Wednesday 12 December 2012

பாவ நகரம் - முகவுரை




ஒரு அமைதியான இரவு:

அந்த இரவின் அசாதாரண அமைதி அவனது வயிற்றில் ஏதோ ஒன்றை உருட்டிக் கொண்டிருந்தது. அந்த இருளின் அடர்த்தியான அமைதி மட்டுமே அவனுக்கு துணையாக இருக்கிறது. தெரு நாய்கள் அந்த அமைதியை குலைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. அவன் தன் காலடி சத்தத்தை வைத்து அமைதியை குலைக்க விரும்பவில்லை அதனால் அவன் மெதுவாகவே நடந்தான். அவன் கடிகாரம் அதிகாலை இரண்டு மணி என சிரித்தது. அவன் தன் பையை மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான்அவன் தன் மொபைல் போனை அனைத்த போது நீண்ட சாலையின் ஒரு திருப்பத்தை அடைந்திருந்தான்.

எப்போதும் பெரிய நகரங்களில், இரவு முழுவதும் போலீஸ் வாகனங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அத்திருப்பத்தில் அவனும் ஒரு போலீஸ்  வாகனத்தை எதிர்கொண்டான். அதனுள் ஒரு ஓட்டுநரும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இருந்தனர். இரவில் சந்தேகத்திற்கு உரிய முறையில் சுற்றுபவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்கள் முகவரியை சேகரித்து அனுப்புவார்கள். சில நேரங்களில் அவர்களை அதிகாலை வரை உட்கார வைத்து, பின்னர் அனுப்புவார்கள். இன்று டிரைவர் சேகரும்,  S.I. ரம்யாவும் அப்பணிக்கு அனுப்பபட்டனர்.

தனியாக நடந்து வரும் அவனை போலீஸ் ஜீப்பில் இருந்த இருவரும் கவனித்தனர். சேகர் அவனை கையசைத்து கூப்பிட்டான். அவன் அருகில் வந்ததும்யார் நீ? எங்கு செல்கிறாய்என கேட்டான். அவன் ஹிந்தியில் ஏதோ பேசினான். சேகர் மீண்டும் அதே கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டான். ஆனால் அவன் ஹிந்தியில் மட்டுமே பேசினான். ரம்யா அவனை ஜீப்பில் ஏற்றுமாறு சைகை செய்தாள். சேகர் அவனை பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு அந்த போலீஸ் ஜீப்பை பகுதி 1 போலீஸ் நிலையத்தை நோக்கி ஓட்டினான். அந்த ஜீப்பில் ஏற்கனவே அவனைப் போன்ற மூன்று பேர் அமர்ந்திருந்தனர்.

காவல் நிலையத்தில் நால்வரையும்வாங்கடா! போய் மூலைல உக்காருங்கஎன வரவேற்றார் வெங்கடேசன், தலைமை காவலர். நால்வரும் ஓரமாக நின்றனர். வெங்கடேசன் ஒரு அரசியல்வாதி போல் உடையணிந்த மனிதனிடம் ஏதோ முக்கியமான விஷயமாக பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அரசியல்வாதி போலிருந்த மனிதர் தனது பாக்கெட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த கவரை ஒப்படைத்தார். அந்த மனிதன் சென்ற பின் வெங்கடேசன் ஒவ்வொருவராக அழைத்தார்.

ஒவ்வொருவரும் வெங்கடேசனிடம் சென்று தங்களது விவரங்களை கொடுத்தனர்அவர்களது பெயர் மற்றும் முகவரியை சேகரித்தப் பின்னர், வெங்கடேசன் அவர்களது சட்டைப் பைகளிலிருந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். இறுதியாக இவன் முறை வந்தது. அவன் இந்தியில் பேசிய போது, வெங்கடேசன் முதலில் அவனை ஏற இறங்கப் பார்த்தார். பின்னர் தமிழ்  ஆங்கிலமாவது பேச தெரியுமா? என கேட்டார். அவன் இல்லையென தலையசைத்தான்வெங்கடேசன் அவரே ஒரு பெயர், முகவரியை எழுதிக் கொண்டு வழக்கம் போல் அவனது பாக்கெட்டில் கை வைத்தார். அதில் ஒரு பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தது. அவனை போகுமாறு வேகமாக சைகை செய்தார்.

அவன் சென்ற பின் வெங்கடேசன் ஒரு பையைப் பார்த்தார். அது அந்த 4 பேரில் ஒருவனின் பை என்பதை யூகித்தார். காலை வீட்டுக்கு செல்லும் போது அதை எடுத்து செல்லலாம் என மறைத்து வைத்து விட்டு அடுத்து வந்த சிலரின் முகவரியை வாங்க ஆரம்பித்தார்.

அவன் காவல் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பின் ஒரு சொகுசு கார் வந்து அவனை அழைத்துச் சென்றது. அவன் தான் அணைத்து வைத்திருந்த செல் போனை மீண்டும் உயிர்ப்பித்தான். உயிர்ப்பித்தவுடன் அது சில குறுந்தகவல்களை கக்கியது. அவனைப் போலவே அவர்களும் ஒவ்வொரு பையை வேறு காவல் நிலையங்களில் விட்டு விட்டு வந்திருந்தனர். அவன் ஒரு எண்ணுக்கு டயல் செய்து எதையோ பேசிவிட்டு, பின் மீண்டும் அந்த எண்களுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினான்.
      
      “From tomorrow this sin city will start paying for its sins”

அதைப் படித்தப் பின் அனைத்து செல் போன்களும் அணைக்கப்பட்டன. அமைதியான வழியில் வேகமாக பயணித்த அந்த சொகுசு காரைப் பார்த்து நாய்கள் குலைக்கத் தொடங்கின.



தொடரும்_ _ _ _ _

.சராசரி இந்தியன்

2 comments: