Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Sunday, 16 August 2015

நின் கனவு இனி என் கனவு...




நொடித்து அடங்க
எத்தனையோ மூச்சுக்கள்
இங்கே
உலாவிக்கொண்டிருக்கின்றது...
நீர் ஏன் மாய்ந்தீர் ஐயா...

உமக்காக பிராத்தனை
செய்யக் கூட
எங்களுக்கு  நீர்
காலம் கொடுக்கவில்லை

கற்கள் நிறைந்த
பாதையில்
புற்கள் மிதிக்க
கற்றுக் கொடுத்தீரே..
இனி
முட்கள் நிறைந்ததொரு
பாதை வருகிறது...
வழி நடத்த வாரீரோ


கட்டவிழ்க்க முடியாத
ஆயிரமாயிரம்
முடிச்சுக்கள்  அப்படியே
கிடக்க
இனி எப்படி ஐயா
அவிழ்ப்போம் சில
இறுகிய அரசியல்
முடிச்சுக்களை...

நின் உடல் கொண்ட மயானம்
அது ஒரு ஓரத்தில் கிடக்கட்டும்...

முதலில்
அங்கிருந்து எழுந்து வந்து
உம் தடயங்களைப்
பாரும்..

உமக்காக
வீதிகள் தோறும்
விளக்குகள்...

பள்ளிகள் தோறும்
உம் படங்களை ஏந்தித்
திரியும் மழலைகள்

சாலைகள் தோறும்
நின் கனவுகளை தூவிச்
செல்லும் இளைஞர்கள்
என நின் உருக்களைப் பாரும்

எல்லோர் வீட்டிலும்
நெருங்கிய தங்கள் சொந்தத்தை
இழந்த தவிப்பு இன்னும்
அகலவில்லை

ஐயனே
இவைகள்
சாயங்கள் அல்ல வெளுக்க..
நின் அன்பின் வெளிப்பாடுகள்..

என்றும் எங்களை
புத்தி மாறிப்
போகவிடாது உமது
முத்தான புத்தகங்கள்

நின் போல் எவரும்
இனி பிறக்கப் போவதில்லை
பிறப்பினும்
நின் போல் இறக்கப்போவதில்லை
இறப்பினும்
நின் போல் நிலைக்கப்போவதில்லை

கனவுகள் பல சுமந்து
தூங்குவது எளிதல்ல
நீர் தூங்கவில்லை..
நின் பணிகளை எங்களுள்
விதைத்து விட்டு
சற்று இளைப்பாறிக் கொண்டுதான்
இருக்குறீர்கள்

இமயத்தின் சாரலாம்
சிந்து, கங்கையை
யமுனை, கோதா வழியே
காவிரி, வைகையில் இணைத்து..
நின் பாதங்களை நனைத்த பின்னே தான்
மூடும் எங்கள்
இமைகளுக்கு நிரந்தர
ஒய்வளிப்போம்..

நின் கனவு இனி என் கனவு

Wednesday, 22 July 2015

ஓரிரு நொடிகள் தான்..


























மாலை தொடங்கி
விடியலாகிவிட்டது
இன்னும் சதா 
நீ பெய்து கொண்டே இருக்கிறாய்
துளியும் வெளிச்சமில்லாத
இந்த பொழுது எந்நேரமென்று
தெரியவில்லை
நீ நிற்பதற்கான சூசகங்கள்
ஒன்றும் தென்படவில்லை
இன்னும் சிறிது நேரத்தில்
நன்கு விழித்திருந்த 
அந்தச் சுடரும் கரைய இருக்கிறது
உன்னுடன் நனைய
ஆசையிருந்தும் இப்போது
நனையும் நிலையில்
நான் இல்லை.
ஏனெனில்
நினைவில்
உதிக்கின்ற ஓரிரு
வார்த்தைகளையும்
மீதிச் சுடர் முடியும் முன்
எழுதி முடித்தாக வேண்டும்...
காற்றோடு எதோ சதி செய்து
சாளரம் தாண்டி
உன் எரசலால் என் பகுதி
நனைக்க முற்படுகிறாய்
உடல் சிலிர்க்கிறது
ஓரிரு நொடிகள் தான்..
எழுதும் நிலையிழந்து
என்னை முழுதும் உன்னுள்
நனைக்க விழைந்தேன்..
நனைந்தேன்...
எண்ணம் பறித்து
என்னை முழுதும்
உனது ஆக்கினாய்...

துளித் துளியாய் - 67



Tuesday, 21 April 2015

அழகும் அமைதியும்




முன்பெல்லாம் 
நீ அடிக்கடி கண்ணில் தென்படும்
அந்த மாட வீதிகளில்
சுற்றிக் கொண்டிருப்பேன்

என்றாவது
நீ எதிரெதிர் வருகையில் 
சின்னதாய் 
ஒரு புன்னைகை புரிவாய் 
அந்த புன்னகையின் 
பிம்பத்தை 
அப்படியே அடி மனதில் 
பதிவிறக்கம் 
செய்து விடுவேன்

அவ்விடம் விட்டு
நீ கடந்ததும் பரவும் 
உன் ஸ்பரிசத்தின் வீரியம் 
என் மூச்சினில் ஏறிடும் அந்நேரம்
உன் மணம் சென்றிடும் 
தடம் சென்றிடுவேன்
என் மனம் நின்றிட 
இடம் தேடிடுவேன்.


பார்க்க
முடியாது என்று தெரிந்தும்  
அதே போன்றதொரு 
அழகிய நினைவுகளுடனே 
அன்றும் அந்த வீதிகளில்
சுற்றிக் கொண்டிருந்தேன்

கொடுக்கப் போவதில்லை 
என்று தெரிந்தும் 
உனக்காக வாங்கிய 
ஆறேழு பரிசுகள்

பேசப்போவதில்லை 
என்று தெரிந்தும் 
உனக்காக மனனம் செய்த 
நாலைந்து கவிதைகள்

வரப்போவதில்லை என்று 
தெரிந்தும் நீ வந்திறங்கும் 
பேருந்து நிலையத்தில்
அட்டையாய் ஒட்டிக் 
கொண்டிருந்தேன்

கொடுத்துவிட்டு பேசுவதா
பேசிவிட்டு கொடுப்பதா
என்று குழம்பியதில்
நீ வரும் பேருந்து 
என் முன் வந்து நின்றது

தேடி அலைந்ததில் உன்னைத் 
தொலைத்ததுதான் மிச்சம்

நேரங்கள் கடந்தோடி என்னை 
இழந்ததுதான் மிச்சம்

அன்று ஏனோ  நீ வரவில்லை





Thursday, 11 December 2014

RIP - 63*





இதுவே என் தீயிடம்
இனிமேல் இங்கே தூறிடும்

இதுவே என் ஓய்விடம்
இதயம் இங்கே தூங்கிடும்

இதுவே என் போரிடம்
புழுவும் என்னை கூரிடும்

யாக்கை வெந்து தீரவே
காக்கை வந்து கூடிடும்

மண் சூழ்ந்து மூடவே
கண் கூர்ந்து தேடிடும்

அனலாகி எரிந்த பின்னே
தாகங்கள் எடுக்குமோ

மண்ணாகிப் புதைந்த பின்னே
மாற்றங்கள் நிகழுமோ

இரவும் முடிந்தது

விதியும் முடிந்தது

கனவும் கரைந்தது

திதியும் கரைந்ததுவோ


Wednesday, 29 October 2014

போதுமென்று நினைக்கிறேன்























இன்றைக்கும்
இந்த
நிசப்த
இரவினைத்
தூங்காது கடக்கப்போகிறேன்
என்று தெளிவாய்த் தெரிகிறது

மாதத்தின் கடைசி தேதி
பெருகிடும் தேவைகள்
பிடிக்காத அலுவல்கள்
அடம்பிடிக்கும் சோம்பல்
கருமேகங்கள் அற்ற வானம்
எப்போதும் அல்லாத வெயில்
நெரித்து தள்ளிய பேருந்து
புழுங்கிப் போன உடல்
குழம்பி கிடக்கும் மனம்
சவரம் செய்யாத முகம்
முடிக்க முடியாத சில கவிதைகள்
மாதங்கள் துவைக்காத போர்வை
நாற்றமெடுக்கும் காலுறைகள்
காற்றோட்டம் இல்லாத மெத்து
அடிக்கடி இரையும் பண்பலைகள்
சண்டையிடும் தெருநாய்கள்
பிடுங்கும் கொசுக்கள்
விரட்டும் வலைத்தள அரட்டைகள்
விடாத ஒற்றைத் தலைவலி

நெடுநேரமாய்
அழைப்பை ஏற்காத தலைவி

போதுமென்று நினைக்கிறேன்
இன்றைய இரவினை

தூங்காது கடப்பதற்கு

Thursday, 16 October 2014

அழகாய் தெரிந்த கண்கள்


மழை தூறி முடித்து
இரவாகிக் கொண்டிருந்தது
அந்த மாலை நேரம்

நீ யாரென்று நானும்
நான் யாரென்று நீயும்
அறிந்திடாத
நம்முடைய முதல் நாள்
சந்திப்பு அது

மழையின் ஈரம்
உன் கால்களை
விழுங்க சற்று
ஓரமாய்
ஒதுங்கி நடந்தாய்

குறுகலான அந்த
ஈரப் பாதையில்
இப்போது
எனக்கெதிரே நீ
உனக்கெதிரே நான்

யார் விலகி வழி
விடுவது என்று
குழம்பிய அந்த 
சில நொடிகள்
என் விழி
உன் விழியைப்
பருகியது

சிந்திக்கும் நேரங்கள்
தீர்ந்தது
உன் கண்களை
சந்தித்த அந்நேரம்
முதல்

அது நிமிடங்கள் தான்…

நிமிடங்கள் தான்
என்றாலும்
அப்போது
அந்த கண்கள்
ஏன் அழகாய்த் தெரிந்தன.

இனி
எதேட்சையாய்
நமக்குள் சில
சந்திப்புகள் நிகழ்ந்து விடின்
உன்னிடமிருந்து
என்னை 
எங்கனம் மீட்பது

என்ன நிகர் கண்டேனோ
தெரியவில்லை...

அது நிமிடங்கள் தான்
என்றாலும்
அப்போது
அந்த கண்கள்
ஏன் 
அழகாய்த் தெரிந்தன.