Saturday, 20 July 2013

குறள் மழை - 8


இந்த பகுதியில் நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான அதிகாரத்தை நாம் காணவிருக்கிறோம். அறத்துப்பாலின் எட்டாவது அதிகாரமும் இல்லறவியலின் நான்காவது அதிகாரமுமான, "அன்புடைமை"

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர்  பூசல் தரும்.

அன்பை மறைக்கவும்  முடியுமோ?
நம்மால் அன்பு கொள்ளப்பட்டவருக்கு
சிறு துன்பம் நேரினும்
நம் விழி வடிக்கும் கண்ணீரே காட்டிவிடுமே!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லை ...
எல்லாம் எனக்கே !!
அன்பு உண்டு......
என் உடலையும் சேர்த்து எல்லாம் உனக்கே!!

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

உடலும் உயிரும் போல
அன்பும் செயலும் இணைந்திருத்தாலே சிறப்பு

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு


அன்போடு உறவாடு ....
அது வெற்று உறவோடு நில்லாது
நட்பு என்னும் சிறந்த செல்வத்தை நமக்கு ஈட்டித் தரும்!

 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு


சிறப்பு அனைத்தும்
சிரந்தாழ்த்தி வந்தடையும்
அன்பு என்னும் மந்திரச் சொல் உரைப்பின்!

அறத்திற்கே அன்புசார் பென்ப  அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

ஒழுக்கச் செயலுக்கு மட்டும் வேண்டுமாம் அன்பு ....
விழுப்புண் தரும் வீரத்திற்கு வேண்டாமா?
வேண்டும்!!!

என்பி லதனை வெயில்போலக்  காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பில்லா புழுவை
வெயிலானது வாட்டி வதைப்பதைப் போல....
அன்பில்லா மனிதனை
அறக்கடவுள் வாட்டி வதைப்பார்!

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பாலைவனத்து மரமும் பூக்குமோ
இலையும் காய்க்குமோ!!
அது போல...
அன்பில்லா நெஞ்சம்
இன்பத்தையும் காணுமோ!!!

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

கண்கள் அழகாய் இருப்பினும்
இதழ்கள் எழிலோடு கொஞ்சினும்
தேகம் எல்லாம் அழகோவியமாய்க் காட்சியளிப்பினும்
என்ன பயன்!!
அன்பு என்னும் அக அழகு இல்லாவிடில்!

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

வெறும் எலும்பும் சதையும் சேர்த்தால்
மனிதன் என பெயரிட்டுவிடலாமா?
இல்லை.....

அன்பு என்னும் அக அழகு பூண்டவனே முழு மனிதன்!!!

1 comment:

  1. "அன்புடைமை"
    எனக்கு பிடித்த அதிகாரம்...தெரிந்தது செயல் வகைக்கு அடுத்த படியாக

    ReplyDelete