Wednesday 23 August 2017

தலைவன் இருக்கிறான்




Image result for politics
தலைவன் இருக்கிறான் - அவன்
காந்தியம் பேசுவான்
கம்யூனிசம் பேசுவான்
பொத்தாம் பொதுவாய் பொதுவுடமை
எனக் கூவாமல்
திராவிடம் வேண்டும் என்பான்
தேசியமும் நம் தேவை என்பான்

தேசியத்திலும் திராவிடம் உண்டு என்பான்
நட்சத்திர சிறைச்சாலையும்
நாட்டில் உண்டு என்பான்
ஊழல் நிறைந்த அரசு என்பான் - முட்டை
ஊழலை அரங்கிலும் ஏற்றுவான்

மாட்டு அரசியல் பேசுவான்
மாற்று அரசியலும் பேசுவான்
மருத்துவ முத்தம் பேசுவான்
மருத்துவமில்லா டெங்குவையும் பேசுவான்
எல்லாம் பேசுகிறீரே
மாணவர்களின் துயரம் தெரியாதோ என்றால்
படிப்பறிவு இல்லாததால்
'நீட்'டறிவு இல்லை என்பான்

வேட்டிக் கட்டிய தமிழன் தான்
ஆள வேண்டும் என்பான் - மறுநாளே
நான் மலையாளியும் ஆவேன் என்பான்
நீங்கள் குழம்பாதீர்கள்
பகுத்தறிவும் பேசுவான்
ஆகையால் பகுத்து அறியுங்கள்
அவனின் கீச்சுகளை 
வகுத்தும் அறியுங்கள்

இதையெல்லாம் பார்த்து
அரசியலுக்கு அவனை அழைக்காதீர்கள்
அவனுக்கு சுவைக்க தெரியும்
சமைக்க தெரியாது

புரியவில்லை எனில் 
புரிந்தவர்களிடம் கேளுங்கள்
புரிந்தது எனில்
புரியாதவர்களுக்கு புகட்டுங்கள்

Monday 19 June 2017

யாழிக்கு கவிதைகள்


Image result for children kiss

அவ்வளவு காமத்தை சுமந்து

அடித்துப் பிடித்து

கதழ்ந்து ஊர்ந்து

உன் அதரம் தொட முயல்கையில்;

"ச்சீ.. போடா.. 

இவ்வளவு நேரமா

நீ இங்க வர" 

என்று முகத்தைத் திருப்பிக் கொண்ட

அந்த கணத்தில்,

என் அத்துனை காமமும்

மடையிட்ட வெள்ளம் போல்

செய்வதறியாது திகைத்து

மெல்ல புறவழியில் கசிந்து

துளியும் இல்லாமல் வடிந்துவிட்டது.

இன்றும் கொடுக்கப்படவில்லை

எனக்கான அந்த கடைசி முத்தம்.

Monday 8 May 2017

மூன்று டாலர் பீர்

"நீ இப்போ மாதிரியே எப்போவும் குடிக்காம இருக்கனும், புரியுதா?" அவன் கையை முத்தமிட்டுக் கொண்டே இன்னும் ஒருமுறை அவள் அவனிடம் கூறினாள்.
------------------------------------------------------------------------------------------------------
"ஏன்டா இப்படி பொண்ணுங்க மாதிரி இருக்க?" என்றான் ஒருவன்.

"இப்போல்லாம் பொண்ணுங்க  கூட குடிக்கறாங்க மச்சி" என்றான் இன்னொருவன்.

காரை நிறுத்த சொல்லி அமைதியாக இறங்கி நடக்க துவங்கினான்.
------------------------------------------------------------------------------------------------------
"இப்போ நீ சண்டைய நிறுத்தலான நான் குடிக்க ஆரம்பிச்சிடுவேன்"

"நீ குடிக்கறதுக்கு என்ன காரணம் காட்டாத?" மறுமுனை துண்டிக்கப் பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
3 டாலர் பீர் கேஸ் ஒன்றை வாங்கி வந்து பிரிட்ஜ்ல் அடுக்கி  வைத்துவிட்டு 5 நிமிடம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் ஒன்றை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அவளின் கடைசி whatsapp சாட்டைக் பார்த்தான்.

"எனக்கு இனிமே போன் பண்ணாத" என ஆங்கிலத்தில் அனுப்ப பட்டிருந்தது.

கோபம் தலைக்கேற 2 பீர் பாட்டில்கள் உடைந்தன. மூன்றாவதை எடுத்துக் கொண்டு மெத்தை அருகில் வைத்துக் கொண்டு படுத்துக்க கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தான்.
------------------------------------------------------------------------------------------------------
"அவன் சைக்கோ மாதிரி இருக்கான். அவனை போய் ?" அவளின் தோழி சற்று அழுத்தமாகவே கூறினாள் .

"உளராத அவன்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்ல. அவன் யார்கிட்டயும் சரியா பேசலான சைக்கோவா?".

அவன் கேட்டுக் கொண்டே வகுப்பறையில் நுழையாமல் திரும்பி சென்றான்.
------------------------------------------------------------------------------------------------------
"எல்லாரும் அப்பவே சொன்னங்க நீ ஒரு சைக்கோனு. அவங்க பேச்ச கேக்காததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் மேலும் இரண்டு பாட்டில்கள் உடைந்தன. அடுத்த பீர் பாட்டில் மெத்தைக்கு அருகில் வந்தது.
------------------------------------------------------------------------------------------------------
"படிக்க அனுப்சா எவன் கூடயோ ஊர் சுத்திட்டு வந்திருக்க" அவன் மறுமுனையில் அமைதியாக காத்திருக்க, அவள் அவளின் பெற்றோரிடம் இவர்களின் காதலைப் பற்றி சொல்ல வந்த பல வசைகளில் முதலாவதும் சற்று கேட்கும் படியாகயும் இருந்த வாக்கியம் இது. அவர்கள் கூறிய மற்றவற்றை கேட்கவே முடியாதவை. அதுவும் பெற்ற பெண்ணிடமே .
------------------------------------------------------------------------------------------------------
கடைசி பாட்டிலும் உடைக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
"நான் பொட்டையாவே இருந்திக்கிறேன்." என நண்பனுக்கு பதில் அளிக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
"என்ன மன்னிச்சிரு" என watsappல் அனுப்பப்பட்ட வாய் வழி செய்தி (வாய்ஸ் மெஸ்ஸஜ்) அவளால் கேட்கப் பட்டதற்கான இரண்டு நீல டிக் விழுந்த சில நேரத்தில், typing... என அவன் watsapp சிரித்தது.

------------------------------------------------------------------------------------------------------