Tuesday 23 December 2014

யாழிக்கு கவிதைகள்



  
நித்திரையில்லா நிசியொன்றில்,
வெட்டவெளியை வெறித்திருக்கையில்,
பிரபஞ்சத்தின் பிடரியில்
ஒரு மிகமிகச்சிறிய
துகளெனவிருக்கும் நிலவுஎன்
விழிகளுக்குள் நிறைந்திருப்பதைபோல்
என் நினைவு நியூரான்களின் நீட்சிகளுக்குள்
நீயே நிறைந்து நிற்கிறாய்

அணுக்களுக்கு நிறை தரும்
துகளை கண்டறிந்துஅதற்கு
கடவுள் துகள் என்று
பெயரும் இட்டதைபோல்
என் காதலுக்கு நிறை தரும்
உன்னை கண்டறிந்து
நான் யாழி என்று
பெயரும் இட்டுக்கொண்டேன்.

நறுசிறு நாலுமணி பூவை போல
மெல்ல மலர்ந்து
என்னுள் நிறைந்து
என்னை முழுதாய் ஆட்கொண்டது
நம் காதல்.
யார் கண்பட்டதோ
பெருவெடிப்பு நடந்த பால்வெளியாய்
துகள்துகளாய் சிதறி கிடக்கிறதின்று.

ஈர்ப்புவிசையில்லா விண்வெளியில்
நிறையில்லை பொருட்களுக்கு.
காதல்விசையில்லா நானும் அப்படியே
நிறையற்றவனாய்
நிராகரிக்கப்பட்டவனாய் நிற்கிறேன்.

இணைவதும் பிரிவதும்
அதன் விளைவுகளுமே அறிவியல்.
இணைவதும் பிரிவதும்
அதன் விளைவுகளுமே காதல்.
இணைவதும் பிரிவதும்

அதன் விளைவுளுமே நாம்.

Thursday 11 December 2014

RIP - 63*





இதுவே என் தீயிடம்
இனிமேல் இங்கே தூறிடும்

இதுவே என் ஓய்விடம்
இதயம் இங்கே தூங்கிடும்

இதுவே என் போரிடம்
புழுவும் என்னை கூரிடும்

யாக்கை வெந்து தீரவே
காக்கை வந்து கூடிடும்

மண் சூழ்ந்து மூடவே
கண் கூர்ந்து தேடிடும்

அனலாகி எரிந்த பின்னே
தாகங்கள் எடுக்குமோ

மண்ணாகிப் புதைந்த பின்னே
மாற்றங்கள் நிகழுமோ

இரவும் முடிந்தது

விதியும் முடிந்தது

கனவும் கரைந்தது

திதியும் கரைந்ததுவோ


பாரதி-கண்ணம்மா








கண்ணம்மா : நீ வசிக்க உனக்கு நிரந்தர இடமில்லை.

பாரதி : காணி நிலம் தானே, அதை பராசக்தி பார்த்து கொள்வாள்.

கண்ணம்மா : உனக்கென ஒரு வேலை இல்லை

பாரதி : கவிதை எம் தொழில்.

கண்ணம்மா : அடுத்த வேளை உனக்கு உணவு இல்லை.

பாரதி : கவலையை விடு, இச்சகத்தினை அழித்திடுவோம்.

கண்ணம்மா : நீ தனியொரு மனிதன்.

பாரதி : நான் அக்கினி குஞ்சு, ஒரு காட்டினை எரிக்க இது போதும்.

கண்ணம்மா : உன் உயிருக்கு விலை வைத்திருக்கிறார்கள்.

பாரதி : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை,
இச்சகத்தி ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

கண்ணம்மா : உனக்கு உன்னைப் பற்றி கவலையே இல்லையா?!

பாரதி : என்னை கவலைகள் தின்ன தகாதென, நான் நின்னை சரணடைந்துவிட்டேன்

கண்ணம்மா :   ஏன் யாருக்குமே இல்லாத விடுதலை வேட்கை உனக்கு மட்டும்..!?

பாரதி : தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ? – என் கண்ணம்மா
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோடீ?

கண்ணம்மா :   இல்லையடா இல்லவேயில்லை...,
தாய்க்கு பெருமிதம், தன் மகனை சான்றோன் என கேட்டல், உனக்கு பெருமிதம், தேன் வந்து பாயும் செந்தமிழ் நாடு, எனக்கு பெருமிதம் நான் உன்னோடு கொண்ட மருவ காதல். மீண்டும் உன்னிடம் ஒருமுறை கேட்கிறேன், இங்கே, இப்புவியிலே, உன்னை போல வாழ்வதற்கு வல்லமை தாராயோ..?

பாரதி : நேர்பட பேசு, ரௌத்திரம் பழகு, இனியொரு விதிசெய்.

கண்ணம்மா : சரி, சென்று வா, ஆனால் ஆசை முகம் மறையும் முன்பே மீண்டும் வந்துவிடு.

பாரதி : சாத்திரம் பேசுகிறாய் – கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ?
ஆத்திரங் கொண்டவர்க்கே – கண்ணம்மா!
சாத்திர முண்டோடி?
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்புசெய்வோம்
காத்திருப் பேனோடீ? – இது பார்,
கன்னத்து முத்த மொன்று!