Wednesday, 12 December 2012

அணிலாடும் முன்றில்



எந்த ஒரு தனி மனிதனைப் பற்றிய பதிவுகளும் ஒரு இலக்கியமே. உறவுகளைப் பற்றி உணர்ச்சிகளின் வழியே நம்மிடம் பகிரப்பட்ட, சமீபத்தில் என்னை மிகவும் ஆட்கொண்ட நா.முத்துகுமாரின் அணிலாடும் முன்றில் தொகுப்பிலிருந்து...

அம்மா
அழுது புலம்பி, நான் அலறிய ராத்திரிகளில் நிலா இருந்தது, சோறும் இருந்தது, ஊட்டத்தான் நீ இல்லை.

அப்பா
நான் பிறந்த 1975-ம் ஆண்டு ஜுலை 12-ம் நாளை முதலில் புரட்டி, என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று ஆர்வத்துடன் பார்த்தேன். சற்றே சாய்ந்த கையெழுத்தில் பேருவைகையுடன் ஒரே ஒரு வரி எழுதி இருந்தீர்கள். இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!’.

தம்பி
அண்ணனின் நிழலில் வளர்வதை எந்தத் தம்பியும் விரும்புவது இல்லை. அண்ணனின் சின்னதாகிப் போன பழைய சட்டைகளை அணிய நேரும்போது எல்லா தம்பியும் சின்னதாகிப்போகிறான். உங்க அண்ணன் சட்டைதானே இது? போன வருஷம் ஏப்ரல் ஃபூலுக்கு வாழைச் சாறு கலந்து, நான் அடிச்ச இங்க் கறை அப்படியே இருக்கு பாருஎன்று அண்ணனின் நண்பன் வழியில் நிறுத்தி விசாரிக்கையில், சின்னதான தம்பியின் உருவம் புள்ளியாகித் தேய்கிறது.

ஆயா
ஆயாவுக்கு இப்ப 92 வயசு. இப்பவும் ஊருக்குப் போனா, அவங்க மடியில படுத்துப்பான். எதுவும் பேசாம இவன் மொகத்த நடுங்குற விரலால தடவிக்கொடுத்துட்டே இருக்கும். இவன் அப்படியே தூங்கிடுவான். கனவுக்குள்ள அது முன்ன சொன்ன கதைகளோட குரல் கேட்கும்.

அக்கா
இப்ப என்னடா பண்ணலாம்?” என்றது அந்த அக்கா.
உனக்கு பிடிச்சிருக்கா?” என்றேன்.
தெரியல... யெஸ் சொல்லவா? நோ சொல்லவா?” என்று தானும் குழம்பி, என்னையும் குழப்பியது.
பேசாம நோ சொல்லிருக்கா!
ச்சீ... பாவம்டா!
அப்ப... யெஸ் சொல்லு!
ஐயோ, பயமா இருக்குடா!
வேணும்னா டாஸ் போட்டுப் பார்க்கலாம்என்றேன்.
நல்ல ஐடியா... நீ கெளம்பு! என்றது.
அன்று காற்றில் ஆடிய நாணயத்தில் இருந்து பூ விழுந்ததா, தலை விழுந்ததா என்று அந்த அக்காவுக்குத்தான் தெரியும். ஆனால், அதற்கடுத்த மூன்றாம் மாதம் அந்த அக்காவுக்கு அவசர அவசரமாகத் திருமணம் ஆனது.

தாய்மாமன்
இப்போது யோசிக்கையில், பால்ய காலங்களில் தகப்பன்களைவிடத் தாய்மாமன்களே எல்லாக் குழந்தைகளையும் அதிக நேரம் தூக்கிவைத்து விளையாடி இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
மாமாவைப்போல ஸ்டெப் கட்டிங் வைத்துக்கொள்வது; பெல் பாட்டம் வைத்த பேன்ட் போடுவது; பின் பாக்கெட்டில் இருந்து சின்ன சீப்பை எடுத்து மாமாவைப்போலவே ஸ்டைலாக இல்லாத மீசையைச் சீவுவது; என மாமாவின் பாதிப்பில் தான் நாங்கள் வளர்ந்தோம்.

அண்ணன்
ஒரு அண்ணனாகச் சொல்கிறேன். அண்ணன்களின் கோபம் தன் தோள்களின் மீது ஏற்றிவைக்கப்பட்ட பொறுப்புணர்வால் வருவது. அண்ணன்களின் ஈரமும் அதே உணர்வின் இன்னொரு வடிவம்தான்.

அத்தை
ஒரு முறை இந்த அத்தைக்குக் கல்யாணமான புதிதில், மாமாவுடன் சினிமாவுக்குப் போகையில் என்னையும் கூட்டிச் சென்றதாம். படம் முடிந்து முனியாண்டி விலாஸில் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கயில், அந்த மாமா இன்னும் ஒரு பிளேட் குஸ்கா குடுங்கஎன்று சர்வரிடம் சொன்னாராம். நானும் சர்வரை அழைத்து, ‘எனக்கும் ஒரு பிளேட் குடுங்கஎன்று கேட்க, அவர் என்ன வேணும்?’ என்று கேட்டாராம். 'அதுதான் இந்த மாமா சொன்னாரே ஏதோ கா... அந்த கா குடுங்கஎன்றேனாம். ஹோட்டலே சிரித்ததாம்.

தாத்தா
பகல் 12 தாண்டியும் சாப்பாடு வரவில்லை என்றால், எதுவும் பேசாமல் அருகில் இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிட்டு வந்து படுத்துவிடுவார். அப்படி அவர் செய்தார் என்றால், அது ஆயாவுக்கும் வீட்டில் உள்ள மாமிகளுக்கும் பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. ஆகையால் அடித்துப் பிடித்து வேலை செய்வார்கள். அதே போல், இரவு 8-க்கு பிறகு யாரும் தொலைக் காட்சி பார்க்கக் கூடாது. ஓசை செய்யாமல் உறங்க வேண்டும். நாங்கள் வளர வளர... தாத்தாவின் இந்த குணம் ஆணாதிக்கத்தின் எச்சமா... அடக்கு முறையின் உச்சமா... ஒழுங்கு முறையின் மிச்சமா எனக் குழம்புவது உண்டு!.

சித்தி
ஒருமுறை நான் மதிய உணவில் உப்பு அதிகம் என்று தட்டைத் தூக்கி சித்தியின் முகத்தில் எறிந்துவிட்டேன். மூக்குத்தியில் தட்டு பட்டு, மூக்கின் சில்லு உடைந்து ரத்தம் வந்த பிறகு தான் என் தவறு புரிந்தது. சித்தி எதுவும் சொல்லாமல் பழைய சேலையில் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு இருந்தது. அப்பா என்னை அடிக்கக் கை ஓங்கியவர். என்ன நினைத்தாரோ... அப்படியே பின்வாங்கி உள்ளே சென்றுவிட்டார். குற்ற உணர்வில் அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.

தங்கை
மிகச் சாதரணமாய் கேட்டுவிட்டாய் நண்பா,
உனக்கென்ன
அக்காவா? தங்கையா?
கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர,
ஒரே பையன்என்று.
எனில்
கஷ்டப்பட்டுச் சம்பாதித்து
கல்யாணம் பண்ணித் தர மட்டுமா
அக்காவும் தங்கையும்?

பங்காளிகள்
காரியம்னா, பங்காளிங்க மீசை-தாடியை எடுப்பாங்க. நீங்க எடுப்பீங்களா?”
நிச்சயமா...என்றேன்.
நம்ம கல்யாணத்துக்குக்கூட நீங்க தாடியை எடுக்கல...என்றாள் ஊடலாக.
அது வேற... இப்ப நான் பங்காளி என்றேன்.
ஆமாம், நல்ல பங்காளிஎன்றாள் சிரித்தபடி.

பெரியம்மா
நீங்க லீவுக்கு எங்கப்பா போனீங்க?” என்றான்.
எங்க பெரியம்மா வீட்டுக்கு! என்றேன்.
லண்டனா?” என்றான்.
அம்பத்தூர்!என்றேன்.
அது எங்க இருக்கு?” என்றான்.
நெஞ்சில் கைவைத்து இங்க இருக்கு! என்றேன்.
மகன் புரியாமல் விளையாட சென்றான்.

மாமன்கள்
இந்தா வெச்சுக்க!என்று 20 ரூபாய் கொடுப்பார். இவன் மறுத்தாலும் பாக்கெட்டில் திணிப்பார். அவருக்கு தெரியாமல் அத்தை கொடுத்த 100 ரூபாய் ஏற்கனவே பாக்கெட்டில் இருக்கும். அந்த 100 ரூபாயில் அவரது விரல்கள் உரசுகையில், இவன் நெஞ்சை ஒரு குற்ற உணர்வு உரசும்.

முறைப் பெண்கள்
இன்னிக்கும் என் பொண்டாட்டிய நான் தொடும்போதெல்லாம் அந்தப் புள்ளகிட்ட மன்னிப்பு கேட்டுட்டுதான் தொடுறேன்.

சித்தப்பா
தெருமுனை டீக்கடை மறைவில் சிகரெட் பிடித்துக்கொண்டு இருக்கையில், அவ்விடத்தில் தற்செயலாக எதிர்ப்படும் சித்தப்பாவின் கண்கள் கண்டும் காணாததுபோல் விலகிச் செல்லும் மர்மம் தோழமை அன்றி வேறு என்ன?

அண்ணி
அண்ணியின் தங்கை, வீட்டுக்கு வருகையில் நம்மை அறியாமல் ஒரு குறுகுறுப்பு நம்மை தொற்றிக்கொள்கிறது. அத்தனை ஜாக்கிரதையாக இருந்தும் அண்ணியின் கண்கள் அதை அறிந்து, “ அவ எப்பவுமே க்ளாஸ் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூ முடிச்சதும் நிச்சயம் டாக்டருக்கு படிப்பா, நீயும் நல்லாப் படி... வீட்ல பேசறேன்என்று சொல்கையில், அதுவரை புரியாத அல்ஜீப்ரா கணக்குகளுக்கு எல்லாம் புதிய புதிய விடைகள் தோன்றுவதை யாரால் தடுக்க முடியும்?

மைத்துனன்
பையன்: ஏன் தாத்தா மச்சானுங்கதான் இடுப்புக் கயிற புடிக்கணும்னு சொல்றீங்க?”
முதியவர்: ஏலே... உங்க அக்கா புருஷன் உசுரோட அரும மத்தவனைவிட உனக்குத்தான்லே அதிகம் தெரியும். காலகாலமா நம்ம தூத்துக்குடில இதுதான் வழக்கம்.


மனைவி
முத்தம் கொடுஎன்று நான் கேட்க; முடியாதுஎன்று நீ வெட்கப்பட; ‘அச்சம் தவிர்என்று நான் சொல்ல; ‘ஆண்மை தவறேல் என்று சிரித்தபடி நீ பதில் சொல்ல; அய்யோ! என் கண்ணம்மா என்னை விடச் சிறந்த கவிஞர் நீதானடி.

மகன்
கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால், இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. உறவுகளிடம் நெருங்கியும் இரு, விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும் 



யோகி

No comments:

Post a Comment