Saturday 20 July 2013

என் நட்பே!!!!!






ஏதோ ஒரு உணர்வு சட்டென்று திரும்ப சொன்னது
நட்பென்ற சொல்லை எனக்கு புரியவைத்தவள் அதோ…..

நமக்கிடையில் யாரும் இல்லை என்று
ஒரு திமிருடன் நாம் இருந்த நாட்கள் நினைவுகளில்!!!!!
15 வருட நட்பையும் அந்த நட்பு தந்த திமிரையும்
இந்த சில வருட corporate  வாழ்க்கை பிரித்துவிட்டது!!!!!
ஒவ்வொரு நாளும் திருவிழாவாய் இருந்த காலம் மறைந்து
இன்று திருவிழா என்ற சொல்லே மறந்து போனது!!!!!

பெற்றோரிடம் திட்டும் உதையும் வாங்கி
ஒன்றாய் இருவரும் மழையில் நனைந்த நாட்கள் நினைவுகளில்!!!!!
இன்று மழையில் நனையாதே என்று மிரட்ட யாரும் இல்லை
ஏன்?????
மழையை ரசிக்கவே நேரம் இல்லை…..

மாறிப்போன இந்த எந்திர வாழ்வில்,
எந்திரங்களோடு எந்திரமாய் மாறி,
என் இதழும் புன்னகையை மறந்தது!!!!!
என் இரவுகளும் தூக்கத்தை தொலைத்தது!!!!!

ஏதோ ஒரு தேடலை நோக்கியே இருவரும் வெவ்வேறு பாதையை தேர்ந்தெடுத்தோம்!!!!!
ஆனால் இன்று…………………………..
அந்த தேடலே மறந்து போனது…..

உன்னை அணைக்க துடிக்கிறது கைகள்
அடுத்த அடி எடுத்து வைக்க மறந்து போனது கால்கள்!!!!!
கண்ணீரின் சுவை அதை வெகு நாட்களுக்கு பின் உணர்கிறேன் தோழி……

ஒன்றாய் இருவரும் ஆ போட பழகியது முதல்
எத்தனை எத்தனை நினைவுகள்!!!!!
என்றுமே…… நினைவுகளை அசைபோடுவது சுகம் தான்
ஆனால் ஏனோ?????

முதல் முறையாய் உன் நினைவுகளும் என்னுள் ரணமாய்........

குறள் மழை - 8


இந்த பகுதியில் நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான அதிகாரத்தை நாம் காணவிருக்கிறோம். அறத்துப்பாலின் எட்டாவது அதிகாரமும் இல்லறவியலின் நான்காவது அதிகாரமுமான, "அன்புடைமை"

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர்  பூசல் தரும்.

அன்பை மறைக்கவும்  முடியுமோ?
நம்மால் அன்பு கொள்ளப்பட்டவருக்கு
சிறு துன்பம் நேரினும்
நம் விழி வடிக்கும் கண்ணீரே காட்டிவிடுமே!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லை ...
எல்லாம் எனக்கே !!
அன்பு உண்டு......
என் உடலையும் சேர்த்து எல்லாம் உனக்கே!!

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

உடலும் உயிரும் போல
அன்பும் செயலும் இணைந்திருத்தாலே சிறப்பு

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு


அன்போடு உறவாடு ....
அது வெற்று உறவோடு நில்லாது
நட்பு என்னும் சிறந்த செல்வத்தை நமக்கு ஈட்டித் தரும்!

 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு


சிறப்பு அனைத்தும்
சிரந்தாழ்த்தி வந்தடையும்
அன்பு என்னும் மந்திரச் சொல் உரைப்பின்!

அறத்திற்கே அன்புசார் பென்ப  அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

ஒழுக்கச் செயலுக்கு மட்டும் வேண்டுமாம் அன்பு ....
விழுப்புண் தரும் வீரத்திற்கு வேண்டாமா?
வேண்டும்!!!

என்பி லதனை வெயில்போலக்  காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பில்லா புழுவை
வெயிலானது வாட்டி வதைப்பதைப் போல....
அன்பில்லா மனிதனை
அறக்கடவுள் வாட்டி வதைப்பார்!

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பாலைவனத்து மரமும் பூக்குமோ
இலையும் காய்க்குமோ!!
அது போல...
அன்பில்லா நெஞ்சம்
இன்பத்தையும் காணுமோ!!!

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

கண்கள் அழகாய் இருப்பினும்
இதழ்கள் எழிலோடு கொஞ்சினும்
தேகம் எல்லாம் அழகோவியமாய்க் காட்சியளிப்பினும்
என்ன பயன்!!
அன்பு என்னும் அக அழகு இல்லாவிடில்!

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

வெறும் எலும்பும் சதையும் சேர்த்தால்
மனிதன் என பெயரிட்டுவிடலாமா?
இல்லை.....

அன்பு என்னும் அக அழகு பூண்டவனே முழு மனிதன்!!!

குறள் மழை - 7


இந்த பகுதியில் நாம் காணவிருக்கும் அதிகாரம், அறத்துப்பாலின்  ஏழாவது அதிகாரமும் இல்லறவியலின் மூன்றாவது அதிகாரமுமான, "புதல்வரைப் பெறுதல்"


பெறுமவற்றுள்  யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

அறிவும் திறனும் வாய்ந்த பிள்ளையேனும்
பொன்னும் பொருளும் பெரிதோ!
அண்டம் எல்லாம் அலையினும்
இப்பிள்ளைச் செல்வம் எளிதோ!


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட்  பெறின்

பண்பும் பணிவும் நிறைந்த என் மகனை ஈன்றதால்
முப்பிறப்பும் இப்பிறப்பும் எப்பிறப்பும்
பழியும் பிணியும் என்னைத் அண்டா!


தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

என் பிள்ளை என் செல்வம் என்பார் அறிந்தோர்
ஏன் எனில் ,
நம் வினையின் பயனை நாமே பெறுவோம்


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

என் பிஞ்சின் பஞ்சுவிரல்கள்   தொட்டு ஊட்டியக்
கூழும் இனிமையே 
வானோர்கள் கடைந்த அமிழ்தைக் காட்டிலும்!


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம்  செவிக்கு

எம்மகன் அவன் தேகம் தீண்டி
அவனை அள்ளித் தழுவிக்கொண்டதில் 
என் உடல் சிலிர்த்துப்போனேன்....
மழலையில் கொஞ்சித் தவழும் அவன் சொல்லைக் கேட்டு
செவி குளிர்ந்து போனேன்....


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

மூங்கில் கொடுத்த புல்லாங்குழலும்
மேலானவர் தீண்டும் யாழும் இனிதோ!
என் பிள்ளையின் மழலையைக் காட்டிலும்!


தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

அவையில் முதனிலையாம் என் மகன்...
ஆகா! இதனினும் ஒரு நன்றி அவனுக்கு செய்யத் தகுமோ!


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

சான்றோனான என் மகன் !
என்னையும் சேர்த்து
மண்ணுலக உயிர்க்கெல்லாம்
பெருமை சேர்க்கிறான்!
சான்றோனான என் மகன் !


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

கோடி நிலவுகள் என்னை சூழ்ந்ததினும்
பேருவகைப் பெற்றேனடா நீ பிறந்த அக்கணம்!
அதனினும் இன்பம் இப்போது உன்னை
சான்றோன் என  கேட்கும் இக்கணம்!


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கோல்எனும் சொல்.

புண்ணியம் பல செய்தானோ ?
திண்ணிய அறிவுடைய இத்தகையப் பிள்ளையைப் பெற ...
என
எண்ணி எண்ணி அனைவரையும் வியக்க வைப்பான்
நன்றியாய்....

தன்னைச் சான்றோனாக்கிய தந்தைக்கு!