Wednesday 17 September 2014

வாழ்க்கை ஏன் இங்கு இத்தனை கடினமாக இருக்கின்றது




வாழ்க்கை ஏன் இங்கு
இத்தனை கடினமாக
இருக்கின்றது.

பிரச்சனைகளை
சுமந்து கொண்டு
பலிக்கு போகும்
ஆடு போல
ஒவ்வொரு நாளும்
போகின்றது

சிக்கல்கள்
இறுகிக் கொண்டே
மனதையும்
இறுக்குகிறது

எதிர்காலத்தின்
எச்சரிக்கைகள்
இப்போதே நரம்பை
தைக்கின்றன

உள்ளொன்றும்
புறமொன்றுமாய்
யாருக்கும் யாரையும்
பிடிப்பதில்லை

செய்து முடிக்க
வேண்டிய நிறைய
வேலைகள்
அப்படியே கிடக்கிறது

காலம் நெருங்க நெருங்க
எண்ணங்கள்
நொறுங்கிப் போகின்றது

விழுந்து எழும்முன்
கலைந்து போகின்றது
மழை மேகங்கள்

அழுது விழும்முன்
காய்ந்து போகிறது
கண்ணீர் துளிகள்

தூங்க கிடைக்கும்
அரிதான நேரங்களை
நேற்றைய குழப்பங்கள்
விடப்போவதில்லை

தேடி உழைத்தும்
கஷ்ட நஷ்டங்கள்
நமக்கு முன்னே
ஓடி ஓய்வெடுக்கின்றன.

வாழ்க்கை ஏன்
இங்கு
இத்தனை கடினமாக
இருக்கின்றது.




Saturday 13 September 2014

நீ அழைத்திருக்க மாட்டாய்...



கடந்திடும் வாகனமெல்லாம்
தலைகோதிவிட்டு செல்லும்
சாலையோர மரமொன்றின்
சலசலப்பை போலவே – உன்
அழைப்பிற்காக காத்திருக்கும் என்மனமும்
சலனப்பட்டு கொண்டேயிருக்கிறது.

ஒரு இரண்டு நிமிட
இளைப்பாறலுக்காகவே – நான் அந்த
மரத்தினடியில் அமர்ந்தேன்.
எனக்கும் அந்த மரத்திற்கும்
அப்போது அந்த இளைப்பாறுதல்
தேவையாய் இருந்தது.

மார்கழி மாதத்து பனித்துளிகளை
தன் இலைகளில் தேக்கி – நுனிகளில்
கசியவிட்டுக் கொண்டிருந்தது மரம்.
நான் உன் ஞாபகங்களை
நினைவில் தேக்கி - விழிகளில்
கசியவிட்டுக் கொண்டிருந்தேன்.

தூரத்தில் ஒரு ஒளிக்கீற்று தென்பட்டதும்
தன் கண்ணீர்துளிகளை
வேகமாய் துடைத்துவிட்டு
அவசரமாய் தயாராகிக்கொள்கிறது மரம்.
அதேசமயத்தில்
என் சட்டைபைக்குள்
ஒரு சிணுங்கள் சத்தம்.

கனத்த சப்தத்துடன்
கடந்துசென்ற கனரக வாகனத்தினால்
அந்த மரம்
கண்டுகொள்ள படவேயில்லை.
நான் அலைபேசியை எடுக்கவேயில்லை.
எனக்கு தெரியும்
கண்டிப்பாக நீ அழைத்திருக்கமாட்டாய்...