Saturday 15 March 2014

என்னது சொல்ல...
















என்னது சொல்ல
அன்பே
என்னது சொல்ல
எண்ணிய யாவும் உன்
கண்ணது சொல்ல
என்னது சொல்ல
அன்பே
என்னது சொல்ல

எண்ணியதில்லை என்றும்
எண்ணியதில்லை
புண்ணியமெதுவும் என்னுயிர்
பண்ணியதில்லை
அழகாய் நீ
மிளகாய் நான்
என்னது சொல்ல
அன்பே
என்னது சொல்ல

சிந்திக்கும் நேரங்கள் தீர  
உனை
சந்திக்கும் யோகங்கள் ஓய
இன்மையில் நீ
அன்மையில் நான்
உண்மையில் இங்கே
என்னது செய்ய அன்பே
என்னது செய்ய

வரமெதுவும் வேண்டாம் 
உன் 
நினைவிருக்கயில்
கரமெதுவும் வேண்டாம்
உன் 
நிழலிருக்கயில்

சுகமெதுவும் வேண்டாம்
நீ 
உடனிருக்கயில்
உறவெதுவும் வேண்டாமடி
நீ 
துணையிருக்கயில்

இவ்விடம் நான்
அவ்விடம் நீ
ஒற்றை
அறையில்
சுற்றிடும்
இருளில் 
என்னது செய்ய
அன்பே
என்னது செய்ய….

Friday 7 March 2014

பிரசிடெண்ட் வீடு




"பிரசிடெண்ட் வீடு"
எங்கள் வீட்டை
ஊரில் இப்படிதான் அழைப்பார்கள்.

எழுபது வருடங்கள் ஆகிவிட்டது.
வீட்டு உத்திரத்தில்
பொறிக்கப்பட்ட வார்த்தைகளின் மூலம்
இதை அறிந்துக்கொள்கிறேன்.
நிலவனையும் சேர்த்தால்
ஐந்தாவது தலைமுறையை
பார்த்துக்கொண்டிருக்கிறது வீடு.

விசாலமான திண்ணை.
நூறுபேர் தூங்கலாம்.
பகலாய் இருந்தாலும் சரி,
இரவாய் இருந்தாலும் சரி,
படுத்ததும் கண்களுக்குள்
கனவுகள் தொற்றிக்கொள்ளும்.

தூக்கு ஒட்டு வீடு.
வெளிச்சமும் காற்றும்
நேரடியாய் வீட்டிற்குள்
வருவதற்காக அப்படியொரு அமைப்பு.

உறவுகளாலேயே எப்போதும்
நிரம்பியிருக்கும் வீடு. இன்று
பொருட்களாலேயே நிரம்பியிருக்கிறது.
வேண்டிய பொருட்களெல்லாம்
வீட்டில் இருக்கிறது ஆனால்
எனக்குதான் வீட்டிலிருக்க பிடிக்கவில்லை.

முன்பிருந்த பேரமைதி
இன்று துளியுமில்லை.
சகிக்கமுடியாத இரைச்சலை
தெளித்து கொண்டேயிருக்கின்றன
தொலைக்காட்சி பெட்டிகள்.

நாங்கள் ஒடியாடி விழுந்து விளையாடிய
இடங்கள் காயமடைந்திருக்க,
சுதர்சனும் நிலவனும் தந்தைகளின்
கரத்தைவிட்டு இறங்காமல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

முன்பு போல அக்காவை பேன் பார்க்கசொல்லி
அப்படியே தூங்கிபோக ஆசைபடுகிறேன்.
தங்கையின் அருகில் அமர்ந்து,
அவள் பருவத்து கதைகளை
பேசி சிரிக்க ஆசைபடுகிறேன்.
ஆனால் யார் சித்தப்பாவை
சமாதானம் செய்து அழைத்துவருவது.
வேறோடியிருக்கும் தீர்க்கப்படாத பல விசயங்களை
யார் தீர்த்துவைப்பது.
என்னைபோலவே எந்த கேள்விக்கும்
விடையற்றிருக்கிறது வீடும்.

வீடு இடிக்கப்படுவது போல்
கனவொன்று வந்துக்கொண்டிருக்கிறது - அது
நடந்துவிடுமோ என்ற பயம்,
என் உறக்கங்களை தரைமட்டமாக்குகிறது.

வீட்டை எவ்வாறு பிரிப்பார்கள் என்ற கேள்வி
சுண்ணாம்பு அடிக்காத காரை சுவற்றை,
மழைநீர் அரிப்பது போல்,
என்னை அரித்து கொண்டேயிருக்கிறது.

வீடுதானே என்று உங்களை போல்
என்னால் விட்டுச்செல்ல இயலாது. - ஏனெனில்
உங்களுக்கு வேண்டுமானால்
அது வெறும் வீடாக இருக்கலாம்.
எனக்கு அது பிரசிடெண்ட் வீடு.