Thursday, 25 June 2015

யாழிக்கு கவிதைகள்


ஆசை முகம் முழுதாய்
நினைவினில் இல்லை யாழி
ஏதோ ஒரு உருவத்தை
நீ தான் என நினைத்து
என் கனவுகளை
தினமும் வளர்த்துக் கொள்கிறேன்.

இடைவிடா மழையும்
குளிர்காற்றும் வீசும் இவ்விரவினில்
அறையெங்கும் விரவுகிறது,
ஒரு நிசப்தமான தனிமை

ஒரு மூலையில் எனைக்கிடத்தி
இமைகளுக்குள் திவளைகளை திணித்து
மனதினில் வலியை பரப்புகிறது
இந்த கொடூர தனிமை
எனக்கு வேறு வழியேயில்லை யாழி,
நான் உன்னை நினைத்தே ஆகவேண்டும்

நினைத்த மாத்திரத்தில்
கரைந்துவிடக் கூடியதா உன் நினைவுகள்,
வெடித்து அழ வேண்டும் போலிருக்கிறது.

நான் அழுதுவிடலாம்,
யாரும் என்னை தடுக்கப்போவதில்லை
ஆனால் உனக்காக நான் அழப்போவதில்லை
இமைகளை எரிக்கட்டும் உன் நினைவுகள்
அதற்காக நான் கலங்க போவதில்லை

ஆனால், ஒரேஒரு முறை
உன்னை காணவேண்டும்,
ஒரேஒரு முறை,
உந்தன் உச்சிமுகர வேண்டும்
போதும் யாழி,
இந்த தனிமையினை போக சொல்,
முடியவில்லை அழுதுவிடுவேன் போலிருக்கிறது
சீக்கிரம் விடிய சொல்
உனக்காக அழுதிட எனக்கு பிடிக்கவில்லை
சீக்கிரம் விடிய சொல்