Showing posts with label என்ன வேணுனாலும் பேசலாம். Show all posts
Showing posts with label என்ன வேணுனாலும் பேசலாம். Show all posts

Friday, 20 December 2013

என்ன வேணுனாலும் பேசலாம் - அரசியல்


1.கூத்தாடித் திரிந்தவன் குடைக்குள் நிற்கிறான்
     ஆஸ்த்தியைக் கொண்டவன் அடிமையாய் அலைகிறான்
நிலைமை தவறி, பின் நிதானம் கெட்டவன்- அரசியல் செய்கிறான்
     அவன் ஆத்திரம் கொண்டவன்.
           தமிழகத்தை புரட்டிய கலைஞன்.
தேடினாலும் முயலாத திடமான லி உலகம்

2. துரத்தி துரத்தி ஓட்டு கேட்கும் கூட்டம் இதுவோ??
     ஆட்சி பிடித்ததும் விரட்டி விரட்டி சோதனை தருமோ!!
நீ பேசும் வார்த்தையில் வஞ்சகம் வைத்து
     உன் வழியினை தொடரும் அடிமைக் குலங்கள்
பாதம் தொட்டு பணிவடை செய்ய- நீ
     பாரத மாதா இல்லை தாயே!!
நிலைமையை அறிந்து நீ விலைகளை ஏற்றி
இருட்டை அகற்றும் உந்தன் வார்த்தை
வெறும் வார்த்தையாய் போய் இருளில் ஆழ்த்த
     அதில் நித்திரை தொலைத்த மனிதர்கள் பலர்

உன் பாச வார்த்தையில் பச்சயம் கலந்து
     பரிதாப சந்தையில் மனதினை விற்று
என் மக்கள் வாழ்வை பின் நடத்தி செல்லும்
     உன் அன்னை வேடம் அருமையாய் பொருந்தும்.
றிவு ன்றி திகாரம்_செய்து திமிருடன் முனையும் யவர்கள் உலகம்
3. கண் மறைக்கும் சலுகையை காட்டி
     சில்லரையாய் அதை சிதற வைத்து
குனிந்தவனின் முதுகில் குத்தும் காவலன் இவனோ

கனிவாய் கருத்துடன் கவியினை பொழியும்
ஒரு வெண்ணிற போர்வையில் நரியினை கண்டேன்
குறைவாய் கொடுத்து நிறைவாய்
     கிடைத்தது அதற்கு அறியனை என்றேன்
ஆதியில், மறைந்து பயணம் செய்தான்- பின்
     வீதியில் நிறைந்து விளம்பரம் கொண்டான் 
- நீ முதுமைக் கலைஞன்

திருடனை முன்னேற்றும் னவு உலகம்

4.தமிழை வளர்த்த தமிழ்மகன் நீயோ!!
     அவசரம் அறியாமல் அபராதம் விதித்தாய்
அறிவாய் செயல்பட்டு உன் வாரிசை அழைத்தாய்
    
தமிழை தொழுபவன் ஏன்??
உன் மகனை மருத்துவம் கற்க வைத்தாய்??
தமிழை அதன் பின் தான் கண்டு உணர்ந்தாயோ??

உன் அரசியல் தந்திரம் அறியச் செய்ய
     உன் இனத்தை தூண்டி இன்னல்கள் செய்தாய்
சாதனை என்று நினைத்து, சஞ்சலம் தந்தாய்
     சரித்திரம் சொல்லும் உன் மடமை குறித்து
                     மானம்  கெட்ட நீ மருத்துவ அய்யன்
பார்வை_இல்லாத டையர்களின் ண்ணுலகம்

5. கருப்பு சட்டை அணிந்த கயவன் நீயே!!
     சட்டம் படித்த சூழ்சமத் தீயே!!
துள்ளிக் கொள்ளும் உன் அரசியல் தந்திரம்
     தாவிக் குதிக்கும் கட்சியோர் விசித்திரம்
வெறுப்பினை மூட்டும் உன் மூட வார்த்தைகளும்
கலங்கிக் கொண்டிருக்கும் என் மக்கள் கண்களும்
உந்தன் வழக்கினை கூட தீர்க்காது வழக்கறிஞரே!!

நகைப்பினை தூண்டும் உன் நகைச்சுவை பேச்சு
தியும் திறனும் அற்ற முதிர்வற்ற டலுலகம்
6. இருப்பதன் இடமறியாத இடதுசாரி நீ
     எதிர்ப்பினை முனையும் நீவிர் எதிராலி கூட்டம்
தொடங்குவதுமில்லை தொடர்வதுமில்லை தொலைந்து போவதுமில்லை
குற்றங்களை அறிந்து குரல் கொடுக்கும் நீ
பொது அறிவில்லாத பொது உடைமை கொள்கை கூட்டம்.

அரசியல் என்றால்:
      மனம் கொண்டு,
மற்றவர் நலனில் பெருமிதம் கண்டு – தான்
எடுத்ததன் முடிவினில் உறுதியை கொண்டு
      மக்கள் தரப்பில் கருத்தினை அறியவும்
      பொது நலன் கருதி துடிப்புடன் செயல்படும் நெஞ்சமே

                                               - அரசியல்வாதி

Monday, 12 August 2013

என்ன வேணுனாலும் பேசலாம்



உடையுமோ குடியரசு


29வது மாநிலமாக “தெலுங்கானா” என்றொரு மாநிலத்தை தற்போதைய ஆந்திர தேசத்தில் இருந்து பிரித்து, தனிமாநிலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் பிண்ணனியில் உள்ள பிற்போக்குத்தனமான அரசியலைப் பற்றியும், தனி மாநிலமாக பிரிக்கவேண்டியதன் தேவை குறித்தும், தேவையின்மை குறித்தும், இந்த அறிவிப்பை வழிமொழிந்து வரவேற்பவர்களின் சிந்தனை மட்டத்தைக் குறித்தும் என் அறிவுக்கு எட்டியவற்றை இங்கு பகிர்வதன் மூலம், அது ஒரு நல்ல விவாதத்துக்கு வழிகோலும் என்ற எண்ணத்தில் தான் இதை பதிவேற்றுகிறேன். இங்கு முன்வைக்கப்படும் தகவல்கள், தீர்வுகள் போன்றவற்றில் இருக்கின்ற சீர்மையற்ற கருத்துக்கள், ஒவ்வாமைகள்  தொடர்பான விவாதத்துக்கு விருப்பமுள்ளோரை வரவேற்று வழிவிடுகிறேன்…


தெலுங்கானா தனி மாநிலமாக பிரிவது நல்லது என்பதற்கு முன்வைக்கப்படும் காரணங்கள், 1) ஆந்திரத்தின் பிற பகுதிகளைப் போல் தெலுங்கானா பகுதிகளும் அங்கு வாழும் மக்களும் பொருளாதார நிலையிலோ அடிப்படை வசதிகளிலோ எந்தவிதத்திலும் வளர்ச்சியடையவில்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கிறார்கள். 2) தெலுங்கானா இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வரையிலும் கூட ஆந்திர பிரதேசத்துடன் சேராமல் தனியாகவே இருந்தது. அதனால் இது பல ஆண்டுகால கோரிக்கை.. 3) தெலுங்கானா பகுதியில் வாழ்கின்ற மக்கள் ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்ந்து இருக்க விரும்பவில்லை.. தனியாக செல்வதையே விரும்புகிறார்கள்.. 4) உஸ்தானியா பல்கலைக்கழக மாணவர்கள் முதற்கொண்டு அனைத்து மாணவர்களும் ஒற்றுமையாக போராடி வருகிறார்கள்.. அவர்களும் வேலைவாய்ப்பு ரீதியில் முன்னேற்றம் காண தனி தெலுங்கானாவையே விரும்புகிறார்கள்..



இப்படி இன்னும் பல காரணங்கள் உண்டு. இருப்பினும் மேற்சொன்ன காரணங்கள் மட்டுமே மிக முக்கியமான காரணங்கள். எனவே அதை மட்டும் விவாதப் பொருளாக்குவோம்.. அதற்கு முன்பு கொஞ்சம் தெலுங்கானாவின் வரலாறு….

தெலுங்கானா பகுதியை தவிர்த்து ஆந்திரத்தின் பிறபகுதிகள் எல்லாம் ஒருங்கிணைந்த சென்னைபட்டிணத்தின் ஆளுகைக்கு கீழேதான் இருந்தது. ஆனால் இன்றைய தெலுங்கானா பகுதியானது, இன்னும் சில மராட்டிய பகுதிகளையும் கர்நாடகப் பகுதியையும் சேர்த்து ஹைதராபாத் சமஸ்தானம் என்னும் பெயரில் நிஜாம் ஆளுகைக்கு கீழ் இருந்தது. அப்படியென்றால் நிஜாம் ஆட்சியை வெள்ளையர் கண்டுகொள்ளவில்லையா..? என்று கேள்வி எழும்.. ஆம் அவர்கள் கண்டுகொள்ளவில்லைதான்.. ஏனென்றால் அந்த நிஜாம் மன்னர் ஆங்கிலேயர்கள் கட்டச் சொன்ன வரிப்பணத்தை எந்தவித மறுப்பும் இன்றி கட்டிவந்தது தான் காரணம். அதனால் நிஜாம் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களில் தலையிடாமல் வெறும் வரிப்பணத்தை மட்டும் கப்பமாக வாங்கிக் கொண்டு நிஜாமை அவரது தலைமையின் கீழ் ஆட்சி செய்ய அனுமதித்தனர்.

அவர் தன் ஆளுகைக்கு உட்பட்ட வறிய மக்களை கசக்கிப் பிழிந்து, அவர்கள் மீது அதிகமான வரிச்சுமை விதித்து மக்கள் பணத்தைப் பிடுங்கி, ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி தன் வாழ்க்கையை மிகவும் சுகபோகமாக ஓட்டி வந்தார். அந்த காலகட்டத்திலேயே அவர் முதல் இருபது பணக்காரர்களுள் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முக்கியமான அம்சம் அவரது ஆட்சியின் கீழ் வாழ்ந்த அதிகபடியான மக்கள் தெலுங்கு பேசும் மக்களாக இருந்தாலும், மன்னர் முஸ்லீம் என்பதால் ஆட்சி மொழியாக இருந்தது உருது மொழி. இதனால் உருது பேசத் தெரிந்த மராட்டிய மக்களே நிஜாம் அரசின் அரசாங்கப் பணிகளை அலங்கரித்தனர்.. மேலும் பள்ளிக்கூடங்களிலும் ஆட்சிமொழி உருது, ஆங்கிலமும் அங்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதால் தெலுங்கு பேசும் மக்கள் கல்விகற்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.. படிப்பறிவு இன்மையாலும், அரசாங்கப் பணிகளில் இல்லாமல் வெறும் விவசாயம் மட்டுமே செய்துவந்ததாலும், ஜமீந்தாரி முறையின் கொடுமையாலும் அவர்களது வாழ்க்கைதரம் பெரிதாக ஒன்றும் உயரவே இல்லை..

அதே நேரத்தில் ஆங்கில ஆளுகையின் கீழ் இருந்த ராயல்சீமா, ஆந்திரத்தின் பிற பகுதிகளில் வசித்துவந்த மக்களுக்கு ஆங்கிலேயரின் வாயிலாக ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் எந்தவிதமான வரி நிர்பந்தமும் இன்றி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியுற்றனர். சாதிய அடுக்குகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் புறக்கணிக்கப்பட்டதால் ஓரளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களும் ஆங்கில அறிவைப் பெற்றும், அரசாங்கப் பணிகளிலும் ஓரளவுக்கு பங்கு கொண்டு தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொண்டனர். இப்படி இருக்கையில் தான் 1946ம் ஆண்டு தெலுங்கானா பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரச்சாரத்தால் முதன்முதலாக ஒரு மக்கள்படை தோற்றுவிக்கப்பட்டு அது நிஜாமின் ராணுவத்தை எதிர்த்துப் போராடி 300க்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டு, மக்களே ஆட்சி செய்யத் தொடங்கினர். சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுதந்திரம் தருவதாக அறிவித்து நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

அப்போதும் வரியை ஒழுங்காக கட்டிவந்த நிஜாம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைப் போன்ற சிற்சில பகுதிகள் இந்தியாவுடன் இணைவதும் இணையாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்று கூறியே வெளியேறினார்கள். அதில் சில பகுதிகள் தாமாக முன்வந்து இந்தியாவுடன் இணைந்து கொண்டது. நிஜாம் கட்டுப்பாட்டின் ஹைதராபாத் சமஸ்தான தெலுங்கானாவில் இன்னும் சில பகுதிகளில் மன்னர் ஆட்சியே நடந்துவந்தது.. அப்போதும் மக்கள் தீராத துன்பத்தில் வாழ்ந்துவந்தனர்… அப்போதுதான் ஏற்கனவே மக்கள் புரட்சியால் கதிகலங்கிப் போய் இருந்த நிஜாம் தன் நிலப்பரப்பை பாகிஸ்தான் ஆட்சிக்கு கீழ் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் காய்களை நகர்த்த தொடங்க.. இதைக் கவனித்த ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரசித்திப் பெற்ற “போலோ” ஆப்ரேசன் மூலம் இந்திய ராணுவத்தைப் பயன்படுத்தி நிஜாம் அரசை பணியச் செய்து வெற்றி கொண்டார். இருப்பினும் மக்கள் புரட்சிப்படை இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிடவே இந்திய அரசாங்கம் திணறியது. அப்போது கம்யூனிஸ்டு கட்சியினர் எடுத்த ஒரு தவறான நிலைப்பாட்டால் மக்கள் தங்கள் போராட்டத்தை விடுத்து இந்தியாவுடன் இணைய சம்மதித்தார்கள்.. அப்போது அது ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திரா தனிமாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு பேசும் மக்களிடையே வலுப்பெற்றது. தெலுங்கு பேசும் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், ஆந்திரா என்ற தனிமாநிலத்தை உருவாக்கி அதற்கு சென்னையை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமலு என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1952ம் வருடம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து 63ம் நாள் உயிர்விட 1952 டிசம்பர் 15ல் அவரது இறுதி ஊர்வலத்தின் போது சென்னை மவுண்ட் ரோட்டில் பெரிய கலவரம் வெடித்தது. தெலுங்கு பேசும் பகுதிகளான ராயல் சீமா கடலோர ஆந்திர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக 1953ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி குர்நூலை தலைநகராகக் கொண்டு தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

அப்போதும் தெலுங்கானா பகுதி ஹைதராபாத் மாநிலமாகவே இயங்கி வந்தது. 1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்ட போது ஏற்கனவே தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்துவந்த ஆந்திரப் பகுதியுடன் தெலுங்கானாவை இணைத்தார் நேரு. ஆனால் தெலுங்கானாவைத் தவிர்த்து பார்த்தால் ராயல்சீமா, கடலோர ஆந்திர மக்கள் அப்போதே கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருந்ததால் இருவருக்கும் இடையே ஒரு வேறுபாடு சமமாக வளரத் தொடங்கியது.. அப்போதே தெலுங்கானா எப்படி தனியாக இருந்ததோ அதே போல் அதை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என்று சிலர் போராட்டம் நடத்தத் தொடங்கினர்… இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான முதல் போராட்டம் தொடங்கியது…. இதுதான் தெலுங்கானாவின் சுருக்கமான வரலாறு.

இப்போது மீண்டும் மேற்கூரிய நான்கு காரணங்களுக்கு வருவோம். தெலுங்கானாப் பகுதி மக்கள் பொருளாதார நிலையில் வளர்ச்சி அடையாமல் பின்தங்கி உள்ளனர் என்பது முழுமுதற்காரணம். இது கண்டிப்பாக வருந்தத்தக்க ஒன்று. ஆனால் சற்று கூர்ந்து பார்த்தால் தனி தெலுங்கானா மாநிலமாக பிரிவதற்காக போராடிய போராட்டங்களுள் பாதியளவுக்கு கூட தங்களது பொருளாதாரம் பின்தங்கி உள்ளது. அரசு எங்கள் பகுதி மக்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதனை முன்னிருத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை.. ஆக இங்கு பொருளாதார நிலையில் தன்னிறைவு இல்லை என்பதைக் காட்டிலும் தனித் தெலுங்கான என்பது தான் இவர்களது பிரதானக் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதனை அரசியல் சாயம் பூசி சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல் தவிர்த்துவிட முடியாது.

அடுத்து தெலுங்கானா இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட பல ஆண்டுகளுக்கு தனி மாநிலமாகவும் தனி ராஜ்ஜியமாகவும் விளங்கியது என்ற காரணம். ஆம் உண்மைதான். மறுக்கவில்லை.. தெலுங்கானா மட்டும்தான் அப்படி இருந்ததா.. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட போது அதன் நிலப்பரப்பில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் சுயராஜ்ஜியத்துடன் விளங்கியவைதான். அதற்காக அந்த 500 ராஜ்ஜியங்களையும் தனித்தனியாக பிரித்துவிட முடியுமா…? அதனால் மேற்சொன்னக் காரணத்தைக் கணக்கில் கொள்ள முடியாது…

மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம், தெலுங்கானா பகுதியில் வாழும் மக்கள் தனித்திருக்கவே,  தனி மாநிலமாக பிரியவே விரும்புகிறார்கள் என்ற காரணம்… இது ஒரு முக்கியமான உளவியல் சார்ந்த காரணம்.. இதனை வெகு கவனமாக அணுக வேண்டிய தார்மீக கடமை நம் எல்லாருக்கும் உண்டு. நான் பெங்களூருவில் பணியாற்றிய காலத்தில் ஆந்திர தேசத்தில் இருந்து எனக்கு ஒரு நெருக்கமான நண்பன் அறிமுகமானான். அவனோடு உரையாடும் போது, அவன் விளையாட்டாக, ஆனால் அவனது உள்மனதில் இருந்து கூறிய ஒரு வார்த்தை “WE DON’T HAVE VERY GOOD NEIGHBOUR’S” அதாவது எங்களுக்கு (ஆந்திர மக்களுக்கு) ஒரு மிகச் சிறந்த அண்டை வீட்டுக்காரன் (தமிழன், கன்னடன்,மராட்டியன் மற்றும் ஒரியன்) இல்லவே இல்லை என்றான். சற்று யோசித்துப் பார்த்தால் புரியும். இது கண்டிப்பாக ஒரு ஆந்திர பிரஜையின் எண்ணமாக மட்டும் இல்லை. இதையேதான் ஒவ்வொரு மாநிலத்தாரும் அண்டை மாநிலத்தவரைப் பார்த்துக் கூறிக் கொண்டே இருக்கிறோம்.. இந்த ஒவ்வாமை எப்படி நமக்குள் விதை விட்டு விருட்சமாக மாறியது. இதனை தூண்டிவிட்டு வளர்த்தெடுத்த அயோக்கியர்கள் யார்…? மனிதத்தன்மையை மறக்கடித்து இப்படி ஒரு மாநோய்க்கு நம்மை நாமே எப்படி பலிகொடுக்கும் மந்தநிலைக்கு மனித இனம் எப்போது யாரால் தள்ளப்பட்டது…?

இதைத்தான் நாம் சற்று உளவியல் ரீதியாக அணுக வேண்டியுள்ளது.. அப்படி என்ன வெறுப்பு ஒவ்வொரு அண்டை மாநிலத்தவன் மீதும்…? அவன் நம் எதிரி.. நம் போட்டியாளன் என்பதாலா..? எதில் அவன் நம் போட்டியாளன் என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நம் மனதிற்குள்ளே பதில் வரும் எல்லாவற்றிலும் தானென்று…! வேலை பங்கீட்டில், உணவு பங்கீட்டில், நீர் பங்கீட்டில், நிலப் பங்கீட்டில், பொருளாதாரப் பங்கீட்டில், பெண் பங்கீட்டில்…. இப்படி எத்தனையோ பங்கீடுகளில் அவன் நம் போட்டியாளன்…? இன்னும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள்.. அண்டை மாநிலத்தவனை மட்டும் தான் நாம் விரோதிக்கிறோமா…? தமிழகத்தில் உள்ள அனைவரையுமே நாம் நேசிக்கிறோமா…? அதுவும் இல்லையே…? நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் கூறுங்கள்…? உங்களுக்கு பிடித்த மாநிலம் உங்கள் மாநிலம் தான்.. உங்களுக்கு பிடித்த ஊர் உங்கள் ஊர்தான்… உங்களுக்கு பிடித்த தெரு உங்கள் தெரு தான்…. உங்களுக்கு பிடித்த வீடு உங்கள் வீடுதான்.. உங்களுக்கு பிடித்த நபர் “நீங்கள்” தான் நீங்கள்…. நீங்கள் மட்டும் தான்…… இப்படி நாம் எதிலெல்லாம் எங்கள் எங்கள் என்று கூறிக் கொண்டு அலைகிறோமோ… அதன் அகச்சிந்தையில் அசிங்கமாய் ஒழிந்து கொண்டு இருப்பது நான்.. நான்… நான்.. என்னும் அகந்தை மட்டுமே தான்…

நமக்கு உடன் பிறந்தோரும் போட்டியாளன் தான்.. பக்கத்து வீட்டுக்காரனும் போட்டியாளன் தான்… பக்கத்து தெருக்காரன், பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து மாவட்டத்துக்காரன், பக்கத்து மாநிலத்துக்காரன், பக்கத்து நாட்டுக்காரன் என எல்லோருமே போட்டியாளன் தான்.. நமக்கு நான் என்பது மிகமிகமுக்கியம்… பிரிந்து இருக்க விரும்புகிறார்கள்.. எனவே பிரித்து விடுவோம் என்று சொன்னால்… இங்கு ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக அல்லவா பிரிக்க வேண்டும்… அதைத்தானே நாம் அப்பட்டமாக விரும்புகிறோம்….? பிரிக்க வேண்டும் என்று குரம் கொடுப்பவர்களே..? பிரித்து விடலாமா…? ஒவ்வொரு மனிதனையுமே தனித்தனியாக…? நிச்சயமாக அவன் அதைத்தான் விரும்புகிறான்…?

ஒவ்வொரு மனிதனும் தனித்தே இருக்க விரும்புகிறான் என்றால் தனித்தே இருந்துவிடலாமே…? அதில் என்ன மோசம் வந்துவிடும் என்ற கேள்வி எழும்.. ஆனால் அதில் மோசம் வந்துவிடத்தான் செய்யும்… தனிமை சில நேரங்களில் மனிதனுக்கு நல்லதுதான்… ஆனால் பல நேரங்களில் தனிமை மனிதனுக்கு தான் ஒரு விலங்கென்பதை உணர்த்திவிடும்… விலங்கினச் சிந்தனைகளை வீறு கொண்டு எழச்செய்துவிடும் தனிமை… இதனால் தான் பழங்காலத்தில் நாம் குழுமி வாழும் இனக்கூட்டங்களாக வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினோம்… மீண்டும் தனிமைப்படுத்துவதென்பது நம்மை பூர்வ ஜென்மங்களுக்கு இட்டுச் செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.. எனவே தனிமை ஆபத்தானது… அதிலும் சமூகத்தின் தனிமை பேராபத்து… எப்படி தனி மனிதனின் தனிமை பிற மனிதனின் மீது தன் வஞ்சத்தை உமிழுமோ…! அது போல் ஒரு சமூகத்தின் தனிமையும் பிற சமூகத்தின் மீது வஞ்சத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டே இருக்கும்…. இங்கு நம்மைப் பிரித்துக் கொள்ள நமக்கு சாதி, மதம், இனம், மொழி, ஊர், தெரு, நிறம் என ஆயிரம் காரணங்கள் உண்டு.. ஆனால் சேர்ந்திருக்க ”இந்திய குடியரசு” என்ற ஒற்றைக் காரணம் மட்டும் இருப்பது அவலம்தான்… அதனால் தான் சொல்கிறேன் பிரிவினை வேண்டாம் என்று…

நான்காவதாக அவர்கள் சொல்கின்ற காரணம், மாணவர்களும் தனித்தெலுங்கானவை விரும்புகிறார்கள்.. உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள் என்பது… எழுத்தாளர் ஜெயமோகன் அவரது பல பதிவுகளில் குறிப்பிடும் ஒரு விஷயம் மாணவர்களையும் இளைஞர்களையும் பற்றியது… மிதமிஞ்சிய வன்முறை செயல்களையும், போராட்டங்களையுமே வீர்மாக எண்ணுகிறார்கள் இன்றைய மாணவர்கள் என்பது.. அதை எனக்கு முழுவதுமாக புரிய வைத்த தருணம் தெலுங்கானா போராட்டக் களம். இளம் வயதில் அந்த சூடான ரத்தத்துக்கு யோசிக்கும் திராணி என்பது சத்தியமாக இருக்காது.. அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்… அவர்களை இந்த பாழும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றார் போல் வளைத்துக் கொள்கிறார்கள்..
இந்த மாணவர்கள் எதை வெற்றி என்று எண்ணிக் கொண்டு எக்காளம் இடுகிறார்களோ, அதற்குப் பின்னர் ஒளிந்திருக்கும் தோல்வியை அவர்களது கண்கள் தரிசிப்பதை சிலர் தடுக்கிறார்கள்… தனித் தெலுங்கானாவாக பிரிப்பதனையே தங்களுக்கு சம உரிமை கிடைத்ததாக எண்ணி வெற்றி எக்காளம் இடும் இவர்கள், சேர்ந்து இருக்கும் போதே தங்கள் உரிமைக்காக ஏன் இப்படி போராடவில்லை… சேர்ந்திருந்து எதையுமே சாதிக்க முடியாததை இவர்கள் தங்கள் தோல்வி என்று அறிந்திருப்பார்களா…. எல்லாமே உயரப் போகிறது.. முதலமைச்சரின் எண்ணிக்கை, அமைச்சரின் எண்ணிக்கை, எம்.எல்.ஏ மற்றும் வட்டச் செயலார்களின் எண்ணிக்கை…. இந்த அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை திட்டம் வெற்றி தான்… மாணவர்களுக்கு என்ன உயரும்…? கல்வி கட்டணத்தைத் தவிர…? பொறுத்திருந்து பார்ப்போம்…

ஆங்காங்கே இன்னும் சில கூக்குரல்களும் கேட்கத் தொடங்கிவிட்டன… மகாராஷ்டிராவை விதர்பாவாகப் பிரிப்பது, வங்கத்தை கூர்க்காலாந்தாகப் பிரிப்பது, தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பது எனப் பல… கூக்குரல்கள்.. தெலுங்கானாப் பகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் வாக்கு வங்கியை சரியச் செய்யும் எண்ணத்துடன் காய் நகர்த்திய காங்கிரஸ் தான் வெற்றி பெற்றதாக எண்ணி கட்சிக்கும் நாட்டுக்கும் தோண்டிவிட்டது ஒரு சவக்குழி…

இந்தப் பிரிவினை செய்திகளைப் படித்துக் கொண்டு இருக்கும் போது எப்போதோ படித்த கவிக்கோ அப்துல் ரகுமானின் “கோடுகள்” என்னும் கவிதை நினைவுக்கு வந்தது… அந்த கவிதை வரிகள் இந்த ரணத்தை இன்னும் ஆழமாய் உணர்த்தும் என்பதால் அந்த கவிதையில் இருந்து சில வரிகள்….

நாம்
கோடுகள் கிழிப்பவர்கள்
கோடுகளால் கிழிக்கப்படுபவர்கள்

கத்தியின் கீரலைப் போல்
நாம் கிழிக்கின்ற கோடுகளிலிருந்து
கசிகிறது ரத்தம்….

ஒவ்வொருவரைச் சுற்றிலும் இருக்கிறது
ஒரு
இலக்குமணக் கோடு..
ஆனால்
அந்தக் கோட்டுக்கு அப்பால்தான்
இராமனும் இருக்கிறான்….
இராவணனும் இருக்கிறான்…

என்பதை நாம் மறந்துவிடுகிறோம்……

                                               - கனவு திருடன்

Saturday, 27 April 2013

என்ன வேணுனாலும் பேசலாம்



சென்னையில்  ஒரு இலக்கிய அமைப்பினர், ஒரு கவிதை போட்டியை அறிவித்திருந்தார்கள். தேர்வு பெரும் முதற் கவிதைக்கு முன்னூறு ரூபாய், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு பெரும் கவிதைக்கு 200 ரூபாய் மற்றும் 300 ரூபாய்.
பாரதி அன்பர்கள் ஒரு கவிதை எழுதுமாறு வற்புறுத்தினர். முதலில் பாரதியார் மறுத்தாலும் பின்னர் ஒரு பாடலை எழுதி அனுப்பிவைத்தார்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"
என்று தொடங்கும் பாடல்தான் அது.

போட்டியில் பாரதியின் கவிதை மூன்றாவது பரிசு பெற்றதாக அறிவித்தார்கள். பரிசு பெற்ற மூன்று பாடல்களையும் வெளியிட்டனர்.
முதலிரண்டு பரிசுகளை பெற்ற கவிதைகளில் தரமோ, இலக்கிய நயமோ, பொருள் வளமோ இல்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

பாரதிக்கு உலக நடப்பு தெரியும். அதனால் பாரதியார் "அந்த அமைப்பினர் யாருக்கோ கொடுக்கத் தீர்மானித்த பரிசினை நேரடியாக கொடுக்க முடியவில்லை என்று ஒரு போட்டி வைத்துக் கொடுத்தார்கள். அதற்கு நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்?" என்று அன்பரைத் தேற்றினார்.
                
   பாரதி அன்பர்கள் அன்று சொன்னதை போலவே போட்டியில் முதலாவது, இரண்டாவது பரிசுகளை பெற்ற பாடல்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. மூன்றாம் பரிசு பெற்ற பாடலோ இன்றும் மக்களிடம் பெரும்புகழ் பெற்று உலா வருகிறது.

மாலினி

Monday, 1 April 2013

என்ன வேணுனாலும் பேசலாம்



பாரதியின் தமிழ் பற்று:-


இதை உங்களில் சிலருக்கு முன்பே தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.


விடுதலை போராட்டத்தின் போது ஒரு முறை காந்தி ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போராட்டதில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதை பார்த்து வியந்து பாரதி அவருக்கு ஒரு பாராட்டு கடிதம்  எழுதினார். அதில் "தாங்கள் நடத்திய போராட்டத்தில் உங்களுடைய பேச்சு பிரமாதமாய் இருந்தது. நீங்கள் அந்த போராட்டத்தில் உங்கள் தாய் மொழியான குஜராத்தியிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியிலோ பேசி இருக்கலாம். ஆனால், நாம் நம் நாட்டை விட்டு யாரை விரட்டி அடிக்க போராடிக்கொண்டு இருக்கிறோமோ அவர்கள் தாய் மொழியான ஆங்கிலத்தில் பேசியது தான் எனக்கு வருத்தத்தை தருகிறது" என்று எழுதி இருந்தார்.

காந்தி அதற்கு எழுதிய மறு கடிதத்தில் "உண்மை தான் பாரதி. நான் செய்தது தவறே. ஆனால்,

எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் ஏன் எனக்கு எழுதிய கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி இருந்தீர்கள்"

என்று கேட்டார்.


பாரதி எழுதிய மறு கடிதத்தில் "நான் யாருடைய மனதையாவது காய படுத்தும் படி நேர்ந்தால்

அதை ஏன் தாய் மொழி மூலமாக செய்ய விரும்ப மாட்டேன்" என்றார்.

பாரதி தமிழ் மீது வைத்து இருந்த பற்றுக்கு இது ஒரு சின்ன உதாரணம்.


மாலினி

Monday, 25 February 2013

என்ன வேணுனாலும் பேசலாம்



2014 இப்பவே சூடுப்பிடித்துவிட்டது. காங்கிரஸ் பிரதமர் வேட்பாளாராக ராகுல் காந்தியும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடியும் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விட்டார்கள். மன்மோகன் அரசில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் ஊழல் வழக்குகள், சில்லரை வர்த்தக விவகாரம், விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிறுவகித்துக்கொள்ளும் உரிமை, விவசாயிகள் தற்கொலை, செயல்படாத அரசு என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் விரிந்துக்கிடக்க காங்கிரசின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி. ஊழல் இல்லாத அரசு, வியத்தகு பொருளாதார வளர்ச்சி, காங்கிரஸ் அரசின் மீதான மக்களின் கோபம் என அசுர பலத்துடன் நரேந்திர மோடி இருந்தாலும் ஒரு மதவாதியை சிறுபான்மையினரும், மக்களும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே. காங்கிரசின் தேர்தல் பிரச்சாரமும் அதுவாகத்தான் இருக்கும் என்பது இந்து பயங்கிரவாதிகளை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குகிறது என்று கூறிப் பிரச்சனையை கிளப்பியிருக்கும் உள்துறை அமைச்சர் ஷிண்டேயின் அறிக்கையிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

இம்முறையும் மூன்றாவது அணியமைக்க முயற்சிகள் நடைபெறும், ஆனால் அமையுமா என்பது சந்தேகமே. அப்படியே அமைந்தாலும் யார் தலைவர் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுவது கடினம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியென 2014 வெடியின் திரியை கொளுத்திப்போட்டதே ஜெயலலிதா தான். அவரது அடிபொடிகளும் நாளைய பிரதமர் என்றே ஒவ்வொரு மேடையிலும் கூவி வருகிறார்கள். 40 தொகுதிகளை வைத்துக்கொண்டு ஒரு நாட்டை ஆள்வது அத்தகைய எளிதான காரியமும் இல்லை. கனவுகளில் இருக்கும் முதல்வரை யாராவது தண்ணி தெளித்து எழுப்பிவிட்டால் அவருக்கும் நல்லது நமக்கும் நல்லது. அவரது நண்பர் நரேந்திர மோடியை எதிர்த்து அவர் நிற்பாரா என்பதும் கேள்விக்குறியே. எனவே முதல்வரின் முடிவில் மாற்றம் இருக்கலாம். தே.மு.தி.கவை வளைத்துபோடும் முயற்சியில் தி.மு.கவும், காங்கிரஸை வளைத்துபோடும் முயற்சியில் தே.மு.தி.கவும் முனைப்பு காட்டுகின்றன. காங்கிரசுடன் தனது கூட்டணியை தி.மு.க தொடருமா என்பது கலைஞரின் அறிக்கையை போலவே புரியாத புதிர்தான், வரும் ஆனா வராது கதைதான். (2014 வரைக்கும் பொருத்திருக்கணுமானு நீங்க பொளம்புறதும் கேக்குது. என்ன பண்றது மன்மோகன் மாதிரியே அவர் அரசும் மெதுவா நகருது.)

அடுத்து நம்ம ஒரு சின்ன பிரச்சனைய பத்தி பேசலாம். வீதியில நடந்து போயிட்டு இருக்கிறப்ப நான் பாத்த கண் கொள்ளா காட்சி. ஒரு படிச்ச தகப்பன் தன் கைக்குழந்தைய தூக்கிட்டு வரான். எப்படி? தன் ஒரு கையில் குழந்தையும் மறு கையில் சிகரட் துண்டும். ஆகா! அந்த நச்சுப்புகை உனக்கும் கெட்டது தான். ஆனா உலகத்தை சமீபத்தில பாத்த அந்த குழந்தை, ரொம்ப பாவம்யா. சிறு வயசுலேயே அந்த குழந்தையோட உடல் நலம் பாதிக்குமா இல்லையா? படிச்ச பட்டதாரியே இப்படி நடந்துக்கலாமா? மாறுங்க. எதிர்காலத்தில உன் புள்ள நல்ல காத்த சுவாசிக்கனும், தெரிஞ்சுக்கோ....

மரணத் தண்டனை வேண்டுமா வேண்டாமா? எனக்கு என்னமோ வேண்டாம்னு தான் தோனுது. தப்பு செஞ்சா தண்டனை கொடுக்கனும், சரி. ஆனா அந்த தண்டனை அவன திருத்தனும், அழிக்க கூடாது. அப்படியே அவன தூக்கில போட்டாலும் மத்தவங்க திருந்துறாங்கலா? எனக்கு என்னமோ இல்லனுபடுது. மரணத் தண்டனை இருந்தும் குற்றம் இன்னும் குறையலயே. அதிகமா தான் ஆகுது. அதுக்கு பள்ளிக் கூடத்தில இருந்தே அன்பு, பாசம் எல்லாம் சொல்லி வளக்கனும். எப்ப வாங்குற மதிப்பெண் தான் ஒருத்தன எடைப்போடுதோ அப்பவே கல்வி சரியில்லாம போச்சு. பல நாட்டுல மரணத் தண்டனைய நீக்கிட்டாங்க. உலகத்துக்கு அறவழியில போராடுனு சொல்லித் தந்த நம்ம நாட்டுல இன்னும் நீக்கல. பொறுத்திருந்து பாப்போம்.

இன்னக்கி எத்தன பேரு நல்லா சந்தோசமா சிரிச்சிங்க? சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பாத்தா எல்லாரும் ஏதோ மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு வீட்டுகார அம்மவோட சண்ட போட்ட மாறியே இருக்காங்க. காரணமேயில்லாம சிரிங்க. பழைய ஞாபகத்த நெனச்சுப் பாத்து சிரிங்க. எப்படியோ சிரிங்க. மனசு லேசாகும். ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். மூளை தெளிவா சிந்திக்கும். எல்லாத்தயும் விட நீங்க ரொம்ப அழகா தெரிவீங்க!!! அதுக்குனு யாரும் இல்லாத ரோட்டுல தனியா சிரிச்சு பழகுறேனு சிரிச்சு தொலையாதீங்க. தன்னத்தான் நீங்க பயமுறுத்துறீங்கனு நாய் கடிச்சு வைக்க போகுது. வாங்க என்னவேணும்னாலும் பேசலாம்.....

                                                    - யோகி & கோழி


Thursday, 17 January 2013

என்ன வேணுனாலும் பேசலாம்





கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசபட்ட பிரச்சனை இது. இணையம், பேஸ்புக், ட்விட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். தமிழகத்தில ஒருத்தர் ஒரு மத்திய அமைச்சரோட பையனப் பத்தி ஏதோ ட்விட்டர்ல ட்விட்ட, அத சாட்சியா வச்சி போலீஸ் அவரை கைதுப் பண்ணிட்டாங்க. அடுத்து பாடகி சின்மயிக்கும் இன்னொரு தரப்பிக்கும் அதே ட்விட்டர்ல பிரச்சனை வர, அதுவும் போலீஸ் வரைக்கும் போய் சமாதானம் ஆச்சு. இது மாறி இணையத்துல எழுதறதுக்கும் சொல்றதுக்கும் பிரச்சனை வரும்னு யாரு கண்டா. இந்த விசயம் நாடு முழுக்க பரவ காரணமா இருந்தது வேறவொரு சம்பவம்.

மும்பைல பால் தாக்கரே இறுதி ஊர்வலம் நடந்தப்ப அந்த இடத்துக்குநிறைய மின்சாரம் வேணும்னு மத்த இடத்துல நிறுத்தி வச்சிருப்பாங்க போல. இத எதிர்த்து ஒரு பொண்ணு பேஸ்புக்ல ஸ்டேடஸ் போட, அவளோட தோழி ஒருத்தி அந்த ஸ்டேடஸ்க்கு லைக் போட, ஆரம்பிச்சுது பிரச்சனை. அவங்க ரெண்டு பேரையும் பொது மக்களுக்கு இடையுறு செய்யும் விதமாக செய்தி பரப்பியதுன்னுட்டு போலீஸ் கைதுப் பண்ணிட்டாங்க. அப்பறம் மீடியா தலையிட, அவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டாங்க.

இந்த விசயம் போய்க்கிட்டு இருக்கும் போதே ஒரு பொண்ணு சுப்ரிம் கோர்ட்ல பொது நல வழக்கு ஒன்னு போட்டுட்டாங்க. இந்திய சட்டம் மக்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுத்திருக்கு. அப்படி இருக்கும் போது எப்படி அவங்க ரெண்டு பேரையும் கைதுப் பண்ணலாம்னு கேட்டு கேஸ் போட்டங்க. சுப்ரிம் கோர்ட் அந்த கைதுக்கு கண்டனம் தெரிவிச்சு கைதுப் பண்ண போலீஸையும் கண்டிச்சிருக்கு.  இப்ப அந்த அரஸ்ட் ஆன ரெண்டு பேரும் வழக்குப் போட்ட அந்த பொண்ணும் ரொம்ப பேமஸ் ஆகிட்டாங்க. IIT-யோ IIM-யோ அந்த ரெண்டு பேரையும் அவங்க மாணவர்கள்கிட்ட பேச கூப்பிட்டுயிருக்காங்களாம். இப்படி எல்லாரும் கருத்து கந்தசாமியா மாறிட்டா நாடு திருந்தயிருமோ? “பேமஸ் ஆகலாம் இப்படி!” னு ஒரு படம் எடுங்கப்பா.
விகடன்ல கதைப் படிக்கும் போது ஒன்னு தோன்னுச்சு. மாற்றுத்திறனாளிக்கு சைக்கிள், தையல் மிஷின், அது இதுனு எவ்வளவோ செய்யிது அரசாங்கம். அத நம்ம மந்திரி, சட்ட மன்ற உறுப்பினர்னு பெரிய மனுசங்களாம் வந்து கொடுக்கிறாங்க. அப்ப அந்த மாற்றுத்திறனாளிய மேடை மேல ஏத்தி அவங்கள கஷ்டபடுத்தி வரிசையில நகத்தி அப்பப்பா…. அதுக்கு அவங்க ஒக்காந்து இருக்கிற இடத்துக்கே போய் கொடுத்தா இன்னும் நல்லாயிருக்கும்ல. கொஞ்சம் யோசிக்கலாம்.

கரிகால் சோழன் மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தான் ஏன்டா உயிரோட இருக்கோம்னு நொந்துக்குவான், அழகான காவிரிய இப்படி திண்டாட வைக்குறானுங்கனு. மாத்தி மாத்தி ரெண்டு அரசும் கேஸ் போடுது, சிறப்பு குழு ஆய்வு செய்யுது ஆனா ஒண்ணும் நடக்க காணோம். ஒரு விவசாயி கேக்குறான், “சாமிகளா, நீங்க முதலைமைச்சரா யோசிக்க வேணாம். ஒரு விவசாயியாயிருந்து நினைச்சுப் பாருங்க. திங்க சோறு இல்லாம போனா எதயா சாப்பிடுவீங்க?” நிலாவில அறுவடை பன்ற காலம் வரைக்கும் இப்படியே இழுப்பானுங்களோ?

தங்கச்சிக்கிட்ட பேசிக்கிட்டுயிருந்தப்ப தீடீர்னு ஒரு தத்துவம் பொறந்துச்சி. மனுச பயபுள்ளய தவிர வேற எந்த மிருகத்துக்காவது தொப்பையிருக்கா? நல்லா மூனு வேள, சில பேரு அதுக்கு மேல தின்னுப்புட்டு, தூங்கி தூங்கி விழுந்து, சும்மா நீர்யானை கணக்கா வளத்து வச்சிருக்கானுங்க. மக்களே, இதே பூமியில தான் சாப்பிட வழியில்லாம சாவுற மனுசனும் இருக்கான். கொஞ்சம் மிச்சம் வைங்க.

கடைசியா ஒன்னு, அதிகமா தப்பு பண்ணுங்க. அதுக்குனு தப்பு மட்டுமே பண்ணிட்டு இருக்காதீங்க. செஞ்ச தப்புல இருந்து எது சரினு கத்துக்கோங்க. தப்பு நல்லது. முத நாள் எதிர் வீட்டு கொடில பாவடைய திருடிட்டு அடுத்த நாள் அந்த தப்ப பண்ணல, வேற தப்பு பண்றேன்னு பேங்க்ல கொள்ளையடிக்க போயிறாதீங்க. சுட்டே புடுவாங்க!!! வாங்க என்னவேனாலும் பேசலாம்.


-    கோழி
-    முருகன் (கார்டூன்)