Wednesday, 12 December 2012

பர்ஃபி




போன மாத இறுதியில் பார்த்த ஒரு சிறப்பான படம். இயக்குநர் அனுராக் பாஸூ. இந்த படத்தைப் பற்றி சில மாதங்களுக்கு முன் ஆனந்தவிகடனில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியிருந்தார். அதைப் படித்த போதே எனக்கு இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பொதுவாக எனக்கு இந்தி படங்களைப் பார்ப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஹிந்தியைக் கொண்டு ஓரளவிற்கு இவர்கள் இதைத்தான் சொல்ல வருகிறார்கள் என்பதை யூகித்துவிடுவேன், இருந்தாலும் அதன் வசனங்களின் உட்பொருள் உட்பட அனைத்தையும் சரியாக புரிந்து கொள்ள முடியாததால், அந்த படத்தை முழுமையாக பார்த்த திருப்தி ஏற்படுவதில்லை. மீண்டும் சில மாதங்கள் கழித்து சப்டைட்டிலுடன் குறுந்தகடில் பார்க்கும் போதுதான் பல விசயங்கள் புரியும், ஆனால் அந்த சிக்கல்கள் இந்த திரைப்படத்தில் இல்லை.
       
ஏனென்றால் படத்தின் புரோட்டகோனிஸ்ட் என்று சொல்லப்படும் முக்கிய கதாபாத்திரங்களான பர்ஃபி (ரன்பீர் கபூர்) ஒரு வாய் பேசமுடியாத காது கேட்காத கதாபாத்திரம், கில்மில் (பிரியங்கா சோப்ரா) ஆட்டிச குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம். எனவே இங்கு வசனங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை. பெரும்பாலும் கதை சொல்லல் என்பது காட்சிகளின் மூலமே நிகழ்கிறது. காட்சிகளின் ஊடான கதையாடலுக்கு ஒரு சரியான தளம் அமைந்திருக்கிறது. அதை அனுராக் பாஸூவின் குழுவினர் மிகச் சரியாக பயன்படுத்தி உள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
      
சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம்... அதில் காட்டப்படும் காட்சியே அங்கே நடக்கும் கதையை விளக்கமாக பார்வையாளனுக்கு உணர்த்திவிடும். அதை மீறிய வசனங்கள் என்பது மிகக்குறைவான இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விதி... ஆனால் அதை எல்லாம் இன்னும் தமிழ்சினிமாவில் (ஏன் பெருவாரியான இந்திய சினிமாவில் கூட..) கொண்டு வரமுடியவில்லை என்பது நம் தலைவிதி. விதிவிலக்காக சில படங்கள் அமையும்... அதில் இந்த பர்ஃபிக்கும் நிச்சய இடம் உண்டு.
   
கதையை ஒருவரியில் சொல்வதென்றால் பிறவியிலேயே காது கேட்காத வாய் பேசமுடியாத ஒரு இளைஞன், பிறவியிலேயே ஆட்டிச குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், எந்தவிதமான உடல் குறைபாடும் இல்லாத மற்றொரு பெண்... இவர்கள் மூவரையும் பிணைத்து இழுத்துச் செல்லும் வாழ்வியல் நீரோட்டமே இந்த பர்ஃபி.

முக்கியமாக பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால்... இந்த உடல் குறைபாடுள்ள கதாபாத்திரங்கள் எந்த இடத்திலும் கேலிக்குரிய கதாபாத்திரங்களாகவோ அல்லது பரிதாபத்துக்குரிய கதாபாத்திரங்களாகவோ சித்தரிக்கப்படுவதில்லை. இவர்களது உடல் பலகீனத்தைக் காட்டி நம்முடைய கண்களில் இருந்து கண்ணீரை எப்படியாவது பிடுங்கி காசு பார்க்க வேண்டும் என்கின்ற ரீதியில் எடுக்கப்பட்ட காட்சிகள் இப்படத்தில் இல்லவே இல்லை. அவர்களின் வாழ்க்கை அச்சு அசலாக காட்டப்படுகிறது. அவர்கள் அவ்வாறு பிறந்ததற்காக எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அவர்கள் அந்த குறையை கண்டு கொள்ளாமல் சர்வ சாதாரணமாக வாழ்க்கையின் தருணங்களை கடந்து செல்ல முயல்கிறார்கள். அதுதான் யதார்த்தம்அந்த யதார்த்தம் இங்கு பதிவாகிறது.
 
இன்னும் சொல்லப்போனால் எந்தவிதமான உடல்குறைபாடும் இல்லாமல் இருக்கின்ற இலியானா கதாபாத்திரம் தனக்கான சந்தோசத்தை பர்ஃபியிடம் தேடி வருகிறது. என்னவொரு அற்புதமான கருத்தியல் கோட்பாடு... உடல் குறைபாடு இல்லாத மனிதர்களின் வாழ்க்கை மட்டும் எப்போதுமே சந்தோசமாக அமைந்துவிடுவது இல்லை. அதுபோலத்தான் அதன் எதிர்பதமும்... அதைப் புரிந்து கொண்டு ஒரு மிகச்சிறப்பான படத்தைக் கொடுத்த இந்த குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.





நீங்கள் இந்தப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். நீங்கள் படத்திற்கு செல்வதற்கு முன்னர் சில விசயங்களை உங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு படத்திற்கு செல்லுங்கள். அப்போது படத்தை இன்னும் சற்று அதிகமாக ரசிக்க முடியும். ஒரு வாய் பேசமுடியாத இளைஞன், அவன் யாரையாவது அழைக்க வேண்டும் என்றால் எப்படி அழைப்பான்…? நான் உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன் என்பதை எப்படி தெரிவிப்பான்..? அவசரத்திற்கு அவனை அழைக்க வேண்டும் என்றால் பிறர் என்ன செய்வார்கள்..? அவனுக்கு காது வேறு கேட்காது அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவன் வீட்டில் அழைப்பு மணியின் பயன்பாடு எத்தகையதாக இருக்கும்..? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு குறும்பாகவும் புத்திசாலித்தனமாகவும் பதில் சொல்லி இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளையும் தைரியமாக அழைத்து செல்லுங்கள்அவர்களும் படத்தை ரசிப்பார்கள் அவர்களோடு சேர்ந்து நாமும் புரிந்து கொள்ளலாம் உடல்குறைபாடுள்ள மனிதர்களின் உலகத்தை

குறையென்று சொல்லவேண்டும் என்றால் ஆரம்பகாட்சிகளில் வரும் ரன்பீர் கபூர், இலியானா காதல் தொடர்பான காட்சிகள் ஒட்டவே இல்லை. யதார்த்த மீறல்களாகவே தெரிகின்றன. போலீஸ் பர்ஃபியை துரத்தும் காட்சிகளும், போலீஸ் அதிகாரியின் சில கிறுக்குத்தனமான நடவடிக்கையும் நாடகத்தன்மையில் இருக்கின்றன. லேம்ப் போஸ்ட்டில் எத்தனை தடவை மோதி விழுந்தாலும் சிறு காயம் கூட அடையாத நாயகன்போன்ற காட்சிகள் இது போன்ற படத்திற்கு தேவையே இல்லையென்றே தோன்றுகிறது. அது போன்ற காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

சிறு குழந்தையின் கையில் உள்ள சாக்லேட்டை சாப்பிடும் நாயகன், சிலை திறப்பு விழாவில் சிலையின் கைகளில் படுத்திருக்கும் நாயகன் போன்ற காட்சிகள் சார்லி சாப்ளின் வகைப்படங்களை நினைவு படுத்துவதாலும், ரன்பீரும் பிரியங்காவும் காரை நிறுத்துவதற்கு செய்யும் முயற்சிகள், போன்றவை கிக்கிஜிரோவில் இருந்து உருவப்பட்ட காட்சிகள் என்று அப்பட்டமாக தெரிவதாலும் பிற நல்ல நல்ல காட்சிகளையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது..

ரன்பீரும், பிரியங்காவும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்இலியானாவுக்கு அறிமுகமே சொல்லிக் கொள்ளும் படி அமைந்திருக்கிறது. வெகு நாளைக்கு பிறகு அழகாக தெரிகிறார் இலியானா. ரவிவர்மனின் பிரமிக்க வைக்கும் உழைப்பும், ப்ரதீமின் மிகச்சிறப்பான பிண்ணனியிசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.. பல இடங்களில் பர்ஃபியின் உணர்வுகளை நம்மிடையே கடத்தும் பணியை வெகு சிறப்பாக செய்கிறது. நான்லீனியர் கதை சொல்லும் முறை இப்படத்திற்கு சில இடங்களில் சிறப்பாக உதவி இருக்கிறது.

கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். நீங்களும் என்னைப் போல் ஹிந்தி தெரியாத ஆளாக இருந்தாலும் பரவாயில்லை..., தைரியமாக சென்று வாருங்கள்... உங்களுக்கு எதுவுமே புரியாமல் போகாது என்பதற்கு நான் கேரண்டி



இன்பா

No comments:

Post a Comment