Thursday 17 January 2013

இலட்சங்களில் ஒருவன் - நேதாஜி

“நாட்டிற்காக இரத்தம் சிந்தத் தயாராக இரு; விடுதலை நான் வாங்கித் தருகிறேன்”
“அநீதிகளையும், தவறுகளையும் தட்டிக்கேட்காமல் அமைதியாய் இருப்பதே மிகப் பெரிய குற்றம்”
“மனிதனுக்கு மிகப்பெரிய சாபம் அடிமையாய் கிடப்பதே”
“அடிமைக்கு எதிரான போரில் உயிர் இழப்பது நாட்டிற்கு நாம் செய்யும் உன்னத கடமை”
“சுதந்திரம் என்பது அடிமைபடுத்தியவனிடம் கேட்டுப்பெறுவதல்ல; அவனிடமிருந்து எடுத்துகொள்வது”
“வரலாற்றில் உண்மையான மாற்றம் இதுவரை பேச்சுவார்த்தை மூலம் வெற்றியடைந்ததில்லை”
                               
மேலே எழுதப்பட்ட அத்தனை வாசகங்களும் மாவீரன் நேதாஜி நமக்காக விட்டுச் சென்றவை...

ஜெய்ஹிந்த் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் நமக்குள் ஏன் என்றுமில்லாத வீரம் வருகின்றது. அந்த வார்த்தைக்குள் அப்படி என்ன இருக்கிறது. ஒரே ஒரு காரணம் தான்……….. அது நேதாஜியின் தாரக மந்திரம்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் என்ற உயரிய பதவியை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையின் பல நாட்கள் மாறு வேடங்கள் தரித்து காடுகளில் பதுங்கியும், இந்திய விடுதலைக்கு அண்டை தேசங்களில் ஆதரவு திரட்டியும் அவர் பட்ட பாடு உண்மையில் மிகவும் கொடியது....

எந்த ஒரு இந்தியத் தலைவர்களின் துணையுமின்றி தனி ஒருவராய் இந்திய தேசிய ராணுவத்தை (INA) உருவாக்கி ஆங்கிலப் படைகளை ஓட ஓட விரட்டிய இரும்பு மனிதர்.
அவரைப் பற்றி தமிழினி பதிப்பகம் வெளியிட்ட "இமயத் தியாகம் என்ற நூலைப் புரட்டும் போது நானும் அவருடன் ஒருவராய் அந்த உறை பனிக் காடுகளில் சுற்றாத நாள் கிடையாது.

பிறகு கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "மர்மங்களின் பரம பிதா" என்ற புத்தகம் அவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டியது. அவரின் வீர உரைகளை யூடியுப் தளத்தில் தேடித்தேடி கேட்டிருக்கின்றேன்.
இந்த மகா மனிதரின் வாழ்வியலை என்னால் முடிந்த அளவு இங்கே கொடுக்க முற்பட்டிருக்கின்றேன்


சுபாஷ் சந்திர போஸ் ஒரிசா மாநிலம், கட்டாக் நகரில் ஜனவரி 23, 1897 அன்று பிறந்தார். அவரது தந்தை ஜானகிநாத் போஸ் ஒரு பிரபல வழக்கறிஞர், அவரது தாயார் பிரபாவதி தேவி. சுபாஷ் சந்திர போஸ் பதினான்கு உடன்பிறப்புகள் மத்தியில் ஒன்பதாவது குழந்தையாக பிறந்தார். போஸ் குழந்தைப் பருவத்தில் இருந்தே அதி புத்திசாலி.  அவர் கல்கத்தா மாகாண மெட்ரிக் தேர்விலும், கல்கத்தா ஸ்காட்டிஷ் தேவாலய கல்லூரியில் தத்துவங்கள் பிரிவிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அவர் சுவாமி விவேகானந்தாவின் போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு பிறகு அவரையே குருவாக ஏற்றுக்கொண்டார். விவேகானந்தரின் மதிப்பு மிக்க சீடராக போஸ் அறியப்பட்டார். பெற்றோர்களின் ஆசைக்கு இணங்கி, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்விற்காக 1919ல் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் அவர் 1920 ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் பங்கேற்று, தகுதி வரிசையில் நான்காவது இடம் பிடித்தார். எனினும், சுபாஷ் சந்திர போஸ் ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவத்தால் ஆழமாக பாதிக்கப்பட்டு, தனது சிவில் சர்வீசஸ் தொழிற்பயிற்சியை பாதியில் விட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.



இந்தியா திரும்பிய பின்னர் மகாத்மா காந்தியின் செல்வாக்குடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காந்தியடிகளின் அறிவுறுத்தல்களின் படி, நேதாஜியின் அரசியல் குரு தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் கீழ் தனது வேலையைத் தொடங்கினார். படிப் படியாக பல பொறுப்புகளை தானே முன் வந்து ஏற்றுக் கொண்டு விரைவில் அவர் தனது தலைமைப் பண்பினை மெய்ப்பித்து காட்டி காங்கிரஸ் கமிட்டியின் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெற்றார். சுபாஷ் சந்திர போஸ் 1930 இல், சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு கைது செய்யபட்டார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அவர் 1931 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தினை நேதாஜி முற்றிலுமாக எதிர்த்தார். காந்திக்கும் போஸ்சுக்கும் கருத்து வேறுபாடு ஆரம்பித்தது. அதே சமயம் பகத்சிங் மற்றும் அவரின் நண்பர்களின் தூக்கு விசயத்தில் காந்தியின் போக்கு பிடிக்காமல் போனது. காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்யையும் அவரது கூட்டாளிகளையும் தூக்கிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் என்று நேரடியாக கோபம் கொண்டார் போஸ்.

பகத்சிங்கை காந்தியும், காங்கிரஸ் கட்சியும் காப்பாற்றத் தவறியது போஸ்க்கு ஆத்திரத்தை மூட்டியது. புரட்சியினால் மட்டுமே விடுதலை பெறமுடியும் என்ற முடிவுக்கு போஸ் வர இதுவும் ஒரு காரணமாகியது. காந்தி நடத்தும் பேச்சுவார்த்தை கூட்டங்களை வேண்டுமென்றே போஸ் தவிர்த்தார். 1932ல் ஒத்துழையாமை போராட்டத்தில் மீண்டும் சிறைவாசம். சிறையில் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளானார். பின்பு 1933ல் விடுதலை செய்யப்பட்டு அங்கிருந்து ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு தான் எமிலி என்ற பெண்ணின் நட்பு அவருக்கு கிடைத்தது.
      
1934ல் போஸின் தந்தை இறந்ததால் மீண்டும் இந்தியாவிற்கு புறப்பட்டார். தந்தையின் ஈமச்சடங்குகள் முடிந்தவுடன் மீண்டும் ஆஸ்திரியாவிற்கு திரும்பினார். அந்த சமயங்களில் தான் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஹிட்லர், முசோலினி ஆகியோரை சந்தித்து பேசினார்.  இரண்டு ஆண்டுகள் ஐரோப்பாவில் தங்கியிருந்த போஸ் 1936ல் இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்தார். அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என்று ஆங்கில அரசு அறிவித்தது. ஆனால் போஸ் அதையும் மீறி இந்தியா வந்தார். இம்முறை தன் அண்ணன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். போஸை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எதிரொலித்தது. 1937ல் போஸ் விடுவிக்கப் பட்டார். 1937ல் எமிலியை திருமணம் செய்து கொண்டார். 1938ல் நடைபெற்ற காங்கரஸ் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும்படி காந்தி போசுக்கு ஆணையிட்டார். பிறகு தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். அப்போது அவருக்கு வயது வெறும் 41 தான்.

1939 இரண்டாம் உலகப்போர் ஆரமித்த சமயம் அது. தலைவர் பதவிக்கு பிறகு போஸின் ஐரோப்பிய பயணத்தை ஆங்கில அரசு கண்காணித்தது. போஸின் போக்கு பிடிக்கவில்லை என்று வைஸ்ராய் காந்திக்கு எச்சரித்தார். போஸ் தலைவராக இருக்கும் பொருட்டு விடுதலை பற்றி என்னிடம் பேசாதிர்கள் என்று காந்தியை பயமுறுத்தினார் வைஸ்ராய். இரண்டாம் உலகப்போர் மூண்டு விட்ட நிலையில் பிரிட்டன் தனது நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டி இருக்கும் சமயம் நம்முடைய போராட்டத்தை வலுப்படுத்தினால் விடுதலை நிச்சயம் என்று போஸ் நினைத்திருந்தார். அந்த திட்டம் காந்திக்கு அறவே பிடிக்கவில்லை. 1940ல் போஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுவே அவர் பார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியை ஆரம்பிக்க வழி வகுத்தது. விடுதலைக்காக ராணுவம் அமைத்து போராடுவதாக போஸ் பிரகடனம் செய்தார். 1940ம் ஆண்டு ஜூன் மாதம் போஸ் பம்பாய் சென்று வீர் சாவர்க்கரை சந்தித்து பேசி விடுதலைக்கு இந்தியாவின் வெளியே இருந்து படைகள் திரட்டி போரிடுவோம் என முடிவெடுத்தார்.



முசோலினியை சந்தித்தார், ஹிட்லரை சந்தித்தார் என்றெல்லாம் காங்கிரஸார் குற்றம் சாட்டினார்கள். போஸ் ஜெர்மனை ஆதரிக்க ஒரே காரணம் தான். ஜெர்மன் பிரிட்டனின் பரம எதிரி. எதிரிக்கு எதிரி நண்பனல்லவா... இதைத்தான் செய்தார் போஸ். ஆனால் இதெல்லாம் எதற்காக? ஏன் என்று அவர்கள் ஒருபோதும் சிந்திக்கவில்லை.

அடிமைபடுத்தப்பட்ட தேசம் தன்னை அடிமைபடுத்தியவன் சிக்கலில் மாட்டி இருக்கும் போது அவனுக்கு உதவும் கேவலமான காரியத்தில் காங்கிரஸ் இறங்கியது. இந்நிலையில் போஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இம்முறை போஸை விடுவிக்க பிரிட்டிஷ் அரசு தயாராக இல்லை. வெறுப்புண்ட போஸ் சிறையிலேயே உண்ணாவிரதமிருந்தார். உடல் நிலை மீண்டும் மோசமானது. வேறு வழியின்றி ஆறு நாட்கள் கழித்து மீண்டும் விடுதலை செய்யப்பட்டார். பிறகு அவரது வீட்டை சுற்றி காவல் போடப்பட்டது. போஸ் தன்னுடைய முகத்தை தாடியுடன் மாற்றினார். ஜனவரி 17 வீட்டுக் காவலில் இருந்து தப்பினார். அங்கிருத்து மறைமுகமாக காபூல் வந்தடைந்தார். ரஷ்ய தூதரகத்தில் எந்தவித உதவியும் கிடைக்காததால், ஜெர்மன் மற்றும் இத்தாலிய தூதரகம் சென்றார். இறுதியாக இத்தாலி பாஸ்போர்ட் வழங்கியது. போஸ் இத்தாலி சென்று பிறகு அங்கிருந்து ஜெர்மனி சென்றார். அங்கே தனது நிலையை தெளிவாக எடுத்துக் கூறி மேற்கொண்டு செய்யப்போகும் திட்டத்தையும் ஜெர்மன் வெளியுறவு துறையிடம் விவாதித்தார்.

இந்தியாவுக்கும் போஸ்சுக்குமான உறவு இல்லாதது போல் இருந்ததால் இங்கிலாந்து வானொலி BBC போஸ் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பியது.

1941 நவம்பரில் இந்திய வானொலியின் ஒலிபரப்பு தொடங்கியது. யாரும் எதிர்பாராத விதமாக அதன் முதல் உரை ஆரம்பித்தது.

"இன்னும் நான் உயரோடுதான் இருக்கிறேன்" என்று போஸ் உரையைத் தொடங்கினார். இந்த உரை இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பிரிட்டிஷார் செய்வதறியாது திகைத்தனர்.

மாதங்கள் கடந்தோடியது. இந்நிலையில் ஹிட்லர் ரஷ்யாவையும், பிரிட்டனையும் ஒரே நேரத்தில் தாக்க திட்டம் வகுத்தார்.

ஜெர்மனி, ரஷ்யா இந்த இரு நாடுகளை நம்பித்தான் போஸ் இந்தியாவை விட்டு வெளியேறினார். இப்போது இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக போர்க்களத்தில் நிற்கின்றன. போஸ் குழப்பத்தில் யோசிக்க ஆரம்பித்தார்.

 


1941 டிசம்பரில் போஸ் சுதந்திர இந்திய மையம் (FIC) ஒன்றை நிறுவினார். அதற்கு நிறைய ஆதரவு கிடைத்தது. ஆசாத் ஹிந்த் என்ற வானொலியும் பின்னர் அதே பெயரில் பத்திரிகை ஒன்றையும் பெர்லின்லில் தொடங்கினார். அங்குதான் பிரத்தியேகக் கொடி ஒன்று மூவர்ணக்கொடியுடன் ஒரு பாயும் புலி சேர்த்து வடிவமைக்கப்பட்டது. தாகூரின் "ஜனகணமன" பாடல் முதல் முறையாக தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. ஜெய்ஹிந்த் என்னும் வீர வணக்கம் அங்குதான் உதயமானது.

போஸ் நேதாஜி ஆனார்.

அப்போதுதான் இந்தியாவின் கிழக்கு வாசல் பக்கம் அதாவது பர்மாவில் ஜப்பானிய படைகள் சிங்கப்பூரை துவம்சம் செய்துவிட்டு நுழையத் தொடங்கியது. போஸ் சுறுசுறுப்பாகி, இனி ஐரோப்பாவில் இருந்து பயனில்லை, இதுதான் சந்தர்ப்பம், ஜப்பானிடம் செல்லலாம் என்று முடிவெடுத்தார்.

இரண்டாம் உலகப்போரில் மிகவும் மும்மரமாக இருந்தார் ஹிட்லர். நேதாஜி ஜெர்மனியில் இருந்து ஜப்பானுக்கு தப்பிச் செல்வதற்கு ஹிட்லர் யு-போட் என்ற நீர்மூழ்கி கப்பலை தந்து உதவினார். பல இடைஞ்சல்களுக்கு மத்தியில் நேதாஜி பிப்ரவரி 8ல் யு-போட் நீர்மூழ்கி கப்பலில் ஜப்பானுக்கு புறப்பட்டார். ஜூலை 13ல் டோக்யோ வந்தடைந்தார். மொத்தம் 18 வாரங்கள் அதுவும் இரண்டாம் உலகப்போர் உச்ச கட்டத்தில் இருக்கும் போது நேதாஜி இந்த கடும் பயணத்தை மேற்கொண்டார். இந்தியர்கள் அதிகம் வாழும் தென்கிழக்கு ஆசியாவில் மற்றொரு ராணுவப் பிரிவினை ஏற்படுத்தி அங்கிருந்து ஜப்பான் உதவியுடன் இந்திய எல்லைக்குள் படைவீரர்களுடன் செல்ல திட்டமிட்டார். போஸின் வருகைக்கு முன்பாகவே ராஷ் பிகாரி போஸ் என்பவரின் தலைமையில் கிழக்கு ஆசியாவில் பிரிட்டனுக்கு எதிராக ஒரு படையை அமைப்பதற்கு முயன்று கொண்டிருந்தனர்.

1941 டிசம்பர் மாதம் பிரிட்டிஷ் பிடியில் இருந்த மலேசியாவை விடுவித்தது ஜப்பான். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் காப்டனாக பணிபுரிந்த மோகன் சிங் உள்பட 40000 இந்திய வீரர்கள் ஜப்பானிடம் சிறைபட்டனர்.

ஜப்பானிடம் பிடிபட்டிருந்த மோகன் சிங்கைத்தான் இந்திய தேசிய ராணுவத்தை அமைக்க பரிந்துரைத்தார். அதை தொடர்ந்து பிடிபட்டிருந்த 40000 இந்திய வீரகளில் இருந்து ஆட்களைத் தேர்வு செய்து இந்திய தேசிய ராணுவம் அமைக்கும்படி ஜப்பான் தளபதி உத்தரவிட்டார். மலேசியாவைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் பர்மாவையும் ஜப்பான் பிரிட்டிஷ் படையிடமிருந்து விடுவித்தது.



தென்கிழக்கு ஆசியாவிற்கு நேதாஜி வரப்போகிறார் என்றும் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் இந்திய தேசிய ராணுவத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. நேதாஜி வருகை தென்கிழக்கு ஆசியாவில் வசித்த இந்தியர்களிடம் மாபெரும் எழுச்சியை தந்தது. அவர்கள் நேதாஜியை தெய்வமென நினைத்தார்கள்.

நேதாஜியின் வருகைக்கு முன்னால் வழிநடத்த யாருமின்றி செயலற்று கிடந்தது INA. ஜூலை 2ல் சிங்கப்பூர் வந்திரங்கினார் நேதாஜி. ஜூலை 4, 1943 அன்று நேதாஜியை INA படைத் தளபதியாக நியமித்தார் ராஷ் பிகாரி போஸ். நேதாஜி படை பொறுப்பை ஏற்றவுடன் மக்கள் கும்பல் கும்பலாக படையில் சேர ஆரம்பித்தனர்.
. 
ஜூலை 5 அன்று அணிதிரண்ட ஐ.என்.ஏ படைகளைப் பார்த்து பூரிப்புடன் பேசினார் நேதாஜி.



"என்னால் உங்களுக்கு என்ன அளிக்க முடியும்? பசி, பட்டினி, தாகம், மரணம்தான். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. நீங்கள் என்னைப் பின்தொடர்ந்தால் நான் உங்களைச் சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வேன். எதனை பேர் பிழைப்போம் என்று தெரியாது. போராடத் தாராகுங்கள்" என்றார்.

அக்டோபர் 21, 1943 அன்று ஆசாத் ஹிந்த் என்ற பெயரில் புதிய இந்திய அரசு சட்டப்படி உருவானது. நேதாஜி இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக பதவி ஏற்றார். நேதாஜின் கண்கள் சிவத்து கிடந்தன. முந்தய இரவு முழுவதும் கண் விழித்து எழுதிய சுதந்திர இந்தியாவின் முதல் பிரகடனத்தை வாசிக்கிறார்.

“கடவுளின் பெயாரால், இறந்து போன தியாகிகளின் பெயரால், இந்த புனிதமான பதவியை ஏற்றுக்கொள்கிறேன், இந்தியாவை விட்டு அன்னியப் படைகளை விரட்டுவது தான் அரசின் முதல் நோக்கம். சுபாஷ் சந்திர போஸ் ஆகிய நான் என் இறுதி மூச்சு உள்ளவரையில் இந்தப் படையை முன்னெடுத்துச் செல்வேன் என்று உறுதியளிக்கிறேன். சுதந்திரத்திற்கு பிறகும், என்னுடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்திய சுதந்திரத்தைப் பாதுகாக்க உழைப்பேன். ஜெய் ஹிந்த்”.

மறுநாள்
லக்ஷ்மி சேகல் தலைமையில் ஜான்சி ராணி படைப் பிரிவை தொடங்கிவைத்தார். 200 வருடங்களுக்கு பிறகு உருவான இந்த சுதந்திர அரசை ஒன்பது நாடுகள் ஆதரித்தன. ஜப்பானின் அதிகாரத்தின் கீழ் இருந்த அந்தமான் நிக்கோபாரின் சிறு நிலப் பிரிவு இந்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டது.







இந்தியாவிற்கு அருகில் வந்தாகி விட்டது. ஒரு கோடு மட்டுமே பர்மாவையும் இந்தியாவையும் பிரிக்கிறது. இந்தியாவிற்கான சுதந்திரப்போர் இங்கிருந்து தான் தொடங்க இருக்கிறது. இதோ இந்தக் காடுகள் தான் இனி நமக்கெல்லாம். பர்மா, தாய்லாந்து, மலேசியா பகுதிகளில் இருந்த INA படைகள் காட்டுக்குள் வரவழைக்கப்பட்டன.

இதோ இந்திய எல்லையில் தான் நின்று கொண்டிருக்கிறோம். இந்த எல்லையை தாண்டினால் நம் பாரதம். பிப் 4, சிட்டகாங் செல்லும் வழியில் உள்ள "அரக்காண் பிரன்ட்" பகுதியில் முதல் தாக்குதல் தொடங்கியது. மிகத் தூரிதமாக முன்னேறிய இந்தியப் படை பிரிட்டிஷ் படைகளைச் சிதறடித்தது.

முதல் வெற்றி... மாபெரும் வெற்றி.

அடுத்த தாக்குதல் ஏப்ரல் 22ல் தொடங்கியது. இந்தமுறை மிக கடுமையாக போராடவேண்டி இருந்தது. இந்தமுறை பிரிடன் சுதாகரித்துக்கொண்டது. INA தடுமாறத் தொடங்கியது. வயர்லெஸ் இல்லை, மோட்டார் இல்லை, உணவுப் பஞ்சம், அதுமட்டுமில்லாது இம்பாலுக்கு அருகே இருந்த சில பிரிவினர்கள் முன் கூட்டியே இந்தியப் படைகள் இருக்கும் இடங்களை பிரிட்டிஷ் படைகளுக்கு காட்டிக்கொடுத்தனர். சோதனை மேல் சோதனைகள். திடிரென்று மழை. மழையென்றால்   சாதாரண மழை அல்ல பேய்மழை. சிறிது சிறிதாக படை தளர்ந்து கொண்டிருத்த அதே சமயம் அமெரிக்கப் படைகளும் வான் வழித் தாக்குதலை ஆரம்பித்தது. கொத்துக் கொத்தாகப் பிணங்கள். நேதாஜி செய்வதறியாது கலங்கினார்.

இந்நிலையில் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் சண்டை ஆரம்பிக்கிறது. நிறைய ஜப்பானிய வீரர்கள் உயிர் இழந்ததைக் கேள்விப்பட்டு போரை நிறுத்துமாறு அப்போதய ஜப்பான் பிரதமர் டோஜோ உத்தரவிட்டார். தம் சொந்த நாட்டின் போருக்காக ஜப்பானிய படைகளை INA விடமிருந்து திரும்ப அழைத்துக்கொண்டார்.


ஆகஸ்ட் 4, 1944, ரங்கூன் ரேடியோ வழியாக பேசினார் நேதாஜி. இந்த செய்தி காந்திக்கு....

"மகாத்மாஜி, தேசத் தந்தையே, நாங்கள் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம். இந்திய விடுதலைக்காக நடக்கும் இந்த யுத்தம் மிகக்கடுமையான பாதையில் நிற்கிறது. என் தாய் நாட்டின் மதிப்பையோ, நலனையோ பாதிக்கும் முறையில் சிறதளவு கூட நடக்க மாட்டேன் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் ஆசிர்வாதத்தையும், வாழ்த்துக்களையும் நாங்கள் பெற ஆசைப்படுகின்றோம். ஜெய் ஹிந்த்"

சிறிதும் முன்னேற முடியாத நிலை. பெருத்த சேதம்.. இனியும் ரங்கூனில் தங்கி இருப்பது ஆபத்து என்று உணர்ந்து பர்மாவை விட்டு வெளியேற முடிவு செய்தார் நேதாஜி.

மே 14, நேதாஜி பாங்காக் வந்து சேர்ந்தார். ஜான்சி படைகளுக்கு ஊதியம் வழங்கி விட்டு அவர்களுக்கு விடைகொடுத்தார்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வீழ்ந்தது.

ஆகஸ்ட் 12, 1945 ஜப்பான் வீழ்ந்தது.

ரஷ்யாவிடம் உதவி கேட்கலாம் என்று நேதாஜி நினைத்துக்கொண்டிருதார். ஆனால் தனக்கும் ஹிட்லருக்குமான உறவுகளால் ரஷ்யா உதவாது என்று கருதினார். துவண்டு கிடந்த வீரகளை நோக்கி நேதாஜி பேசினார். "இதற்கு முன் நாம் அறிந்திடாத நெருக்கடியில் நாம் இருக்கிறோம். நான் உங்கள் அனைவருக்கும் சொல்லல விரும்புவது இதைத்தான்.

நாம் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவேண்டாம். இந்த உயிர் இன்னும் நம் உடலில் இருக்கிறது. ஜெய் ஹிந்த்"

மறுநாள்

நேதாஜியுடன் இரு படைத் தளபதிகள் குண்டு வீசும் விமானத்தில் பாங்காக்கில் தரை இறங்குகிறார்கள். ஆகஸ்ட் 17, பாங்காக்கில் இருந்து சாய்கொனுக்கு மற்றொரு விமானம் ஜப்பான் ஏற்பாடு செய்திருந்தது. அதில் நேதாஜி ஒரு தளபதியுடன் கிளம்புகிறார்.

மறு நாள் விமான விபத்தில் போஸ் ந்து விட்டதாகச் செய்தி...

என்ன நடந்தது........ இன்று வரை தெரியவில்லை.......

போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும் ஒவ்வொரு விதமான முடிவை முன் வைக்கிறது இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். அவிழ்க்கப்படாத மர்மம்...
மர்மம் நீடிக்கிறது.

முடிவாக
காந்தி நம் தேசப்பிதா என்று அழைக்கப்பட்டாலும் என்னைப் பொருத்தவரை எல்லாம் நேதாஜியே. தமிழன் என்று நாம் மார்தட்டிக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் இந்த ஒரு செய்தி போதுமே நாம் பெருமிதம் கொள்ள. நேதாஜியின் .என். படையில் 90% வீரர்கள் தமிழர்களே....
ஜெய்ஹிந்த்….

விஜய் Che






No comments:

Post a Comment