Wednesday 16 January 2013

கிவி - சிறுகதை



ஞாயிறு மதியம் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்து சிறுநீர் கழிக்க சென்றேன். அப்போது தான் பாட்டி கொல்லைப் புறத்தில் இருந்து கூப்பிட்டாள்.
“என்ன பாட்டி?”
“இங்க வந்துப் பாரேன்”
“என்னது? இதோ வரேன்”
“தெரியலப்பா. இங்க ஏதோ ஒன்னு கத்தாழ செடிக்கு பின்னாடி அசையுது. என்னதுனு வந்து பாருப்பா”

நான் பாம்பு அல்லது பெருச்சாளி என்று ஊகித்துக்கொண்டு ஒரு கட்டையோடு போய் நின்றேன். கத்தாழை கன்றை தள்ளிவிட்டுப் பார்த்தால் அங்கே ஒரு பறவை இருந்தது. அதனை நான் கட்டையில் சற்று தள்ளி விட்டதும் மெதுவாய் நகர்ந்து அருகிலிருந்த பப்பாளி மரத்தின் வேருக்கு அடியில் ஒளிந்துக்கொண்டது.

அது என்ன பறவையென்று தெரியவில்லை. அதன் அலகு பெரியதாக இருந்தது. சாம்பல் நிறத்தில் இருந்தது. மூன்று வாரத்து கோழி எவ்வளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு பெரியதாக அது இருந்தது. அது பறக்க முயற்சிக்கவில்லை. எந்தவித சப்தமும் ஏற்படுத்தவில்லை. அந்த இடத்திலேயே அப்படியே உட்கார்ந்திருந்தது. பாட்டி அது அப்படியே இருக்கட்டும், என்னை அங்கிருந்து கிளம்பி போகச் சொன்னாள்.

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எதிரில் இருக்கும் பாத்திரக்கடைக்காரரிடம் போய் கேட்டு அவர் வளர்க்கும் பச்சைக்கிளியை வீட்டுக்குள் கொண்டுவந்தேன். பின் அதனை அந்த பறவை இருக்கும் இடத்திற்கு தூக்கிப்போனேன். கிளி கத்தினால் அதுவும் எதாவது கத்தும் என்கிற நம்பிக்கைத் தான். கிளிக்கூண்டை அதன் பக்கத்தில் வைத்தேன்.
கிளி நன்றாக கத்தியது. அந்த சத்தத்தைக் கேட்டு அது கிளியை தலை நிமிர்த்திப் பார்த்தது. பதிலுக்கு அது எந்தவொரு சத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நேரம் வீணானது தான் மிச்சம், கிளி தான் கத்தியேதே தவிர அது கத்தவேயில்லை. பின் நான் வெளியே கிளம்பிப் போய்விட்டேன்.

நீங்கள் சந்தையில் போய் காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிவர எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் தான் ஆகும் தமிழகத்தின் ராமேசுவரத்திற்கும் ஈழத்திற்கும். நெருங்கிய சொந்தம் உண்டு இரண்டிற்கும். ஈழத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தனர். விவசாயம், மீன்பிடித்தல், மற்றும் சில வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்கள் வாழ்வு வளமும் செழித்து இருந்தது அந்த கொடுஞ்செயல்கள் நடக்கும் வரையில்.

நான் நண்பர்களோடு ஊர்க் கதைகள் கதைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பினேன். அந்த பறவை வீட்டின் கூடத்தில் தொலைக்காட்சி பெட்டி வைத்திருக்கும் மேசைக்கு அடியில் உட்கார்ந்திருந்தது.
“அப்பா, இது எப்படி உள்ள வந்துச்சு?’
“நான் தான்ப்பா உள்ள விட்டேன்”
“உங்கள அது கடிக்கல?”
“இல்லப்பா. கடிக்கல. ஓரமா உக்காந்திருந்துச்சு. பாவமா இருந்துச்சு. போயி தூக்குனேன். ஒண்னும் பண்ணல. அதான் உள்ளவிட்டேன்.”
”அதுக்கு எதாச்சும் சாப்பிடக் குடுத்தீங்களா?”
“வெங்காயம், தக்காளி, தானியமெல்லாம் போட்டேன் தம்பி. ஆனா அது எதுயுமே சாப்பிடல.”
நான் அதனருகில் உட்கர்ந்து அதனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அது கீழே குணிந்து தரையை பார்த்துக்கொண்டிருந்தது. அதனருகில் கையை கொண்டுச்சென்று அதன் உடம்பில் தடவிக் கொடுத்தேன். மேல் எழுந்து என்னை பார்த்தது. அந்தப் பார்வை எனக்குப் பிடித்துவிட்டது. அதனையும் எனக்குப் பிடித்துவிட்டது.
“அப்பா, இத நம்மளே வளக்கலாம்ப்பா.”
“எப்படி தம்பி? அது என்ன சாப்பிடும்னு தெரியாது, அது என்ன பறவைனே தெரியாது. அப்பறம் எப்படி வளக்கறது?
“பரவாயில்ல. நாளைக்கு சாப்பிடும்.”
அதற்கு ‘கிவி’ என்று பெயர் வைத்தேன். நாளைக்கு சாப்பிடுமென்று நம்பினேன். இணையத்தில் பல பறவைகளின் புகைப்படத்தை தேடி, கிவியைப் போல் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். முயற்சி பலிக்கவில்லை. பின் நான் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டேன்.

ஈழத்தீவில் மகிழ்ச்சியுடன் தமிழ் மக்கள் வாழ்வதை பார்க்க பிடிக்காத  நரியரசு தம்முடைய அதிகார பலத்தைக் காட்டி அவர்களையும் அவர்கள் வாழ்வையும் அழிக்கும் செயல்களை ஆரம்பித்தது. முதலில் அமைதி நிலவிய அவர்கள் இடத்தில் ரானுவ வீரர்களை குவித்தது. பின் சோதனை என்கிறப் பெயரில் அவர்கள் இடத்தில் புகுந்து துன்பப்படுத்தியது. பின் அவர்களால் அந்த தீவின் அமைதி கெடுகிறது என்று பல பேரை கைது செய்து கொடுமைப்படுத்தியது.
பல பெண்களும் சிறு பிள்ளைகளும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். வயதானவர்களும் உடல் சுகமில்லாதவர்களும் கூட தாக்கப்பட்டனர். அவர்களது அனைத்து தொழில்களும் அழிக்கப்பட்டன. தமிழ் இனம் முழுதும் இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற அந்த நரியரசின் திட்டம் மெதுவாக வெளிவந்தது.

அடுத்த நாள் நான் காலை கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டேன். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பினேன். அப்போது கிவி வீட்டின் சமையலறையிலும் கூடத்திலும் மாறி மாறி நடந்துக்கொண்டிருந்தது. அப்போதும் அது பறக்க முயற்சிக்கவில்லை. கத்தவில்லை.
“அம்மா, கிவி ஏதாச்சும் சாப்பிட்டுச்சா?”
“இல்லடா, ஏதுமே சாப்பிடல. அப்பா அத கொல்லைல போய் விட்டாரு ஏதாச்சும் பூச்சி புழுவை புடிச்சு சாப்பிடும்னு, ஆனா இது எதையுமே சாப்பிடல.”
இது பறக்கவுமில்லை, கத்தவுமில்லை. இதை தேடி எந்த பறவையும் வரவில்லை. தனியாக இது எப்படி இங்கே வந்திருக்கும். ஒருவேளை ஏதாவது பருந்து கவ்விக்கொண்டு வரும்போது தவறி இங்கே விழுந்துவிட்டதா இல்லை கூட்டத்தோடு பறக்கும் போது ஏதேனும் தடை மீது மோதி விழுந்துவிட்டதா. ஆனால் வலிக்குக்கூட இது கத்தவில்லையே. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
“அப்பா, ஏன் கிவி கத்தமாட்டிக்கிது. இது என்ன வகை பறவ?”
“ஏதோ காட்டு பறவ மாறி இருக்கு. எனக்கும் தெரியலப்பா”
நான் குழம்பிப்போயிருந்தேன். இது ஊமை பறவையா? ஒருவேளை இதனையொத்த இனம் இதனை ஒதுக்கிவிட்டதா என்றெல்லாம் கற்பனை செய்துப் பார்த்தேன்.
“தம்பி, நீ காலைல எழுந்தோனே மாட்டு டாக்டர்க்கிட்ட இத தூக்கிட்டுப் போய் காட்டு. அவரு பாத்துட்டு இது என்ன, இத வளக்கலமா, இது என்ன சாப்பிடும், இல்ல இத போயி எங்காச்சும் விட்டுருலாமானு அவரு சொல்லுவாரு”
எனக்கும் அதுவே சரியென்றுப் பட்டது. சாப்பிடாமலே எந்த உயிரும் உயிர் வாழ முடியாது என்று எனக்கும் தெரியும். அதனால் நான் என் இரவு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கிவி சாப்பிடுகிறதோ இல்லையோ அதற்கு பக்கத்தில் தானியத்தை போட்டுவிட்டு படுக்க சென்றேன்.

தாங்களுக்கு இழைக்கின்ற தீங்கினை பொறுக்க முடியாத சில ஈழ தமிழ் மக்கள் ஆயுதமேந்தி அவர்களை எதிர்த்துப் போராடுவது என்று முடிவேடுத்தனர். அவர்கள் கூட்டமொன்றை கூட்டி அணித்திரண்டு போராடினர். அவர்கள் போராட்டம் வருடம் வருடமாக நீடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த நரியரசு பின் வாங்கியது. அதனால் அந்த கூட்டத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒற்றுமையாக இருந்து அந்த கூட்டம் அந்த நரியரசை மிரளச் செய்தது.
நான்கு புலிகளும் ஒன்றாக இருந்தால் அவைகளை அழிப்பது முடியாமல் போகும் என்பதை அறிந்த அந்த நரியரசு, ஒற்றுமையாக இருந்த அவர்களை ஆசைக் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தது. அப்படியும் அசராத அந்த கூட்டம் மென்மேலும் முன்னே பறந்தது.

அடுத்த நாள் காலை நான் கிவியை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அதனை தூக்கச் சென்றேன். கிவி இறந்துக் கிடந்தது. உடலில் எந்த அசைவுமின்றி வெறும் கட்டையாக கிழே கிடந்தது. நான் சோகத்தில் மூழ்கினேன்.
மனிதனை விட அறிவு குறைந்த பறவை, வாழும் இடம் மாறி என் வீட்டின் கொல்லை புறத்திற்கு வந்து, பின் என் வீட்டினுள் இருந்து ஏதும் உண்ணாமல் கடைசியில் உயிரை விட்டது. ஒரு பறவை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு கிவி இல்லை. அது கூட்டமாக வாழும் பறவையா, இல்லை தனித்து வாழும் பறவையா அது பறக்கவே பறக்காதா அதனைப் பற்றி ஏதுமே தெரியாது எனக்கு. ஆனால் வாழும் இடம் மாறியதால் தான் அது இறந்தது என்பது உறுதி.

கூட்டத்தின் நண்பனாய் இருந்து பின் அவர்களை வஞ்சித்து துரோகியாய் மாறிய ஒருத்தனோடும் இன்னும் அந்த ஈழ மக்கள் வாழ்வைப் பற்றி கவலைப்படாத பல பேரோடும் அந்த நரியரசு கூட்டணி வைத்து அந்த போராட்ட கூட்டத்தை ஏமாற்றி முதுகில் குத்தி அழித்தது. தாங்களுக்கு போராடிய அந்தவொரு கூட்டமும் போன பின்பு தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தனர் அந்த பரிதவிக்கப்பட்ட ஈழ தமிழ் மக்கள்.
வாழ்வும் வளமும் அளித்த தங்கள் சொந்த மண்ணை விட்டு கள்ள படகில் கடல் கடந்து வெவ்வேறு தேசத்திற்கு அகதியாய் சென்றனர் மிச்சமிருந்த தமிழ் மக்கள்.
கிவி உயிரைவிட்டு சென்றது, இவர்களும் உயிரைவிட்டு வெறும் உடற்க்கூட்டோடு மட்டும் பிழைத்து வருகின்றனர்.

     கோழி

1 comment:

  1. நெஞ்சை உருக்கும் சிறுகதை உண்மையும் கூட....நன்றி...

    ReplyDelete