Saturday, 16 February 2013

THE ROAD HOME





பனி படர்ந்த நெடிய மலைப் பாதையில் இறந்த தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்க்காக வெளியூரிலிருந்து மகன் வந்து கொண்டிருக்கின்றான்.

திரையில் அவனின் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இந்தப் படம் தொடங்குகின்றது.

எனது தந்தை திடீரென இறந்து விட்டார்
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை
எனது கிராமம்சென்ஹெடுன்”(சீனாவில் உள்ள ஒரு மலை கிராமம்) இந்த மலை உச்சியில் தான் இருக்கிறது
வேலைக்காக ஊரை விட்டு வெளியேறி வெகு நாட்கள் ஆகிவிட்டன.
என் தந்தை எங்கள் கிராமத்தின் பள்ளி ஆசிரியர்.
அவர் எங்கள் கிராமத்தையும், பள்ளியையும் மிகவும் நேசித்தார்.
நான் அவருக்கு ஒரே பிள்ளை. எங்கள் கிராமத்திலிருந்து கல்லூரி வரை படித்தது நான் ஒருவன் மட்டுமே.
எனது அன்னை பாவம். அவரை எப்படி சமாதானப்படுத்தப் போகின்றேன்.

      கிராமம் வந்தடைந்தவுடன் ஊர்ப் பெரிவர்கள் சிலர் நடந்ததை விளக்கமாக எடுத்துரைக்கின்றார்கள்.தந்தை நகரத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இங்கே கொண்டுவருவதில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பதாகவும் சொல்கின்றனர்.வண்டியில் வைத்து கொண்டுவர உன் அன்னை விரும்பவில்லை. கால் நடையாக அவரை தூக்கி கொண்டு வருமாறு பிடிவாதமாய் இருக்கிறார்.

மலைப் பாதையில் கால் நடையாகக் கொண்டுவருவது மிகவும் சிரமம். அதுவும் தற்போது அவரை சிவிகையில் தூக்கி வரும் அளவிற்க்கு தெம்பான இளைஞர்கள் நம் கிராமத்தில் இப்போது இல்லை என்று கூறுகின்றார்கள்.
சரி நான் என் அன்னையிடன் தெளிவாக எடுத்துக் கூறுகின்றேன். இப்போது அன்னை எங்கே என்று கேட்கிறான்.

உன் தந்தை இறந்ததில் இருந்து அவர் சொல்லிக் கொடுக்கும் பள்ளி வளாகத்திலேயே இந்தக் கடும் குளிரில் புலம்பிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
மகனைக் கண்டவுடன் அழுகின்றாள். பிறகு வீட்டிற்க்கு அழைத்துச் செல்கின்றான். தந்தையை கொண்டுவருவதில் உள்ள பிரச்சனைகளை எடுத்துச் சொல்லியும் கேட்பதாய் இல்லை. இது என் ஆசை. அவரை தூக்கிக் கொண்டு வந்தால் தான் நம் வீட்டின் பாதை அவருக்கு மறக்காது என்று அழுது கொண்டே ஒரு சால்வையை தறியில் நெய்யத் தயாராகிறாள்.
இந்த சால்வயை அவரின் மேல் போர்த்தி கொண்டுவர வேண்டும் எனத் தறியை இரவு முழுவதும் இயக்குகிறார்.

மகன் வேறுவழியின்றி அன்னையின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கிறான். அன்றிரவு தன் அன்னை மற்றும் தந்தையின் திருமண புகைப் படத்தை பார்த்துக் கொண்டே இருக்கயில் கருப்பு வெள்ளையில் இருந்த நிகழ்காலத் திரை வண்ணத்திரையாக மாறி பின் நோக்கி நகர்கின்றது.
இனி இந்த கதை முழுவதும் ஒரு அழகான கிராமப்  பெண்ணுக்கும் அங்கு புதிதாக வருகை தரவிருக்கும் பள்ளி ஆசிரியருக்குமான ஒரு உன்னதமான காதல் பற்றியே சொல்லப்படுகின்றது. இதுவும் தமிழ்ப் படங்களில் வரும் கண்டவுடன் காதல் வகையறாதான்  ஆனால் இந்த திரைக் கதை சொல்லப் பட்ட விதம், காட்சிகளின் மென்மை படத்தோடு தவழும் இசை எல்லாம் நம் மனதில் ஒரு வித காதலை நம்மை அறியாது நமக்குள் விதைத்து விடும்.
கதை ஓரளவிற்கு சொல்லப்பட்டு விட்டதால் சில நுட்பமான காட்சிகளை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் காட்சியில் தொலைவிலிருந்து குதிரை பூட்டப்பட்ட வண்டி ஊருக்குள் நுழைகின்றது. அதில் நமது நாயகன் வந்திறங்குகின்றான். ஊர் மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி மொய்க்கிறது. பெண்கள் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அங்கே சிவப்பு நிறக் குளிராடையுடன் இரட்டை ஜடை முடிந்த நமது நாயகியும் இருக்கிறாள். வைத்த கண் வாங்காமல் நாயகனை பார்த்துக் கொண்டே இருக்க எதேச்சயாய் நாயகனும் நாயகியைப் பார்க்கிறான். அவ்வளவு தாங்ககாதல் பற்றிக் கொண்டது. நாயகன் மக்களுடன் பேசிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் அவளைப் பார்க்கிறான். இவளுக்கு தலைகால் புரியவில்லை. அவர் நம்மை தான் பார்க்கின்றாரா இல்லை வேறுயாரையுமா என்று இடமும் புறமுமாக ஆச்சர்ய கண்ணுடன் திரும்பிப் பார்க்கிறாள். அவர் நம்மையே பார்க்கிறார் என்று புரிந்தவுடன் அங்கிருந்து புள்ளி மானைப் போல சந்தோசத்தில் அந்த ஒற்றைப் பாதையில் துள்ளிக் குதித்து வீடு அடைகிறாள். அந்த ராசியான சிவப்பு குளிராடையை ரகசியமாய் இரும்புப் பெட்டியில் மறைக்கிறாள். பின்னனி இசையும், காட்சிக் கோணமும் இந்த காட்சியை எங்கோ கொண்டு சென்றுவிடுகின்றது.

இரண்டாவது காட்சி பள்ளிக்கூடம் கட்டுமான வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்க நாயகி தண்ணீர் எடுக்க அந்தப் பக்கம் வருகிறாள். வீட்டின் அருகிலேயே ஓர் கிணறிருக்க நாயகனைக் காணவே இப்பக்கம் வருகிறாள். நாயகன் தென்படுகின்றாரா என்று பார்த்துக் கொண்டே தண்ணீர் இறைக்கிறாள். நாயகனைக் காண்கிறாள். மனசுடன் குடமும் நிறைகின்றது.
பள்ளிக்கூடம் கட்டும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் அந்த கிராமத்தின் எல்லா வீடுகளில் இருந்தும் சாப்பாடு கொண்டுவரப்படுகின்றது. ஒரு அழகான கிண்ணத்தில் உணவு தயார் செய்து நாயகியும் கொண்டு வருகிறாள். கொண்டுவந்த உணவு இப்போது நிறைய கைகளால் எடுக்கப்படுகின்றது...யார்வீட்டு உணவை யார் எடுக்கிறார்கள் என்று தொலைவில் சில இளம் பெண்கள் நோட்டமிட்டு பேசிச் சிரிக்கின்றனர். நாயகியும் அவர்களுடன் இருக்கிறாள். சில நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கூட வேலைகள் முடிவடைந்து முதல் நாள் பாடம் ஆரம்பிக்கிறது. பள்ளிக்கூடத்தைச்  சுற்றி கிராமமே சூழ்கிறது. நாயகனின் குரல் மட்டும் வெளியே கேட்கிறது. நாயகி தினமும் பள்ளிக்கூடத்தயே சுற்றிக் கொண்டு அவனின் குரல்களை மறைந்திருந்து ரசிக்கிறாள். அந்த மலைப் பாதையில் நாயகனைக் காண தவம் கிடக்கிறாள்.


நாயகன் அந்த மலைப் பாதையில் தினமும் மாணவர்களுக்கு பாடல்கள் கற்று கொடுத்துக் கொண்டே செல்வது வழக்கம். அந்தப் பாதையில் அன்றும் பாடல் சத்தம் கேட்கிறது. நாயகி உற்சாகம் அடைகிறாள். வழி நெடுகிலும் உள்ள மரங்களில் தன்னை ஒளித்துக் கொண்டே நாயகனை பார்க்கிறாள். நாயகனும் அப்போது பார்த்துவிடுகிறார். பாடலும் பார்வையும் தினமும் தொடர்கின்றது. காதலில் காத்திருத்தல் என்பது எத்தனை சுகம் என்பதை காட்சிகளின் வழியே மிக அழகாக சொல்லப்படுகின்றது. ஒருநாள் நாயகன் தன் மாணவர்களுடன் மலைப்பாதையில் செல்கையில் நாயகி எதிரே வருகிறாள். வெட்கம், நாணம், பயம், பணிவு என அனைத்தும் கொண்டு கடக்கிறாள். இருவரும் இப்போது நேருக்கு நேர்….. என்ன செய்வது என்று தெரியாமல் நாயகன் வணக்கம் சொல்கிறான். சிரிக்கிறாள் பின் கடக்கிறாள். நாயகி பின்னே பார்த்துக் கொண்டே செல்கையில் நாயகன் கூப்பிடும் குரல் கேட்கிறது. திரும்பி வருகிறாள். பயத்தில் அவள் விட்டுச் சென்ற கூடையை எடுத்து நாயகி கையில் கொடுக்கும் போது விரல் நுனி படுகின்றது. இது போதுமே இன்னும் இரண்டு மாதங்கள் தூங்க மாட்டாள் இவள். நாயகன் பள்ளிச் சிறுவர்களிடம் அவள் யார் என்ற விவரம் கேட்டுப் பெறுகின்றான்.



அடுத்த காட்சி, பள்ளிக்கூடம் நடக்கிறது. நாயகி வழக்கம் போல் தண்ணீர் எடுக்கும் சாக்கில் அந்தப் பக்கம் வருகிறாள். பாடம் நடத்திக்கொண்டிருந்த நாயகன் குரல் திடிரென நிற்கிறது. கதவைத் திறந்து வெளியே வரும்போது இவள் நிற்பதை பார்த்து விடுகிறார். நாயகி கிணற்றை நோக்கி ஓட்டம் பிடிக்கிறாள். நீர் இறைத்து முடிந்து கிளம்புகையில் தொலைவில் நாயகனும் தண்ணீர் எடுக்க வருகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் பிடித்து வைத்திருந்த அத்தனை தண்ணீரையும் மீண்டும் கிணற்றுக்குள் ஊற்றுகின்றாள். என்ன ஒரு கவித்துவமான காட்சி இது. எல்லாம் காதல் செய்யும் பாடுதான். ஆனால் பாதி வழியில் பள்ளி உதவியாளன் அன்பின் மிகுதியால் நாயகனை நிறுத்தி தான் தண்ணீர் எடுத்து வருவதாக குடங்களை பறிக்கிறான். நாயகி உதவியாளனிடம் கோபமுற்று அங்கிருந்து நகர்கிறாள்.
பின் ஆசிரியர் எதிர் வருகையில் நாளை எங்களது முறை என்கிறாள். ஆசிரியரும் ஆம் எனக்குத் தெரியும் என்கிறார்.  (ஆசிரியருக்கு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வீட்டில் விருந்து அனுசரிக்கப்படுகின்றது.)



மறுநாள் அதிகாலையில் இருந்தே விருந்துணவுகளை பார்த்து பார்த்து செய்கிறாள். ஆசிரியர் வருகிறார். வாசலில் ஆனந்தத்துடன் வரவேற்கிறாள்.
தன் கண் தெரியாத அன்னைக்கு அறிமுகப்படுத்துகிறாள். அன்னை ஆசிரியரிடம் பேச்சுகொடுத்துக் கொண்டே சில விவரங்களை கேட்கிறாள்
தாங்கள் திருமணம் ஆனவரா? இல்லை என்கிறான்
திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதா? இல்லை என்கிறான்.

அடுப்படியில் அவரது பதில்களை கவனித்தவாறு சந்தோசப்படுகிறாள். பின் நாயகி சாப்பாட்டு கிண்ணத்தை நாயகனுக்கு காண்பித்து இது நியாபகம் இருக்கிறதா என்கிறாள். இல்லையே என்கிறார். உடனே அன்னை குறுக்கிட்டு இதில் தான் பள்ளி கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது இவள் தினமும் தங்களுக்கு உணவு கொண்டு வருவாள் என்றவுடன் ஓ….ஓ…. நியாபகம் இருக்கிறது என்று ஒருவழியாக சமாளிக்கிறான். போகும் போது அந்த சிவப்பு நிற குளிராடை அவன் கண்களில் பட்டவுடன் அவளிடம் அந்த ஆடை தான் உன்னை எனக்கு முதன்முதலில் காட்டிக்கொடுத்தது என்று கூறிவிட்டு வெளியேருகின்றான். நாயகியின் அன்னைக்கு சந்தேகம் வருகின்றது. இது நமக்கு சரிபட்டுவராது அவரை மறந்து விடு என்கிறாள்.

மறுநாள் சில பிரச்சனைகளின் காரணமாக ஆசிரியர் திடிரென தன் சொந்த ஊருக்கு கிளம்பும் தருவாயில் நாயகியின் வீட்டின் வாசலில் நிற்கிறார். நாயகியை அழைத்து நான் இன்றிலிருந்து கிளம்புகின்றேன் என்கிறார். வருத்தத்துடன் நாயகி ஏன், மீண்டும் எப்போது வருவீர்கள் என்றவுடன் இரண்டு மூன்று வாரங்களில் வந்துவிடுவேன் என்று கூறி ஒரு பரிசைத் தருகின்றார். தாங்கள் வரும் வரை நான் காத்திருப்பேன் என்கிறாள். செல்வதற்க்கு முன் ஒருமுறை சாப்பிட வருமாறு வினவுகிறாள். இல்லை நேரமாகிவிட்டது நான் கிளம்புகின்றேன் என்கிறான். சரி நான் உங்களுக்கு பிடித்த உணவை சமைத்து கொண்டு பள்ளி வருகின்றேன் என்கிறாள். நாயகி இப்போது அந்த பரிசை திறக்கிறாள். ஒரு ஜடை மாட்டி இருக்கிறது. (”ஹேர் க்ளிப்)
பெட்டியில் உள்ள அந்த சிவப்பு ஆடையை அணிகிறாள். கண்ணாடியின் முன் நின்று அந்த ஹேர் க்ளிப்பை மாட்டி அழகாகிறாள். நாயகனுக்கு பிடித்த அந்த உணவினை எடுத்துக் கொண்டு பள்ளி நோக்கி ஓடுகிறாள்.


குதிரை வண்டி புறப்படுகின்றது. மக்கள் கூடி நின்று பேசிக்கொள்கிறார்கள். ஏன் கிளம்புகின்றார் என்று ஒருவர் கேட்க ஏதோ பிரச்சனை போல என்று ஆங்காங்கே குரல்கள். வண்டி ஊரைவிட்டு வெளியேறுகின்றது. கையில் பாத்திரத்துடன் வண்டியை நோக்கி ஓடுகிறாள். பல குறுக்கு வழிகளில் சென்று பிடித்துவிட முயல்கிறாள். ஒரு மலைமேட்டில் ஓடும் போது தவறிக் கிழே விழுகிறாள். பாத்திரமும் உணவும் சிதறி உடைகிறது. தூரத்தில் சென்ற வண்டி அவள் கண்களில் இருந்து மெல்ல மறைகின்றது. விழுந்த இடத்தில் அமர்ந்து கொண்டு அழுகின்றாள். தனிமையில் கதறி கதறி சின்னப் பிள்ளை போல அழுகின்றாள் கண்ணீர் அவள் கண்களில் மட்டுமல்ல  என் கண்களிலுமே. வெகு நேரங்கள் கழித்து உடைந்த பாத்திரங்களை பொறுக்கி முடிந்து கொண்டு அவ்விடமிருந்து நகர்கையில் தன் முடியை சரிசெய்யும் போது தலையில் நாயகன் கொடுத்த ஹேர் க்ளிப் காணவில்லை. மிகுந்த பதட்டத்துடன் தேடுகிறாள். விழுந்த இடமெங்கும் தேடுகிறாள். இந்த காட்சி தன் காதலை தொலைத்து விட்டு தேடுகிறாள் என்பதைக் காட்டும் விதமாக அருமையாக படைக்கப் பட்டிருக்கிறது. ஓடிய வழியெங்கும் தேடிக்கொண்டே போகிறாள்.

தினமும் அந்தப் பாதையில் அவள் போவதும் வருவதுமாக காட்சிகள் நகர்கின்றன. இறுதியில் அந்த ஹேர் க்ளிப் ஒரு நாள் தன் வீட்டின் முற்றத்தின் மண்ணில் மூடிக் கிடப்பதைக் காண்கிறாள். புன்சிரிப்புடன் அதை எடுத்து தலையில் மாட்டிக்கொள்கிறாள். அவளுக்கு தன் தலைவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வசந்த காலம் முடிந்து முன்பனி காலம் வருகின்றது. உடைந்த பாத்திரங்களை மீண்டும் ஒட்ட வைக்கிறாள்.

சில நாட்கள் கழித்து பள்ளியில் பாடம் நடத்தும் குரல் அவள் வீடுவரை கேட்கிறது. எல்லையற்ற மகிழ்ச்சியில் பள்ளிக்கூடம் நோக்கி விரைகிறாள். ஆனால் அங்கே பூட்டப் பட்ட நிலையில் அமைதியாய் இருக்கிறது பள்ளி. சில மாதஙகள் ஓடுகின்றன. உறை பனிக்காலம் ஆரம்பிக்கிறது. கொட்டும் பனியில் தினமும் பள்ளியின் முன் காத்திருக்கிறாள். என்றாவது வருவார் என்ற ஆவலுடன் வெறிச்சோடிக் கிடக்கும் பாழடைந்த பள்ளியை  தினமும் சுத்தம் செய்கிறாள். தலைவன் தான் வருவதாகச் சொன்ன நாள் வருகின்றது. குதிரைவண்டி வராதா என்று அந்த கொட்டும் பனியில் காத்திருக்கிறாள்.

அதிக நேரம் பனியில் இருந்ததால் கடும் காய்ச்சலில் சாய்கிறாள். கண் தெரியாத அவளின் அன்னை அழுகிறாள். சில நாட்கள் கழித்து பாதி குணமான நிலையில் நான் நகருக்கு சென்று அவரை பார்க்க போவதாக மீண்டும் கிளம்புகிறாள். இந்த முறை பனிப் புயலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. பாதி வழியில் சுருண்டு விழுகிறாள். பின் மீண்டும் கடும் காய்ச்சலில் பேச்சு மூச்சின்றி வீட்டில் கிடக்கிறாள். அவளின் தாய் ஊர் பெரியவர்களிடம் ஆசிரியர் எப்போது வருவார், அவர் வந்தால் தான் என் மகள் பிழைப்பாள், தயவு செய்து அவருக்கு கடிதம் போட்டு வரச்சொல்லுங்கள் என்று அழுகிறாள். இரண்டு நாள் கழித்து மீண்டும் பாடம் நடத்தும் சத்தம் கேட்கிறது லேசாக கண் விழிக்கிறாள். ஆசிரியர் வந்துவிட்டார். நேற்று நேரடியாக உன்னைப் பார்க்கவே இங்கு வந்தார். உன் அருகிலேயே அமர்ந்து உன்னை கவனித்துக் கொண்டார் என்று தன் அன்னை சொன்னதும் எழுந்து பள்ளிக்கூடம் விரைகிறாள்.

ஊர் மக்கள் கூடி நிற்க பள்ளியின் முன் வந்து நிற்கிறாள். கூட்டத்திலிருந்து ஒருவர் இவள் நிற்பதை ஆசிரியருக்கு தெரிவிக்கிறார். ஆசிரியர் வெளியே வந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். ஃப்ளாஷ் பேக் இத்துடன் முடிகிறது.

மகன் தன் தந்தையின் இறுதிச் சடங்கினை நிறைவேற்ற அவரின் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கிறான். இறுதி ஊர்வலம் நடந்து முடிகின்றது. நீ ஒரு நாள் மட்டும் அந்த பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துமாறு தாய் இறுதியாக மகனைக் கேட்கிறாள். தாயின் விருப்பப் படியே மகன் பாடம் நடத்துகின்றான். நாயகி திரையில் அங்கும் இங்கும் அந்த மலை வழியில் சந்தோசமாக ஓடித் திரிகிறாள். மெல்லிய இசையுடன் படம் நிறைவடைகின்றது.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத காதல் சினிமா இந்தரோடு ஹோம்”.
 இந்த அற்புதமான படம் சீனா இயக்குனர்ZHANG YIMOUஎன்பவரால் 1999 ம் ஆண்டு வெளியிடப்பட்டு  உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பையும் எண்ணற்ற விருதுகளையும் அள்ளிச் சென்றது.

                                                                      விஜய் செ

1 comment:

  1. நல்ல விமர்சனம் தோழா...

    ReplyDelete