தான் ரசித்த
அழகிகளை
எனக்கு
காட்டுபவனும் அவனே…
அதில் மிக
அழகியை
எனக்கு
தங்கையாக்குபவனும் அவனே…
உன் படுக்கையறையில்
நம் இரவை
பகிர்ந்துக்கொள்ள
அனுமதித்த
உன் தந்தையின்
கண்களில் உணர்ந்தேன்
நம் நட்பின்
தன்மையை.
நட்பிற்கும்
காதலுக்குமிடையே
மிகமெல்லிய
இடைவெளிதான் இருக்கிறது.
ஆனால் அந்த
இடைவெளியை கடக்காமலேயே
பயணித்துக்
கொண்டிருக்கிறோம்
நெடுநாட்களாய்…
அகிரா முதல்
அனுராக் வரை,
பாலசந்தர்
முதல் பாலா வரை,
நித்தம் ஒரு
உலகத்தை
என் மடிகணிணியில்
திரையிட்டு
என் ரசனையை
சீர்திருத்தியவன் நீ…
பாரதியையும்,
பாவேந்தனையும்
கல்கியையும்,
கள்ளிக்காட்டு
இதிகாசத்தையும்,
உனக்கு
பரிசளித்து
உன்னை
உருவாக்கியவன் நான்.
-யோகி.
நீண்ட
நெடிய கோடைக்குப் பிறகு
பருவம்
தவறிய
பற்றாக்குறை
மேகம் ஒன்று
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
துளிகளை
பொழிய,
பாலைவன
சிறுபூச்சிகளாய்
பரபரத்து
போகிறது
முகநூலின்
பக்கங்களெல்லாம்.
தவறான
நேரத்தில்
ஜனித்துவிட்டதாய்
எண்ணி
தன்
துளிகளை தனக்குள்ளேயே
சுருக்கிக்
கொள்கிறது அந்த சிறுமேகம்.
பாவம்
முதல் முத்தத்திலேயே
முடிந்துவிட்டததன்
மோகம்.
அது பருவ
மழையுமில்லை,
வெப்பச்சலன
பெரு மழையுமில்லை,
மேகத்தின்
நிலக்கவர்ச்சி,
காதலாய்
மலர்ந்துவிடாத
பதின்பருவத்து
இனக்கவர்ச்சி.
ஆழியில்
ஜனிப்பாய்,
வானில்
வளர்வாய்,
மலையில்
பருவம் எய்வாய்,
வனத்தில்
காதல் கொள்வாய்,
தரையில்
நீராய் கரைவாய்,
என அதன்
முன்னோர்கள்
அதற்கு
சொல்லியிருக்கிறார்கள்.
அடர்ந்த
வனத்தையும்,
அதன்
வாலிப்பையும்,
பகலா
இரவா என்றறியா அடர்த்தியையும்
அதன்
இலக்கியங்கள்
அதற்கு
காட்டியிருக்கின்றன.
அந்த
முகவரிகளையெல்லாம்
தொலைத்துவிட்ட
அந்த முகில்,
கானல்
நீரை
ஊற்று
வெள்ளம் என்றெண்ணி
ஓடும்
ஒரு ஆட்டுக்குட்டியின்
திசையினை
திருப்பிட
முயற்சிக்கும்
வாழ்க்கை
சுருங்கிய முதியவரிடம்
வனத்தின்
முகவரியை வினவ
தூரத்தில்
இலைகள் உதிர்ந்த
ஒரு
மரத்தினை வெறித்தன
அவரின்
விழிகள்.
அந்த
மரத்தின்
கடைசி
பெருமூச்சில்
முற்றாய்
கலைந்தது அந்த மேகம்.
-யோகி.
உனக்கு 20
எனக்கு 20 என
நீங்கள்
அழகாய் பிரித்துக்
கொண்டீர்கள்...
நாங்கள் தான் பாவம்
நாற்பது நாட்களை
இழந்துவிட்டோம்....