Wednesday, 11 December 2013

நானறியா தேசத்தில் பிறந்தாய்



நானறியா தேசத்தில் பிறந்தாய்
வாழ்வறியா சோகத்தில் மிதந்தாய்
அன்படர்ந்த பேதைச் சுடராகி
பண்படர்ந்த சோலை மலராகி
ஏழ்மையின் சாரத்திலே
ஆழமாய் புதையுண்டாய்
ஓலைக் குடிசையிலே
அழகழகாய் பூத்து வந்தாய்
பஞ்சம் தலை விரித்து
அங்கம் வறுத்திவிட
பசியில் பாடம்;
தலையில் பாரம்
வெறிச்சோடிக் கிடக்கும்
வீதியை நீ குலைப்பாய்
அடிகுழாய்த் தண்ணீரில்
ஆட்டமிட்டு குளிப்பாய்
அர்த்தம் புரியாமல்
அன்பாய்ச் சிரிப்பாய்
நெத்தித் திருநீரை
நித்தம் சுமப்பாய்

சுருங்கிய சில வெள்ளை சட்டைகள்
வர்ணம் கலைந்த பாவாடைகள்
இவைகள் தான் இவள் சொத்து
எப்போதாவது ஒற்றை சடை - அதில்
எப்போதாவது மல்லிகைப்பூ
எப்போதாவது மழை - அதில்
எப்போதும் குளியல்
எப்போதும் பூனைக் குட்டிகள்
இவள் மடியில் இருக்கும்
எப்போதும் அவைகளுக்கு கண்மையிட்டு
நெற்றியால் முட்டி போட்டிடுவாள்
காலம் இவளை பக்குவமாய்
செதுக்கத் தொடங்கியது
மார்கழி மாதம் முதல் நாள்
அதிகாலை இவள் கதவை திறந்தாள்
தெருவெங்கும் வண்ணக் கோலங்கள்
அழகழகாய் பூத்திருந்தன.
தெருவில் நடக்கிறாள்
கோலங்கள் ஒவ்வொன்றையும்
இமைக்காமல் ரசிக்கிறாள்
திரும்ம்பி வீடு சேர்கிறாள்
இவள் வீட்டுக் கோலம் மட்டும்
வெள்ளை வர்ணம்
கைகள் பதிக்கி வைத்திருந்த
பல வர்ணத் துகள்களை
கோலத்தில் இடுகிறாள்
அன்று
கோலமிட கை பிடித்து
சொல்லிக் கொடுக்கிறாள் அன்னை
அன்று முதல் இவள் வீட்டு
முற்றம் அழகாகிறது.
ஒரு நாள் இரவு நேரம்
மொட்டைமாடியில் தெரியும்
சில விண்மீன்களை
எண்ணிக்கொண்டிருக்கையில்
மின்விளக்குகள் மொத்தமாய்
பார்வை இழக்கிறது.
 இப்போது
வானம் முழுக்க கோலப்புள்ளிகள்
வானத்தில் போய் எப்படி அம்மா கோலமிடுவது
 என்று அரும்பாய் கேட்கிறாய்…
நானறியா தேசத்தில் பிறந்தாய்
நீ தான் அழகி…




2 comments: