Thursday 10 November 2016

வாழ்த்துக்கள் அபிலேஷ்

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்

அபிலேஷ் நம்முடைய விப்ரோ தோழர்
அவரின் அருமையான கலைப் படைப்புகளை இனிவரும் நாட்களில் நாம் அடைமழையில் காணலாம்.

அவரின் படைப்புகள் மிக அற்புதமாக நான் கருதுகிறேன்
நம்முடைய பாராட்டுக்கள் அவரை மேலும் வளர வழி வகுக்கும்

வாழ்த்துக்கள் அபிலேஷ்

வண்ணத் தூரிகை - 2


வண்ணத் தூரிகை - 1


Saturday 10 September 2016

உன் அதீத பார்வை


இன்றாவது நீ
கடைவீதி வரும்பொழுது
உன்னோடு நான்
பேசியாக வேண்டும்

மழைக்கான
காற்று அங்கும் இங்குமாய்
வீசிக் கொண்டிருக்கிறது   

மழைக்கு முன்
உன்னைக் காண வேண்டும்
பேச வேண்டும்
இதுவே
ஓடிக் கொண்டிருந்தது
மனதில்

 மெது மெதுவாய்
என்னை முந்திக் கொண்டிருக்கிறது
மழை

அகன்ற வீதியில்
         மழையும் காற்றும்        
மும்மரமாய் பேச
இனி எங்கனம் தேட

நிச்சயம்
நீ என்னைக் கடந்து
சென்றிருக்க மாட்டாய்

எதிர் திசையில்
தூரமாய்
வழியெங்கும்
வளையல் கடைகள்.

நீ இருப்பதற்கான
சாத்தியக்கூறுகள்
தென்பட
காத்திருக்கிறேன்

அதோ மழையில்
நீளும் கைகள்
உனதோ

கைகளை நனைத்துக்
கொண்டிருப்பது
நீயே


நேரெதிர் திசை
உன் பார்வைக்கு
எட்டிய தொலைவு
மேலும் வலுக்கிறது மழை

அது நீயே தான்.

மழை ஒருபுறம்
பயம் ஒருபுறம்

உன்னை
ஓரிரு நிமிடங்கள்
மட்டுமே பார்த்து
பழகிய எனக்கு
இன்று
மழை தருகிறது நேரம்…

எப்போதுமல்லாமல்
இன்று தான்
உன்னை அத்தனை
நேரம் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்

பேரழகி நீ

உனக்கும் எனக்குமான
இடைவெளியில்
என்னை உனக்கு
காட்டிக்கொள்ள
ஏதாவது செய்தாக
வேண்டும்

உன் தூர விழி கொண்டு
என்னை நீ
பார்த்தாக வேண்டும் 

விழும் மழையையும்
எழும் பயத்தையும்,
விலக்கி
உன்னிடம் நான்
பேசியாக வேண்டும்

மேகம் விலகிய
மறுநொடி விண்ணில்
சிமிட்டும் விண்மீனைப் போல்
நீ பார்ப்பது என்னையோ

ஏது செய்யப்போகிறேன்

உன் பார்வையின்
அர்த்தம்
எதுவாகினும்
நீ பார்த்தாய்…

மழை விட்டு
குடையுடன் நீ வீடு சேர
சிறிது நேரத்தில்
மீண்டும் பிடிக்கிறது
மழை

இந்த இரவை
நனைத்துக் கொண்டிருக்கும்
தூறல் போல்
என் மனதை மென்மையாய்
நனைத்துக் கொண்டிருக்கிறது
உன்னிடமிருந்து
வந்த அந்த

அதீத பார்வை

Thursday 30 June 2016

அப்பா - சிறுகதை


காலையிலேயே அப்பாவிடமிருந்து ஒரு அழைப்பும், யாழியிடமிருந்து மற்றொரு அழைப்பும் வந்துவிட்டது. விடிந்த பின் போர்வைக்குள் நீளும் நிமிடங்களை உடைத்திட விருப்பமில்லாமல், அழைப்புகளை ஏற்காமல் இன்னும் படுக்கையிலேயே இருக்கிறேன். வழக்கமாக மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் அப்பாவிடமிருந்து அழைப்பு வரும், அதிகபட்சமாக நான்கு அல்லது ஐந்து நிமிடங்களே எங்கள் உரையாடல் இருக்கும். மனம் விட்டு இயல்பாக பேசியெல்லாம் நெடுநாட்கள் ஆகிவிட்டது. எப்போதிருந்து, எதற்காக நாங்கள் பேசி கொள்வதில்லை என்பதெல்லாம் நினைவினில் இல்லை, ஆனால் எப்போது அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தாலும் ஒரு இறுக்கத்துடனே அந்த அழைப்பை ஏற்பேன்.
மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது தான் மீண்டும் யாழியிடம் பேசி கொண்டிருக்கிறேன். அப்பாவிடம் நான் காட்டும் அதே இறுக்கத்தை யாழி என்னிடம் காட்டி கொண்டிருக்கிறாள்.

அப்பாவும் பாவம், நான் அவரிடம் பேசுவதேயில்லை என நிலவனிடம் புலம்பி இருக்கிறார். அம்மா இறந்தபிறகு நிலவன் அப்பாவின் ஒரே ஆறுதல் மட்டுமில்லாமல் அவரின் தனிமையின் தீர்வும் கூட. அவனை பார்ப்பதற்காக மட்டுமே வீட்டிற்கு வந்து போகிறார். அம்மாவின் இறப்பிற்கும், நிலவனின் வருகைக்கும் இடையில் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. அப்பாவின் பத்து வருட தனிமை போராட்டத்திற்கு நிலவன் ஒரு நிரந்தர தீர்வு இல்லையென்றாலும், பேரன் என்ற முறையில், அவன் அவரின் தனிமையை சிறிதளவேனும் தீர்த்து வைக்கிறான். அப்பாவின் அந்த புலம்பல் தினமும் என்றான பிறகு, ஒருநாள் பொறுக்க முடியாமல் அண்ணி அழைத்து “உங்க அப்பாகிட்ட பேசுங்களேன், அவன ராத்திரியெல்லாம் தூங்கவே விட மாட்டேங்குறார்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்கள்

அண்ணி மட்டுமல்ல, சித்தப்பா சித்தி அக்கா என எல்லாரும் சொல்லி பார்த்துவிட்டார்கள், ஆனால் எனக்கு தான் பேச வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அப்பாவிடம் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை எங்களிடமாவது பேசு, ஏன் இப்படி இருக்க என்றும் திட்டி பார்த்துவிட்டார்கள். என்னிடமிருந்து எந்த மாற்றமும் இல்லை. அப்படியே யாருக்காவது அழைத்து பேசினாலும், நலம் விசாரிப்புகளுக்கு பிறகு அப்பாவை பற்றி குறை சொல்லும் படலம் ஆரம்பித்துவிடும். அதை கேட்க பிடிக்காமலேயே அவர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

அப்பாவின் குடிபழக்கம் தான், அவர்கள் சொல்லும் ஒரே குறை என்றாலும், குடித்துவிட்டால் அவர் எப்படி எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எல்லாரையும் எடுத்தெரிந்து பேசி, சில சகிக்க முடியாத வார்த்தைகளை உதிர்ப்பது என்பது அவருக்கு வாடிக்கையானது. அதுவும் பெரிய கூட்டு குடும்பத்தில் சித்தி சித்தப்பா என எல்லாரும் இருக்கும் போது, வார்த்தைகளின் தடிப்பு மிக முக்கியமானது. அது எல்லை மீறும் போது மனஸ்தாபம் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது. இதை அவர்கள் என்னிடம் முறையிடும் போது, நான் இதற்கு என்ன தீர்வு செய்துவிட முடியும் என நினைத்து என்னிடம் கூறுகிறார்கள் என்ற கோபமே என் முன்னால் வந்து நிற்கும்.  சரி அப்படியே, இதையெல்லாம் சொல்லி “இனிமே குடிக்காதீங்கப்பா” என்றால், என் மகனே என்னை அப்படி சொல்லிவிட்டான் என்று அதற்கும் சேர்த்தே குடித்துவிட்டு வந்து நிற்பார்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதை போல, அவரை யார் கண்டிப்பது என்பதே தீர்க்கமுடியாத வினாவாகிய பிறகு, ஒருநாள் சித்தப்பா, “நீ கேட்டுடு தம்பி” என்று என்னை முன்னால் நிறுத்தினார். நானும் சிரித்து கொண்டே “நான் தப்பு பண்ணா, நீங்க திறுத்தலாம், கண்டிக்கலாம், ஆனா நீங்க தப்பு பண்றீங்கனு நான் எப்படி கேக்க முடியும் சித்தப்பா, யோசிச்சு பாருங்க தப்பாகிடாது” என சொன்னதும் “அப்புறம் யார் தான் அவர கேக்குறது” என திரும்பி அவர் கோபமாக கேட்டபோது, அவராக தான் திருந்த வேண்டும் சித்தப்பா, வேறு வழியில்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

“பெரியவனை கண்டிச்சு வளர்த்தேன், அவன் கெட்டு போயிட்டான், சின்ன அண்ணன், அவன் அவங்க அம்மா செல்லம், அதனால கண்டுக்காம வளர்த்தேன் அவனும் கெட்டு போயிட்டான். உன்ன எப்படி வளர்க்கிறதுனே தெரியாம தான், உன் இஷ்டத்துக்கு வளர்த்தேன், ஆனா நீயும் கெட்டு போயிடுவியோனு பயமா இருக்கு. பதினாறு வயசாகியும் இன்னும் பொறுப்பில்லாம இருக்க, அம்மா நெஞ்சடைப்பு வந்து ஆஸ்பத்திரியில இருக்கும் போது, நீ இன்னும் ஊருக்குள்ள கிரிக்கெட் விளையாடிக்கிட்டிருக்க. இதையெல்லாம் சொல்லியா தெரியனும்” என்று அப்பா கண்டித்தது ஞாபகம் வந்தது. திசைமாறி காற்றில் அங்கும் இங்கும் சபலமாடிய என்னை அப்பா இறுக்கிப்பிடித்த தருணம் அது.

அம்மா இறந்த பிறகு, வாழ்க்கையில் எந்த பிடிப்புமில்லாமல் மேற்படிப்பிற்காக சென்னைக்கு வந்தாலும், என் வாழ்வின் அழகழகான மாற்றங்களை எனக்கு தெரியாமல் என்னுள் செய்துக் கொண்டிருந்தது சென்னை. அந்த அழகான மாற்றங்களில் முக்கியமானவள் யாழி. என்னை அறியாமல் என்னுள் நுழைந்து, என் கனவுகளை தின்று, என்னை முழுதாய் ஆக்கிரமித்து, என்னை நிறைவானவனாய் மாற்றிக் கொண்டிருந்தாள். அவள் சிதறிய முதல் புன்னகையை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் நான் தடுமாறியதை கண்டு அவள் ரசித்ததை என் மனம் என்றும் மறக்காது. அவள் என்னை ரசிக்கும் ஒவ்வொரு நொடியையும் நான் ரசிக்க ஆரம்பித்திருந்தேன். என் பேச்சு, நடை, உடை, பாவனை, ஆங்கிலம் என அனைத்திலும் அவள் ஆக்கிரமிப்பை நான் உணர்ந்தேன். இப்போதிருக்கும் நான், யாழியின் ஆண் இன பிரதிபலிப்பு.

நொடிகளில் ஆரம்பித்த உரையாடல் மெல்ல மெல்ல சில மணிநேரங்கள் என கடக்க ஆரம்பித்திருந்த போது. நான் எதிர்பாராத ஒரு நொடியில், “எங்க வீட்டுக்கு இப்போ வரீயா? அம்மா உன்ன பாக்கனும்னு சொல்றாங்க” என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல், “எதுவும் யோசிக்காத, நீ வா” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். 
யாழி என்னை பற்றியும், எங்களுக்குள் இருந்த, நட்பை கடந்த மெல்லிய உறவை பற்றியும் அவள் அம்மாவிடம் சொல்லி இருந்தாள். அன்புக்காக நான் ஏங்கிக்கிடந்த நாட்கள் மெல்ல மெல்ல மறைந்து, நான் அவர்கள் வீட்டில் ஒருவனாகும் நாட்களாக மாறி கொண்டிருந்தது. ஒரு மழை பொழிந்த நாளில் நானும் யாழியும் சாளர சாரலில் நனைந்து கொண்டிருந்த போது, அவள் அம்மா “பிள்ளைங்களுக்கு திருஷ்டி சுத்தி போடனும், ரெண்டு பேரும் சேர்ந்து இவ்வளவு சந்தோசமா இருக்கிறத பாத்து, என் கண்ணு பட்டுடுச்சு” என்று நெட்டி முறித்த போதுதான், நாங்கள் காதல் என்ற உறவில் 
ஊர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வந்தது.

அவர்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை, எனக்கு தான் நான் அப்பாவின் சம்மதத்தை பெறவேண்டிய நிர்பந்தம் இருந்தது. அப்பாவின் சம்மதத்தை விட வீட்டில் இருக்கும் அனைவரின் சம்மதத்தையும் நான் பெற வேண்டும். இரண்டு வீட்டு சம்மதமில்லாமல் நாங்கள் திருமணம் செய்து கொள்வதில், எங்கள் இருவருக்குமே விருப்பமில்லை. அப்பாவின் சம்மதம் பெறும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். அப்பாவிடம் சம்மதம் வாங்கிவிட்டால், அப்பாவை வைத்து எல்லோரயும் சம்மதிக்க வைத்துவிடலாம். அது மட்டுமில்லாமல் அப்பா சரியென்று சொல்லிவிட்டால் வேறு யார் என்ன சொல்ல போகிறார்கள். ஆனால் அந்த தருணம், நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக மாறி கொண்டேயிருந்தது. எனக்கு அப்பாவிடம் இதைபற்றி பேசும் தைரியம் மட்டும் வரவேயில்லை.

அப்பாவிடம் பேசாமல் நான் நாட்களை கடத்தி கொண்டிருப்பது, எனக்கும் யாழிக்கும் இடையில் சாதரண பேச்சாக தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளில், பெரிய பிரச்சனையாக தொடங்கியது. ஒரு கட்டத்தில், “நீ உன்ன பத்தி யோசிடா, எப்போ பாத்தாலும் அப்பா… அப்பா…, இல்லனா உங்க வீடு. அப்பா என்ன சொல்லுவாரோ, வீட்டுல இருக்கவங்க என்ன சொல்லுவாங்களோனுலாம் யோசிச்சிட்டு இருந்தா நமக்கு கல்யாணமே ஆகாது, என்ன பத்தி அப்பாட்ட சொல்லு, எங்க அம்மாவுக்கு உன்ன பிடிச்ச மாதிரி அப்பாவுக்கும் என்ன பிடிக்கும், வீடு, ஊரு பத்திலாம் நீ யோசிக்க தேவையில்ல, எதுவாயிருந்தாலும் நீ ஒரு முடிவு இப்பவே எடுத்தாகனும்” என பிடிவாதமாக யாழி நின்ற போது, “நான் கொச்சிக்கு போறேன், எனக்கு ப்ராஜெக்ட் அங்க கிடைச்சிருக்கு, எங்க வீட்டுல இருக்கவங்க தான் என்ன கஷ்டப்பட்டு படிக்க வைச்சாங்க, அவங்கள ஒரு லெவல்ல செட் பண்ற வரைக்கும் என்னால கல்யாணத்த பத்தி யோசிக்க முடியாது யாழி” என சொல்லிவிட்டு திரும்பும் போது யாழி அங்கிருந்து அழுது கொண்டே கிளம்ப ஆரம்பித்திருந்தாள்.

எனக்கு அப்போது தெரியவில்லை, நான் எவ்வளவு ஆழமாக அவளை காயப்படுத்தியிருப்பேன் என்று. அதற்கு பிறகான நாட்களில் அதை அகிம்சை முறையில் எனக்கு உணர்த்தினாள். எப்போது அழைக்க முயன்றாலும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தாள், எவ்வளவோ முயற்சித்தும் என்னை சந்திக்க அவள் விரும்பவில்லை. அவள் அம்மாவிடம் நடந்தது எல்லாத்தையும் சொல்லி, “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்மா, மூணு வருசம் இருந்தா கூட போதும், நான் எல்லாத்தையும் சரி பண்ணிவிடுவேன்” என்று சொன்னேன். அவர்களும் அதற்கு சரியென்று சொல்லிவிட்டு, “கொஞ்ச நாள்ல எல்லாம் சரி ஆயிடும், நான் அவகிட்ட பேசி பாக்கிறேன், இப்போதைக்கு அவ அப்படியே இருக்கட்டும் தொந்தரவு எதுவும் பண்ண வேணாம்” என்று சொல்ல, எனக்கும் அது சரியென பட்டது, எங்கள் இருவருக்குள்ளும் அந்த இடைவெளியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த பிரிவும், அவள் இல்லா தனிமையும் என்னை மிகவும் பாதிக்க பாதிக்க அவள் மீதான என் காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வடியவும் தொடங்கியிருந்தது. அவளுக்கும் அப்படி தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

கண்டிப்பு என்று வரும் போது அப்பா உபயோகிக்கும் வார்த்தைகள் தான் பிரச்சனையே, என்ன நடந்தது, எதற்காக நாம் அப்படி செய்தோம் என்றெல்லாம் யோசிக்காமலேயே, எடுத்த எடுப்பிலேயே தடித்த வார்த்தைகள் வந்து விழும். அதற்கு பிறகு நாம் என்ன பேசினாலும் அது பிரச்சனையில் தான் வந்து நிற்கும். அப்பாவின் இந்த சுபாவம் அறிந்த நான் அவர் எப்போது கண்டிக்க ஆரம்பித்தாலும் அங்கிருந்து நகர்ந்துவிடுவேன், ஆனால் அன்று அப்படி செய்யவில்லை. என் தரப்பு நியாயத்தை எடுத்த வைக்க முயற்சிக்க, அதை அவர் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. ஒரு கட்டத்தில் “உங்களுக்காக என் சந்தோசம் எல்லாத்தையும் விட்டுட்டு, ஊர விட்டு போயி, மாடு மாதிரி உழைச்சுட்டிருக்கேன், நீங்க எதுவும் புரியாம கத்திக்கிட்டிருக்கீங்க” என கோபமாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டேன்.

“எந்த நாயும் எனக்காக உழைக்க வேணாம், அவங்க சோத்துல தான் நான் சாப்படணும்னு எனக்கு அவசியமும் இல்ல. மகன் தப்பு பண்ணா கண்டிக்கிறது தான் அப்பனோட கடமை. என் மகன கண்டிக்கிற உரிமை எனக்கு இல்லனா அவன இப்பவே வெளில போக சொல்லு” என சித்தியை பார்த்து கோபமாக சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.
நான் அவரின் மகன் தான், ஆனால் நான் அவரின் நாற்றங்காலிலிருந்து பிடுங்கப்பட்டு, எப்போதோ வேறு நிலத்தில் நடப்பட்டு. சொந்தமாக வேர் விட தொடங்கியிருந்தேன். அப்பாவின்  இந்த இறுக்கமும், கண்டிப்பும், அப்பாவிடமிருந்த கொஞ்சநஞ்ச நெருக்கத்தையும் குறைக்க ஆரம்பித்துவிட்டது.

என் கோபம், வெறுப்பு எல்லாமே அவள் குரலை கேட்கும் வரைக்கும் தான். மூன்று வருட கோபங்களை மறந்து, “யோகி…….” என்று அவள் அழைத்ததுமே நான் கரைந்து போயிருந்தேன். “அம்மா உன்ன வர சொல்றாங்க, இந்த வாரம் சனிகிழமை வரீயா?” என அவள் கேட்டதும், எந்த மறுப்பும் சொல்லாமல் வருவதாக சொல்லிவிட்டேன்.
வீட்டில் நான் நுழைந்ததிலிருந்தே ஒருவித அமைதியுடனே அமர்ந்திருந்தேன். எந்த நேரமும் அழுதுவிடும் மனநிலையில் யாழி இருந்தாள். என்ன பேசுவது என தெரியாமல் நான் உட்காந்திருக்க, கையில் தேநீருடன் வந்த அவளின் அம்மா தான் ஆரம்பித்தார்கள், “அப்பாட்ட பேசிட்டியாப்பா, யாழிய பத்தி, எதுவும் சொன்னாரா?”
“இன்னும் இல்லம்மா, இடையில அப்பாவுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை வந்து ரெண்டு பேரும் பேசிக்கிறதில்ல, இப்போ சொல்றது அவ்வளவு நல்லா இருக்கும்னு தோணலைம்மா” என்று சொன்னேன்.

“மூணு வருசம் ஆகும்னு சொன்ன, மூணு வருசமும் ஆயிடுச்சு, ஆனா இன்னும் உங்க அப்பாட்ட சொல்லலைனா எப்படிப்பா?, இவளும் அப்பா இல்லாத பொண்ணு இல்லையா, இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் இப்படியே வைச்சிருக்க முடியும், எங்களுக்கும் ஒரு ஆம்பள துணை வேணும்ல, நீ அப்பாவுக்கு ஃபோன் பண்ணு, நான் பேசுறேன்” என்று சொல்லி அப்பாவிடம் ஒரு அரைமணி நேரம் பேசிவிட்டு வந்தார்கள். அவர்களின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் முன்பை விட கொஞ்சம் அதிகமாய் குழப்பம் தெரிந்தது. நான் புரிந்து கொண்டேன், ஆனால் யாழி தான் ஆர்வத்தை அடக்க முடியாமல், “என்னம்மா சொன்னாங்க?” எனக் கேட்டாள். “தம்பிய நேர்ல வந்து பேச சொல்றாருமா” என சொல்லிவிட்டு மொபைலை என்னிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்துவிட்டார்கள்.

இன்னும் படுக்கையிலேயே இருந்தேன். மீண்டும் யாழியிடமிருந்து அழைப்பு வந்தது. “எப்போ ஊருக்கு போறீங்க?”
“நாளைக்கு”
“ம்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்
அப்படியே இருந்தபடி அப்பாவையும் அழைத்தேன். அவரும் அதையே தான் கேட்டார்.
“எப்போ வர?”
“நாளைக்கு”
“ம்” என்று சொல்லிவிட்டு அவரும் வைத்துவிட்டார்.
இரண்டு பேர் மேலேயும் கோபம் என் தலைக்கேறியது, ஆனால் என்னால் என்ன செய்துவிட முடியும்.

ஊருக்கு வந்து இரண்டு நாள் ஆகியும் அப்பா என்னிடம் அதைபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அப்படி ஒரு விசயம் நடந்ததாக கூட யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. அவரின் அந்த அமைதி என்னை உறுத்தி கொண்டேயிருந்து. அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல்,

“அவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என்று கேட்டேன்
“நான் நமக்கு தனியா ஒரு வீடு கட்டணும்ப்பா, உன் சின்ன அண்ணனுக்கு கல்யாணம் பண்ணா அந்த பழைய வீட்டுல வைக்க முடியாது, வீடு முடிச்சதுக்கு அப்புறம் உன் சின்ன அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும், அதுக்கு அப்புறம் தான் நான் உன்ன பத்தி யோசிக்க முடியும். அது மட்டுமில்லாம வேற சாதில பொண்ணு எடுக்கிறதுக்கும் எனக்கு விருப்பம் இல்ல. சாதி ஒரு பிரச்சனை இல்லனாலும், என் மனசு ஒத்துக்கலப்பா. இது வரைக்கும் நீ எந்த முடிவும் தப்பா எடுத்தது இல்ல, அந்த பொண்ணும் கண்டிப்பா நல்ல பொண்ணாதான் இருப்பா, உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா என்னால இப்போதைக்கு ஏத்துக்க முடியாது. எதுவா இருந்தாலும் உங்க அண்ணன் கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம்.” என்று சொன்னார்.

“இல்லப்பா, அவளுக்கு அப்பா இல்ல, அதனால அவளுக்கு சீக்கிரம் முடிக்கணும்னு அவங்க அம்மா அவசரபடுறாங்க” என்று சொன்னேன்
“அப்படினா, நீ கல்யாணம் பண்ணிக்கோ, ஆனா வீட்டு பக்கம் வந்துடாத, அங்கேயே இருந்துக்கோ. உன் மேல இருக்க கோபத்துல நான் இத சொல்லல, அண்ணனுக்கு முடிக்காம உனக்கு முடிக்கிறது எனக்கு சரியா படல. நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். யோசிச்சு உனக்கு எது நல்லதுனு படுதோ அத செஞ்சுக்கோ. ஆனா என் வீட்டுக்கு வரணும்னா நீ என் புள்ளையா தான் வரணும்” என சொல்லிட்டு போயிட்டார்.
இதை யாழியிடம் சொன்னதும், “நான் அப்ப சொன்னது தான் இப்பவும் சொல்றேன் யோகி, அப்பாவோட சம்மதம் இருந்தா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லனா நீ இல்லைனாலும் பரவாயில்ல, என்னால இப்படியே வாழ முடியும், நீ என் வாழ்க்கையில இருந்தல்ல இதுவே எனக்கு போதும்” என்று சொல்லி சென்றுவிட்டாள்.