Thursday, 17 January 2013

அவள்






















நினைவுகள்


நெஞ்சு பொறுக்குதில்லையே





வர...தட்சனை



சச்சின் ஒரு சகாப்தம்






பதினான்கு வயதில் ஒரு சிறுவன் எம்.ஆர்.எஃப் பேஸ் பவுண்டேசனுக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சிக்காக வருகிறான்.  மட்டைவீச்சில் கவனம் செலுத்துமாறு பயிற்சியாளர் டென்னிஸ் லில்லி அவனுக்கு அறிவுறுத்துகிறார்.  பயிற்சியாளர் அக்ரேக்கரிடம் கடுமையானப் பயிற்சி மேற்கொள்ளும் அந்த சிறுவன் பள்ளிகளுக்கிடையேயான ஒரு போட்டியில் தன் நண்பன் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 664 ரன்கள் குவிக்கிறான். முதல் தர போட்டிகளுக்கான மும்பை அணியில் இடம் கிடைக்கிறது.


விளையாடிய முதல் ரஞ்சி போட்டியிலேயே சதம் அடிக்கிறான். அடுத்தடுத்து இரானி கோப்பை, துலிப் கோப்பை என அறிமுகம் ஆகும் தொடர்களிலெல்லாம் சதமடித்தே எதிரணி வீரர்களைச் சாகடிக்கிறான்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தான் செல்லும் இந்திய அணியில் அந்த பதினாறு வயது சிறுவனுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறதுவக்கார் யூனிஸ்இம்ரான் கான்வாசிம் அக்ரம் என மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகள் அவனைத் துளைக்கின்றனஉச்சமாக இம்ரான் கான் வீசியப் பந்து அவனின் மூக்கை உடைக்கிறதுபயந்து ஓடாமல் தொடர்ந்து களத்தில் நின்றுப் போராடுகிறான்

டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஒரு இருபது ஓவர் கண்காட்சிப் போட்டி பெஷாவரில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளாரான அப்துல் காதிர் அவனை சின்னப்பையன் என சீண்டுகிறார். பந்து சிக்சருக்குப் பறக்கிறது. என் பந்தையா அடிக்கிறாய் என மீண்டும் சீண்டுகிறார், மீண்டும் பந்து சிக்சருக்குப் பறக்கிறது. கோபத்தின் உச்சிக்கே செல்கிறார் அப்துல் காதிர், அடுத்த பந்தும் சிக்சருக்குப் பறக்கிறது. எதுவும் பேச முடியாமல் ஓவரை வேகமாக முடிக்க முயல்கிறார் அப்போதும் பந்து சிக்சருக்குப் பறக்கிறது. அப்துல் காதிரின் ஒரே ஓவரில் 27 ரன்கள். அந்தபோட்டியில் 18 பந்துகளில் 53 ரன்கள் விளாசுகிறான் அந்த சிறுவன். அனைவரின் கண்களும் அந்த சிறுவன் மீது அன்று விழுகிறது. அன்றிலிருந்து இன்று வரை கிரிக்கெட் என்றாலே அடுத்து உச்சரிக்கப்படும் வார்த்தை சச்சின் என்றாகிவிட்டது.

அந்த சிறுவனுக்கு ஒரே ஒரு கனவுதான். உலகக்கோப்பை வெல்லும் இந்திய அணியில் தானும் இடம்பெற வேண்டும் என்பது. அதற்காக அவன் போராடிய வருடங்கள் 22. அவன் விளையாடிய ஆறாவது உலகக்கோப்பையில் தான் அது நிறைவேறியது. 1996, 2003 இரு உலககோப்பைகளிலும் கோப்பை வெல்லும் வாய்ப்பை இந்திய அணியின் வாயில் தேடி வரவைத்தான். ஆனால் அப்போதைய கேப்டன்கள் முறையே முகமது அசாருதீனும், சௌரவ் கங்குலியும் எடுத்ததவறான முடிவுகள் அவன் கனவைத் தள்ளிப்போட்டன. இத்துனைக்கும் அந்த இரு தொடர்களிலும் அதிக ரன்கள் அடித்திருந்தான் அந்த வீரன். 2003 உலகக்கோப்பைத் தொடர் நாயகன் விருதை வாங்கியபோது அணி கோப்பையை வெல்லாமல் நான் மட்டும் விருது வாங்குவது கண்ணீரை மட்டுமே வரவழைக்கிறதென்று மைதானத்திலேயே தேம்பி தேம்பி அழுதான். 2011 உலகக்கோப்பையை இந்திய அணி இவருக்கு சமர்பித்தப் பொழுது இந்தியாவே பெருமிதம் கொண்டது. 22 ஆண்டுகளாக இந்திய அணியைத் தனது தோளில் தாங்கிய வரை நாங்கள் எங்கள் தோள்களில் சுமந்துச் செல்வதில் தவறென்ன இருக்கிறது என்ற விராட் கோலியின் வார்த்தைகள் எத்துனை அர்ப்பணிப்பை அதனுள் புதைத்துவைத்துள்ளது.



சச்சின் மட்டைவீச்சில்  மட்டுமல்ல பந்துவீச்சிலும் போதுமான அளவிற்கு சிறப்பாகவே பங்களித்துள்ளார். ஒரே மைதானத்தில் இருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையும் அவரிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றிப்பெற கடைசி ஓவரில் 6 ரன்களே தேவைப்பட, அந்த கடைசி ஓவரை வீசுவது யாரென்ற குழப்பநிலை. கபில்தேவ், ஸ்ரீநாத் போன்ற முன்னணிப் பந்துவீச்சாளார்கள் எல்லாம் பின்வாங்க, சச்சின் அந்த ஓவரை வீசி இந்திய அணியை வெற்றிப்பெறச் செய்தார். அது அவரின் பந்துவீச்சுத் திறமைக்கு சான்று என்று கூற முடியாவிட்டாலும் சச்சினின் தன் மீதான தன்னம்பிக்கையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அந்தப்போட்டி.
24 வருடங்கள் இந்திய அணியின் ஒன் மேன் ஆர்மி, சச்சின் அவுட்டாகிவிட்டாலே இந்தியாவும் அவுட்டென டீ.வியை அணைத்துவிட்டு செல்வோர் அதிகம். அது மட்டுமா ரசிகர்கள் என்றப் பெயரில் இந்தியாவில் நிறைய கிரிக்கெட் பைத்தியங்கள் உருவானது அவரது ஆட்டத்திற்காக.

24 வருடங்களாக ஒரு விளையாட்டில் தொடர்ந்து மிகச்சிறந்த வீரராக ஒருவர்  இருப்பதென்பது எத்தகைய கடினம் என்பதை நீங்கள் சச்சினாக இருந்தால் மட்டுமே உணரமுடியும். 39 வயதான போதும் ரன்களின் மீதான தனது தாகம் சிறுதும் குறையவில்லை. கிரிக்கெட்டில் எத்துனையோ வீரர்கள் வந்துசென்று விட்டனர் ஆனால் சச்சின் மட்டுமே என்றும் நிரந்தரம். வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளை எப்போ கிளம்புவிங்க... எப்போ கிளம்புவிங்க... என்று கேட்டு விரட்டுவதைப் போல் எப்போது ஓய்வு அறிவிப்பீர்கள் என கேட்டே அவரை ஓய்வு முடிவை அறிவிக்க வைத்துவிட்டனர். 19 டெஸ்ட்களில் சதமடிக்காததால் அவரின் ஃபார்ம் போய்விட்டதென அனைவரும் கதறுகிறார்கள். அப்படியாயின் 27 போட்டிகளில் சதமடிக்காத காம்பிர், 33 போட்டிகளில் சதமடிக்காத சேவாக், 3 வருடங்களாக தனது ஃபார்மை தொலைத்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டேயிருக்கும் தோனி இவர்களையெல்லாம் என்ன செய்வது. சச்சின் சாதனைகளுக்காகவே விளையாடிவருகிறார் என்ற ஒரு சாராரின் அர்த்தமற்ற குற்றச்சாட்டும் அவரின் மீது விழுவது உண்டு. அப்படியாயின் அவர்கள் சச்சினைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் என்றே கூறலாம். 2009 ஹைதரபாத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள்போட்டியில் 175 ரன்கள் எடுத்த சச்சினின் ஆட்டத்தைப் பார்த்திருந்தால் அவர்களால் இப்படி பேசியிருக்க முடியாது. போட்டி முடிந்தவுடன் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் வெற்றிப் பெற்றுவிட்டது ஆனால் சச்சின் என்ற தனிமனிதனிடம் தோல்வி அடைந்துவிட்டது என்றே வர்ணனைச் செய்தார்.



இந்திய அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடிய ஒருவனுக்கு அவர்கள் கொடுத்த ஒரே மரியாதை அவன் ஒரு சுயநலவாதி என்ற பட்டம் மட்டுமே.

எப்போதெல்லாம் இந்திய அணி  தொடர் தோல்விகளை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் சச்சின் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் உடன் எழும். இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்றுக்கூட தெரியாத நிலைமையிலிருந்த சில முன்னாள் வீரர்கள், தங்கள் மீது மீடியா வெளிச்சம் விழ சச்சினைப் பயன்படுத்திக்கொண்டனர்.  அப்போதெல்லாம் தனது மட்டையை வீசி அவர்களின் வாயை அடைத்தார். ஆனால் இம்முறை தனது மட்டையையே வீசி எறிந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த அளவிற்கு அவர் செல்லும் இடமெல்லாம் நீங்கள் எப்போது ஓய்வு அறிவிப்பீர்கள் என்ற கேள்வியைச் சுமந்துக்கொண்டு அவர் பின்னாலேயே சென்றது மீடியா. சச்சினின் இந்த முடிவு மீடியாக்களுக்கு வேண்டுமானால் சந்தோசமான செய்தியாக இருக்கலாம். எங்களைப் போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கோ அல்லது சச்சின் வெறியர்களுக்கோ இது ஒரு மோசமான செய்தி. அது ஒரு வதந்தியாகவே இருந்திருக்கக்கூடாதா என்றே இன்று வரை தவிக்கிறது மனது. இந்திய கிரிக்கெட் வாரியமாவது சச்சினின் இம்முடிவை நிராகரித்திருக்கக்கூடாதா என்றுக்கூட ஏங்குகிறது. இது அவரின் தன்னிச்சையான முடிவாக இருந்திருந்தால் வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் எது எப்படியோ சச்சினின் முடிவு எதுவாயினும் அதை ஆதரிக்கும் மனநிலைமைக்கு எங்களை நாங்கள் பக்குவப்படுத்திக் கொண்டுவிட்டோம். என்ன... சச்சின் இல்லாத கிரிக்கெட்டை எப்படி. ரசிப்பது என்பது மட்டும் விளங்கவேயில்லை. கடவுள்  இல்லாத கோயிலில் யாரை தரிசிக்க செல்வது
                     

-          யோகி

கதை கேளுங்க

சித்திரம் பேசுதுங்க


































தீபக் விமல்







  முருகன்

Wednesday, 16 January 2013

டெல்லி தோழிக்கு



பாவ நகரம் – II




7-ம் பகுதியின் காவல் நிலையம்: காலை 5 மணி

      அதிகாலை தூக்கம் கண்ணைச் சுழற்ற அந்த காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சரவணன் தொலைக்காட்சியில் நேற்றுப் பதியப்பட்ட செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் தகவல் பகுதியில் பாவ நகரம் எவ்வாறு அப்பெயர் பெற்றது என ஒரு பெண் விளக்கிக் கொண்டிருந்தார். அதில் அப்பெண் முன்னோர்கள் அந்நகரத்திற்கு முதலில் புண்ணிய நகரம் எனப் பெயரிட்டதாகவும், பின்னாளில் சமூக விரோத செயல்களில் அந்நகரத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் ஈடுபட்டதால், அவர்கள் தவறை உணரும் பொருட்டு அக்காலத்து மன்னர் ஒருவர் அதற்கு பாவ நகரம் என பெயரிட்டதாகவும், ஆனால் மக்கள் வழக்கம் போல சமூக விரோத செயல்களில் ஈடுபடவே அப்பெயரே நிலைப் பெற்று இன்றைய நாகரிகக் காலத்திலும் இந்நகரம் அவ்வாறே அழைக்கப் படுவதாகத் தெரிவித்தார்.

      சரவணன் எதிர் அறையில் மூலையில் அமர்ந்திருந்த கைதிகளைப் பார்த்தார். இன்னும் இது பாவ நகரம் தான் என நினைக்க முயன்ற போது டெலிபோன் ஒலித்தது.

      “ஹலோ
      “....
      “ஆமாயா, ப-7 போலீஸ் ஸ்டேசன் தான்
      “சார், இங்க Express Avenue பக்கத்துல ஒரு ஆம்பிளை பொணம் இருக்கு சார். 

கொலைனு நினைக்கிறேன்

      “நீ யாருயா?
      “சிக்கிரம் வாங்க சார் எதிர் முனை துண்டிக்கப் பட்டது.    
       “யோவ் 401

7-ம் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு:

 அந்த அடுக்குமாடி குடியிருப்பு உறங்கிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து அமுதாவும் உறங்கிக் கொண்டிருந்தாள். 45 வயது இல்லத்தரசி அவள். ஒரு சராசரி இந்திய இல்லத்தரசி. கணவனின் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தப் பழகிக் கொண்ட கோடிக் கணக்கான இந்தியப் பெண்களில் ஒருவள். அவளது கணவன் சபேசனும் அந்த துணிக் கடை வேளையில் எவ்வளவுதான் சம்பாதிக்க முடியும். 25 ஆண்டு திருமண வாழ்க்கையில் இவளுடன் ஒரு சண்டை போட்டதில்லை அவன். இருவரின் ஒரே நம்பிக்கை அவர்களது மகன் ஸ்ரீதர் தான். இஞ்சினியரிங் இரண்டாமாண்டு படிக்கிறான். வங்கிக் கடன் வாங்கி படிக்க வைக்கும் பையன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்து வேலைக்கு சென்று விடுவான் என நினைத்துக் கொண்டிருந்தனர். அவன் படித்து வேலைக்குப் போனால் தான் தங்களுடைய நிலை படிப்படியாக முன்னேறும் என்றும் எண்ணிக்கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் அவளது மகனும் வீட்டுக்காரரும் எழுந்து விடுவார்கள். அவர்களுக்கு சமைத்து மதிய உணவு கட்டித் தர வேண்டும்.
உள்ளே அவளது மகன் ஸ்ரீதர் உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று நேற்று நடந்த சம்பவம். அவன் அவ்வேளையில் இறங்கும் முன்பே சங்கரை பல முறை கேட்டான். இறுதியில் அது இவ்வாறு முடிந்து விட்டது. என்றாலும் இனி எந்த பிரச்சனையும் கிடையாது. மற்றொன்று மோனிகா. இரண்டு ஆண்டுகளாக அவள் பின்னால் சுற்றி சுற்றி இறுதியில் இன்று தனிமையில் சந்திக்க ஒப்புக் கொண்டாள். அவளுக்காக ஒரு கவிதையை யோசித்துக் கொண்டிருந்தான்.

      “உனக்காக வாழ்க்கையின் ஒவ்வொரு
            காதல் நிறுத்ததிலும்
      என் இதயக் கதவை..
யாரோ கதவைத் தட்டும் சத்தத்தில் கலைந்த சிந்தனையை மீண்டும் சேகரித்து
      என் இதயக் கதவை திறந்து வைத்துக் கொண்டு
‘டொக், டொக் மீண்டும் கதவைத் தட்டும் சத்தம். “அம்மா என்று கார்த்திக் கத்துவதற்குள், அமுதா கதவைத் திறந்தாள்.
வெளியே சரவணனும், ஒரு கான்ஸ்டேபிளும் நின்று கொண்டிருந்தனர். அமுதா கதவை திறந்து யாரென்று கேட்பதற்குள், “ஸ்ரீதர் இருக்கானா? என கான்ஸ்டேபிள் கேட்டார். “தூங்கிட்டிருக்கான். “நைட்டு கமுக்கமா ஒரு கொலை பண்ணிட்டு இப்போ தூங்கிட்டிருக்கானா? இன்ஸ்பெக்டரின் சத்தமான் பேச்சில் தூக்கம் கலைந்து சபேசனும் வந்தார்.
“என்ன பிரச்சனை சார்? என ஆரம்பித்தார் சபேசன். “கொலை கார பையனை பெத்துட்டு கேள்வி வேற என இன்ஸ்பெக்டர் கூறி முடிப்பதற்குள் ஸ்ரீதர்  வெளியே வந்தான்.
      “நீதான் ஸ்ரீதரா?
      “ஆமாம்
      “நேற்று Express Avenue ல பிரச்சனை பண்ணி அந்த மேனஜரை அடிச்சவன் நீதானா?
      “சார், அடிக்கலாம் இல்லை. தள்ளி விட்டேன். அந்த பிரச்சனை அப்பவே முடஞ்சிடுச்சி
      “நேத்து நைட்டு அந்த மேனஜரை யாரோ கொலை பண்ணிட்டாங்க. உன் மேல தான் நாங்க சந்நேகப் படறோம்.
      சபேசன் ஏதோ பேச வாயெடுத்தார். ஆனால் கான்ஸ்டேபிள் அதற்குள் ஸ்ரீதரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றார். சபேசனின் இதயம் படு வேகமாக துடிக்கத் துவங்கியது. அதை விட வேகமாக ஸ்ரீதரை ஏற்றிக் கொண்டு அந்த போலீஸ் ஜீப் சாலையில் பயணிக்க துவங்கியிருந்து.

                                          பாவங்கள் தொடரும்

                                                                                                                                சராசரி இந்தியன்

கிவி - சிறுகதை



ஞாயிறு மதியம் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்து சிறுநீர் கழிக்க சென்றேன். அப்போது தான் பாட்டி கொல்லைப் புறத்தில் இருந்து கூப்பிட்டாள்.
“என்ன பாட்டி?”
“இங்க வந்துப் பாரேன்”
“என்னது? இதோ வரேன்”
“தெரியலப்பா. இங்க ஏதோ ஒன்னு கத்தாழ செடிக்கு பின்னாடி அசையுது. என்னதுனு வந்து பாருப்பா”

நான் பாம்பு அல்லது பெருச்சாளி என்று ஊகித்துக்கொண்டு ஒரு கட்டையோடு போய் நின்றேன். கத்தாழை கன்றை தள்ளிவிட்டுப் பார்த்தால் அங்கே ஒரு பறவை இருந்தது. அதனை நான் கட்டையில் சற்று தள்ளி விட்டதும் மெதுவாய் நகர்ந்து அருகிலிருந்த பப்பாளி மரத்தின் வேருக்கு அடியில் ஒளிந்துக்கொண்டது.

அது என்ன பறவையென்று தெரியவில்லை. அதன் அலகு பெரியதாக இருந்தது. சாம்பல் நிறத்தில் இருந்தது. மூன்று வாரத்து கோழி எவ்வளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு பெரியதாக அது இருந்தது. அது பறக்க முயற்சிக்கவில்லை. எந்தவித சப்தமும் ஏற்படுத்தவில்லை. அந்த இடத்திலேயே அப்படியே உட்கார்ந்திருந்தது. பாட்டி அது அப்படியே இருக்கட்டும், என்னை அங்கிருந்து கிளம்பி போகச் சொன்னாள்.

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எதிரில் இருக்கும் பாத்திரக்கடைக்காரரிடம் போய் கேட்டு அவர் வளர்க்கும் பச்சைக்கிளியை வீட்டுக்குள் கொண்டுவந்தேன். பின் அதனை அந்த பறவை இருக்கும் இடத்திற்கு தூக்கிப்போனேன். கிளி கத்தினால் அதுவும் எதாவது கத்தும் என்கிற நம்பிக்கைத் தான். கிளிக்கூண்டை அதன் பக்கத்தில் வைத்தேன்.
கிளி நன்றாக கத்தியது. அந்த சத்தத்தைக் கேட்டு அது கிளியை தலை நிமிர்த்திப் பார்த்தது. பதிலுக்கு அது எந்தவொரு சத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நேரம் வீணானது தான் மிச்சம், கிளி தான் கத்தியேதே தவிர அது கத்தவேயில்லை. பின் நான் வெளியே கிளம்பிப் போய்விட்டேன்.

நீங்கள் சந்தையில் போய் காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிவர எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் தான் ஆகும் தமிழகத்தின் ராமேசுவரத்திற்கும் ஈழத்திற்கும். நெருங்கிய சொந்தம் உண்டு இரண்டிற்கும். ஈழத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தனர். விவசாயம், மீன்பிடித்தல், மற்றும் சில வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்கள் வாழ்வு வளமும் செழித்து இருந்தது அந்த கொடுஞ்செயல்கள் நடக்கும் வரையில்.

நான் நண்பர்களோடு ஊர்க் கதைகள் கதைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பினேன். அந்த பறவை வீட்டின் கூடத்தில் தொலைக்காட்சி பெட்டி வைத்திருக்கும் மேசைக்கு அடியில் உட்கார்ந்திருந்தது.
“அப்பா, இது எப்படி உள்ள வந்துச்சு?’
“நான் தான்ப்பா உள்ள விட்டேன்”
“உங்கள அது கடிக்கல?”
“இல்லப்பா. கடிக்கல. ஓரமா உக்காந்திருந்துச்சு. பாவமா இருந்துச்சு. போயி தூக்குனேன். ஒண்னும் பண்ணல. அதான் உள்ளவிட்டேன்.”
”அதுக்கு எதாச்சும் சாப்பிடக் குடுத்தீங்களா?”
“வெங்காயம், தக்காளி, தானியமெல்லாம் போட்டேன் தம்பி. ஆனா அது எதுயுமே சாப்பிடல.”
நான் அதனருகில் உட்கர்ந்து அதனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அது கீழே குணிந்து தரையை பார்த்துக்கொண்டிருந்தது. அதனருகில் கையை கொண்டுச்சென்று அதன் உடம்பில் தடவிக் கொடுத்தேன். மேல் எழுந்து என்னை பார்த்தது. அந்தப் பார்வை எனக்குப் பிடித்துவிட்டது. அதனையும் எனக்குப் பிடித்துவிட்டது.
“அப்பா, இத நம்மளே வளக்கலாம்ப்பா.”
“எப்படி தம்பி? அது என்ன சாப்பிடும்னு தெரியாது, அது என்ன பறவைனே தெரியாது. அப்பறம் எப்படி வளக்கறது?
“பரவாயில்ல. நாளைக்கு சாப்பிடும்.”
அதற்கு ‘கிவி’ என்று பெயர் வைத்தேன். நாளைக்கு சாப்பிடுமென்று நம்பினேன். இணையத்தில் பல பறவைகளின் புகைப்படத்தை தேடி, கிவியைப் போல் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். முயற்சி பலிக்கவில்லை. பின் நான் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டேன்.

ஈழத்தீவில் மகிழ்ச்சியுடன் தமிழ் மக்கள் வாழ்வதை பார்க்க பிடிக்காத  நரியரசு தம்முடைய அதிகார பலத்தைக் காட்டி அவர்களையும் அவர்கள் வாழ்வையும் அழிக்கும் செயல்களை ஆரம்பித்தது. முதலில் அமைதி நிலவிய அவர்கள் இடத்தில் ரானுவ வீரர்களை குவித்தது. பின் சோதனை என்கிறப் பெயரில் அவர்கள் இடத்தில் புகுந்து துன்பப்படுத்தியது. பின் அவர்களால் அந்த தீவின் அமைதி கெடுகிறது என்று பல பேரை கைது செய்து கொடுமைப்படுத்தியது.
பல பெண்களும் சிறு பிள்ளைகளும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். வயதானவர்களும் உடல் சுகமில்லாதவர்களும் கூட தாக்கப்பட்டனர். அவர்களது அனைத்து தொழில்களும் அழிக்கப்பட்டன. தமிழ் இனம் முழுதும் இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற அந்த நரியரசின் திட்டம் மெதுவாக வெளிவந்தது.

அடுத்த நாள் நான் காலை கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டேன். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பினேன். அப்போது கிவி வீட்டின் சமையலறையிலும் கூடத்திலும் மாறி மாறி நடந்துக்கொண்டிருந்தது. அப்போதும் அது பறக்க முயற்சிக்கவில்லை. கத்தவில்லை.
“அம்மா, கிவி ஏதாச்சும் சாப்பிட்டுச்சா?”
“இல்லடா, ஏதுமே சாப்பிடல. அப்பா அத கொல்லைல போய் விட்டாரு ஏதாச்சும் பூச்சி புழுவை புடிச்சு சாப்பிடும்னு, ஆனா இது எதையுமே சாப்பிடல.”
இது பறக்கவுமில்லை, கத்தவுமில்லை. இதை தேடி எந்த பறவையும் வரவில்லை. தனியாக இது எப்படி இங்கே வந்திருக்கும். ஒருவேளை ஏதாவது பருந்து கவ்விக்கொண்டு வரும்போது தவறி இங்கே விழுந்துவிட்டதா இல்லை கூட்டத்தோடு பறக்கும் போது ஏதேனும் தடை மீது மோதி விழுந்துவிட்டதா. ஆனால் வலிக்குக்கூட இது கத்தவில்லையே. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
“அப்பா, ஏன் கிவி கத்தமாட்டிக்கிது. இது என்ன வகை பறவ?”
“ஏதோ காட்டு பறவ மாறி இருக்கு. எனக்கும் தெரியலப்பா”
நான் குழம்பிப்போயிருந்தேன். இது ஊமை பறவையா? ஒருவேளை இதனையொத்த இனம் இதனை ஒதுக்கிவிட்டதா என்றெல்லாம் கற்பனை செய்துப் பார்த்தேன்.
“தம்பி, நீ காலைல எழுந்தோனே மாட்டு டாக்டர்க்கிட்ட இத தூக்கிட்டுப் போய் காட்டு. அவரு பாத்துட்டு இது என்ன, இத வளக்கலமா, இது என்ன சாப்பிடும், இல்ல இத போயி எங்காச்சும் விட்டுருலாமானு அவரு சொல்லுவாரு”
எனக்கும் அதுவே சரியென்றுப் பட்டது. சாப்பிடாமலே எந்த உயிரும் உயிர் வாழ முடியாது என்று எனக்கும் தெரியும். அதனால் நான் என் இரவு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கிவி சாப்பிடுகிறதோ இல்லையோ அதற்கு பக்கத்தில் தானியத்தை போட்டுவிட்டு படுக்க சென்றேன்.

தாங்களுக்கு இழைக்கின்ற தீங்கினை பொறுக்க முடியாத சில ஈழ தமிழ் மக்கள் ஆயுதமேந்தி அவர்களை எதிர்த்துப் போராடுவது என்று முடிவேடுத்தனர். அவர்கள் கூட்டமொன்றை கூட்டி அணித்திரண்டு போராடினர். அவர்கள் போராட்டம் வருடம் வருடமாக நீடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த நரியரசு பின் வாங்கியது. அதனால் அந்த கூட்டத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒற்றுமையாக இருந்து அந்த கூட்டம் அந்த நரியரசை மிரளச் செய்தது.
நான்கு புலிகளும் ஒன்றாக இருந்தால் அவைகளை அழிப்பது முடியாமல் போகும் என்பதை அறிந்த அந்த நரியரசு, ஒற்றுமையாக இருந்த அவர்களை ஆசைக் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தது. அப்படியும் அசராத அந்த கூட்டம் மென்மேலும் முன்னே பறந்தது.

அடுத்த நாள் காலை நான் கிவியை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அதனை தூக்கச் சென்றேன். கிவி இறந்துக் கிடந்தது. உடலில் எந்த அசைவுமின்றி வெறும் கட்டையாக கிழே கிடந்தது. நான் சோகத்தில் மூழ்கினேன்.
மனிதனை விட அறிவு குறைந்த பறவை, வாழும் இடம் மாறி என் வீட்டின் கொல்லை புறத்திற்கு வந்து, பின் என் வீட்டினுள் இருந்து ஏதும் உண்ணாமல் கடைசியில் உயிரை விட்டது. ஒரு பறவை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு கிவி இல்லை. அது கூட்டமாக வாழும் பறவையா, இல்லை தனித்து வாழும் பறவையா அது பறக்கவே பறக்காதா அதனைப் பற்றி ஏதுமே தெரியாது எனக்கு. ஆனால் வாழும் இடம் மாறியதால் தான் அது இறந்தது என்பது உறுதி.

கூட்டத்தின் நண்பனாய் இருந்து பின் அவர்களை வஞ்சித்து துரோகியாய் மாறிய ஒருத்தனோடும் இன்னும் அந்த ஈழ மக்கள் வாழ்வைப் பற்றி கவலைப்படாத பல பேரோடும் அந்த நரியரசு கூட்டணி வைத்து அந்த போராட்ட கூட்டத்தை ஏமாற்றி முதுகில் குத்தி அழித்தது. தாங்களுக்கு போராடிய அந்தவொரு கூட்டமும் போன பின்பு தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தனர் அந்த பரிதவிக்கப்பட்ட ஈழ தமிழ் மக்கள்.
வாழ்வும் வளமும் அளித்த தங்கள் சொந்த மண்ணை விட்டு கள்ள படகில் கடல் கடந்து வெவ்வேறு தேசத்திற்கு அகதியாய் சென்றனர் மிச்சமிருந்த தமிழ் மக்கள்.
கிவி உயிரைவிட்டு சென்றது, இவர்களும் உயிரைவிட்டு வெறும் உடற்க்கூட்டோடு மட்டும் பிழைத்து வருகின்றனர்.

     கோழி

புகைப்படங்கள்





                         விஜய் Che

சென்னை புத்தக திருவிழா - புத்தக மதிப்புரை







சென்னையில் புத்தக கண்காட்சி கடந்த 11ம் தேதியில் தொடங்கி வருகின்ற 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை பச்சையப்பன் கல்லூரி மைதானம் புத்தக கண்காட்சிக்காக ஒதுக்கித் தரப்படாத காரணத்தால், சென்னை நந்தனத்தில் இருக்கின்ற ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கண்காட்சி நடந்து வருகிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்து உள்ள இடத்திற்கு சென்றுவிட்டு, அங்கு என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்காமல், இந்த புத்தகங்களைத்தான் வாங்கப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டு செல்வது நமக்கு சற்று நலம் பயக்கும் என்பதால், முக்கியமான தவறவிடக்கூடாத நாவல்கள் என்று பிரபலமான எழுத்தாளர்களால் கூறப்படும் நாவல்களின் பட்டியலை நமக்கு உதவியாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் இங்கு கொடுத்திருக்கிறோம்.

முக்கியமான நாவல்கள்:

     ஜெயமோகன் எழுதிய காடு, ஏழாம் உலகம், கொற்றவை, எம்.ஜி சுரேஷ் எழுதிய அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், யுரேகா என்றொரு நகரமும், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, யாமம் போன்றவையும், வாமு கோமுவின் கள்ளியும், யுவன் சந்திரசேகரின் குள்ள சித்தன் சரித்திரம், கானல்நதி, பகடையாட்டம், ஜேடி..குரூஸின் ஆழி சூழ் உலகு நாவலும், பூமணியின் வெக்கை, பிறகு நாவலும், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, ஹெப்சிபா ஜேசுநாதனின் புத்தம் வீடு, சா.கந்தசாமியின் சாயாவனம், தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணத் தெரு, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கல்கியின் அலையோசை, மகுடபதி, சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை, அருணனின் பூருவம்சம், சுதேசமித்திரனின் காக்டெய்ல், ஆஸ்பத்திரி, தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள், ஜி.நாகராஜனின் நாளை மற்றொரு நாளே, குறத்தி முகடு, சோலை சுந்தர பெருமாளின் குருமார்கள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், நாஞ்சில் நாடனின் தலைகீழ்விகிதங்கள், சூடிய பூ சூடற்க, வண்ணநிலவனின் கடல்புறத்தில், ஆதவனின் காகித மலர்கள், அகிலனின் சித்திரப் பாவை, கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானுடம், நீலபத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சம்பத்தின் இடைவெளி.

சிறுகதை தொகுப்பு:

    ஆதவன், நகுலன், புதுமைபித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, இமையம், அம்பை, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், பிச்சமூர்த்தி, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்ரன், பிரபஞ்சன், ச.தமிழ்செல்வன், லா.ச.ராமாமிருதம், மெளனி, கு.அழகிரிசாமி. ஆகிய ஆசிரியர்களின் தொகுப்புக்களை நம்பி வாங்கிப் படிக்கலாம்..
     இதுபோன்ற முக்கியமான தொகுப்புகளை நாம் குறைந்தவிலையில் வாங்குவதற்கு சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் வசிக்கின்ற நம்மைப் போன்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த புத்தக கண்காட்சி நடக்கும் என்பதால் இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால் அடுத்த வாய்ப்புக்காக அடுத்த ஜனவரி வரை காத்திருக்க நேரிடும். தவறவிடாதீர்கள் நண்பர்களே……..!

    மீண்டும் ஒன்றை அழுத்தமாக நினைவுபடுத்த விரும்புகிறேன்.. மேற்கூரிய நாவல்களும் சிறுகதை தொகுப்பு சார்ந்த விவரங்களும் அந்தந்த எழுத்தாளர்களின் ரசனையுடன் ஒத்துப் போயிருக்கும்.. எனவே அவை மிகச்சிறந்த நாவல்கள் என அவர்களால் கூறப்படுகின்றன.. இவற்றில் சில நம் ரசனையோடு ஒத்துப் போகாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு என்பதை சற்றே கவனத்தில் கொண்டால் நல்லது.

புத்தக கண்காட்சி நேரம்
:
     வார நாட்கள் :        மதியம் 2.30லிருந்து இரவு 8.30 வரை
     வார இறுதிநாட்கள்:    மதியம் 11.00லிருந்து இரவு 9.30 வரை
                                                                     

                                                                         இன்பா.