Wednesday 22 July 2015

ஓரிரு நொடிகள் தான்..


























மாலை தொடங்கி
விடியலாகிவிட்டது
இன்னும் சதா 
நீ பெய்து கொண்டே இருக்கிறாய்
துளியும் வெளிச்சமில்லாத
இந்த பொழுது எந்நேரமென்று
தெரியவில்லை
நீ நிற்பதற்கான சூசகங்கள்
ஒன்றும் தென்படவில்லை
இன்னும் சிறிது நேரத்தில்
நன்கு விழித்திருந்த 
அந்தச் சுடரும் கரைய இருக்கிறது
உன்னுடன் நனைய
ஆசையிருந்தும் இப்போது
நனையும் நிலையில்
நான் இல்லை.
ஏனெனில்
நினைவில்
உதிக்கின்ற ஓரிரு
வார்த்தைகளையும்
மீதிச் சுடர் முடியும் முன்
எழுதி முடித்தாக வேண்டும்...
காற்றோடு எதோ சதி செய்து
சாளரம் தாண்டி
உன் எரசலால் என் பகுதி
நனைக்க முற்படுகிறாய்
உடல் சிலிர்க்கிறது
ஓரிரு நொடிகள் தான்..
எழுதும் நிலையிழந்து
என்னை முழுதும் உன்னுள்
நனைக்க விழைந்தேன்..
நனைந்தேன்...
எண்ணம் பறித்து
என்னை முழுதும்
உனது ஆக்கினாய்...

துளித் துளியாய் - 67



எதற்காக நான் பிறந்தேன்?










எதற்காக நான் பிறந்தேன்?

எதற்காக நான் பிறந்தேன்?

கேட்க கேட்க ஆயிரம் ஆயிரம்

கேள்விகள் உள்ளே எழுகிறது.


நினைத்தது யாவையும் செய்யவில்லை

யாரோ நினைத்ததை செய்யும் கருவியாய்

உழைத்து, இல்லை பிழைத்து கொண்டிருக்கிறேன்.


ஆசையாய் கண்ட கனவெல்லாம்

கண்முன்னே கரைந்துக் கொண்டிருக்கிறது.

பிறருக்காக வாழவா நான் உயிர் வளர்க்கிறேன்?

பிறருக்காக உழைக்கவா நான் தினம் உண்கிறேன்?

பிறருக்கான கனவை நான் நிஜமாக்கினால்

எனக்கான கனவை யாரிடம் நான் புகுத்துவது?

திசைதெரியாத பயணம்,

துணையில்லாத தனிமை,

கடலுக்கும் கரையுண்டு!

என் மனதின் மரண ஓலத்தை கேட்பாரில்லை!!!

புதைந்த ரகசியங்கள்....










அக்காவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது.

புத்தன் போல

தூங்கிக்கொண்டே அவன் சிரிக்கையில்,

வலி நிறைந்த கண்களோடு

அவனையே ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

சத்தியமாக அவனின் சிரிப்பினில்

அவள் வேறு எதையோ கண்டுக்கொண்டிருக்கிறாள்.

எப்போதும் அவள் காதுகளில்

இசை ஒலித்து கொண்டேயிருக்கிறது.

குழந்தையின் அருகில் படுத்து

சில பாடல்களையும் முணுமுணுத்துக்கொள்கிறாள்

எத்தனை நாள் தாகமோ இது

நிதானமாக அனுபவித்து கொண்டிருக்கிறாள்.

சாளரத்தில் முகம் புதைத்து

முன்பு போலவே

கனவினில் மிதக்கிறாள்.

நினைவு திரும்புகையில்

முகமும் நனைந்திருக்கிறது.

பூங்குழலியை தான்

பிடிக்கும் அவளுக்கு.

ஆனால் இப்போதெல்லாம்

நந்தினியைப் பற்றியே அதிகம் பேசுகிறாள்

என்ன ஆயிற்று என்று கேட்க

எனக்கு மனமே வரவில்லை.

என்றோ இழந்த ஒன்றுடன்

இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்

என்பது மட்டும் புரிகிறது எனக்கு.

எல்லாம் முடிந்து,

தன் வீட்டிற்கு செல்லும்போது,

யாழியுடன் பேசினாயா

என வினவுகிறாள்.

அவளுக்காகவே சொல்கிறேன்

எனக்கு இப்போதெல்லாம்

ஆதித்த கரிகாலனை தான்

பிடித்திருக்கிறது அக்கா…