Wednesday 20 February 2013

401 காதல் கவிதைகள் - புத்தக மதிப்புரை




தமிழ் மக்களின் விக்கிபீடியா, எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களுக்கு என் நன்றிகள். இந்த பதிவில் இடம்பெரும் பாடல்களும், கவிதைகளும் சுஜாதா அவர்களின் 401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம்) புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

என் தாயும் உன் தாயும் யார் யாரோ ?, என் தந்தையும் உன் தந்தையும், எப்படி உறவினர் ?நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?, செம்மண்ணில் மழைநீர் போல் அன்புடைய நம் நெஞ்சங்கள் தானாக கலந்துவிட்டனவே.

கேளிர் வாழியோ, கேளிர் நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.

நண்பா ! இதைக் கேள் ! நாள்முழுதும் என் நெஞ்சைக் கட்டிப்போட்ட அழகிய கூந்தல், பெரிய தோள், இளம்பெண்ணின் இலேசான உடலை ஒரு நாள் முழுதும் தழுவினால் அதன்பின் அரை நாள் வாழ்க்கையும் எனக்கு வேண்டாம்.


இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே !

நண்பா ! திட்டுகிறாய், என் நோய் உன்னால் நிறுத்த முடிந்தால் நல்லது. வெயில் காயும் பாறை மேல், கையிலாத ஊமை, கண்ணால் காப்பாற்ற வேண்டிய வெண்ணெய் போல உருகும் நோய் இது, தவிர்க்கமுடியாது.
காதலை விட செல்வம் தான் முக்கியம் என்று பிரிந்து செல்லும் சில பெண்களை எடுத்துக்காட்டாய்க் காட்டி அவனை விட்டு பிரியுமாறு தலைவியிடம் கேட்டுக்கொள்கிறாள் அவளின் தோழி. அதற்கு தலைவி,

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே

துணையைப் பிரிந்து, செல்வத்தைத் தேடிப் பிரிபவர்கள் கெட்டிக்காரர்கள் என்றால் கெட்டிக்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருக்கட்டும் !நம்போன்ற பெண்கள் முட்டாள்களாகவே இருக்கட்டும் !.

பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை
ஒத்தன நினக்கு எனப் பொய்த்தன கூறி
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான் யாம் இன்னமால் இனியே.

தோழி ! பேரூர் திருவிழாவுக்கு போகலாம் போகலாம் என்றாய். அன்றைக்கு நல்லது பல நிகழ்ந்தன. கிளி விரட்டும் கவண் கருவிகளும், தழை ஆடைகளும் கொடுத்து, இவை உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று பொய் சொல்லி என் தாய் பொத்தி பாதுகாத்த என் பெண்மையை அவன் பறித்தான். நான் இப்படி ஆகிவிட்டேன்.

பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம்; கேட்டனெம் பெரும !
ஓரி முருங்கப் பீலி சாய
நல் மயில் வலைப் பட்டாங்கு யாம்
உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே.

எல்லாரும் தூங்கும் நள்ளிரவில், முரட்டு யானைபோல் நீ வந்து கதவை தட்டுவது கேட்காமல் இல்லை, கேட்டேன் தலைவா ! தலைக்கொண்டை கலைய, தோகை சரிய  வலையில் அகப்பட்ட மயில்போல மாட்டிக்கொண்டிருக்கிறேன். என் தாய் என்னைக் கட்டிப் படுத்திருப்பதால்.

மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே.

குளிக்கச் சென்ற பெண், வெள்ளத்தோடு வந்த பசுங்கனியைத் தின்ற குற்றத்திற்காக எண்பத்தொன்பது யானையையும், அவள் எடைக்கு தங்க பொம்மையையும் கொடுத்தும் கொள்ளாமல் அப்பெண்ணை கொலை செய்த நன்னன் போல நரகத்துக்குச் செல்லட்டும் என் அன்னை. ஒரு நாளைக்கு என்னைப் பார்க்க விருந்தினன் போலப் புன்னகையுடன் வந்தான் என்று பல நாள் பகைவர்கள் நுழைந்த ஊரைப்போல தூங்காமல் காவல் காக்கிறாள் என்னை.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.

கன்றும் உண்ணாமல் கறக்கவும் முடியாமல் நிலத்தில் வழியும் பசுவின் பால் போல எனக்கும் இல்லாமல் என் தலைவனுக்கும் உதவாமல் வீணாகிறது என் அழகு.

உதுக்காண் அதுவே இது என் மொழிகோ
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளாத்
தீம் குரல் அகவக் கேட்டும் நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின் ‘போதின்
பொம்மல் ஓதியும் புனையல்,
எம்மும் தொடாஅல்’ எங்குவெம் மன்னே.

அப்போது என்ன சொல்கிறேன் பார். மரக்கிளையில் இருந்த பறவைக் கூட்டம், தாம் சேர்ந்து இருப்பதால் பிரிந்தவர்களைப் பற்றி நினைக்காமல் இனிய குரலில் அழைப்பதைக் கேட்ட பின்னும் பிரிந்துபோன என் காதலர் வந்தால், கூந்தலுக்கு மலர் சூட மாட்டேன். என்னை தொடாதே என்பேன்.

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரந்தலானே.

ஊர் நீர் உண்ணும் கிணற்றில் படிந்த பாசியைப் போன்றது என் பசலை. காதலன் தொடத் தொட நீங்கி, விட விடப் பரவுகிறது.

தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்
யாங்குச் செய்வோம், எம் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற
ஐதே காமம் யானே;
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.

கிளி விரட்ட தினைப்புலத்திற்கு செல்லும்போது பகலில் வரலாம் இரவில் நீ வருவது அபாயம். இந்த கஷ்டத்துக்கு என்ன செய்வது என்ற கேட்டபோது தலைவன் வேறொன்றை நினைத்து பெருமூச்சு விட்டான்.( அவன் அவனுக்கு அவன் அவன் பிரச்சனை. ) காமம் நுட்பமானது. அது சரிதான்... ஆனால் பழி வருமே என்றேன் நான்.

‘சேறும் சேறும்’ என்றலின், பண்டைத் தன்
மாயச் செலவாச் செத்து, மருங்கு அற்று
மன்னிக் கழிக என்றேனே ; அன்னோ
ஆசு ஆகு எந்தை யாண்டு உளங்கொல்லோ
கருங் கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று என் இடைமுலை நிறைந்தே.

போய்விடுவேன், போய்விடுவேன் என்று அடிக்கடி பயமுறுத்துவான் அதனால் போய்த்தொலை என்று சொல்லிவிட்டேனே அய்யோ !. என் தலைவன் எங்கே இருக்கிறானோ ?. கரியகால் நாரை மேயும் குளம்போல என் மார்பக நடுவில் கண்ணீர்க்குளம்.

விட்டென விடுக்கும் நாள் வருக அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ !
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப ! நீ உண்ட என் நலனே.

கைவிடலாம் என்று பிரியும் நாள் வந்து, அதற்கு நீ உடன்பட்டால் மணற்குவியல் குன்று போலத் தோன்றும் கரையில், புன்னை மரத்தின் நிலம் தொடும் கிளையில் நாரை வந்து சேரும் கடற்கரைக்காரனே !, நீ அனுபவித்த என் பெண்மையைக் கொடுத்துவிட்டுப் போ.

‘அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇ மீன் அருந்தும்,
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம் துறைவன் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்’ என்றி – தோழி ! – கொள்வாம்;
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து ‘அவை தா’ எனக் கூறலின்
இன்னதோ நம் இன் உயிர் இழப்பே.

மீன் பிடித்து உண்ணும் நாரைகள் இருக்கும் மணல்மேட்டின் குளிர்ந்த துறையைச் சேர்ந்தவனிடம் நாம் இழந்த நலத்தை திருப்பிக் கேட்போம் என்கிறாய் தோழி ! வறுமைக்கு அஞ்சி தானம் கொடுத்ததை திருப்பித் தா எனக் கேட்பதைவிடக் கொடுமையானதோ நம் உயிரை இழப்பது ?

சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய ! மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே;
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி,
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.

ஐயா !உங்களுடன் சிரித்துப் பேசிய என் பற்கள்கல்லைக் குத்திய யானைத் தந்தம்போல முறியட்டும்.என் உயிர் பாணர் பாத்திரத்தில்திறந்து வைத்த மீன்போலநாறிப் போகட்டும்.
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை யான் உற்ற நோயே.

அவரைப் பார்த்ததால் ஏற்பட்ட ஆசை என் எலும்பைத் தொட்டாலும், நானாகப் போய் அவரோடு சேர முடியாது. அவரும் வந்து என் துன்பத்தை நீக்குவதாக இல்லை. சேர்க்கவும் மாட்டார்கள், இடையில் புகுந்து பிரித்துவிடவும் மாட்டார்கள். குப்பைக் கோழியின் சண்டைபோல தானாக நின்றால் தான் உண்டு. யாரும் கலைக்க மாட்டார்கள் எனக்கு வந்த இந்த நோயை.

கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்
‘கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவோம்’ என்னாது,
பெயர்ந்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும !
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்
நின் இன்று அமைதல் வல்லமாறே.

உழவர்கள் வேலை முடித்ததும் வயல் வரப்பில் மணமுள்ள மலர்களை வாடும்படி எறிந்தாலும்,இவர்கள் கொடியவர்கள் இனி வேறு எங்காவது சென்று மலர்வோம் என்றில்லாமல் மறுபடி அங்கேயே பூக்கும் உங்கள் ஊர் போல் நாங்கள் தலைவா ! நீ எனக்கு வருத்தம் பல தந்தாலும் நீ இல்லாமல் நானில்லை.

                                                                                                                                                                                         - யோகி

7 comments:

  1. அகத்திணையின் அழகு அருமை யோகி....

    ReplyDelete
  2. பிரமாதமான தொகுப்பு யோகி.... எனக்கு ஒரு சந்தேகம். அனைத்துமே பெண் பாடும்படியாக உள்ளதே, ஆண் பாடும்படியான பாடல் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. மிகக் குறைவாகவே இருக்கிறது நண்பா...

      Delete
    2. அப்போ ஆண்கள் கொண்ட காதல் குறைவுனு சொல்ல வருகிறீர்களா?

      Delete
    3. ஒரு நாள் முழுதும் தழுவினால் அதன்பின் அரைநாள் வாழ்வும் வேண்டாம் என்றும் சொல்லும் காதல் எப்படி குறைவாக இருக்கும் நண்பா...

      Delete
    4. ஆம் நண்பா, அவளது கடைக்கண் பார்வை என் மீது பட்டுவிட்டால் துடிப்புடன் ஏற்பேன் மரணத்தை....

      Delete
  3. Present this book to your lover........

    ReplyDelete