Showing posts with label சித்ரா. Show all posts
Showing posts with label சித்ரா. Show all posts

Friday, 6 September 2013

நட்பின் நினைவில்...




மெல்ல முயன்று
தள்ளி நின்று
கண்ணீரின்றி காண
விழைகிறேன்
உன்னுடனான என்
காலங்களை...

இன்றும் நினைவோடு
உறவாடும்
அன்று உனைக் கண்ட
முதல் நொடி
ஏதுமறியா எட்டு வயதிலே
எட்டிப் பார்த்த என் முதல்
நட்பு உன்னோடு....

விளையாட்டிலும் விட்டுக்
கொடுத்து எனை
வெல்ல வைத்து
சிரித்திருந்தாய் ..
போட்டியென்று
நான் நினைக்க
அப்போதும்
ரசித்திருந்தாய் ...

பகிர்ந்து உண்ணவும்
பகைமை மறக்கவும்
உறவின் அன்பையும்
அன்பின் ஆழமும்
அறிந்தேன் உன்னிடமே...

பொறியியல் படம் வரைகையில்
நீ கற்றுத் தந்த
அறிவியல் படம்
அழகாய் சிரிக்கிறது..
கல்லூரி கட்டுரையின்
முதல் பரிசில்
எழுத்தை நேராக்கிய உன்
பிரயத்தனம் உரைக்கிறது...

ஒருமையில் நான் விளித்த
காலங்கள்
காற்றோடு கலந்திருக்க
இன்று
பன்மையில்
நானழைக்கிறேன்
காலத்தோடு வாழ்ந்திருக்க ...

எத்தனையோ பெற்றிருந்தும்
ஏதோவொன்றை இழந்த
வெறுமையாய்
வெறிச்சோடி நிற்கிறது
பத்தாண்டு தொலைத்திருந்த
பால்ய சிநேகத்தால்


 என்னவோ  முயன்றிருந்தும்
கடைசி வரி முடியுமுன்னே
கண்ணீரின் தூரலில்
கனமாய் கரைகிறது

முற்றுப் புள்ளி...

Thursday, 18 April 2013

அடைமழைக்கு…





தாய் மடியில்
தந்தை தோள்களில்
தமையன் பாதையன்றி
பிரிதொரு புவனமில்லை
என்றிருந்த எனக்கும்
புதிய ஆதியாய் அடைமழை...

மேதினி மேவும்
மேன்மை காணும் துளிகளில்
பொறாமைகள் கண்டதில்லை
போட்டிக்கும் குறைவில்லை 
பார்த்து  பழகியதில்லை
பாராட்டுக்கும் பஞ்சமில்லை..

மொழியின் இனிமையும்
எழுத்தின் பெருமையும்
சொல்லின் அழகையும்
கற்கும் களமாய்
வியக்கிறேன் இவ்விதழை...

விண்ணில் உடுக்களாய்
மண்ணில் மருதமாய்
வனத்தில் மலர்களாய்
என்றும் செழித்திருக்க
என் கை எழுதும்
என் தமிழ் வளர....


சித்ரா

எல்லாம் உனக்காக....





எனக்காக நீயும்
உனக்காக நானும்
வாழ்ந்தோம் சில காலம்....
 உன் அன்பை   உணர்ந்த
சில நாள்களிலேயே
உன்னுள் கலந்துவிட்டேன்…

ஒவ்வொரு நொடியும்  
உன் வரவை எண்ணி
மகிழ்ந்திருந்தவள் - இன்று
ஒவ்வொரு நொடியும்  
உன் பிரிவை  எண்ணி
தவித்திருக்கிறேன்…

நீ விரும்பிய எதையும்
உனக்காய் செய்து-மகிழும்
ஆர்வம் கொண்டவள்
என்பதால்தான் என்னவோ 
காதலையும் உனக்காய்
இழந்திருக்கிறேன்…

மடந்தை பருவத்தில்
மதியோடு இருந்தவள்
அரிவை பருவத்தில்
அறிவிழந்து
ஒப்புக்கொண்டேன்
உன் வார்த்தையை…

அன்று  
நாம் என்றாய்
இன்று
யார் என்கிறாய்
நாளை?
வேண்டாம் விட்டுவிடு
நம்  உறவுகளாவது
உயிர் வாழட்டும்…



சித்ரா

Saturday, 16 March 2013

இப்படியே காத்திரு…..!

























தெளிந்த நீரோடையாய்
முகம்  இருக்க
நெற்றிச் சுருக்கங்களோ
இவ்விடம் நானில்லை
என்பதை
இன்னலின்றி சொல்லிமுடித்தது ...

இவள் முன்னே அசையும்
நிழல் கண்டு நின்றாள்
இவள் பின்னே இவன் நிஜம்

ஆயிரம் முறை எதிர் கண்டும்
இவன் முகத்தின் வனப்பைவிட -கால்
நகங்களின் ஈர்ப்பு கொண்டே
சொக்கி நின்றாள் இவனிவள்...

யாருமறியா
அரவமில்லா இரவுகளின்
தனிமைகளில்
இவன் பெயர் சொல்லி திரியும்
கிறுக்கியாக என்றுமிவள்….

இவனின் முதலெழுத்தே
தெரியாமல்
இவள் தலையெழுத்தை-இவன்
வசம் சேர்க்கும்
தீரமும் சேர்ந்துவிட்டது…

இப்படியே காத்திருப்பாள் 
இவள்
இதழ் இசைத்து
கன்னம் சிவக்க 
வெட்கம் முளைக்கும் 
சின்னப் பார்வையிலே 
இவனுடனான  இவளுலகை
இவன் அறியும் வரை....
                                                                                - சித்ரா கா