Showing posts with label கோழி. Show all posts
Showing posts with label கோழி. Show all posts

Thursday, 8 January 2015

நடுநிசி நாய்கள்





இருள் மையச்சூழ்ந்து சந்திரன் மேலெழுந்து வளி வலியிழந்து சப்தமற்ற நடுநிசியில் தான் அவைகளை கண்டேன்.

ஒடவோ வேகமாக நடக்கவோ இல்லை.
எந்த வேலையும் இல்லாத சோம்பேறி நடையும் இல்லை.
மெதுவாக அசைந்து நான்கு கால்களை முன்வைத்து நடந்தது.

தனியாக வரும் என்னை பார்த்து அது குரைக்கவில்லை. பல நாள் என்னை பார்த்து பழகிய வழக்கமோ விட்டுவிட்டது.

அங்கே இரண்டு பெரிய நாய்கள் கொஞ்சி விளையாடுகின்றன. வலிக்காதவாறு வாயால் காதை கடித்து விளையாடுகின்றன. ஒன்றை ஒன்று புரட்டி தள்ளிவிடுகின்றன.

சில வயதான நாய்கள் குளிருக்கு சுகமாக சுருண்டு படுத்தப்படி எப்போதோ சாலையில் கடக்கும் வாகனங்களை கண்ணை மட்டும் திறந்து பார்க்கின்றன.

என் காலடி சத்தம் கேட்டு தாய் நாயின் கண்டிப்பை மீறி தைரியமாக குட்டி நாய்கள் சாலையின் மையம் வரை வருகின்றன. எட்டா இடம் அடைந்த மகிழ்வில் அந்த நாய் குட்டிகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. என் முகம் பார்த்து இவன் அருகில் செல்லலாமா கூடாதாவென்று திகைத்து நிற்கின்றன.

நான் உதடுகளை குவித்து "ச்சூ ச்சூ "என்று கனிந்து அழைத்தவுடன் என்னை கண்டு பயந்து ஓடுகின்றன.

பகலில் புரியாதவொரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இரவில் தங்களுக்கென ஓர் சுதந்திர சுகந்தமான வாழ்க்கை வாழ்கின்றன அந்த நடுநிசி நாய்கள்.

Sunday, 10 November 2013

8 காதல் கடிதங்கள் - கடிதம் -6 : கிளைமுறிவு


பிரியமுள்ள பூங்குழலி,
           என்னால் உன் குரல் கேட்காமல் இருக்க முடியவில்லை. பைத்தியம் பிடித்துவிட்டது போல் இங்கு நான் உள்ளேன். எப்போது தான் என்னிடம் நீ மறுபடியும் பேசுவாய்? நாம் இருவரும் பேசாமல் போனதற்கு நான் தான் காரணம். நான் தான் சொன்னேன் எனக்கு வேலை கிடைக்கும் வரை உன்னிடம் பேசமாட்டேன் என்று. இப்போது வேலை கிடைத்துவிட்டதே.

           ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? வேலை கிடைக்காததற்கு நீ தான் காரணம் என்று நீ புரிந்துக்கொண்டது தவறு. உன்னிடம் பேசாமல் இருந்தால் உன்னிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். அதனால் நிறைய உழைத்து இன்னும் கடின முயற்சியுடன் வேலைத் தேடுவேன். அப்படியே நடந்தும்விட்டது. இதோ எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது.

           காதலிக்க ஆரம்பித்த வருடத்தில் இருந்து ஒவ்வொரு புதுவருடத்தின் முதல் நொடி நான் உன்னிடம் பேசுவேன். உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சரியாக 12 மணிக்கு நான் தான் முதலில் வாழ்த்து சொல்லுவேன். பேசாமல் போன இந்த ஐந்து மாத இடைவெளியில் அந்த இரண்டு நிகழ்விலும் நான் பேசவில்லை. நம் காதல் கல்யாணத்தில் அடியெடுத்து வைக்கத்தானே நான் அப்படி நடந்துக்கொண்டேன். கண்டிப்பாக இதனால் நீ காயப்பட்டு இருப்பாய். என்னை மன்னிக்க மாட்டாயா?

           மீண்டும் சொல்கிறேன் பூங்குழலி. நீ என்னிடம் பேசாமல் இருப்பது நரகத்தில் இருப்பது போல் உள்ளது. என்னிடம் இருந்த புன்னகை காணவில்லை. நீ இருந்தால் மட்டுமே அது பூக்கும். உடனே பேசு……

                                     உன் குரல் கேட்க காத்திருக்கும்,

                                                அருள்மொழி.

Wednesday, 21 August 2013

ரகசிய சிநேகிதனே

’பூங்குழலி எங்கயிருக்க?’
‘சமையக்கட்டுல இருக்கேண்டா’
’உடனே இங்க வா’
‘ஏன்?’
‘வான்னா வா’
‘வேலயா இருக்கேண்டா’
‘பூங்குழலி, நம்ம பாட்டு போடுறான் டி.வில’
‘நம்ம பாட்டா? ஆகா!’
‘ஆமாம். உடனே வா’
‘டேய் ப்ளீஸ்டா, சமைச்சு முடிச்சுட்டு வரேண்டா’
‘அதெல்லாம் முடியாது. இப்பவே வரனும்’
‘ஏண்டா இப்படி தொல்ல பன்ற?’
‘நான் பன்றது தொல்லயா?’
‘தொல்ல தான். காதல் தொல்ல, தாங்க முடியல’
‘வாடி, என் செல்லம்ல’
‘இப்பவே வரனும்னா நீ தான் மீதி சமையல் பண்ணனும், சரியா?’
‘பண்றேன் டீ’




அப்படியே பாதியில் சமையலை நிறுத்திவிட்டு பூங்குழலி, அருள்மொழி
உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு சென்றாள். தொலைகாட்சிப் பெட்டியில்
’அலைபாயுதே’விலிருந்து ’சிநேகிதனே சிநேகிதனே’ பாடிக்கொண்டிருந்தது.


‘ம்ம்ம். சின்ன சின்ன அத்துமீறல் ஆரம்பி.’
‘கண்ண மூடு. அப்பத்தான் ஆரம்பிப்பேன்.’
‘சரி, மூடுட்டேன்.’


அருள்மொழி அவள் பின்னால் சென்று அவள் கைகளை பிடித்தபடி அவள் தோள் மீது தலை சாய்த்தவாறு மிகவும் மெல்லிய குரலில் அவன் நெஞ்சத்தின்று அவள் காதில் ‘ஐ லவ் யூ பூங்குழலி’ என்றான். அவளுக்கு அவர்கள் முதன் முதலில் பார்த்த போதெழுந்த அதே சிலிர்ப்பு இப்போது எழுந்தது.


அவளை திருப்பி இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்தான். மூடிய கண்களை இன்னும் இறுக்கமாய் மூடிக்கொண்டாள் பூங்குழலி. இவன் இதயத்தில் எழுந்த ‘லப்’ அவள் இதயத்தில் ‘டப்’ என்று சேர்ந்துக்கொண்டது.
முத்தம் நீண்டது மணிக்கணக்காய்.


பூங்குழலியின் செல்களெல்லாம் பூக்கள் பூத்து குலுங்கியது. வெட்கத்தில் அவை சிவந்து, கதிரவன் அந்தி சாயும் அடிவானமாய் காட்சியளித்தால் பூங்குழலி. பேரழகு பதுமையாய் ஒளிவீசினாள் பூங்குழலி.


‘ம்ம். அடுத்து டா அருள்மொழி’
‘அடுத்தது என்ன? முத்தம் கொடுத்ததுல மறந்துப்போச்சு குட்டி’
‘எப்படித்தான் உனக்கு ஒவ்வொரு தடவையும் முத்தம் கொடுத்தோனே மறக்குமோ? இப்ப நீங்க எனக்கு நகம் வெட்டி விடனும் கண்ணு’
’அப்ப போய் மெத்தையில படு’
பூங்குழலி மெத்தையில் படுத்துக்கொண்டு தூங்குவதுப் போல் நடித்தாள்.
அருள்மொழி அவளருகில் சென்று அமர்ந்து மலரின் இதழில் ஒர் இதழை மெதுவாக எடுப்பதுப்போல் அவள் கையை எடுத்து தன் ஒரு கையில் வைத்து மற்றொரு கையினால் அவள் நகத்தை களைந்தான்.
களைந்த நகத்தையெல்லாம் எடுத்து எப்போதும் அதனை சேமிக்கும் பெட்டியில் வைத்தான். பின் அவளருகில் படுத்துக்கொண்டான். அவள் அவன் மீது கை படர்த்தி நெஞ்சை முகம் புதைத்தாள். மேகம், பூமி இவர்கள் காதலில் நனைய மழை பொழிந்து மகிழ்வூட்டியது.


மெல்ல எழுந்து அவன் ஆலிவ் எண்ணெய் எடுத்து வந்தான். அவளின் மிருதுவான வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டி எழுப்பி விட்டான். அவள் மெத்தையில் கையும் காலும் நீட்டி அமர்ந்துக் கொண்டாள். அருள்மொழி அவளின் விரல்களில் ஆலிவ் எண்ணெயை பூசினான். அவள் உடல் வலிகள் அனைத்தும் பறந்துப்போயின. சுகத்தில் அவள் சொக்கிப்போனாள். அப்படியே அவளின் ஒவ்வொரு விரலுக்கும் சொடுக்கு எடுத்துவிட்டான். அவள் பூரித்துப்போனாள்.


’சொர்கம் டா. உன் கூட இருக்குறது தான் எனக்கு சொர்கம். இப்பவே நான் செத்தாலும் எனக்கு முழு நிம்மதி டா.’
‘அடியே, அப்படி சொல்லாத. நூறு வருசம் உன் கூட வாழ்ந்து, வீடு முழுக்க குழந்தைகளா நிரம்பி, அதுகளோட குழந்தைகளுக்கு கதை சொல்லிட்டு, இப்ப போலவே எப்பவும் இருந்து நாம சாகனும்’
விழிகளில் நீர் வழிந்தது அவளுக்கு. துடைத்திட்ட இவன் கைகளை எடுத்து நெஞ்சோடு சேர்த்து சாய்ந்துக் கொண்டாள்.


‘சரிடா. அடுத்து என்ன?’
‘தெரியலடி’
’டேய், சொன்னதெல்லாம் புரிஞ்சாச்சு, இப்ப சொல்லாத புரியனும். சொல்லாத இரவுல புரியலாம். இப்ப காதுல கூந்தல நுழைக்கப் போறேனே’
‘வேணாம் பூங்குழலி, வேணாம்’
‘உக்காருடா மடையா. கைகளால் காதைப் பொத்தி உட்கார்ந்தான். அவள் விட்ட உதையில் கைகளை விடுத்து பல்லை கடித்துக் கொண்டு உட்கார்ந்தான். அவள் தன் கூந்தலை அவன் காதினில் நுழைத்து இம்சித்தாள்.
பொறுத்து பொறுத்து பார்த்து தாங்கமுடியாமல் கத்திக்கொண்டே ஓடினான். அவள் பின்னால் துரத்திக்கொண்டே ஓடினாள்.


அவன் ஓடி குளியறையில் ஒளிந்துக் கொண்டான். அவள் அவனுக்கு பிடித்த நீல நிற சட்டையும் வெள்ளை பேண்ட்டும் போட்டுக்கொண்டு குளியறையின் வெளியிலிருந்து அவனை அழைத்தாள்.
’டேய், கதவ திற’
‘மாட்டேன்’
‘இப்ப திறக்கப் போறியா இல்லாயா?’
‘போ, நான் மாட்டேன்’
‘திறக்க மாட்டதானே. அடுத்த தடவ பாட்டு போட்டா…’
‘சரி திறக்கறேன்’
அவன் சவரில் தலை நனைத்துக் கொண்டிருந்தான். இவள் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள். தோளிலும் மார்பிலும் கடித்தாள். தரையில் அவனை தள்ளிவிட்டு காலால் உதைத்து தள்ளினாள். அவன் வலியில் ஐயோ அம்மா என்று அலறினான். ஓய்ந்து முடித்தவள் அவனை அள்ளி உப்புமூட்டை தூக்கிக்கொண்டு வெளியே இறக்கி விட்டாள். அவன் அவளின் கூந்தலை துவட்டிவிட்டான்.
’உன்னயெல்லாம் என் கைகுட்டையில மடிக்க முடியாது. சேலையில தான் சுத்தனும்.
அவனுக்கு பிடித்த மஞ்சள் நிற சேலையில் அவனை சுற்றி கட்டிலில் தள்ளிவிட்டாள். அவளும் அவன் மீது விழுந்தாள். அவன் வலியில் கத்தினான்.


‘அருள்மொழி, எனக்கு ஒரு வரம் வேணும்’
‘கேளுடி. என்ன வேணும்’
‘டேய் கணவா, இப்ப போலவே என்ன எப்பவும் பாத்துக்கோடா. நீ இல்லாத ஒரு நொடி கூட என்னால யோசிச்சு பாக்க முடியல. நான் சுயநலவாதினு நினைகாத, உனக்கு முன்னாடி நான் போய் சேரனும். அது மட்டும் தான் நான் உனக்கு தர ஒரே கஷ்டமா இருக்கனும். சொர்கமோ நரகமோ நான் அங்க போரத்துகுள்ள நீ எனக்கு முன்னாடி அங்க நிக்கனும். உன்ன விட்டு என்னால எங்கயும் இருக்க முடியாது டா.’
‘ச்சீ போடி. உன் குட இங்கவே இருக்க முடியல. இந்த அடி அடிக்கிற. அங்க வந்தும் என்னால வாங்க முடியாதுப்பா.’
’அப்படியா. அப்ப அதுக்கும் சேத்து இப்பவே தரேன்’
‘போதும், இதோட நிறுத்திக்கோ. அப்புறம் அழுதுறுவேன். ஆமாம் அழுதுறுவேன்.’


அவளின் கண் பார்த்து சொன்னான்,
‘இந்த ஒரு வாழ்கை மட்டும் இல்ல, என்னுடைய எல்லா வாழ்க்கையுலும் நீ தான் எனக்கு பொண்டாட்டி, நான் தான் உனக்கு புருஷன். உன்னோட சுகம், துக்கம், கஷ்டம், இஷ்டம், இன்பம், துன்பம் எல்லாத்துலயும் நான் உன்கூடவே இருப்பேன். இது நம்ம விதி பூங்குழலி!’


காதல் அங்கு நிறைந்து இருந்தது.


அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது.
‘யாருனு நான் பாக்றேன். நீ சமைக்க போ. நான் பின்னாடியே வரேன்’
’சரிடா. நீ சேலைய கழட்டிட்டு வேற மாத்திட்டு போ’


இவன் போய் கதவை திறந்தான். இவனின் அம்மா வெளியே நின்றாள்.
‘என்னடா இவ்வளவு நேரமா கதவ திறக்காம என்ன பண்ணிக்கிட்டு இருந்த?’
இவன் ஏதும் பேசாமல் கட்டிலில் அமர்ந்துக் கொண்டான். டி.வி பார்ப்பதை தொடர்ந்தான்.
அம்மா சமையலறையை கடந்து சென்றாள். குளியறையில் சவரில் இருந்து தண்ணீர் வழிந்தோடியது. அப்படியே அதனை நிறுத்திவிட்டு படுக்கையறைக்கு சென்றாள். அங்கே ஆலிவ் எண்ணெய் கீழே கொட்டி கிடந்தது.


அம்மா அழுதுக்கொண்டே அவனை நோக்கி பதறி வந்தாள்.
‘மவனே, ஏண்டா இன்னமும் பைத்தியகாரத்தனமா நடந்துட்டு இருக்க?
’இல்லமா. டி.வில அந்த பாட்டு போட்டாங்களா, அதான் நானும் பூங்குழலியும் அப்படியே பண்ண ஆரம்பிச்சுட்டோம். பூங்குழலி! பூங்குழலி! அம்மா கூப்பிடறாங்க. இங்க வா. அவ சமைச்சுட்டு இருக்கா. அவகிட்ட வேணும்னா கேளுங்க.’
’அவ உள்ள இருக்காளா? வந்து பாருடா. அவ இருக்காளா? டேய் அருள்மொழி, அவ உன்ன விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிகிட்டா டா. அவ இங்க இல்லடா’
’மா, பொய் சொல்லாத. பூங்குழலி இங்க வா. அம்மா என்ன ஏமாத்த பாக்குறாங்க. வந்து அம்மாகிட்ட நீ இங்க தான் இருக்கேனு சொல்லு’
‘இன்னும் எத்தன நாளைக்கு அவ இங்க இருக்குற மாறி கற்பனையில நினைச்சுட்டு வாழப் போறியோ. எப்பத்தான் நான் என் பழைய அருள்மொழிய பாக்கப்போறேனோ’ என்று மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டாள் அம்மா.


‘அம்மா, பூங்குழலி உன்கிட்ட பேசிட்டு இருக்கா நீ பதில் சொல்லாம ஏன் அழுதுட்டு இருக்க. பாரு நீ அழறத பாத்து எப்படி துடிக்கிறா பாரு அவ’
’ம்மா, அழாதமா. அவ உன்னயும் என்னயும் நல்லா பாத்துப்பா’


மீண்டும் கதவின் சத்தம் கேட்டது. கதவை திறந்துக்கொண்டு குமுதாவும் மூர்த்தியும் உள்ளே நுழைந்தார்கள்.


’ஏங்க, ரோட்ல எட்டாம் ஆண்டு அஞ்சலினு போஸ்டர் ஒட்டியிருந்தாங்களே அத பாத்திங்களா?’
’இல்ல, ஏன்?’
‘ஒரு அம்மாவும் புள்ளையும் ஒரே நாள்ல செத்துட்டாங்களாம். அந்த பையன் ஒரு பொண்ண காதலிச்சுருக்கான். அந்த பொண்ணு வீட்ல ஒத்துக்கல. இவன் அந்த பொண்னு நினைப்பிலேயே பைத்தியமா ஆகிட்டான். அவ இருக்குற மாறி நினைச்சுட்டு தானா பேசுவானாம், ஆடுவானாம். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவன் தூக்கு மாட்டி செத்துட்டானாம். அந்த அம்மாவும் அவன புடிச்சுகிட்டே செத்துட்டாங்களாம்.’
‘அட பாவமே. என்னா பசங்க இவங்க? காதல் தோத்தா தற்கொலையா பண்ணறது. எவ்வளவு இருக்கு வாழ்க்கை. ச்சே. இவன மாறி பசங்கள நினைச்சாவே கோவம் தான் வருது’


‘ஏங்க வெளிய போறத்துக்கு முன்னாடி பாத்ரூம்க்கு நீங்க தானே போனீங்க?’
‘ஆமாம். பாத்ரூம் போக கூடாதா?’
‘போங்க. அதுக்கு யாரு என்ன சொல்ல போறா? போனா வரும் போது சவர நிறுத்திட்டு வரனும். பாருங்க எவ்வளவு தண்ணி வீணா போயிருக்கு.’
‘இல்லடி, நான் நிறுத்திட்டு தானே வந்தேன். எப்படி மறந்தேன்? ம்ம்ம்’
’யே, நீ மட்டும் என்னவாம். இங்க பாரு பெட்ரூம்ல இப்படி. ஏண்டி ஆலிவ் எண்ணெய எடுத்தா ஒழுங்க வைக்க தெரியாதா? பாரு கீழ எப்படி கொட்டிகிடக்கனு’
‘இல்லங்க, நான் சரியா மூடி தானே வச்சேன். ஒரு வேல மறந்திருப்பேங்க’


‘ஒரு முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டேன்’
‘என்ன? வேற என்ன கொட்டி வச்சிருக்க?’
‘இல்ல, அந்த அம்மாவும் புள்ளையும் இந்த வீட்ல தான் செத்தாங்களாம். நான் என்ன இருந்தாலும் பரவாயில்ல. எங்களுக்கு அதுலயெல்லாம் நம்பிக்கையில்லனு சொல்லிட்டேன்’
டி.வியை போட்டார் மூர்த்தி. அதில் ‘சிநேகிதனே சிநேகிதனே’ பாடல்.
‘ஏங்க இந்த பாத்ரூம் சவர்ல ஏதோ கோளாறு போல, அதுவா திறந்துக்குது.
இங்க வந்து பாருங்களேன்’



ஏன் செத்த பின்னாடி காதல் தொடர கூடாதா?
                           -கோழி       

Monday, 25 February 2013

என்ன வேணுனாலும் பேசலாம்



2014 இப்பவே சூடுப்பிடித்துவிட்டது. காங்கிரஸ் பிரதமர் வேட்பாளாராக ராகுல் காந்தியும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடியும் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விட்டார்கள். மன்மோகன் அரசில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் ஊழல் வழக்குகள், சில்லரை வர்த்தக விவகாரம், விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிறுவகித்துக்கொள்ளும் உரிமை, விவசாயிகள் தற்கொலை, செயல்படாத அரசு என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் விரிந்துக்கிடக்க காங்கிரசின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி. ஊழல் இல்லாத அரசு, வியத்தகு பொருளாதார வளர்ச்சி, காங்கிரஸ் அரசின் மீதான மக்களின் கோபம் என அசுர பலத்துடன் நரேந்திர மோடி இருந்தாலும் ஒரு மதவாதியை சிறுபான்மையினரும், மக்களும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே. காங்கிரசின் தேர்தல் பிரச்சாரமும் அதுவாகத்தான் இருக்கும் என்பது இந்து பயங்கிரவாதிகளை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குகிறது என்று கூறிப் பிரச்சனையை கிளப்பியிருக்கும் உள்துறை அமைச்சர் ஷிண்டேயின் அறிக்கையிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

இம்முறையும் மூன்றாவது அணியமைக்க முயற்சிகள் நடைபெறும், ஆனால் அமையுமா என்பது சந்தேகமே. அப்படியே அமைந்தாலும் யார் தலைவர் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுவது கடினம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியென 2014 வெடியின் திரியை கொளுத்திப்போட்டதே ஜெயலலிதா தான். அவரது அடிபொடிகளும் நாளைய பிரதமர் என்றே ஒவ்வொரு மேடையிலும் கூவி வருகிறார்கள். 40 தொகுதிகளை வைத்துக்கொண்டு ஒரு நாட்டை ஆள்வது அத்தகைய எளிதான காரியமும் இல்லை. கனவுகளில் இருக்கும் முதல்வரை யாராவது தண்ணி தெளித்து எழுப்பிவிட்டால் அவருக்கும் நல்லது நமக்கும் நல்லது. அவரது நண்பர் நரேந்திர மோடியை எதிர்த்து அவர் நிற்பாரா என்பதும் கேள்விக்குறியே. எனவே முதல்வரின் முடிவில் மாற்றம் இருக்கலாம். தே.மு.தி.கவை வளைத்துபோடும் முயற்சியில் தி.மு.கவும், காங்கிரஸை வளைத்துபோடும் முயற்சியில் தே.மு.தி.கவும் முனைப்பு காட்டுகின்றன. காங்கிரசுடன் தனது கூட்டணியை தி.மு.க தொடருமா என்பது கலைஞரின் அறிக்கையை போலவே புரியாத புதிர்தான், வரும் ஆனா வராது கதைதான். (2014 வரைக்கும் பொருத்திருக்கணுமானு நீங்க பொளம்புறதும் கேக்குது. என்ன பண்றது மன்மோகன் மாதிரியே அவர் அரசும் மெதுவா நகருது.)

அடுத்து நம்ம ஒரு சின்ன பிரச்சனைய பத்தி பேசலாம். வீதியில நடந்து போயிட்டு இருக்கிறப்ப நான் பாத்த கண் கொள்ளா காட்சி. ஒரு படிச்ச தகப்பன் தன் கைக்குழந்தைய தூக்கிட்டு வரான். எப்படி? தன் ஒரு கையில் குழந்தையும் மறு கையில் சிகரட் துண்டும். ஆகா! அந்த நச்சுப்புகை உனக்கும் கெட்டது தான். ஆனா உலகத்தை சமீபத்தில பாத்த அந்த குழந்தை, ரொம்ப பாவம்யா. சிறு வயசுலேயே அந்த குழந்தையோட உடல் நலம் பாதிக்குமா இல்லையா? படிச்ச பட்டதாரியே இப்படி நடந்துக்கலாமா? மாறுங்க. எதிர்காலத்தில உன் புள்ள நல்ல காத்த சுவாசிக்கனும், தெரிஞ்சுக்கோ....

மரணத் தண்டனை வேண்டுமா வேண்டாமா? எனக்கு என்னமோ வேண்டாம்னு தான் தோனுது. தப்பு செஞ்சா தண்டனை கொடுக்கனும், சரி. ஆனா அந்த தண்டனை அவன திருத்தனும், அழிக்க கூடாது. அப்படியே அவன தூக்கில போட்டாலும் மத்தவங்க திருந்துறாங்கலா? எனக்கு என்னமோ இல்லனுபடுது. மரணத் தண்டனை இருந்தும் குற்றம் இன்னும் குறையலயே. அதிகமா தான் ஆகுது. அதுக்கு பள்ளிக் கூடத்தில இருந்தே அன்பு, பாசம் எல்லாம் சொல்லி வளக்கனும். எப்ப வாங்குற மதிப்பெண் தான் ஒருத்தன எடைப்போடுதோ அப்பவே கல்வி சரியில்லாம போச்சு. பல நாட்டுல மரணத் தண்டனைய நீக்கிட்டாங்க. உலகத்துக்கு அறவழியில போராடுனு சொல்லித் தந்த நம்ம நாட்டுல இன்னும் நீக்கல. பொறுத்திருந்து பாப்போம்.

இன்னக்கி எத்தன பேரு நல்லா சந்தோசமா சிரிச்சிங்க? சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பாத்தா எல்லாரும் ஏதோ மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு வீட்டுகார அம்மவோட சண்ட போட்ட மாறியே இருக்காங்க. காரணமேயில்லாம சிரிங்க. பழைய ஞாபகத்த நெனச்சுப் பாத்து சிரிங்க. எப்படியோ சிரிங்க. மனசு லேசாகும். ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். மூளை தெளிவா சிந்திக்கும். எல்லாத்தயும் விட நீங்க ரொம்ப அழகா தெரிவீங்க!!! அதுக்குனு யாரும் இல்லாத ரோட்டுல தனியா சிரிச்சு பழகுறேனு சிரிச்சு தொலையாதீங்க. தன்னத்தான் நீங்க பயமுறுத்துறீங்கனு நாய் கடிச்சு வைக்க போகுது. வாங்க என்னவேணும்னாலும் பேசலாம்.....

                                                    - யோகி & கோழி


Saturday, 23 February 2013

லட்சங்களில் ஒருவன் - ஈ.வே.ரா



தமிழகத்தில் உள்ள பெரும்பாலோனோர், ஏன் சில நூறு பேரைத் தவிர அனைவரும் தங்கள் பெயர்களில் தங்கள் சாதிப் பெயரை சேர்த்து எழுதுவது, சொல்லுவதில்லை. இத்தகைய பெருமைக்கு காரணமாக இருப்பவர், பெரியார் என்று அழைக்கபடுகிற தோழர் ஈ.வே.ராமசாமி.

ஆம், பெரியார் தனது ரஷ்ய பயணம் முடித்து தமிழகம் திரும்பிய பின்னர் தம்மை தோழர் என்றே அழைக்க மற்றவரை கேட்டுக்கொண்டார். தமிழ் பெண்கள் தங்கள் கணவரை எப்படி அழைப்பார்கள்? மரியாதையும் பக்தியும் மிகுந்து ஏதோ கணவனின் அடிமைப் போல கருதி இந்த காலத்தில் ’என்னங்க’ கருப்பு வெள்ளை காலத்தில் ‘நாதா’. தவறி கூட பெயரை சொல்லவிடாமல் அடிமையுண்டு கிடந்தது பெண்கள் உலகம். ஒரு கூட்டத்தில் தோழர் ராமசாமி, தன் மனைவி நாகம்மையை பார்த்து, இனி தன்னை அவர் “தோழர் ராமசாமி” என்றே அழைக்க வேண்டும் என்று கூறி, அவ்வாறு பொது மக்களிடையே தன்னை அவர் அழைக்கச் செய்து பெண் விடுதலைக்கு விதை விதைத்தார். யோசித்து பாருங்கள், எவ்வளவு பெரிய காரியம் அது. இது நடந்தது அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர். 


தோழர் ராமசாமி ஈரோட்டில் பிறந்தார். அவரது குடும்பம் வணிகத்தில் ஈடுபட்டு வந்தது. கடவுள் பக்தியும் அதோடு சேர்ந்து கடவுளின் அவதாரர்களாக சொல்லிக்கொண்ட பிராமணர்களையும் அவர்கள் தொழுது வந்தார்கள். அதற்கு அப்படியே மாறாக இருந்தார் தோழர் ராமசாமி. அவரது சிறு வயதில் அவருக்கு இருந்த கேள்வி கேட்கும் திறமையே அவரை பகுத்தறிவாளராக மாற்றியது. 

“ போட்டோவில் இருக்கிற சாமியெல்லாம் இரண்டு பெண்டாட்டி கட்டிகறது, அப்ப நம்ம அப்பா இரண்டு பெண்டாட்டி கட்டிகலாமா? “

“ வாலிய நேர்ல மோதி ஜெயிக்க முடியாம பின்னாடி இருந்து அம்பு விட்டு கொன்ன ராமன் வீரனா ?, இல்ல கோழை ! “

இதனைப் போல பல கேள்விகள் கேட்டார். பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தப்பி ஓடிப்போனது  மடக் (மதக்) கூட்டம்.

ஒருமுறை பல பேரிடம் கடன் வாங்கி திருப்பி தராமல் இருந்த பிராமணன் ஒருவனை அவர்கள் சாப்பிடும் சத்திரத்தின் உட்புகுந்து காவலர்களிடம் பிடித்து கொடுத்தார். பிராமணர்கள் சாப்பிடும் இடத்திற்கு அன்னியர்கள் வந்தால் அது பாவம் என்று கருதி அந்த சாப்பாட்டை எல்லாம் கீழே கொட்டிவிட்டார்கள். அதுவும் பிற மக்கள் தானத்தில் கொடுத்த பணத்தில் இருந்து தாயரிக்கப்பட்ட உணவு. இந்த பாவச்செயலைப் பற்றி அவரின் தந்தையிடம் புகார் கொடுக்க வந்தது அந்த கூட்டம். அவர் தந்தை அவரை அனைவர் முன்னிலையிலும் அடித்து கேவலமாக திட்டி தீர்த்தார். அதற்கு அவர் “ மத்தவங்க காசுல ஓசி சாப்பாடு சாப்பிட்டு, அத தீட்டு பட்டுறிச்சினு முழுசா கீழ கொட்டி இருக்கற இவங்க திமிர் புடிச்சவங்களா நான் திமிர் புடிச்சவனா “ என்று கேட்டார். அந்த காலத்தில் நிழவி வந்த கொள்ளை இது. நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள் கேட்காத வரை நியாயம், தர்மம் இவையெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கும்.  


அவர் உறவுக்கார பெண் நாகம்மையை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு பிறந்த குழந்தை ஐந்தாம் மாதம் இறந்தது. பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். அந்த சோகமான நேரத்திலே அவர் தந்தை வணிக இடத்தில் கோபம் கொண்டு கண்டபடி திட்டிவிட, வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி காசிக்கு சென்றார்.


அங்கு அவருக்கு சாப்பிட சோறு கொடுக்காத பிராமணர்கள் மீது கோபம் கொண்டார். ரோட்டில் கிடந்த எச்சில் இலையில் மீதியிருந்ததை உண்டார். சாதியொழிப்பு சுடரொளி அன்று பட்ட அவல நிலை இது. அங்கேயே நிற்கவில்லை அந்த ஒளி, அது மென்மேலும் பிரகாசிக்கவே செய்தது.


பின் தன் வீட்டிற்கு திரும்ப வந்தார். வியாபாரம் செய்ய தன் தந்தைக்கு துணையாக இருந்தார். சிறிது காலம் கழித்து தந்தையின் அனைத்து பொறுப்புகளும் இவரிடம் வந்தது. அப்போது தன் கடையில் வேளைப் பார்த்த ஒருவனுக்கு வேற்று சாதியில் இருந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அவர் செய்து வைத்த முதல் சாதி மறுப்பு திருமணம் அது. 


ஈரோட்டின் முனிசிபல் சேர்மேனாக இருக்கும் போது அவருக்கு ராஜாஜியின் நட்பு கிடைத்தது. அவரை பின்பற்றி காந்திய கொள்கையில் ஈடுப்பட்டார். மது ஒழிப்பு போரட்டத்தின் போது அவருக்கு சொந்தமான ஐநூறு தென்னை மரங்களை வெட்டச் செய்தார். தென்னை மரம் தலைமுறை தலைமுறையாக பயன் தரும். ஆனால் தான் கொண்ட கொள்கைக்காக எதையும் செய்யும் துணிவு அவரிடம் இருந்தது. இன்று தன் பையில் இருந்து 10 ரூபாய் எடுத்து தருகிற தலைவரை கண்டுப்பிடிப்பது அரிது.


தன் வீட்டு பெண் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்று இன்றும் தடுத்து வைக்கிற ஆண்கள் உண்டு. மது ஒழிப்புப் போராட்டத்தின் போது தன் மனைவி, தன் தமக்கையோடு வீதிக்கு வந்து போராடினார். பெண் விடுதலைக்கு அவர் செய்த ஆரம்பத் தொண்டு இது. கதர் ஆடை உடுத்த வேண்டும் என்கிற காந்திய கொள்கயை பின்பற்ற அவரும் அவர் குடும்பத்தார் வைத்திருந்த அனைத்து பட்டுத் துணியையும் நாடக கம்பெனிக்கு வழங்கிவிட்டார். இது அவரின் தியாக குணத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.


பதவி, பலம் என்று பெருமைக்கு அனைவரும் அலையும் இந்த காலத்தில் அவர் ஒரே கையெழுத்தில் 29 பதவிகளை ராஜினாமா செய்தார். விடுதலைப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு காட்டும் விதமாக செய்த காரியம் இது. 


ராஜாஜியின் வேண்டுகோளில் காங்கிரசில் சேர்ந்தார். ஆனால் காங்கிரஸ் பிராமணர்களுக்காக மட்டுமே பேசும் கட்சியாக இருந்ததால் அதனை விட்டு வெளியேறினார். சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். 


கேரளாவிலுள்ள வைக்கம் என்னும் ஊரில் கீழ்ச்சாதி மக்களுக்கு கோவிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனை எதிர்த்து அங்கு சென்று போராட்டம் நடத்தி அனுமதி பெற்றுத்தந்தார். அத்தகைய வெற்றியின் பின்னர் ”வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார். 


அவர் தான் சொல்வதை அப்படியே கேளுங்கள் என்று சொல்லவில்லை. கேட்டதை உங்கள் அறிவை கொண்டு சிந்தித்துப்பாருங்கள். உங்களுக்கு எது நல்லதாக படுகிறதோ அதனை பின்பற்றுங்கள் என்று கூறினார். அவர் மக்களை யோசிக்க செய்தார். ஒரு மனிதனை தான் ஏன் இந்த நிலைமைக்கு ஆளாக்கப் பட்டோம் என்று யோசிக்கச் செய்தால் மட்டுமே அவன் மனதில் ஒரு ஞானம் பிறக்கும். அதனை பிறக்க வழிச் செய்தார் தோழர் ராமசாமி.


தன்னுடைய எதிரியாக இருப்பினும் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே ஒரு சிறந்த பண்பாளரின் அடையாளம். தோழர் ராமசாமி மிகச் சிறந்த பண்பாளர். திரு.வி.க-க்காக விபூதி பூசிக்கொண்டது, தன் நண்பரின் அறுபது ஆம் பிறந்தநாளுக்காக பழனி மலையேறியது, நண்பருக்காக வீட்டில் பூசை நடத்த ஒத்துக்கொண்டது. இவையெல்லாம் அவரை நல்ல மனிதனாக பிறரை மதிக்கும் ஒரு பண்பாளனாக காட்டியது. 


இன்று பல ஆயிரம் பேர் தீண்டத்தகாதவர்களாய் இருந்தவர்கள், பெரிய பெரிய பணிகளிலும் தொழில்களிலும் படித்த பட்டதாரிகளாகவும் விஞ்ஞானியாகவும் இருக்க முடிகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் தோழர் ராமசாமி. தன்னுடைய குலத்தொழிலை தான் ஒருவர் செய்ய வேண்டும் என்று இருந்த வழக்கத்தை மாற்றி இன்று முடிதிருத்துபவரின் மகன் ஒரு மருத்துவராக, பிணம் எரிப்பவரின் மகள் ஒரு பட்டதாரியாக இருக்க செய்தவர் தோழர் ராமசாமி. 


பெண் விடுதலைக்காகவும், பெண் கல்விக்காகவும் அவர் செய்த பணி கடலினும் பெரியது. ஒரு பெண் விடுதலை அமைப்பினரின் கூட்டத்தில் அவருக்கு “பெரியார்” என்று பெயர் சூட்டி தமிழகம் தனக்கு பெருமை தேடிக்கொண்டது.


பெரியார் என்று சொன்னாலே அவரது கடவுள் எதிர்ப்பு தான் அனைவரது உள்ளத்திலும் ஞாபகம் வரும். அவர் கடவுள் இருந்திருந்தால் எதிர்த்திருப்பார். இல்லையென்றானப் பின் அவர் மக்களை பகுத்தறிவாளர்களாய் மாறச் சொன்னார். கடவுள் என்கிற சர்வ வல்லமை படைத்த பொருள் இருக்குமாயின் சமூகத்தில் ஏன் இந்த ஏற்ற தாழ்வு, ஏன் இந்த பாகுபாடு. முன் ஜென்மம் பின் ஜென்மம், பாவம், புண்ணியம், தலைவிதி என்று சொல்லி திரிந்த ஏமாற்று கூட்டத்தின் கொட்டத்தை அடக்க முளைத்த வாள் தோழர் ராமசாமி. 


சாமி, கோவில் என்பது மக்களுக்கு நன்மை செய்யவே ஒழிய நடப்பதை பார்த்து ஓரமாய் ஒதுங்க இல்லை. இதே நாட்டில் தான் ஒரு இந்து கோவிலில் பல கோடி பணம் கொட்டுகிறது, பல லட்சம் மக்கள் பட்டினியில் சாகிகிறார்கள். என்ன ஒரு காட்சி!. 


அவர் தான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. தோழர் ராமசாமி உங்களுக்கு இருக்கின்ற மூளையை வைத்து சிந்திக்க சொல்கிறார். சிந்திக்காமல் விரயம் செய்கிற மூளையெல்லாம் மனிதனாக ஏற்றுக்கொள்ள மாட்டாது.


எந்த சாமியையும் சாமியின் பெயரில் அட்டூழியம் செய்யும் சாமியார்களையும் அவர் வாழ்க்கை முழுதும் சாடினாரோ, அந்த “சாமி”யின் பெயரையே தாங்கிய “ராமசாமி” நம் பெரியார். இன்று தமிழகத்தில் நடக்கின்ற அரசியல், பண்பாடு, கலாசாரம் அனைத்திலும் தோழர் ராமசாமி மறைவுண்டு வாழ்ந்து வருகிறார். 

" ஏனென்றால் பெரியார் வரலாறு அல்ல முடிந்து போவதற்கு, அவர் ஒரு தொடர் கதை. தமிழ் இருக்கும் மட்டும் அவர் இருப்பார். "

                                                - கோழி.