Tuesday 23 December 2014

யாழிக்கு கவிதைகள்



  
நித்திரையில்லா நிசியொன்றில்,
வெட்டவெளியை வெறித்திருக்கையில்,
பிரபஞ்சத்தின் பிடரியில்
ஒரு மிகமிகச்சிறிய
துகளெனவிருக்கும் நிலவுஎன்
விழிகளுக்குள் நிறைந்திருப்பதைபோல்
என் நினைவு நியூரான்களின் நீட்சிகளுக்குள்
நீயே நிறைந்து நிற்கிறாய்

அணுக்களுக்கு நிறை தரும்
துகளை கண்டறிந்துஅதற்கு
கடவுள் துகள் என்று
பெயரும் இட்டதைபோல்
என் காதலுக்கு நிறை தரும்
உன்னை கண்டறிந்து
நான் யாழி என்று
பெயரும் இட்டுக்கொண்டேன்.

நறுசிறு நாலுமணி பூவை போல
மெல்ல மலர்ந்து
என்னுள் நிறைந்து
என்னை முழுதாய் ஆட்கொண்டது
நம் காதல்.
யார் கண்பட்டதோ
பெருவெடிப்பு நடந்த பால்வெளியாய்
துகள்துகளாய் சிதறி கிடக்கிறதின்று.

ஈர்ப்புவிசையில்லா விண்வெளியில்
நிறையில்லை பொருட்களுக்கு.
காதல்விசையில்லா நானும் அப்படியே
நிறையற்றவனாய்
நிராகரிக்கப்பட்டவனாய் நிற்கிறேன்.

இணைவதும் பிரிவதும்
அதன் விளைவுகளுமே அறிவியல்.
இணைவதும் பிரிவதும்
அதன் விளைவுகளுமே காதல்.
இணைவதும் பிரிவதும்

அதன் விளைவுளுமே நாம்.

No comments:

Post a Comment