Saturday, 13 September 2014

நீ அழைத்திருக்க மாட்டாய்...



கடந்திடும் வாகனமெல்லாம்
தலைகோதிவிட்டு செல்லும்
சாலையோர மரமொன்றின்
சலசலப்பை போலவே – உன்
அழைப்பிற்காக காத்திருக்கும் என்மனமும்
சலனப்பட்டு கொண்டேயிருக்கிறது.

ஒரு இரண்டு நிமிட
இளைப்பாறலுக்காகவே – நான் அந்த
மரத்தினடியில் அமர்ந்தேன்.
எனக்கும் அந்த மரத்திற்கும்
அப்போது அந்த இளைப்பாறுதல்
தேவையாய் இருந்தது.

மார்கழி மாதத்து பனித்துளிகளை
தன் இலைகளில் தேக்கி – நுனிகளில்
கசியவிட்டுக் கொண்டிருந்தது மரம்.
நான் உன் ஞாபகங்களை
நினைவில் தேக்கி - விழிகளில்
கசியவிட்டுக் கொண்டிருந்தேன்.

தூரத்தில் ஒரு ஒளிக்கீற்று தென்பட்டதும்
தன் கண்ணீர்துளிகளை
வேகமாய் துடைத்துவிட்டு
அவசரமாய் தயாராகிக்கொள்கிறது மரம்.
அதேசமயத்தில்
என் சட்டைபைக்குள்
ஒரு சிணுங்கள் சத்தம்.

கனத்த சப்தத்துடன்
கடந்துசென்ற கனரக வாகனத்தினால்
அந்த மரம்
கண்டுகொள்ள படவேயில்லை.
நான் அலைபேசியை எடுக்கவேயில்லை.
எனக்கு தெரியும்
கண்டிப்பாக நீ அழைத்திருக்கமாட்டாய்...

1 comment:

  1. uvamai, uruvakam nnu summa prichu vaanguringa yoki.. ithu yaalikku illaya..?
    mikavum rasithu padithen.. kurippaaka

    நித்திரையில்லா நிசியொன்றில்,
    வெட்டவெளியை வெறித்திருக்கையில்,
    பிரபஞ்சத்தின் பிடரியில்
    ஒரு மிகமிகச்சிறிய
    துகளெனவிருக்கும் நிலவு – என்
    விழிகளுக்குள் நிறைந்திருப்பதைபோல்
    என் நினைவு நியூரான்களின் நீட்சிகளுக்குள்
    நீயே நிறைந்து நிற்கிறாய்.

    ReplyDelete