Tuesday 10 November 2015

இது காதல் தோல்வியா??






















-




எது உன்னிடம் என்னை ஈர்த்தது??
ஏன் நீ மட்டுமே
எப்பொழுதும் என் உலகமாக தெரிகிறாய்???  
கேள்விகள் பல என்னுள்
பொங்கி கொண்டு இருந்த நேரம்,
"என்ன டி, கனவா?" என்றாள்  தோழி.
பேச முயன்று தோற்றேன்
சிரித்து விட்டு நகர்ந்தாள்.
உயிர் தோழி அல்லவா, என்னை அறியாமலா இருப்பாள்.!!!

உன் சிறு புன்னகையில்
அப்படி என்னதான் உள்ளதடா...????
அதை ஒருநாள் காணாது
போனாலும் தவித்து தான் போகிறேன்.
நாளை கண்டிப்பாக சீக்கிரம் வரணும்னு
தீர்க்கமாக முடிவெடுத்து,
ஆசிரியை கூறுவதை குறிப்பெடுக்க முனைந்தேன்.   

மாலை தனியாக படிக்க அமர்ந்த என்னை
நீயே ஆட்கொண்டாய்..
அந்தி வானம் சிவந்ததை விட அதிகம் சிவந்தேன்...!!!
ஒருவேளை வெறும் ஈர்ப்போ என்று குழம்பினேன்…
எண்ண ஓட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்தது
அம்மாவின் அழைப்பு.

"சாப்பிட்டு தான் போயேன்டி,
உயிரா போகபோகுது" என்றாள் அம்மா.
உயிராகிய அவனை காணாமல் போகுமே..,  
சொல்ல நா எழாமல் இல்லை.

உன் கள்ளமற்ற புன்னகயொன்றே
போதுமாக இருக்கிறதே,
நான் ஜீவணிக்க/சுவாசிக்க...!!!

உலகை வென்றதாக கர்வமடைந்தேன்,
உன் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தற்கே..
தினம் உன்னை தரிசிக்க வாய்ப்பு உள்ளதே..!!

பார்த்து போய் வா என்றாள் அக்கறையுடன் அன்னை.
எதுனாலும் சொல்லுமா என்று தைரியம் சொன்னார் தந்தை.
முதல்நாள் கல்லூரி என்ற பயம் இருந்தாலும்,
உன்னை காண்பேனென்ற உற்சாகமே மேலோங்கியது.

சந்தோச வெள்ளத்தில் மிதந்த
என்னை தடுத்தனர் மூத்த மாணவர்கள்,
ஒரு மூலையில் இருந்த பயம்
மெதுவாக தலை நீட்டியது.

பரிச்சயமான குரலொன்று என் செவி தொட்டது,
"எங்க ஏரியா பொண்ணுடா, பாவம் விடுங்க"
அதே புன்னகையுடன் நின்றிருந்தாய்..
வழக்கம் போல் இமைக்க மறந்தேன்.

என் வகுப்புச் செல்லும் பாதையை விட்டு,
தினம் ஒரு வளாகம் சுற்றுவதுக்கூட
சுகமாகத்தான் இருந்தது...
இல்லாமலா போகும்??? 
உன்னை காண்பதுக்காக அல்லவா..!!

உன்னோடு பேச காரணம் 
தேடித் தேடி துவளும் போது,
உன் பார்வையில் புத்துணர்வு பெற்று 
மீண்டும் தேடல் தொடங்கும்.
என்ன மாயம் செய்தாய் நீ...??? 
நான் இப்படி உனக்காக ஏங்க...!!!

நீ செல்லும் பாதையில் 
எதிரில் வருவதே என் வழக்கமானது
முதலில் புன்னகைகள், நாட்கள் நகர நல விசாரிப்புகள்,
கதைகள் பேச மைதானம் இடமளிக்கவே,
நண்பர்களின் கேலி பேச்சுக்கும் ஆளானோம்..

சொல்லித்தான் தெரியவேண்டுமா.?
என் மனம் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்ததை..!!
என் உள்ளுர பயமும் இருந்தது,
எங்கே என் கண்கள் காட்டி விடுமோயென்று..!!!

கல்லூரி விழாக்காலம் பூண்ட நேரம்...
அனைவரும் குதூகலித்து வரவேற்க,
நான் மட்டும் வேதனையில் தவித்தேன்.
நீதான் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பாய்,
உன் பேச்சு கேளாமல் நான் எப்படியடா மகிழ்வேன்.!!

தமிழனுக்கே உரிய கம்பீரம் 
இதுதானோ, என்று வியந்தேன்.!!
பட்டுவேட்டி அணிந்து, மீசையை 
முறுக்கி நீ மேடையேறிய போது 
விழா முடிந்ததும் என்னை தேடி ஓடி வந்தாய்..
நண்பர்களின் கேலிப்பேச்சு காதில் விழவே, 
பேசாமல் நகர்ந்தேன்.
நீ உணரும் முன், அவர்கள் 
கண்டுக்கொண்டனரோ என்ற எண்ணத்தில்.!

மறுநாள் வழக்கமாக செல்லும் பாதையை மாற்றினேன்.
உன்னை பார்க்க எழுந்த 
ஆவலை என்னுளே சிறைப்படுத்தினேன்.
ஒரு நாள் ஒருயுகம் போல கழிந்ததுதடா..!!
எதிர்பாராமல் முன்வந்து நின்றாய்..
உணருமுன், பேச வேண்டுமென்று இழுத்து சென்றாய்.
சில நிமிடம் அமைதி மட்டுமே நிலவியது..!!
என் நண்பர்கள் என்றாரம்பித்த உன்னை இடைமறித்து,
"அவர்கள் மேல் தவறில்லை, 
என்னை கண்டுக் கொண்டார்களோ
என்றச்சத்தில் ஓடினேன்" என்றேன்.
இயற்பியல் எவ்வளவு இயல்பாக எடுத்தும் ஏறாத எனக்கு,
நீ சொன்ன ஒரே வரியில் எல்லாம் புரிந்தது

"கண்டுகொண்டது உன்னை இல்லை, என்னையடி பைத்தியமே" 

உலகே ஒரு கணத்தில் 
அழகானதாக மாறிய உணர்வு….
என்னை மறந்து நின்றேன், 
கண்ணில் இருதுளி எட்டிப்பார்த்தது...
இதற்காகத்தானே இத்தனை நாள் தவம் கிடந்தேன்.!!!

உன்னை பிரிந்து என்னால் வாழ முடியுமா?
இந்த எண்ணமே என்னை நடுங்க வைக்கிறதே..!!!
எனக்கு துன்பம் கூட பெரிதாய் தெரியவில்லை,
அதை பகிர நீ என்னோடு இருப்பதால்..!!
காதல் என்றால் இது தானா?
உன்னோடு சிரித்த நிமிடங்கள் 
என்னுளே சிற்பமாக உள்ளதே.!
உன் அருகாமையில் மட்டும் 
நடைப்பயிலும் குழந்தையாகிறேன்,
உன் கரம் பற்றி நடக்க...!!!
முட்டாள்தனமாக சண்டை போடும் போதிலும்,
மண்டு மண்டு என்று சிரித்து அணைப்பாயே...
அது ஒன்றுக்காகவே நான் முட்டாளாக சம்மதமே.!!!
யாருமறியாமல் கண் அடித்துச் சென்றுவிடுகிறாய்,
அதிலிருந்து மீளவே அரைமணி நேரம் ஆகுதடா..!!!
உன் கண்ணில் காந்தம் உள்ளதோ.? 
என்னை இப்படி கட்டிப்போடுகிறதே.!!

காதல் ஒருமுறை தான் பூக்குமா??
இல்லையே...உன்னோடு இருக்கும் 
ஒவ்வொரு நொடியிலும் பூக்குதே.!
காதலியின் கை பிடிக்கவா?
அம்மாவின் துயர் துடைக்கவா என்ற நிலையில்
கடமை உணர்ந்து தெளிவாய் முடிவெடுத்தாய்..
தீர்க்கமாக சொன்ன உன்மேல் கோபம் கொள்ளவில்லையடா...!
உன்னை காதலிப்பதில் பெருமைத்தானே கொள்கிறேன்.

என் தோழி சிலர் கோபம் கொண்டனர், ஏமார்ந்தேனென்று.
சிலரோ பரிதாபப் பார்வை வீசினர், காதல் தோல்வியென்று.
இது எப்படி காதல் தோல்வியாகும்!!!????
இன்றும் உன் நினைவுகள் என்னோடு தானே உள்ளது.
கண்மூடி நின்றால் மறுகணம் என் முன்னே நிற்கின்றாய்
மாறாத அதே புன்னகையோடு..!
உன்னோடு இருந்தால் மட்டுமே காதலா???
புரிதலும் காதல் தானே?
இன்றேயில்லை என்றாலும் உன்னோடு 
தானே என் வாழ்வும் முழுமையும்..!
காதலுடன் காத்திருப்பேன் நீ என்னிடம் திரும்ப

அதே புன்னகையுடன்...!!!