Wednesday, 16 January 2013

பாவ நகரம் – II




7-ம் பகுதியின் காவல் நிலையம்: காலை 5 மணி

      அதிகாலை தூக்கம் கண்ணைச் சுழற்ற அந்த காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சரவணன் தொலைக்காட்சியில் நேற்றுப் பதியப்பட்ட செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் தகவல் பகுதியில் பாவ நகரம் எவ்வாறு அப்பெயர் பெற்றது என ஒரு பெண் விளக்கிக் கொண்டிருந்தார். அதில் அப்பெண் முன்னோர்கள் அந்நகரத்திற்கு முதலில் புண்ணிய நகரம் எனப் பெயரிட்டதாகவும், பின்னாளில் சமூக விரோத செயல்களில் அந்நகரத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் ஈடுபட்டதால், அவர்கள் தவறை உணரும் பொருட்டு அக்காலத்து மன்னர் ஒருவர் அதற்கு பாவ நகரம் என பெயரிட்டதாகவும், ஆனால் மக்கள் வழக்கம் போல சமூக விரோத செயல்களில் ஈடுபடவே அப்பெயரே நிலைப் பெற்று இன்றைய நாகரிகக் காலத்திலும் இந்நகரம் அவ்வாறே அழைக்கப் படுவதாகத் தெரிவித்தார்.

      சரவணன் எதிர் அறையில் மூலையில் அமர்ந்திருந்த கைதிகளைப் பார்த்தார். இன்னும் இது பாவ நகரம் தான் என நினைக்க முயன்ற போது டெலிபோன் ஒலித்தது.

      “ஹலோ
      “....
      “ஆமாயா, ப-7 போலீஸ் ஸ்டேசன் தான்
      “சார், இங்க Express Avenue பக்கத்துல ஒரு ஆம்பிளை பொணம் இருக்கு சார். 

கொலைனு நினைக்கிறேன்

      “நீ யாருயா?
      “சிக்கிரம் வாங்க சார் எதிர் முனை துண்டிக்கப் பட்டது.    
       “யோவ் 401

7-ம் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு:

 அந்த அடுக்குமாடி குடியிருப்பு உறங்கிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து அமுதாவும் உறங்கிக் கொண்டிருந்தாள். 45 வயது இல்லத்தரசி அவள். ஒரு சராசரி இந்திய இல்லத்தரசி. கணவனின் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தப் பழகிக் கொண்ட கோடிக் கணக்கான இந்தியப் பெண்களில் ஒருவள். அவளது கணவன் சபேசனும் அந்த துணிக் கடை வேளையில் எவ்வளவுதான் சம்பாதிக்க முடியும். 25 ஆண்டு திருமண வாழ்க்கையில் இவளுடன் ஒரு சண்டை போட்டதில்லை அவன். இருவரின் ஒரே நம்பிக்கை அவர்களது மகன் ஸ்ரீதர் தான். இஞ்சினியரிங் இரண்டாமாண்டு படிக்கிறான். வங்கிக் கடன் வாங்கி படிக்க வைக்கும் பையன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்து வேலைக்கு சென்று விடுவான் என நினைத்துக் கொண்டிருந்தனர். அவன் படித்து வேலைக்குப் போனால் தான் தங்களுடைய நிலை படிப்படியாக முன்னேறும் என்றும் எண்ணிக்கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் அவளது மகனும் வீட்டுக்காரரும் எழுந்து விடுவார்கள். அவர்களுக்கு சமைத்து மதிய உணவு கட்டித் தர வேண்டும்.
உள்ளே அவளது மகன் ஸ்ரீதர் உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று நேற்று நடந்த சம்பவம். அவன் அவ்வேளையில் இறங்கும் முன்பே சங்கரை பல முறை கேட்டான். இறுதியில் அது இவ்வாறு முடிந்து விட்டது. என்றாலும் இனி எந்த பிரச்சனையும் கிடையாது. மற்றொன்று மோனிகா. இரண்டு ஆண்டுகளாக அவள் பின்னால் சுற்றி சுற்றி இறுதியில் இன்று தனிமையில் சந்திக்க ஒப்புக் கொண்டாள். அவளுக்காக ஒரு கவிதையை யோசித்துக் கொண்டிருந்தான்.

      “உனக்காக வாழ்க்கையின் ஒவ்வொரு
            காதல் நிறுத்ததிலும்
      என் இதயக் கதவை..
யாரோ கதவைத் தட்டும் சத்தத்தில் கலைந்த சிந்தனையை மீண்டும் சேகரித்து
      என் இதயக் கதவை திறந்து வைத்துக் கொண்டு
‘டொக், டொக் மீண்டும் கதவைத் தட்டும் சத்தம். “அம்மா என்று கார்த்திக் கத்துவதற்குள், அமுதா கதவைத் திறந்தாள்.
வெளியே சரவணனும், ஒரு கான்ஸ்டேபிளும் நின்று கொண்டிருந்தனர். அமுதா கதவை திறந்து யாரென்று கேட்பதற்குள், “ஸ்ரீதர் இருக்கானா? என கான்ஸ்டேபிள் கேட்டார். “தூங்கிட்டிருக்கான். “நைட்டு கமுக்கமா ஒரு கொலை பண்ணிட்டு இப்போ தூங்கிட்டிருக்கானா? இன்ஸ்பெக்டரின் சத்தமான் பேச்சில் தூக்கம் கலைந்து சபேசனும் வந்தார்.
“என்ன பிரச்சனை சார்? என ஆரம்பித்தார் சபேசன். “கொலை கார பையனை பெத்துட்டு கேள்வி வேற என இன்ஸ்பெக்டர் கூறி முடிப்பதற்குள் ஸ்ரீதர்  வெளியே வந்தான்.
      “நீதான் ஸ்ரீதரா?
      “ஆமாம்
      “நேற்று Express Avenue ல பிரச்சனை பண்ணி அந்த மேனஜரை அடிச்சவன் நீதானா?
      “சார், அடிக்கலாம் இல்லை. தள்ளி விட்டேன். அந்த பிரச்சனை அப்பவே முடஞ்சிடுச்சி
      “நேத்து நைட்டு அந்த மேனஜரை யாரோ கொலை பண்ணிட்டாங்க. உன் மேல தான் நாங்க சந்நேகப் படறோம்.
      சபேசன் ஏதோ பேச வாயெடுத்தார். ஆனால் கான்ஸ்டேபிள் அதற்குள் ஸ்ரீதரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றார். சபேசனின் இதயம் படு வேகமாக துடிக்கத் துவங்கியது. அதை விட வேகமாக ஸ்ரீதரை ஏற்றிக் கொண்டு அந்த போலீஸ் ஜீப் சாலையில் பயணிக்க துவங்கியிருந்து.

                                          பாவங்கள் தொடரும்

                                                                                                                                சராசரி இந்தியன்

5 comments:

  1. twist ah illa tragedy ah nu theriyala??? sridhar......

    ReplyDelete
  2. நன்கு போய்க்கொண்டிருக்கிறது....முழுதும் முடிந்த பின்பு மொத்தத்தையும் மறுபடியும் படிக்கவேண்டும்....

    ReplyDelete