Showing posts with label புத்தக மதிப்புரை. Show all posts
Showing posts with label புத்தக மதிப்புரை. Show all posts

Wednesday, 11 December 2013

வந்த நாள் முதல்


இந்த புத்தகம் வாசிக்கும் போது உண்மையில் சில வரிகள் நம் வாழ்வில் கடந்து சென்ற சில நியாபகங்களை நினைவு படுத்துகின்றது. பள்ளியில் தொடங்கிய காதலின் நீட்சி பள்ளி முடிந்த பிறகு மீண்டும் கல்லூரிக்கு செல்லும்போது எவ்வாறெல்லாம் பயணப் படுகிறது என்பது தான் இந்த வந்த நாள் முதல். திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு செழியன் அவர்களால் எழுதப்பட்டு விகடன் பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலை அலசி அதில் சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

பள்ளியில்....

என் இருக்கையில் நான் மூன்றாவது
உன் இருக்கையில் நீ மூன்றாவது
பையன்களில் முதல் மதிப்பெண் எனக்கு
மாணவிகளில் உனக்கு.

சூரிய ஒளி முதல் வரிசையிலிருந்து
பின் நகர்ந்து உன் நாட்டுக்கு வருகிறது
நீ ஒளியின் மீது எழுதத் துவங்குகிறாய்.

நாம் உடுத்தும் உடைகளின் வண்ணம்
பலமுறை பொருந்திபோகிறது.
திருத்துவதற்காக மேசை மீது நோட்டுக்கள்
அடுக்கப்படும் போது நம் பெயர்கள்
அடுத்தடுத்து வருகையில்
ரகிசியமாய் ஒரு புன்னகை மலர்கிறது.

பேருந்தில்....

காலை 8.20, பேருந்து முழுக்க மாணவ மாணவியர்,
முதல் நாள் பயணம்
அடுக்கடுக்காய் அமர்ந்த முகங்களின் நடுவே
சன்னலோரம் ஒரு முகம்
யதேச்சையாய் இடித்து
வருத்தம் சொல்லி விலகுவது போல
நம் பார்வைகள் அடிக்கடி விலகிக்கொள்கின்றன
சில நரங்களில் நெரிசலில் இடம் கிடைத்தும்
நீ நிற்கிறாய்; நானும் நிற்கிறேன்...
நிறுத்தம் வந்ததும் நீ பெண்கள் பள்ளி நோக்கிச் செல்கிறாய்...

விடுமுறையில்...

வீடு - மூன்று வேலைக்கான
உணவு விடுதியை மாறுகிறது
மீதப் பொழுதுகளில் மைதானம்..
நண்பனின் வீடு...
நூலகம் அல்லது குளக்கரை
போகும் திசையறியாது நடக்கிறேன்...

நூலகத்திற்கு செல்லும் வழி
யாருமற்ற தொலைவில்
மஞ்சள் புள்ளியென மிதந்து வரும்
உன்னைப் பார்கிறேன்.

என்னைப் பார்த்ததும் கால்கள் ஊன்றி
சைக்கிளில் இருந்து இறங்குகிறாய்.
நம் நிழல்கள் நெருங்கி வருகின்றன
மெல்லிய கொலுசொலி
என்னைக் கடந்து அணைகிறது...
ஊரின் சப்தங்கள் மீள்கின்றன...


இன்னும் இப்படியே நீண்டு கொண்டே போகிறது இந்த தீராக் காதல்…

Friday, 18 October 2013

THE BLUE UMBRELLA - புத்தக மதிப்புரை


Buy The Blue Umbrella: Book

சமீபத்தில் THE BLUE UMBRELLA என்ற புத்தகம் வாசித்தேன். இது குழந்தைகளுக்கான நன்னெறி கதையினை சார்ந்தது. RUSKIN BOND என்ற எழுத்தாளர் இந்த புத்தகத்தினை எழுதியுள்ளார்… RUSKIN இந்தியாவின் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியர். இவரின் படைப்புகள் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. பத்மஸ்ரீ, சாகித்ய அகடமி போன்ற உயரிய விருதுகள் பெற்றுள்ளார்.

BLUE UMBRELLA கதைக்குள் போவோம்.. 

இந்த கதை ஹிமாலயா மலைப்பிரதேசத்தின் GARHWAL என்னும் கிராமத்தில் நடக்கிறது. பின்யா அப்பகுதியில் மாடுகள் மேய்க்கும் சிறுமி. ஒருமுறை மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு பிக்னிக் வந்த ஒரு தம்பதியினரை தொலைவில் இருந்து பார்க்கிறாள். அவர்களின் கையில் ஒரு அழகான நீல நிறக் குடை ஒன்று இருப்பதை பின்யா பார்க்கிறாள். மெல்ல அருகில் சென்று அந்த நீலக் குடையை பார்த்துக்கொண்டே நிற்கிறாள். அவர்கள் அவளுக்கு உணவு வேண்டுமா என்று கேட்கிறார்கள் வேண்டாம் என்கிறாள். ரூபாய் தருகிறார்கள் வேண்டாம் என்கிறாள். பின் புலியின் நகம் கொண்ட அதிர்ஷ்ட சங்கிலி பின்யாவின் கழுத்தில் இருப்பதை பார்கிறார்கள். அழகாய் இருக்கிறதே எங்களுக்கு தருகிறாயா நாங்கள் பணம் தருகிறோம் என்க பின்யாவோ குடையை பார்த்தவாரு இருக்கிறாள். கடைசியாக பின்யா இந்த புலி நகம் கொண்ட செயினை உங்களுக்கு தருகிறேன் பதிலுக்கு அந்த நீல நிறக்குடையினை எனக்கு தருவீர்களா என்று கடைசியாக பேசுகிறாள்.. சிறிது யோசித்த தம்பதியினர் பிறகு குடையினை பின்யாவிக்கு கொடுத்துவிட்டு செயினை வாங்கிக்கொள்கிறார்கள்.
இப்போது நீல நிற அழகுக் குடை பின்யாவின் வசம் வந்தது. அதை எப்போதும் தன் கையில் வைத்துக்கொண்டேதான் மாடுகளை மேய்ப்பாள். தன் அண்ணன் பிஜ்ஜுவிடம் அதை காண்பித்து மகிழ்கிறாள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் பின்யாவின் குடையை அதிசயமாக பார்க்கிறார்கள்.. சிலர் எப்படியாவது அந்த அழகு குடையை இவளிடமிருந்து பறித்துவிட முற்படுகிறார்கள்…
அங்கே டீ கடை நடத்தி வருபவர் திரு ராம் பரோஷா. அவர் அந்த கிராமத்தின் பெரிய மனிதர் பணக்காரர் கூட. அந்த குடை அவரின் கண்களில் படுகிறது. டீ வாங்க பின்யா குடையுடன் வருகிறாள். ராம் பரோஷா அவளிடம் இந்த குடையை எனக்கு விலைக்கு தருவாயா என்று கேட்க பின்யா முடியாது என்கிறாள். இந்த அழகிய விலை மதிப்புடைய குடை இவளின் கையில் இருப்பதா என்று பொறாமைப்படுகின்றனர் அங்குள்ள சிலர்.

பின்யா அந்த அழகிய குடையினை தினமும் எல்லோர் கண்களிலும் படுமாறு எப்போதும் விரித்தே செல்கிறாள். ஒரு நாள் குடை காற்றில் அடித்துச் சென்றுவிடுகிறது.. மலைகளில் அது பறந்தோடுகிறது. மிகுந்த சிரமத்திற்க்கு பிறகு குடை மீண்டும் கிடைக்கிறது. பின்யா எதிர்பார்த்த மழைக் காலம் வருகிறது.. மழையில் குடையினை பிடித்துக்கொண்டே செல்கிறாள். மற்றவர்கள் மழைக்கு பயந்து ஓடுகிறார்கள். பின்யாவோ குடையை பிடித்தவாறூ ஓடாமல் மிக மெதுவாக சிரித்து கொண்டே நடக்கிறாள்.
பிஜ்ஜுக்கு பள்ளி விடுமுறை வருகிறது. டீக்கடை பரோஷா அவனை வேலைக்கு அமர்த்தி எப்படியாவது அந்த குடையை பின்யாவிடம் வாங்க திட்டமிடுகிறார். ஆனால் பிஜ்ஜுக்கு வீட்டு வேலைகளே போதுமானதாக இருக்கிறது என்று அவனின் அம்மா சொல்லிவிடுகிறாள். முடிவாக பக்கத்து கிராமத்திலிருந்து பிஜ்ஜுவுடன் படித்த ராஜாராம் என்ற சிறுவனை வேலைக்கு அமர்த்துகிறார்.
சில வாரங்கள் கழித்து பின்யா அந்த பக்கம் குடையுடன் வருவதை பார்த்த பரோஷா கோபப்படுகிறார். இதை அறிந்த ராஜாராம் முதலாளிக்கு அந்த குடையின் மேல் கண் இருப்பதை உணர்கிறான். பிறகு ராஜாராம் முதலாளியிடம் அந்த குடையினை அவளிடமிருந்து நான் பறித்து தருகிறேன் பதிலுக்கு என்னுடய சம்பள்த்தை உயர்த்துவீர்களா என்கிறான். பரோஷா சரி என்கிறார். சரியான நேரம் பார்த்து பின்யாவிடமிருந்து குடையினை பறித்து ஓடுகிறான் ராஜாராம். அழுதுகொண்டே பின்னால் துரத்துகிறாள் பின்யா.. பிறகு அந்த பக்கம் வந்த பிஜ்ஜு தங்கையின் அழுகுரல் கேட்டு அங்கே வருகிறான். நடந்ததை அழுது கொண்டே சொல்கிறாள் பின்யா. பின் பிஜ்ஜு வேகமாக ஓடி ராஜாராமிடம் சண்டையிட்டு குடையினை மீட்கிறான். சண்டையின் முடிவில் பரோஷாதான் இப்படி செய்யச் சொன்னார் என்று ராஜாராம் உண்மையை உளறிவிடுகிறான். இந்த நிகழ்வுக்கு பிறகு அவருடைய கடையில் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் பொருட்கள் வாங்குவதில்லை. பின்யா அந்த கடைப் பக்கம் குடையினை பிடித்து செல்லும் போது குடையை மடக்கி வைத்துக் கொண்டு ஓடிவிடுவாள். இதை பார்த்த பரோஷா தன்னுடய செயலுக்கு வருத்தப்படுகிறார். அவரின் வியாபாரம் குறைந்து கடும் நஷ்டப்படுகிறார்.
சில வாரங்கள் கழித்து பின்யா அந்த கடையில் பொருட்கள் வாங்க வருகிறாள். பரோஷாவிடம் தேநீர் கொடுங்கள் என்று கேட்கிறாள். குடையுடன் வந்த பின்யா குடையை கடையிலேயே விட்டுச் செல்கிறாள். குடையைப் பார்த்த பெரியவர் ஓட்டமாய் ஓடிப்போய் உன் குடையை மறந்து விட்டுவிட்டாய் என்று பின்யாவிடம் கொடுக்கிறார். இல்லை நான் வேண்டுமென்றே தான் விட்டு விட்டு வந்தேன் என்கிறாள். இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஓடுகிறாள் பின்யா.. பெரியவர் பின்யாவின் செய்கையை கண்டு வியக்கிறார். பின் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த கரடியின் நகம் பதித்த செயினை பின்யாவிற்க்கு பரிசாக அளிக்கிறார்.. இத்துடன் கதையும் முடிகிறது..

கதை ஆங்கிலத்தில் இருந்தாலும் கதை முடியும் போது ஒருவித மன நிறைவு ஏற்பட்டது ஆகவே இதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்…
  





Tuesday, 30 April 2013

கருக்கு :

ஆசிரியர்  : பாமா
பிரிவு        : நாவல்
பதிப்பகம் : பாரதி புத்தாலயம்



தமிழகத்தின் தென் பிராந்திய பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த பாமா என்னும் இந்த சகோதரி, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை விடாமல் துரத்திக் கொண்டே இருந்த சாதிய வன்கொடுமைகளின் தாக்கத்தால், தன் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை தொலைத்து நிராதராவாக நின்று கொண்டிருந்த சூழலில், கிறிஸ்த்துவ திருச்சபைகளை சேர்ந்த மாற்கு என்னும் சகோதரரின் உதவியுடன், தனக்கு ஏற்பட்ட அவலங்களில் இருந்து தன்னை மீட்டெடுப்பதற்கு மருந்தாக எழுத்தை நாடினாள். தன் சோகங்களை பேனாவுக்குள் இட்டு நிரப்பி வார்த்தைகளாக வடிவம் கொடுக்க, அதை வாசித்துப் பார்த்த நண்பர்கள், கண்டிப்பாக இதனை அச்சேற்றி புத்தக வடிவில் கொண்டுவர விருப்பம் தெரிவித்தனர். முதலில் அந்த ஆலோசனையை ஏற்க அஞ்சிய பாமா அவர்கள், பின்பு நண்பர்களின் வற்புறுத்தலால் அதற்கு ஒப்புக் கொள்ள, கருக்கு என்ற நாவல் உதயமாகி, தமிழ் இலக்கிய பெருவெளியில் பல சர்ச்சைகளையும், சலனங்களையும் ஏற்படுத்தியது.

இது முதன்முதலில் நாவலாக வெளிவந்த காலகட்டம் 1998. மொத்தத்துக்கு 100 பக்கங்களுக்கு மிகாமல் குறுநாவலின் வடிவம் கொண்டது இந்த கருக்கு. ஆனால் இந்த நாவலில் இடம் பெற்ற சாதிய கொடுமைகளின் சுமையைப் பார்க்கும் போது நாவலின் கணம் கூடித்தான் போகிறது. நாவல் வெளிவந்த போது தன் சொந்த கிராமத்திலேயே பயங்கரமான எதிர்ப்பை சம்பாதித்தார். தங்கள் இனத்தையும் தங்கள் ஊரையும் அசிங்கப்படுத்தி விட்டாள் என்று கூவி பாமாவை வசைபாடத் தொடங்கியது அவர்களது சமூகம். அதே நேரத்தில் நாவலில் இடம் பெற்றிருந்த சொல்லாடல் தமிழ் இலக்கியத்திற்கு புதிது. கிராமங்களில் இயல்பாக மக்களால் பேசப்படும் பேச்சுவழக்கில் எந்த விதமான மொழி பிறழ்வும், கலப்பும் இன்றி அப்படியே எழுதியதால், அந்த மொழிநடையை உட்கிரகித்துக் கொள்வதில் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனாலும் ஆரம்ப காலத்தில் நாவலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அதன் கணம் பொருந்திய கருத்தியலை புரிந்து கொண்டு பலதரப்பிலும் அதைப் பற்றி சிலாகிக்க தொடங்க. ஒரு புதிய மொழி நடையுடன் கருக்கு பிரகாசிக்கத் தொடங்கியது.

இந்த கருக்கு நாவல், தலித் சமூகத்தைச் சேர்ந்த பாமா என்ற சகோதரியின் வாழ்வில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளைகளால் கட்டியமைக்கப்பட்டது மட்டுமல்ல. அதன்வழியே ஒரு சமூகத்தின் இழிநிலையை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இதனை மூன்று பிரிவுகளாக ஆசிரியர் கையாண்டுள்ளதாகவே தோன்றுகிறது. பள்ளி செல்லும் பிராயத்தில் தீண்டாமை கொடுமை அவரை எவ்வாறு தீண்டியது. அப்போது ஊரில் நிலவிக் கொண்டிருந்த சூழல் என்ன என்பதையும், வெளியூர் சென்று கல்வி கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பதையும், படித்து பட்டம் பெற்று வேலை செய்த கால கட்டங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சித்தப் போதும் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதையும் அந்த வழி சற்றும் குறையாமல் எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர்.

பள்ளி செல்லும் காலத்தில், பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்னர் பள்ளியிலேயே மாணவ மாணவிகள் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் விளையாட்டு மதில் சுவர் பக்கம் சாய்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தின் மீது திரும்புகிறது. அதன் மீது ஏறி விளையாடத் தொடங்குகின்றனர். விளையாட்டின் சுவராஸ்யத்தில் அனைவரும் அந்த சிறிய தென்னை மரத்தில் பிஞ்சு விட்டிருந்த தேங்காய் மீது கைவைக்க.. அது பாமா கைவைக்கும் போது மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. அனைவரும் பயந்து ஓடிவிட, பாமாவும் ஓடி விடுகிறாள். அடுத்த நாள் காலை ப்ரேயர் ஹாலில் தலைமையாசிரியர் “உன் சாதிப் புத்திய காட்டிட்டியே.. ஏண்டி இளநீய புடுங்குனே.. ஸ்கூலுக்குள்ள வராத.. வெளிய போ…” என விரட்டுகிறார். பாமா தான் அறிந்து ஏதும் தவறு செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக அவர் உதிர்க்கும் கண்ணீர் மட்டுமே அங்கு நிற்கிறது. இது அவர் வாழ்க்கையில் நேரிடையாக ஏற்பட்ட முதல் அவமானம். அதுவும் நன்கு படித்து பட்டம் பெற்ற ஒரு தலைமையாசிரியரின் வாயில் இருந்த வந்த அந்த வார்த்தைகளை அவரால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.

தீண்டாமை என்பதை அறியாத அந்த பிஞ்சு வயதில், அவர் தீண்டாமை, தொட்டா தீட்டாம்… என்கின்ற வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டது வேறொரு சந்தர்ப்பத்தில்… பள்ளி விட்டு வரும் வழியில் தெருவோரம் இருக்கும் பலகாரக் கடைகளையும் வித்தை காட்டுவோரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்வது பாமாவின் வழக்கம்.. அன்றும் வழக்கம் போல் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கும் போது, தலீத் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெரியாள் ஒருவர் தனது வலதுகையில் இருந்த ஒரு பொட்டணத்தை அந்த நூல் சரடைப் பிடித்து தூக்கி வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த சிறுமி பாமாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. அந்தப் பொட்டணத்தை உற்றுப் பார்த்தால் அது ஒரு வடை மடிக்கப்பட்ட பொட்டணம் என்பதற்கு சான்றாக அதில் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்க.. அதை நூல் சரடை பிடித்துக் கொண்டே சென்று நாக்கியர் கையில் கொடுத்து விட்டு கூனி கும்பிட்டு நிற்கிறார் அந்த முதியவர்.

பாமாவுக்கோ சிரிப்பு தாளமுடியவில்லை. இவ்வளவு வயதாகியும் சின்ன பிள்ளை மாதிரி நூலைப் பிடித்து பொட்டணத்தை பிடித்து விளையாடிக் கொண்டு அவர் வந்த விதத்தை தன் வீட்டில் சென்று ஸ்லாகித்துச் சொல்ல.. வீட்டில் தாய், அண்ணன் என்று யார் முகத்திலும் சிரிப்பில்லை… “நாமெல்லா அத தொடக்கூடாதாம்.. தொட்டா தீட்டாம்…” என்று முகத்தில் அடித்தாற் போல் பாமாவின் தாய் சொல்லிவிட்டு விருட்டென்று வீட்டுக்குள் செல்ல பாமாவுக்கும் அதற்குமேல் சிரிப்பு வருவதில்லை. பெரியவர் நூல் பிடித்து தூக்கி வந்த அந்த காட்சியை கண்ட நாளில் தான் பாமா தெரிந்து கொண்டாள், “தீண்டாமை பெருங்குற்றம்” என்பது இன்னும் நூல் அளவில் தான் இருக்கின்றது என்பதை.

சில நேரங்களில் பாமா தன் பாட்டியுடன் உயர் சாதியினரின் வீட்டுக்குச் வேலைக்குச் செல்லும் போது, அங்குள்ள பத்து வயது நிரம்பாத சிறுபிள்ளைகள் கூட தன் பாட்டியை பேர் சொல்லி அழைப்பதும், அதை பாட்டி மாத்திரம் அன்றி அந்த வீட்டாரம் கண்டு கொள்ளாமல் இருப்பதைப் பார்த்தும் நெஞ்சம் அதிர்ந்திருக்கிறாள். மேலும் அவர்கள் கூலியாகக் கொடுக்கும் கஞ்சியைக் கூட வாங்க, வீட்டு கால்வாயின் ஓரம் சட்டியை வைத்துவிட்டு காத்திருப்பதும், அதில் பழங் கஞ்சியை ஊற்றும் அந்த வீட்டுப் பெண்மணி, சட்டியில் தன் கை ஒட்டாதவாறு அகன்று நின்று அதை ஊற்றுவதும் மனதை போட்டு பிசைய.. அது அவளுக்குள் கேள்வியாக.. அதற்கு பாட்டியின் பதில் இதுதான். “நாமெல்லாம் தாழ்த்தப்பட்ட சனங்க தான.. காலங்காலமா நமக்கு கஞ்சி ஊத்துற மகராசங்க.. அவுங்கள அப்புடி பேசக்கூடாது….”

இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விசயம்.. நாம் அடுத்த மக்களை அடக்கி ஆளப் பிறந்தவர்கள் என்கின்ற எண்ணமும், நாம் அடங்கிப் போகப் பிறந்தவர்கள் என்கின்ற எண்ணமும் இரு தரப்பிலும் சிறுவயதிலேயே மனதில் அறியாமல் விதைக்கப்படுகின்றது என்பதுதான். இந்த தவறு இன்றுவரை கூட நடந்து வருவதுதான், நாமெல்லாம் நாகரீகம் அடைந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதை கேள்விக் குறியாக்குகிறது.

இவை தவிர்த்து படிக்க வெளியூர் செல்லும் இடங்களிலும், வேலைக்கு சேரும் இடங்களிலும், கன்னியாஸ்திரியாக போகும் இடங்களிலும் இவர் தன் அடையாளங்களை மறைத்து வாழும் சூழலும் ஏற்படுகின்றது. தான் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பது தெரிந்துவிட்டால் பிறர் தன்னைப் பார்க்கும் கேலியான பார்வைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் ஒடுங்கிப் போகும் காலகட்டமும் நாவலில் கடந்து செல்கிறது.

பால்ய பிராயத்தில் கிறிஸ்துவ சபைகளில் கடவுள் மீது நம்பிக்கை கலந்த பயம் ஏற்படுத்துவதற்காக கூறும் சில கட்டுக்கதைகள் எப்படி பயத்தை உண்டாக்கியது என்பதும், அதில் இருந்து அவர்கள் மீண்டு வருவதும் கலகலப்பான பக்கங்கள். குறிப்பாக கோயில் தோட்டத்தில் யாரும் அறியாமல் பறித்த மலர்களை ப்ளக் பாய்ண்டில் சொறுகி, ஷாக் அடித்ததை கடவுள் கொடுத்த தண்டனையாக இருக்கும் என்று எண்ணுவதும், கோயிலில் கொடுக்கப்படும் நன்மய கையால் தொட்டால் கை முழுவதும் ரத்தம் ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்தியதையும், கடிக்கக்கூடாது என்று சொல்வதையும் சோதித்துப் பார்க்கும் இடங்களை கூறலாம்.

மேலும் சாலியருக்கும் பறையருக்குமான கல்லறை தொடர்பான சண்டையின் போது போலீசின் அட்டூழியமும் வாச்சாத்தியின் சம்பவத்தை நினைவுகூற வைப்பவை. அந்த காலகட்டத்தில் போலீசுக்கு பயந்து ஒரு மாத காலமாக ஆண்களே ஊரில் இல்லாததால், தாங்களே வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிய பெண்களின் சாமர்த்தியமும் பாராட்ட வேண்டியது. மேலும் பள்ளர், பறையர் இரண்டு சமூகமுமே தாழ்த்தப்பட்ட சமூகமாக இருப்பினும் ஓயாமல் அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளால் ஆதாயம் அடைவது யார் என்னும் விடை தெரியா கேள்வியையும் நாவல் எழுப்பிச் செல்கிறது.

குறை என்று பார்த்தால், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பிற்பாடு நாம் நினைத்தது எதையும் இங்கு செயல்படுத்த முடியாது என்ற வெறுப்பில் வெளியேறும் பாமாவுக்கு, வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் ஒரேயடியாக போய்விட்டது என்பது ஏற்றுக்கொள்வதற்கு சற்று கடினமாக இருப்பதால் அவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மேலும் எழுதிய விசயங்களே சில இடங்களில் மீண்டும் எழுதப்பட்டிருப்பதும் வாசிப்பிற்கான ஒரு தடையாக உள்ளது. மேலும் நிலவியல் சார்ந்த குறிப்புகள், கதை எங்கு நடந்தது என்பது போன்ற விவரணைகள் தெளிவாக கொடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பமும் தோன்றுகிறது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அப்படியே சொல்வதாகக் கொண்டாலும், பிற சாதிய மக்களை கேலி செய்வது போல் அமைந்திருக்கும் சில இடங்கள் கண்டிப்பாக அவர்களை கோபப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதோ என்றும் ஐயுறத் தோன்றுகிறது. அதை தவிர்த்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.

சாதியத் தீண்டல்களை நீங்கள் உங்கள் வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர் இல்லை என்றாலும் பிறருக்கு நிகழ்ந்ததைப் பார்த்தது இல்லை என்றாலும் கூட நீங்கள் கண்டிப்பாக இந்த நாவலை வாசிக்கவும். ஏனென்றால் சாதிய தீண்டாமையின் கூறுகள் நம் கண்ணில் மண் தூவி எப்படி கிளை விரித்திருக்கின்றது என்பதை கண்டுகொள்ள இந்த ”கருக்கு” நாவல் கண்டிப்பாக உதவக்கூடும். உதாரணத்துக்கு உங்கள் ஊரில் அதிக அறிமுகம் இல்லாத ஒருவர் உங்களிடம் பேசும் போது, “தம்பி எந்த தெரு…” என்று கேட்டிருக்கிறாரா… அந்த கேள்வியின் உள்நோக்கம் நீங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்று கண்டு கொள்வதுதான். மேலும் உங்கள் ஊரின் சுற்றமைப்பை எடுத்துப் பாருங்கள். அதில் பழங்காலத்தில் கட்டப்பட்ட பள்ளிகூடங்கள், கோயில்கள், நகராட்சி அலுவலகங்கள், தபால் நிலையங்கள் இவை எல்லாம் எந்தெந்த தெருக்களைச் சுற்றி பெரும்பாலும் அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே சாதி நம் கண் மறைவில் எப்படி மறைந்திருக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளக் கூடும்.

Sunday, 24 March 2013

கவிதை நடையில் நடக்கிறாய் - புத்தக மதிப்புரை



கவிஞர் குகை மா. புகழேந்தியின் “கவிதை நடையில் நடக்கிறாய்” என்ற புத்தகம் சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில் வாங்கினேன்.  
காதலை அவர் காதலித்த விதமும் இடமும் என்னை எதோ செய்துவிட்டது. ஆகவே அவருடன் கைகுலுக்கும் விதமாக அவர் தீட்டிய சில காதல் ஓவியங்களை இங்கே சமர்பிக்கிறேன்.

v        அப்படியெல்லாம் உற்றுப் பார்க்காதே
பைத்தியமாகிவிட ஆசை வருகிறது

ஒரு சிறு பார்வை கவிஞரை என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்


v       பார்க்கின்ற பெண்ணெல்லாம்
அழகாகத் தெரிந்த காலத்தை
உன்னைக் கடந்த போதுதான் கடந்தேன்

ஒரு காதலின் அழிவு உறுதி படுத்தபட்டால் பிறகு காணும் கண்ணெல்லாம் அழகாய்த்தான் இருக்குமோ


v       பூக்காரனின் கூடையிலிருந்து
தேடித் தேடி மிகச் சரியாக கண்டுபிடித்துவிடுகிறாய்
உனக்கென மலர்ந்த பூக்களை

அவள் தலையில் இருந்து உதிர்ந்த பூக்களை என்னவென்று சொல்வது...


உன்னோடு பேசிவிட்டுத் திரும்பும்போதெல்லாம்
பூக்களோடு பேசிவிட்டு வரும் காற்றென மணம்
வீசிக்கொண்டு அலைகிறேன்

v       நீ பேசும் போதெல்லாம் வார்த்தைகளின் மேடைகளில்
இதழ்களின் நாட்டியம்

பேசிவிட்டு போவது இருக்கட்டும்...சிலர் பார்த்துவிட்டு போனாலே மணம் வீசிக்கொண்டு தான் திரிகிறார்கள்


எனக்கு நீயும் உனக்கு நானும் சவப்பெட்டிகள்

அன்பின் உச்ச கட்ட வெளிப்பாடு


உன்னை நினைக்கும்போதெல்லாம்
கவிதை வந்துவிடுகிறது. உன் நினைவுகளைத்
தடங்கல் செய்கிற இந்தக் கவிதைகளை
எனக்கு பிடிக்கவில்லை

கவிதைகள் எல்லாம் அவளே இருக்கும் போது எப்படி தடங்கல் ஆகும்


தவிர்க்க முடியாத பிரிவில்
நீ காலி செய்து விட்டுப்போன வாடகை வீட்டில்
குடிபெயர்ந்து நீ வாழ்ந்துவிட்டுப்போன
நாட்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்

காதலுக்கே உரிய உயரிய சிந்தனை.... ஒரு சிலருக்கே வாய்க்கும் இந்த அதிர்ஷ்டம்


தினம் தினம் கொஞ்சமாய்
திருடித் திருடி உன்னை சேமிக்கிறேன்
குறைந்து போவது தெரியாமலே
நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய்

சொன்ன காதல் இப்படி; சொல்லாத காதல் எப்படியோ


யாருக்கும் கொடுத்துவிடாதே
உன் வரங்கள் மட்டுமல்ல
சாபங்களும் எனக்குரியதே

v        உன்னைக் காதலிக்கத் துவங்கியதிலிருந்து
சீக்கிரமாகவே விழித்துக்கொள்கிறேன்
ஆனால் தாமதமாகக் கூட தூங்க முடியவில்லை

v       காதலித்தால் நேரம் போவதே தெரிவதில்லை என்கிறாய்
உயிர் போனால் மட்டும் தெரியவா போகிறது

சொர்க்கமென்பதும் நீ தானோ!!! நரகமென்பதும் நீ தானோ!!!


உன் கரம் பற்றியபோது
இரண்டு வளையல்கள் உடைந்து போயின
அப்போதுதான் கற்றுக்கொண்டேன்
உன்னை எப்படித் தொடவேண்டுமென்று

காதல் எவ்வளவு மென்மையானது என்பது இந்த வரிகளில் ஆழமாய்த் தெரிகிறது


 விக்கல் நின்றபோது நீ தூங்கிவிட்டாயென
நம்பிக்கொண்டு நானும் தூங்கிப் போனேன்
பிறகு கனவில் விக்கிக் கொண்டிருந்தேன்

v       ஒரேயொருமுறை உன்னைப் பார்தேன்
மறுபடியும் பார்க்கவேண்டும் போலிருந்தது
பார்த்துக்கொண்டே இருந்தேன். மற்றபடி
நான் பார்த்தபோதெல்லாம் நீ எதிரில்தான் இருந்தாய்
என்பதை என்னால் நிச்சயித்துச் சொல்ல முடியாது

காதல் படும்பாடா!!! இல்லை காதல் படுத்தும்பாடா!!!


காதலைச் சொல்லவந்த
எல்லா கடிதங்களுமே வாய் திறந்த போது
நாக்குகள் இல்லை

கொடுக்கப்படும் கடிதங்கள் மட்டுமே பிரிக்கப்படுகின்றன


எனக்கும் காதலுக்கும் வெகு தூரமென்றிருந்தேன்
எதிர் வீடுதான் என்பதறியாமல்

இருப்பவனுக்கு ஒரு வீடு!!! இல்லாதவனுக்கு.........


வழக்கமாய் நீ வந்து போகின்ற நேரத்திலே
நின்று கொண்டிருக்கிறது எனது காலம்

காதலித்தால் கைக் கடிகாரம் தேவைப்படாது போல
       

ஒரு துளி மழையில் இருவரும் நனைய காதல்
வந்த பிறகுதான் கற்றுக்கொண்டோம்

காதலித்தால் செலவு இழுத்து விடும் என்று கேள்விபட்டிருக்கிறேன். இங்கோ வித்தியாசமான எக்னொமிகல் லவ்


அட நீ பூமியில் தான் இருக்கிறாய்

எத்தனை அர்த்தங்கள் பொதிந்த மிகச் சிறிய வரி...


இது போன்று நிறைய காதல் சாறுகள் இந்த புத்தகத்தில் இனிக்கின்றன.
நான் ரசித்த வரிகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன். மேலும் இது போன்ற இனிப்பான காதல் சாறுகளுக்கு புரட்டவும் "கவிதை நடையில் நடக்கிறாய்"


                                                                                                                                                                    தொகுப்பு

                                                                                                                                                                   விஜய் CHE