைனும் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் களமிறங்கி இருக்கிறது இந்த டீம்.


2008 நவம்பர் 26ல் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்த அவிழ்க்கப்படாத பல மர்மங்களில், அன்றைய மகாராஷ்டிர அரசில் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேவின் மறக்கமுடியாத மரணமும் ஒன்று. குண்டு துளைக்காத உடை அணிந்து தீவிரவாத கும்பலை தன் கைப் பிஸ்டலை மட்டுமே கேடயமாக நம்பி பிடிக்கப் போன இடத்தில், தீவிரவாதிகளின் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளில் இருந்து சீறிப் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள், அவரது குண்டு துளைக்காத உடையைத் துளைத்து, உடலையும் துளைத்தது.. அந்த நேரத்தில் கண்டிப்பாக ஒருவித விரக்தியுடன் தான் தன் மரணத்தை அவர் தழுவி இருப்பார்.. விழித்துக் கொண்ட மீடியாவும், அவரது மனைவியும் கர்கரேவின் மரணத்துக்கு காரணமான அந்த குண்டு துளைக்காத உடைப் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிய முற்பட… வழக்கம் போல் அந்த உடை தொடர்பான கொள்முதலில் நடத்தப்பட்ட ஊழலை மறைத்து தன் மானத்தைக் காத்துக் கொண்டது நம் மத்திய அரசு. இந்த சம்பவத்தை கற்பனைக் கதை என்ற ஒப்புதலுடன் கதையாக்கி இருக்கிறார்கள்… அந்த சம்பவத்தை பரவலாக எல்லோரும் அறியும் வகையில் திரைப்படமாக்கிய நல்லெண்ணத்திற்காக இந்த டீமுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்…


ஆனால் மேற்சொன்ன அந்த ஒன்லைனையும், ஸ்டார் வேல்யூவையும் மட்டுமே நம்பி கதை செய்திருக்கிறார்களோ என்று படத்தின் பல காட்சிகளைக் காணும் போது எண்ணத் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக அஜீத்தின் ப்ளாஷ்பேக்கை நயன் விவரிக்கும் காட்சியும், அதைக் கேட்டு ஆர்யா மனம் மாறுவதும் ஒளவையார் காலத்துப் பழசு. ஆர்யாவை எல்லா வலைதளங்களிலும் புகுந்து அதன் ரகசியத்தை திருடக் கூடிய, தொழில்நுட்ப திறமை வாய்ந்த ஒரு ஹேக்கர் என்ற செய்தியை நமக்கு கடத்த அவர்கள் கையாண்டிருக்கும் காட்சிகளும், தங்கள் எதிரிகளைக் கொல்வதில் இன்றளவும் மெத்தனம் காட்டி, அவர்களை தப்பவிட்டு, தங்களுக்கே வினை தேடிக் கொள்ளும் சராசரி தமிழ்சினிமா வில்லன்களும், தீவிரவாத தடுப்பு படையின் சாகசத்தைக் காட்டுவதற்காக ஒரு வெளிநாட்டுப் பயணியை தீவிரவாத பிடியில் இருந்து மீட்டுவரும் அந்தக் காட்சியையும், ஒன்றுமில்லாத காலி கண்ணாடி பாட்டிலை உருட்டிவிட்டு தீவிரவாதிகளின் கவனத்தைக் குலைத்து அவர்களை சுடும் காட்சியையும் பார்க்கும் போது, இவர்களின் கற்பனைவளம் ஒன்றுமில்லாத காலி பாட்டிலாகத்தான் பரிமளிக்கிறது.

சுபா இரட்டையர்களின் உதவியோடு எழுதப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். முன்னால் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தவரை, ஒரே லிப்டுக்குள் இருந்தும் கண்டுபிடிக்க முடியாமல் தேமே என்று நிற்கும் கிஷோரும், தீவிரவாத கும்பலை பிடிக்க சாதாரணமாக ஒரு நான்கைந்து போலீசாரைக் கூட்டிக் கொண்டு வரும் போலீசும், சர்வ சாதாரணமாக போலீஸ் ஆபிஸரைக் கொன்றுவிட்டு, துபாய்க்கு தப்பிச் செல்லும் காட்சியையும் பார்க்கும் போது போலீஸ் என்னதான் செய்கிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடிவதில்லை. ஹேக்கராக வந்து, க்ளைமாக்ஸ் காட்சிகளில் இரு கரங்களிலும் துப்பாக்கி ஏந்தி ஒர் சூப்பர்மேன் ரேஞ்சுக்கு சண்டையிடும் ஆர்யாவும், எப்போது எதற்காக நயன் கிஷோருடன் இணைந்து க்ளைமாக்ஸ் காட்சியில் வருகிறார் என்பதையும், சகட்டுமேனிக்கு துப்பாக்கியை கையாளும் நயனையும் பார்க்கும் போது இனி லாஜிக்கே பார்க்கமாட்டோம் என்று சத்தியம் செய்து தப்பிக்கத் தோன்றுகிறது….


அநீதி இளைத்த அரசியல் வியாபாரிகளை பழி வாங்குவது தான் நாயகனின் நோக்கமாக இருந்தாலும் அதற்காக நாயகன் எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும் மிகமிக பலவீனமானவை.. எதிரிகளின் கட்டிடத்தைக் குண்டு வைத்து தகர்ப்பதும், சேட்டிலைட் மூலம் அவர்களது தொலைக்காட்சி சேனலின் அலைவரிசையை முடக்கி எதிரிகளின் தொழிலில் நஷ்டத்தை உண்டாக்குவதுமான காட்சிகள் அதற்கான வீரியத்தோடு இல்லை.. மேலும் அந்த நஷ்டத்தால் எதிரிகள் பாதிக்கப்படுவதான காட்சியுருவும் இல்லாமல் போவதால், நாயகன் பழி வாங்குகிறார் என்கின்ற ரீதியில் இல்லாமல், ஏதோ செயலாற்றுகிறார் என்கின்ற ரீதியில்தான் அவை  நம்மை கடந்து போகின்றன… தன் போலீஸ்கார நண்பனின் சாவுக்கு பழி வாங்க வரும் நாயகன் கொல்லும் போலீசாரின் எண்ணிக்கையோ எப்படியும் முப்பதை தொடும்.. மேலும் திரைக்கதையின் போக்கில் ஆர்யாவின் தேவை என்பது நயன், டாப்ஸி போன்ற கன்னிகளின் கவர்ச்சி படிமத்தின் அளவில் தான் இருப்பதால், அந்த கதாபாத்திரத்தின் பங்கேற்பு என்பது படத்தின் தோல்வியை தவிர்ப்பதற்கான முயற்சியாகத்தான் படுகிறது… அப்படியில்லை என்றால் அதன் தேவையை இன்னும் கொஞ்சம் வலியுறுத்தி இருக்கலாம்..

இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும்.. அதை உருப்படியான ஒரு சல்லடையாக மாற்றி திரைக்கதையை கொஞ்சமேனும் உயிர்ப்போடு வைத்திருப்பது அஜீத்தின் ஸ்கீரின் ப்ரெஸன்ஸ் மட்டுமே. நல்லவர்களாகவே நடித்துக் கொண்டு இருக்கும் தங்கள் பிம்பத்தை உடைக்கவே விரும்பாத பிற கதாநாயகர்களுக்கு மத்தியில் அஜித் சற்றே வித்தியாசமானவர். அது பல இடங்களில் அவரது பொதுவாழ்விலும் வெளிப்பட்டு இருக்கிறது.. சினிமாவிலும் அதற்கான ஆரம்பம் மங்காத்தாவில் அவர் நடித்த நெகடிவ்வான கதாபாத்திரம் மூலம் அமைந்தது. அந்த ஆரம்பமே இந்த ஆரம்பம் திரைப்படத்தின் ஆரம்ப காட்சிககளான மல்டிபிளக்ஸ் கட்டிடத்துக்கு குண்டு வைப்பது, ஒரு சிறு குழந்தையின் முதுகில் சூடான இஸ்திரிப் பெட்டியைக் கொண்டு தேய்த்து விடுவதாக மிரட்டுவது போன்ற எதிர்வினை காட்சிகளில் அஜீத்தின் கதாபாத்திரத்தை வழக்கமான நாயக கதாபாத்திரமாக எண்ணி பயணிக்காமல் நம்மை தடுத்து திரைக்கதைக்கு சற்று வலு சேர்க்கிறது. பச்சை குழந்தைகளுடனான இது போன்ற காட்சியில் நடிக்க இன்றைய கதாநாயகர்கள் யாருமே துணியமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால் அதற்கு திருஷ்டி வைத்தாற் போல் வருகிறது அஜீத்தின் ப்ளாஸ்பேக் காட்சிகள்…


 இவை தவிர்த்து ஆர்யாவும் டாப்ஸியும் நடிப்பில் சற்றே ஸ்கோர் செய்திருக்கின்றனர்… சமீபகாலமாக நடிப்பில் சொதப்பி வரும் ஆர்யா இதில் ஏதோ கொஞ்சம் நடித்திருக்கிறார். டாப்ஸிக்கு வழக்கமான தமிழ்சினிமாவின் லூஸுப் பெண் கதாபாத்திரம்.. ஆங்காங்கே மண்டியிட்டு தன் காதலைச் சொல்லும் ஆர்யாவை கொஞ்சிவிட்டு செல்லும் இடங்களிலும், கறாராக தன் காதலைச் சொல்ல வரும் ஆர்யாவைக் கண்டு மிரண்டு ஓடுவதும் அழகு. ராஜா ராணியில் நடிப்பில் ஆட்சி செலுத்திய நயனுக்கு, இதில் வழக்கமான நயன கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்களையும் ரசிகர்களையும் கிறங்கடிக்கும் வேலை மட்டுமே அவருக்கு… செவ்வனே செய்திருக்கிறார்..



இசை ரொம்பவே சுமார். பிண்ணனியிலும் சரி, பாடல்களிலும் சரி யுவன் ஏனோ ஈர்க்கவே இல்லை.. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.. மொத்தத்தில் முதல்பாதியில் இருக்கும் அஜீத்தின் சின்ன சின்ன மேனரிஸங்கள், திரைக்கதையின் சின்ன சின்ன சுவாரஸ்யங்களும், அவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்களம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு முறையாவது பார்ப்பதற்கான தகுதியை படத்திற்க்கு கொடுத்துவிடுகின்றன… அஜீத்தின் ரசிகர்களை வழக்கம் போல் பெரிதும் ஈர்க்கும்… பொதுவான ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவும் செய்யாது; அதே நேரத்தில் வதைக்கவும் செய்யாது என்பதே ஆரம்பத்தின் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்..

கனவு திருடன்


Monday, 12 August 2013

என்ன வேணுனாலும் பேசலாம்



உடையுமோ குடியரசு


29வது மாநிலமாக “தெலுங்கானா” என்றொரு மாநிலத்தை தற்போதைய ஆந்திர தேசத்தில் இருந்து பிரித்து, தனிமாநிலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் பிண்ணனியில் உள்ள பிற்போக்குத்தனமான அரசியலைப் பற்றியும், தனி மாநிலமாக பிரிக்கவேண்டியதன் தேவை குறித்தும், தேவையின்மை குறித்தும், இந்த அறிவிப்பை வழிமொழிந்து வரவேற்பவர்களின் சிந்தனை மட்டத்தைக் குறித்தும் என் அறிவுக்கு எட்டியவற்றை இங்கு பகிர்வதன் மூலம், அது ஒரு நல்ல விவாதத்துக்கு வழிகோலும் என்ற எண்ணத்தில் தான் இதை பதிவேற்றுகிறேன். இங்கு முன்வைக்கப்படும் தகவல்கள், தீர்வுகள் போன்றவற்றில் இருக்கின்ற சீர்மையற்ற கருத்துக்கள், ஒவ்வாமைகள்  தொடர்பான விவாதத்துக்கு விருப்பமுள்ளோரை வரவேற்று வழிவிடுகிறேன்…


தெலுங்கானா தனி மாநிலமாக பிரிவது நல்லது என்பதற்கு முன்வைக்கப்படும் காரணங்கள், 1) ஆந்திரத்தின் பிற பகுதிகளைப் போல் தெலுங்கானா பகுதிகளும் அங்கு வாழும் மக்களும் பொருளாதார நிலையிலோ அடிப்படை வசதிகளிலோ எந்தவிதத்திலும் வளர்ச்சியடையவில்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கிறார்கள். 2) தெலுங்கானா இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வரையிலும் கூட ஆந்திர பிரதேசத்துடன் சேராமல் தனியாகவே இருந்தது. அதனால் இது பல ஆண்டுகால கோரிக்கை.. 3) தெலுங்கானா பகுதியில் வாழ்கின்ற மக்கள் ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்ந்து இருக்க விரும்பவில்லை.. தனியாக செல்வதையே விரும்புகிறார்கள்.. 4) உஸ்தானியா பல்கலைக்கழக மாணவர்கள் முதற்கொண்டு அனைத்து மாணவர்களும் ஒற்றுமையாக போராடி வருகிறார்கள்.. அவர்களும் வேலைவாய்ப்பு ரீதியில் முன்னேற்றம் காண தனி தெலுங்கானாவையே விரும்புகிறார்கள்..



இப்படி இன்னும் பல காரணங்கள் உண்டு. இருப்பினும் மேற்சொன்ன காரணங்கள் மட்டுமே மிக முக்கியமான காரணங்கள். எனவே அதை மட்டும் விவாதப் பொருளாக்குவோம்.. அதற்கு முன்பு கொஞ்சம் தெலுங்கானாவின் வரலாறு….

தெலுங்கானா பகுதியை தவிர்த்து ஆந்திரத்தின் பிறபகுதிகள் எல்லாம் ஒருங்கிணைந்த சென்னைபட்டிணத்தின் ஆளுகைக்கு கீழேதான் இருந்தது. ஆனால் இன்றைய தெலுங்கானா பகுதியானது, இன்னும் சில மராட்டிய பகுதிகளையும் கர்நாடகப் பகுதியையும் சேர்த்து ஹைதராபாத் சமஸ்தானம் என்னும் பெயரில் நிஜாம் ஆளுகைக்கு கீழ் இருந்தது. அப்படியென்றால் நிஜாம் ஆட்சியை வெள்ளையர் கண்டுகொள்ளவில்லையா..? என்று கேள்வி எழும்.. ஆம் அவர்கள் கண்டுகொள்ளவில்லைதான்.. ஏனென்றால் அந்த நிஜாம் மன்னர் ஆங்கிலேயர்கள் கட்டச் சொன்ன வரிப்பணத்தை எந்தவித மறுப்பும் இன்றி கட்டிவந்தது தான் காரணம். அதனால் நிஜாம் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களில் தலையிடாமல் வெறும் வரிப்பணத்தை மட்டும் கப்பமாக வாங்கிக் கொண்டு நிஜாமை அவரது தலைமையின் கீழ் ஆட்சி செய்ய அனுமதித்தனர்.

அவர் தன் ஆளுகைக்கு உட்பட்ட வறிய மக்களை கசக்கிப் பிழிந்து, அவர்கள் மீது அதிகமான வரிச்சுமை விதித்து மக்கள் பணத்தைப் பிடுங்கி, ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி தன் வாழ்க்கையை மிகவும் சுகபோகமாக ஓட்டி வந்தார். அந்த காலகட்டத்திலேயே அவர் முதல் இருபது பணக்காரர்களுள் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முக்கியமான அம்சம் அவரது ஆட்சியின் கீழ் வாழ்ந்த அதிகபடியான மக்கள் தெலுங்கு பேசும் மக்களாக இருந்தாலும், மன்னர் முஸ்லீம் என்பதால் ஆட்சி மொழியாக இருந்தது உருது மொழி. இதனால் உருது பேசத் தெரிந்த மராட்டிய மக்களே நிஜாம் அரசின் அரசாங்கப் பணிகளை அலங்கரித்தனர்.. மேலும் பள்ளிக்கூடங்களிலும் ஆட்சிமொழி உருது, ஆங்கிலமும் அங்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதால் தெலுங்கு பேசும் மக்கள் கல்விகற்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.. படிப்பறிவு இன்மையாலும், அரசாங்கப் பணிகளில் இல்லாமல் வெறும் விவசாயம் மட்டுமே செய்துவந்ததாலும், ஜமீந்தாரி முறையின் கொடுமையாலும் அவர்களது வாழ்க்கைதரம் பெரிதாக ஒன்றும் உயரவே இல்லை..

அதே நேரத்தில் ஆங்கில ஆளுகையின் கீழ் இருந்த ராயல்சீமா, ஆந்திரத்தின் பிற பகுதிகளில் வசித்துவந்த மக்களுக்கு ஆங்கிலேயரின் வாயிலாக ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் எந்தவிதமான வரி நிர்பந்தமும் இன்றி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியுற்றனர். சாதிய அடுக்குகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் புறக்கணிக்கப்பட்டதால் ஓரளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களும் ஆங்கில அறிவைப் பெற்றும், அரசாங்கப் பணிகளிலும் ஓரளவுக்கு பங்கு கொண்டு தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொண்டனர். இப்படி இருக்கையில் தான் 1946ம் ஆண்டு தெலுங்கானா பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரச்சாரத்தால் முதன்முதலாக ஒரு மக்கள்படை தோற்றுவிக்கப்பட்டு அது நிஜாமின் ராணுவத்தை எதிர்த்துப் போராடி 300க்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டு, மக்களே ஆட்சி செய்யத் தொடங்கினர். சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுதந்திரம் தருவதாக அறிவித்து நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

அப்போதும் வரியை ஒழுங்காக கட்டிவந்த நிஜாம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைப் போன்ற சிற்சில பகுதிகள் இந்தியாவுடன் இணைவதும் இணையாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்று கூறியே வெளியேறினார்கள். அதில் சில பகுதிகள் தாமாக முன்வந்து இந்தியாவுடன் இணைந்து கொண்டது. நிஜாம் கட்டுப்பாட்டின் ஹைதராபாத் சமஸ்தான தெலுங்கானாவில் இன்னும் சில பகுதிகளில் மன்னர் ஆட்சியே நடந்துவந்தது.. அப்போதும் மக்கள் தீராத துன்பத்தில் வாழ்ந்துவந்தனர்… அப்போதுதான் ஏற்கனவே மக்கள் புரட்சியால் கதிகலங்கிப் போய் இருந்த நிஜாம் தன் நிலப்பரப்பை பாகிஸ்தான் ஆட்சிக்கு கீழ் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் காய்களை நகர்த்த தொடங்க.. இதைக் கவனித்த ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரசித்திப் பெற்ற “போலோ” ஆப்ரேசன் மூலம் இந்திய ராணுவத்தைப் பயன்படுத்தி நிஜாம் அரசை பணியச் செய்து வெற்றி கொண்டார். இருப்பினும் மக்கள் புரட்சிப்படை இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிடவே இந்திய அரசாங்கம் திணறியது. அப்போது கம்யூனிஸ்டு கட்சியினர் எடுத்த ஒரு தவறான நிலைப்பாட்டால் மக்கள் தங்கள் போராட்டத்தை விடுத்து இந்தியாவுடன் இணைய சம்மதித்தார்கள்.. அப்போது அது ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திரா தனிமாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு பேசும் மக்களிடையே வலுப்பெற்றது. தெலுங்கு பேசும் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், ஆந்திரா என்ற தனிமாநிலத்தை உருவாக்கி அதற்கு சென்னையை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமலு என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1952ம் வருடம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து 63ம் நாள் உயிர்விட 1952 டிசம்பர் 15ல் அவரது இறுதி ஊர்வலத்தின் போது சென்னை மவுண்ட் ரோட்டில் பெரிய கலவரம் வெடித்தது. தெலுங்கு பேசும் பகுதிகளான ராயல் சீமா கடலோர ஆந்திர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக 1953ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி குர்நூலை தலைநகராகக் கொண்டு தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

அப்போதும் தெலுங்கானா பகுதி ஹைதராபாத் மாநிலமாகவே இயங்கி வந்தது. 1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்ட போது ஏற்கனவே தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்துவந்த ஆந்திரப் பகுதியுடன் தெலுங்கானாவை இணைத்தார் நேரு. ஆனால் தெலுங்கானாவைத் தவிர்த்து பார்த்தால் ராயல்சீமா, கடலோர ஆந்திர மக்கள் அப்போதே கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருந்ததால் இருவருக்கும் இடையே ஒரு வேறுபாடு சமமாக வளரத் தொடங்கியது.. அப்போதே தெலுங்கானா எப்படி தனியாக இருந்ததோ அதே போல் அதை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என்று சிலர் போராட்டம் நடத்தத் தொடங்கினர்… இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான முதல் போராட்டம் தொடங்கியது…. இதுதான் தெலுங்கானாவின் சுருக்கமான வரலாறு.

இப்போது மீண்டும் மேற்கூரிய நான்கு காரணங்களுக்கு வருவோம். தெலுங்கானாப் பகுதி மக்கள் பொருளாதார நிலையில் வளர்ச்சி அடையாமல் பின்தங்கி உள்ளனர் என்பது முழுமுதற்காரணம். இது கண்டிப்பாக வருந்தத்தக்க ஒன்று. ஆனால் சற்று கூர்ந்து பார்த்தால் தனி தெலுங்கானா மாநிலமாக பிரிவதற்காக போராடிய போராட்டங்களுள் பாதியளவுக்கு கூட தங்களது பொருளாதாரம் பின்தங்கி உள்ளது. அரசு எங்கள் பகுதி மக்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதனை முன்னிருத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை.. ஆக இங்கு பொருளாதார நிலையில் தன்னிறைவு இல்லை என்பதைக் காட்டிலும் தனித் தெலுங்கான என்பது தான் இவர்களது பிரதானக் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதனை அரசியல் சாயம் பூசி சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல் தவிர்த்துவிட முடியாது.

அடுத்து தெலுங்கானா இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட பல ஆண்டுகளுக்கு தனி மாநிலமாகவும் தனி ராஜ்ஜியமாகவும் விளங்கியது என்ற காரணம். ஆம் உண்மைதான். மறுக்கவில்லை.. தெலுங்கானா மட்டும்தான் அப்படி இருந்ததா.. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட போது அதன் நிலப்பரப்பில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் சுயராஜ்ஜியத்துடன் விளங்கியவைதான். அதற்காக அந்த 500 ராஜ்ஜியங்களையும் தனித்தனியாக பிரித்துவிட முடியுமா…? அதனால் மேற்சொன்னக் காரணத்தைக் கணக்கில் கொள்ள முடியாது…

மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம், தெலுங்கானா பகுதியில் வாழும் மக்கள் தனித்திருக்கவே,  தனி மாநிலமாக பிரியவே விரும்புகிறார்கள் என்ற காரணம்… இது ஒரு முக்கியமான உளவியல் சார்ந்த காரணம்.. இதனை வெகு கவனமாக அணுக வேண்டிய தார்மீக கடமை நம் எல்லாருக்கும் உண்டு. நான் பெங்களூருவில் பணியாற்றிய காலத்தில் ஆந்திர தேசத்தில் இருந்து எனக்கு ஒரு நெருக்கமான நண்பன் அறிமுகமானான். அவனோடு உரையாடும் போது, அவன் விளையாட்டாக, ஆனால் அவனது உள்மனதில் இருந்து கூறிய ஒரு வார்த்தை “WE DON’T HAVE VERY GOOD NEIGHBOUR’S” அதாவது எங்களுக்கு (ஆந்திர மக்களுக்கு) ஒரு மிகச் சிறந்த அண்டை வீட்டுக்காரன் (தமிழன், கன்னடன்,மராட்டியன் மற்றும் ஒரியன்) இல்லவே இல்லை என்றான். சற்று யோசித்துப் பார்த்தால் புரியும். இது கண்டிப்பாக ஒரு ஆந்திர பிரஜையின் எண்ணமாக மட்டும் இல்லை. இதையேதான் ஒவ்வொரு மாநிலத்தாரும் அண்டை மாநிலத்தவரைப் பார்த்துக் கூறிக் கொண்டே இருக்கிறோம்.. இந்த ஒவ்வாமை எப்படி நமக்குள் விதை விட்டு விருட்சமாக மாறியது. இதனை தூண்டிவிட்டு வளர்த்தெடுத்த அயோக்கியர்கள் யார்…? மனிதத்தன்மையை மறக்கடித்து இப்படி ஒரு மாநோய்க்கு நம்மை நாமே எப்படி பலிகொடுக்கும் மந்தநிலைக்கு மனித இனம் எப்போது யாரால் தள்ளப்பட்டது…?

இதைத்தான் நாம் சற்று உளவியல் ரீதியாக அணுக வேண்டியுள்ளது.. அப்படி என்ன வெறுப்பு ஒவ்வொரு அண்டை மாநிலத்தவன் மீதும்…? அவன் நம் எதிரி.. நம் போட்டியாளன் என்பதாலா..? எதில் அவன் நம் போட்டியாளன் என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நம் மனதிற்குள்ளே பதில் வரும் எல்லாவற்றிலும் தானென்று…! வேலை பங்கீட்டில், உணவு பங்கீட்டில், நீர் பங்கீட்டில், நிலப் பங்கீட்டில், பொருளாதாரப் பங்கீட்டில், பெண் பங்கீட்டில்…. இப்படி எத்தனையோ பங்கீடுகளில் அவன் நம் போட்டியாளன்…? இன்னும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள்.. அண்டை மாநிலத்தவனை மட்டும் தான் நாம் விரோதிக்கிறோமா…? தமிழகத்தில் உள்ள அனைவரையுமே நாம் நேசிக்கிறோமா…? அதுவும் இல்லையே…? நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் கூறுங்கள்…? உங்களுக்கு பிடித்த மாநிலம் உங்கள் மாநிலம் தான்.. உங்களுக்கு பிடித்த ஊர் உங்கள் ஊர்தான்… உங்களுக்கு பிடித்த தெரு உங்கள் தெரு தான்…. உங்களுக்கு பிடித்த வீடு உங்கள் வீடுதான்.. உங்களுக்கு பிடித்த நபர் “நீங்கள்” தான் நீங்கள்…. நீங்கள் மட்டும் தான்…… இப்படி நாம் எதிலெல்லாம் எங்கள் எங்கள் என்று கூறிக் கொண்டு அலைகிறோமோ… அதன் அகச்சிந்தையில் அசிங்கமாய் ஒழிந்து கொண்டு இருப்பது நான்.. நான்… நான்.. என்னும் அகந்தை மட்டுமே தான்…

நமக்கு உடன் பிறந்தோரும் போட்டியாளன் தான்.. பக்கத்து வீட்டுக்காரனும் போட்டியாளன் தான்… பக்கத்து தெருக்காரன், பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து மாவட்டத்துக்காரன், பக்கத்து மாநிலத்துக்காரன், பக்கத்து நாட்டுக்காரன் என எல்லோருமே போட்டியாளன் தான்.. நமக்கு நான் என்பது மிகமிகமுக்கியம்… பிரிந்து இருக்க விரும்புகிறார்கள்.. எனவே பிரித்து விடுவோம் என்று சொன்னால்… இங்கு ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக அல்லவா பிரிக்க வேண்டும்… அதைத்தானே நாம் அப்பட்டமாக விரும்புகிறோம்….? பிரிக்க வேண்டும் என்று குரம் கொடுப்பவர்களே..? பிரித்து விடலாமா…? ஒவ்வொரு மனிதனையுமே தனித்தனியாக…? நிச்சயமாக அவன் அதைத்தான் விரும்புகிறான்…?

ஒவ்வொரு மனிதனும் தனித்தே இருக்க விரும்புகிறான் என்றால் தனித்தே இருந்துவிடலாமே…? அதில் என்ன மோசம் வந்துவிடும் என்ற கேள்வி எழும்.. ஆனால் அதில் மோசம் வந்துவிடத்தான் செய்யும்… தனிமை சில நேரங்களில் மனிதனுக்கு நல்லதுதான்… ஆனால் பல நேரங்களில் தனிமை மனிதனுக்கு தான் ஒரு விலங்கென்பதை உணர்த்திவிடும்… விலங்கினச் சிந்தனைகளை வீறு கொண்டு எழச்செய்துவிடும் தனிமை… இதனால் தான் பழங்காலத்தில் நாம் குழுமி வாழும் இனக்கூட்டங்களாக வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினோம்… மீண்டும் தனிமைப்படுத்துவதென்பது நம்மை பூர்வ ஜென்மங்களுக்கு இட்டுச் செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.. எனவே தனிமை ஆபத்தானது… அதிலும் சமூகத்தின் தனிமை பேராபத்து… எப்படி தனி மனிதனின் தனிமை பிற மனிதனின் மீது தன் வஞ்சத்தை உமிழுமோ…! அது போல் ஒரு சமூகத்தின் தனிமையும் பிற சமூகத்தின் மீது வஞ்சத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டே இருக்கும்…. இங்கு நம்மைப் பிரித்துக் கொள்ள நமக்கு சாதி, மதம், இனம், மொழி, ஊர், தெரு, நிறம் என ஆயிரம் காரணங்கள் உண்டு.. ஆனால் சேர்ந்திருக்க ”இந்திய குடியரசு” என்ற ஒற்றைக் காரணம் மட்டும் இருப்பது அவலம்தான்… அதனால் தான் சொல்கிறேன் பிரிவினை வேண்டாம் என்று…

நான்காவதாக அவர்கள் சொல்கின்ற காரணம், மாணவர்களும் தனித்தெலுங்கானவை விரும்புகிறார்கள்.. உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள் என்பது… எழுத்தாளர் ஜெயமோகன் அவரது பல பதிவுகளில் குறிப்பிடும் ஒரு விஷயம் மாணவர்களையும் இளைஞர்களையும் பற்றியது… மிதமிஞ்சிய வன்முறை செயல்களையும், போராட்டங்களையுமே வீர்மாக எண்ணுகிறார்கள் இன்றைய மாணவர்கள் என்பது.. அதை எனக்கு முழுவதுமாக புரிய வைத்த தருணம் தெலுங்கானா போராட்டக் களம். இளம் வயதில் அந்த சூடான ரத்தத்துக்கு யோசிக்கும் திராணி என்பது சத்தியமாக இருக்காது.. அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்… அவர்களை இந்த பாழும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றார் போல் வளைத்துக் கொள்கிறார்கள்..
இந்த மாணவர்கள் எதை வெற்றி என்று எண்ணிக் கொண்டு எக்காளம் இடுகிறார்களோ, அதற்குப் பின்னர் ஒளிந்திருக்கும் தோல்வியை அவர்களது கண்கள் தரிசிப்பதை சிலர் தடுக்கிறார்கள்… தனித் தெலுங்கானாவாக பிரிப்பதனையே தங்களுக்கு சம உரிமை கிடைத்ததாக எண்ணி வெற்றி எக்காளம் இடும் இவர்கள், சேர்ந்து இருக்கும் போதே தங்கள் உரிமைக்காக ஏன் இப்படி போராடவில்லை… சேர்ந்திருந்து எதையுமே சாதிக்க முடியாததை இவர்கள் தங்கள் தோல்வி என்று அறிந்திருப்பார்களா…. எல்லாமே உயரப் போகிறது.. முதலமைச்சரின் எண்ணிக்கை, அமைச்சரின் எண்ணிக்கை, எம்.எல்.ஏ மற்றும் வட்டச் செயலார்களின் எண்ணிக்கை…. இந்த அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை திட்டம் வெற்றி தான்… மாணவர்களுக்கு என்ன உயரும்…? கல்வி கட்டணத்தைத் தவிர…? பொறுத்திருந்து பார்ப்போம்…

ஆங்காங்கே இன்னும் சில கூக்குரல்களும் கேட்கத் தொடங்கிவிட்டன… மகாராஷ்டிராவை விதர்பாவாகப் பிரிப்பது, வங்கத்தை கூர்க்காலாந்தாகப் பிரிப்பது, தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பது எனப் பல… கூக்குரல்கள்.. தெலுங்கானாப் பகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் வாக்கு வங்கியை சரியச் செய்யும் எண்ணத்துடன் காய் நகர்த்திய காங்கிரஸ் தான் வெற்றி பெற்றதாக எண்ணி கட்சிக்கும் நாட்டுக்கும் தோண்டிவிட்டது ஒரு சவக்குழி…

இந்தப் பிரிவினை செய்திகளைப் படித்துக் கொண்டு இருக்கும் போது எப்போதோ படித்த கவிக்கோ அப்துல் ரகுமானின் “கோடுகள்” என்னும் கவிதை நினைவுக்கு வந்தது… அந்த கவிதை வரிகள் இந்த ரணத்தை இன்னும் ஆழமாய் உணர்த்தும் என்பதால் அந்த கவிதையில் இருந்து சில வரிகள்….

நாம்
கோடுகள் கிழிப்பவர்கள்
கோடுகளால் கிழிக்கப்படுபவர்கள்

கத்தியின் கீரலைப் போல்
நாம் கிழிக்கின்ற கோடுகளிலிருந்து
கசிகிறது ரத்தம்….

ஒவ்வொருவரைச் சுற்றிலும் இருக்கிறது
ஒரு
இலக்குமணக் கோடு..
ஆனால்
அந்தக் கோட்டுக்கு அப்பால்தான்
இராமனும் இருக்கிறான்….
இராவணனும் இருக்கிறான்…

என்பதை நாம் மறந்துவிடுகிறோம்……

                                               - கனவு திருடன்