Monday 1 July 2013

ஜுன் மாதம் - கவிதை போட்டி முடிவுகள்


காற்றின் துணையின்றிப் பெய்கிறது மழை என்ற தலைப்பில் கீழே கொடுக்கப்பட்ட 

கவிதைகள் பங்கேற்றன. அதில் நமது அடைமழை நடுவர் குழு பரிசீலித்து முதல் மற்றும் 

இரண்டாவது இடத்தைப் பிடித்த கவிதைகள் அறிவித்தாகி விட்டது.

முதல் பரிசு - படைப்பு - 2 (இன்பா)

இரண்டாம் பரிசு - படைப்பு - 5 (தீபன்)

இருவருக்கும் வாழ்த்துக்கள். பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி...




படைப்பு - 1

உயிர்க் காற்றாய்
உறவுகள்
மழை ஊற்றாய்
அதன் நினைவுகள்,
இடிகள் இடறினும்
மேகங்கள் உருகினும்
மறையாத
மண் வாசம்
மனமெங்கும்
அது வீசும்


காதோடு கதை பேசி
மனதோடு சாரல் வீசும்
காற்றும்,மழையும்
பெயரளவில் பொய்த்துவிட்டதன்
காரணந்தான் நானறியேன்

காற்றைத்
தழுவிய மழை
காலங்கள் கடக்க
ஏனோ,
காற்றின் துணையின்றி
பெய்யப் பழகிக் கொண்டது 


மேகமில்லா வானமும்
சாரலில்லா மையலும்
காதலில்லா காலங்களும்
காற்றில்லா மழையும்
சிந்திக்கவும் சலிக்குமே !

இன்றளவும்,
காற்றின்றி கரைந்துருகும்
கரு மேகங்கள்
மண் தொடுமே
தவிர
மனங்கள் தொடுவதில்லை


காற்றின் கவிதைக்கு
தலையசைக்கும்
கன மழையும்
பளீர் புன்னகையிடும்
புது மின்னலும்
எள்ளி நகையாடும்
இயல்பான இடியும்
முழுதாய் நனைந்து
நாணத்தால்,
முகம் மறைக்கும்
மலரும்,மண்ணும்
பூரண இன்பம்
புகுத்தாதோ புவியினிலே .. ?

ஏற்ற,இறக்கங்களிலும்
இன்ப துன்பங்களிலும்
வீழ்ச்சியிலும்,எழுச்சியிலும்
இடைவிடாது தொடர்ந்து வரும்
இனிப்பான உறவுகளைப் போன்று ...

-                                                                                                                      - கண்ணம்மா


படைப்பு – 2

என் பால்ய காலத்தில்

நடந்திருக்கலாம்…

காற்றுக்கும் காருக்குமான சுயம்வரம்

இடி இடியென கொட்டியது மேளம்

தாய்வீட்டு சீதனமாய்

மழையோடு வந்தாள் மணப்பெண்

பூமியெனும் புக்ககம் தேடி

தேவர்கள் தூவிய அர்ச்சதை எல்லாம்

பூக்களாய் பூத்திருந்தன பூமியெங்கும்…

பிறந்த வீடு சென்றவள்

மணாளனை நாடி

மறு வருகைக்காய் காத்திருந்தாள்…

கருடனின் தேடலைப் போல்

கார் மேகத்தின் தேடலும்….

வாடையாய் வந்து ஜாடையாய் பேசும்

வாயு பகவான் எங்கென்று……

பச்சையாய் வந்து இச்சையாய் பேசும்

இனிய மணாளன் எங்கென்று……

தேடிப் பொய்த்தவள்

தேடி வருகிறாள்

தீராத வேதனையுடன்….

தாபம் கொண்டவள் கோபம் கொண்டாள்

மாருதம் கொன்ற மரங்களின் மீது

மரங்கள் கொய்த மனிதர்கள் மீது….

ஆண் – டாண்டாய் பொய்த்த மழை

அன்றுமுதல்

அபலைப் பெண்ணின்

அழுகையாக பெய்கிறது மழை

ஆங்காரமாய் பெய்கிறது மழை

பெருவெள்ளமாய் பெய்கிறது மழை

பேரிடியாய் பெய்கிறது மழை

கடைசியாய்….

கடைசியாய்…

காற்றின் துணையின்றி பெய்கிறது மழை
-    
                                        - இன்பா



படைப்பு – 3

காற்றில்லாத மழை

சாத்தியமேயில்லை

சூரியனற்ற ஓளி

கற்பனையே...

நெருப்பற்ற புகை

இவ்வுலகில் நடவாது

ஆனால்

நெஞ்சில் ஈரமற்ற

மனிதன்

என்னுடனும் என்னுள்ளும்

நடந்து கொண்டிருக்கிறான்

-                                                                                                     - சராசரி இந்தியன்


படைப்பு – 4

இன்னும் சில துளிகளில்

துயரின்றி தீர இருக்கிறது

இந்த உயிர்...


விட்டுக் கொடுத்தே

பழகிய மனம்,

தட்டி கழித்தே

கிய உடல்

இன்று

உறவுகள் எதுவுமின்றி

தீர இருக்கிறது.


உறவுகள்

ஏதுமற்ற உயிருக்கு

இன்பம் ஏது...

துன்பம் ஏது...


யாருமே இல்லாமல்

யாரிடம் பேச....

ஆகவே பேசிட யாருமே

இல்லாத இடத்திற்கு

போய்க்கொண்டிருக்கிறேன்.


அருகருகே ஆயிரமாயிரம்

கல்லறைகள்

இருந்தென்ன பயன்...

மரித்த பிறகு

பேசிக்கொள்ள முடியாத போது…

ஆகவே

பிசகு ஏதுமில்லை

இப்படி

அனாதைப் பிணமாய்

போவதற்கு....


நெருப்பிலே வெந்து 

கிடக்கும் உடல்  

மீண்டும் நெருப்பிலே

வேக இருக்கிறது…


காற்றின் துணையின்றி

பெய்திடும் மழையின்

மேன்மை போல்

உறவுகளின் அழுகையின்றி

தூறி முடிக்க இருக்கிறது

எனக்கான கடைசி மூச்சு

-                                                                                                                                                                  - விஜய் செ

படைப்பு – 5

அசைவின்றி கிடக்கிறது மரத்தின் இலைகளும் கிளைகளும்
உயிரற்ற சடலத்தைப் போல.

திறக்காமல் காத்திருக்கிறது உனக்கான எனக்கான
ஒரு மொட்டு.

விதைத்தது நானென்றால், வளர்த்தது நீ.

முளையிலேயே கிள்ளியிருந்தால் பூமிக்கு பாரமில்லாமல்
போயிருக்கும்.

இப்போது ஆணி வேர் நீண்டு, துணை வேர்கள் படர்ந்து
மாபெரும் விருட்சமாய் காட்சியளிக்கிறது.

கேட்காத நிழலும் பழமும் தந்து
பூப்பூவாய் சிரித்த அந்த மரம்,

அந்த ஒற்றை மொட்டு பூவாக உன் காற்றுக்கு
காத்திருக்கிறது.

காற்றோடும் மழையோடும் உறவாடிய நம் மரம்
காத்திருந்து காண்கிறது,

காற்றின் துணையின்றி பெய்யும் மழையை,
என் கண்ணீர் மழையை..........

-                                                                                                                                               -தீபன்


படைப்பு – 6

பின்னிரவின்

ஆழ்ந்த அமைதியை

திடிரென கலைத்தது

பதறி படபடத்த

சாளரத்தின் கதவுகள்...


வேகமாய் காற்று

தூரமாய் இடி....

யாருமில்லாத வானத்தில்

மொத்தமாய் குவிகிறது

கருமேகங்கள்...


காற்றில் சிக்கிய தூசிகள்

தெருவெங்கும்

மிதக்க…

மேகத்தை உடைத்து

யோசித்து கொண்டே

தொடங்குகிறது தூறல்...


தரை தொட்ட தூறலால்

வீசத்தொடங்குகிறது

நகரத்து வாசம்...


இரவைப் பகலாக்கும்

பளீரென மின்னல்

அதைத் தொடர்ந்த

மற்றுமொரு பேரிடி

அவ்வளவே

அரைத் தூக்கத்தில்

தெரு விளக்குகள்

அணைந்தது…


கோபமாய் வீசிய

காற்றும் காணமல் போய்

இப்போது

காற்றின் துணையின்றி

பெய்யத் தொடங்குகிறது

ஐப்பசி மழை...


காற்று புயலாகி

புயல் மழையாகி

மழை ஆறாகி

ஆறு குளமாகி

குளம் கடலாகி

வான் மண்ணாகி

இன்னும் நிற்காது

பெய்து கொண்டிருக்கிறது

இந்த காற்றில்லாத

இரவு மழை....


இப்படியே

பெய்யட்டுமே

அதன் ஆருயிர் தீரும் வரை....


-                                                                                                                                                        விஜய் செ

1 comment: