Wednesday 11 December 2013

மொழியை உயிர்ப்பித்தவன் பாரதி



பல நூற்றாண்டுகள், பல்வேறு படையெடுப்புகள் ஒரு மொழியை சிதைத்து, சீர்க்கெடுத்து, மொழி அழிவின் எல்லைவரை கொண்டுச்சென்று நிறுத்திய வேளையில், என்னை யாராவது சுவாசித்து, என்னை உயிர்ப்பியுங்கள் என அம்மொழி யாசித்து கொண்டிருக்கும் அதேவேளையில் உதிக்கும் ஒரு கவிஞன் தன் நாட்டின் விடுதலைக்காக விதைத்த கவிதைகளால், அந்த மொழி உயிர்ப்பெற்று விருட்சமடைகிறது என்றால் அந்த கவிஞனை என்னவென்று சொல்லி வாழ்த்துவது தகும். மொழியை உயிர்ப்பித்த அந்த கவிஞனின் பெயர் பாரதி, உயிர்ப்பெற்ற அந்த மொழியின் பெயர் தமிழ். இது பாரதியின் மீது கொண்ட காதலால் திரித்துக் கூறப்பட்டவையும் அல்ல, மிகைமிஞ்சிய புகழ்ச்சியும் அல்ல. இருநூற்று ஐம்பது ஆண்டுகள் களப்பிரர்களின் கோரப்பிடியில் சிக்கிய தமிழ், பாண்டியர்களும் பல்லவர்களும் மீண்டும் வாளெடுக்கும் வரை இருண்டேக்கிடந்தது. அந்த இருண்டக் காலத்தில் தான் வருணாசிரம முறை எனும் பெயரில் சாதிகள் தமிழனிடம் புகுத்தப்பட்டன. பாண்டியர்களோ, பல்லவர்களோ, திருபுறம்பியம் போரில் வெகுண்டெழுந்து உலகாண்ட சோழர்களோ யாருமே இந்த வருணாசிரம முறையை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்ட விதம்தான் வரலாற்றை ஆய்கையில் ஆச்சர்யம் ஊட்டுகிறது. சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு, சாதி, சமய சண்டையிட்டே வீரமழிந்து போன அல்லது வீரம் மறந்து போன தமிழன் முகமதியர்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சி ஓடியொளிகிறான். முகமதியர்களுக்கு பின்பு விஜயநகர பேரரசு, நாயக்கர்கள், என தெலுங்கு தமிழகத்தில் ஊடுருவி சரியாசனமிட்டு அமர்கிறது. அதன்பின் மராட்டியர்களின் ஆட்சி, ஆங்கிலேய காலனியாதிக்கம் என இறக்கும் தருவாயிலிருந்த தமிழ் தன் உயிர்மூச்சை முண்டாசு கவிஞனுக்காக கையில் பிடித்துக் கொண்டிருந்தது. அவன் விடுதலைக்காக விதைத்தவற்றையெல்லாம் இனமாட்சிக்கு வார்த்தெடுத்துக் கொண்டன திராவிட இயக்கங்கள். தனி தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு போராட்டம் என எங்கள் குருதியில் தமிழ் கலக்கப்பட்டது அவ்வேளையில் தான். “மெல்ல தமிழினி சாகும்” என்று எழுதியவன் வாயிலாகவே தமிழ் வெகுண்டெழுந்தது தான் இங்கே வேடிக்கை நிறைந்த முரண். பாரதிக்கு பின் ஆயிரமாயிரம் கவிஞர்கள் வந்திருக்கலாம், ஆனால் அவன் பாதிப்பு இல்லாமல் ஒரு கவிஞன் இங்கு இருக்கமுடியாது. அவனின் பிறந்ததினமான இன்று அவனின் சில கவிதைகளை இங்கே பகிர்ந்து கொள்வதில் அடைமழை பெருமிதம் கொள்கிறது. ( பாடல்களின் அசை பிரித்து, வார்த்தைகளை கொதறி நான் இங்கு எழுதுவதற்காக தமிழும் பாரதியும் என்னை மன்னிக்க வேண்டும், எளிமையாக இருக்க வேண்டுமென்பதற்காக நான் செய்யும் தவறு இது, ஆனால் இது நிறைய பேரை சென்றடையும் என்று எதிர்ப்பார்க்கிறேன். )

அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மை ஊறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சைகொண்ட பொருள் எல்லாம் இழந்துவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசும் போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நஞ்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பச்சையூனியைந்த வேற்படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
      தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

வரங் கேட்டல்
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

கேட்பன
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி! – எனைச்
சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்.
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்.
தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடுநல் அகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?


கண்ணம்மா எனது குலதெய்வம்
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்ன தகாதென்று           ( நின்னை )

மிடிமையும் அச்சமும் ஏவி எந்நெஞ்சினிற்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று        ( நின்னை )

தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்           ( நின்னை )

துன்பம் இனியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட               ( நின்னை )

நல்லது தீயது நாமறியோ மன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!                ( நின்னை )

சுதந்திரப் பயிர்
தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

எண்ணமெலா நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

தர்மமே வெல்லும் எனுஞ்சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யான் கண்டதெல்லாம் போதாதோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையாற் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

எந்தாய் நீதந்த இயற்பொருளெலாம் இழந்து
நொந்தார்க்கு நீயின்றி நோவழிப்பார் யாருளரோ?

இன்பச் சுதந்திரநின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப் பறித்தார் காவாயோ?

வானமழை இல்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தைசுயா
தீனமெமக் கில்லையென்றால் தீனரெது செய்வோமே?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்த்தெலா நீதருவாய்;
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

பொய்க்கோ வுடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாங்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?

இன்றுபுதி தாயிரக் கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலா மோராயோ?

நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுன ரெங்களுக்கிவ் வோர்வரநீ நல்குதியே.

காணி நிலம்
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும்; - அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறுத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்; - அங்கு
கேணி யருகினிலே – தென்னைமரக்
கீற்றும் இள நீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும்; - நல்ல
முத்துச்சுடர் போலே – நிலாவொளி
முன்பு வரவேணும்; - அங்குக்
கத்தும் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும்; - என்றன்
சித்த மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும்; - எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டு தரவேணும்; - அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன்
காவ லுறவேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையகத்தைப்
பாலித் திடவேணும்.

கண்ணம்மா – என் குழந்தை
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலீதீர்த்தே – உலகில்
      ஏற்றம் புரியவந்தாய்!

பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா!
      பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே – என் முன்னே
      ஆடிவருந் தேனே!

ஓடி வருகையிலே – கண்ணம்மா!
      உள்ளங் குளிருதுடீ;
ஆடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
      ஆவி தழுவுதடி.

உச்சி தனை முகந்தால் – கருவம்
      ஓங்கி வளருதடீ;
மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்
      மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
      கள்வெறி கொள்ளுதடீ;
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா!
      உன்மத்த மாகுதடீ.

சற்று முன் முகஞ்சிவந்தால் – மனது
      சஞ்சல மாகுதடீ;
நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
      நெஞ்சம் பதைக்குதடீ.

உன்கண்ணில் நீர்வழிந்தால் – என்னெஞ்சில்
      உதிரங் கொட்டுதடீ;
என்கண்ணில் பாவையன்றோ? – கண்ணம்மா
      என்னுயிர் நின்னதன்றோ?

சொல்லு மழலையிலே – கண்ணம்மா!
      துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே – எனது
      மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

இன்ப கதைக ளெல்லாம் – உன்னைப்போல்
      ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே – உனைநேர்
      ஆகுமோர் தெய்வமுண்டோ?

மார்பி லணிவதற்கே – உன்னைப்போல்
      வைர மணிகளுண்டோ?
சீர் பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்
      செல்வம் பிறிதுமுண்டோ?

கண்ணம்மா – என் காதலன் ( 2 )
ஆசைமுகம் மறந்து போச்சே – இதை
யாரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ணன் அழகு முழுதில்லை;
நண்ணும் முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலும் இல்லாமல் – அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயும் உரைப்பது கண்டாய் – அந்த
மாயன் புகழினை எப்போதும்.

கண்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்க்
கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இதுபோலே – ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ?

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகம் மறந்து போனால் – இந்தக்
கண்களிருந்து பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி?

கண்ணம்மா என் காதலி ( குறிப்பிடம் தவறியது )
தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே.
பார்த்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோடு என்று சொன்னாய்,
வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!

மேனி கொதிக்குதடீ – தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானில் இடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவுதுபார்.
மோனத்தில் இருக்குதடீ – இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத்தில் உழலுவதோ?

கடுமை யுடையதடீ – எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் – எண்ணும்போதுநான்
அங்கு வருவதற்கில்லை.
கொடுமை பொறுக்கவில்லை – கட்டுங் காவலும்
கூடிக் கிடக்குதங்கே;
நடுமை அரசியவள் – எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.

கூடிப் பிரியாமலே – ஓரிராவெலாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே – உன்றன்மேனியை
ஆயிரங் கோடிமுறை
நாடித் தழுவிமனக் – குறைதீர்ந்துநான்
நல்ல களியெய்தியே
பாடிப் பரவசமாய் – நிற்கவேதவம்
பண்ணிய தில்லையடி!

தமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவ தெங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
      பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
      வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
      உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
      வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
      தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை யில்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
      வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும்
      கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெலாம்
      விழிப்பெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
      இங்கமரர் சிறப்புக் கண்டார்.

பாரதி இப்படிப்பட்ட கவிஞன் என்று ஒரு எல்லைக்குள் அவனை அடைத்துவிட முடியாது. அவன் எண்ணங்களை போலவே அவன் கவிதைகளும் வானில் சிறகடித்து பறக்கின்றன. நானோ இப்போதுதான் பறக்க முயற்சி செய்யும் சிறுகுஞ்சு. அவன் ஆங்காங்கே உதிர்த்துவிட்டு சென்ற சில சிறகுகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அவனை ஒரு எல்லைக்குள் அடக்குவது என்பது என்னால் இயலாத காரியம், ஆகையால் தான் எழுத எழுத நீண்டுகொண்டே வந்துவிட்டது பட்டியல். இன்னும் எனக்கு பிடித்தவை ஆயிரமிருக்க அதை நீங்கள் பகிர்வீர்கள் என்ற எண்ணத்தில் விட்டுசெல்கிறேன்...



1 comment: