Tuesday 23 December 2014

யாழிக்கு கவிதைகள்



  
நித்திரையில்லா நிசியொன்றில்,
வெட்டவெளியை வெறித்திருக்கையில்,
பிரபஞ்சத்தின் பிடரியில்
ஒரு மிகமிகச்சிறிய
துகளெனவிருக்கும் நிலவுஎன்
விழிகளுக்குள் நிறைந்திருப்பதைபோல்
என் நினைவு நியூரான்களின் நீட்சிகளுக்குள்
நீயே நிறைந்து நிற்கிறாய்

அணுக்களுக்கு நிறை தரும்
துகளை கண்டறிந்துஅதற்கு
கடவுள் துகள் என்று
பெயரும் இட்டதைபோல்
என் காதலுக்கு நிறை தரும்
உன்னை கண்டறிந்து
நான் யாழி என்று
பெயரும் இட்டுக்கொண்டேன்.

நறுசிறு நாலுமணி பூவை போல
மெல்ல மலர்ந்து
என்னுள் நிறைந்து
என்னை முழுதாய் ஆட்கொண்டது
நம் காதல்.
யார் கண்பட்டதோ
பெருவெடிப்பு நடந்த பால்வெளியாய்
துகள்துகளாய் சிதறி கிடக்கிறதின்று.

ஈர்ப்புவிசையில்லா விண்வெளியில்
நிறையில்லை பொருட்களுக்கு.
காதல்விசையில்லா நானும் அப்படியே
நிறையற்றவனாய்
நிராகரிக்கப்பட்டவனாய் நிற்கிறேன்.

இணைவதும் பிரிவதும்
அதன் விளைவுகளுமே அறிவியல்.
இணைவதும் பிரிவதும்
அதன் விளைவுகளுமே காதல்.
இணைவதும் பிரிவதும்

அதன் விளைவுளுமே நாம்.

Thursday 11 December 2014

RIP - 63*





இதுவே என் தீயிடம்
இனிமேல் இங்கே தூறிடும்

இதுவே என் ஓய்விடம்
இதயம் இங்கே தூங்கிடும்

இதுவே என் போரிடம்
புழுவும் என்னை கூரிடும்

யாக்கை வெந்து தீரவே
காக்கை வந்து கூடிடும்

மண் சூழ்ந்து மூடவே
கண் கூர்ந்து தேடிடும்

அனலாகி எரிந்த பின்னே
தாகங்கள் எடுக்குமோ

மண்ணாகிப் புதைந்த பின்னே
மாற்றங்கள் நிகழுமோ

இரவும் முடிந்தது

விதியும் முடிந்தது

கனவும் கரைந்தது

திதியும் கரைந்ததுவோ


பாரதி-கண்ணம்மா








கண்ணம்மா : நீ வசிக்க உனக்கு நிரந்தர இடமில்லை.

பாரதி : காணி நிலம் தானே, அதை பராசக்தி பார்த்து கொள்வாள்.

கண்ணம்மா : உனக்கென ஒரு வேலை இல்லை

பாரதி : கவிதை எம் தொழில்.

கண்ணம்மா : அடுத்த வேளை உனக்கு உணவு இல்லை.

பாரதி : கவலையை விடு, இச்சகத்தினை அழித்திடுவோம்.

கண்ணம்மா : நீ தனியொரு மனிதன்.

பாரதி : நான் அக்கினி குஞ்சு, ஒரு காட்டினை எரிக்க இது போதும்.

கண்ணம்மா : உன் உயிருக்கு விலை வைத்திருக்கிறார்கள்.

பாரதி : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை,
இச்சகத்தி ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

கண்ணம்மா : உனக்கு உன்னைப் பற்றி கவலையே இல்லையா?!

பாரதி : என்னை கவலைகள் தின்ன தகாதென, நான் நின்னை சரணடைந்துவிட்டேன்

கண்ணம்மா :   ஏன் யாருக்குமே இல்லாத விடுதலை வேட்கை உனக்கு மட்டும்..!?

பாரதி : தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ? – என் கண்ணம்மா
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோடீ?

கண்ணம்மா :   இல்லையடா இல்லவேயில்லை...,
தாய்க்கு பெருமிதம், தன் மகனை சான்றோன் என கேட்டல், உனக்கு பெருமிதம், தேன் வந்து பாயும் செந்தமிழ் நாடு, எனக்கு பெருமிதம் நான் உன்னோடு கொண்ட மருவ காதல். மீண்டும் உன்னிடம் ஒருமுறை கேட்கிறேன், இங்கே, இப்புவியிலே, உன்னை போல வாழ்வதற்கு வல்லமை தாராயோ..?

பாரதி : நேர்பட பேசு, ரௌத்திரம் பழகு, இனியொரு விதிசெய்.

கண்ணம்மா : சரி, சென்று வா, ஆனால் ஆசை முகம் மறையும் முன்பே மீண்டும் வந்துவிடு.

பாரதி : சாத்திரம் பேசுகிறாய் – கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ?
ஆத்திரங் கொண்டவர்க்கே – கண்ணம்மா!
சாத்திர முண்டோடி?
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்புசெய்வோம்
காத்திருப் பேனோடீ? – இது பார்,
கன்னத்து முத்த மொன்று!



Wednesday 26 November 2014

டெக் மழை - V 1.0

இனிமேல் வாரா வாரம் நிகழும் முக்கியமான டெக் செய்திகளைப் பற்றி இந்தப் பகுதியில் காணலாம். முக்கியமாக மொபைல்கள், டெப்லட்கள் பற்றிய செய்திகளை அலசலாம்.

                புது மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது இரண்டு நல்ல செய்திகள் உள்ளன. ஒன்று   சீனாவின்  ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியோமியின் ரெட்மி நோட் (Redmi Note) அடுத்த மாதம் 2 ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதே தேதியில் flagship killer என அழைக்கப்படும் OnePlus One னும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டுமே அவற்றினுடைய specification களை வைத்து பார்க்கும் பொது மிகவும் குறைவான விலையில் இங்கே விற்கப்படபோகின்றன. அதிலும்  ரெட்மி நோட் (Redmi Note)  வெறும் 9000 மட்டுமே. OnePlus One 25000 க்குள் விற்கப்படலாம் எனக்  கூறப்படுகிறது.

ரெட்மி நோட் (Redmi Note) - ன் specificationகள்  இங்கே: http://www.flipkart.com/mi/note



  
 OnePlus One - ன் specificationகள்  இங்கே: https://oneplus.net/one





      இது வரை அறிமுகப்படுத்தப்பட்ட அணைத்து சந்தைகளிலும்  OnePlus நிறுவனம் தனது மொபைலை தனியாகவே  விற்று வந்தது. அனால் இந்தியாவில் amazon உடன் கூடு சேர்ந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மூக்கியாமானது இந்தியாவின் சந்தை அளவே ஆகும். சியோமி வழக்கம் போல flipkart மூலம் தனது பொருட்களை (மொபைல்களை) விற்பனை செய்கிறது.


          சரி அனால் இரண்டையுமே வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இதுதான் இங்கு சிக்கலேரெட்மி நோட் (Redmi Note) பொறுத்தவரை வார வாரம் செவ்வாய் கிழமைகளில் அது விற்பனை செய்யப்படும். அதற்கு நீங்கள் முதலில் ப்ளிப்கர்ட்ல் register செய்திருக்க வேண்டும். அதுவும் அந்த sale (விற்பனை) மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கும். நீங்கள் login செய்து உள்ளே செல்வதற்குள் அவுட் ஒப்  ஸ்டாக் (out of stock) என்ற மெசேஜ் மட்டுமே வரும். இதே போன்ற பிரச்சனைகளைதான் நாம் redmi1s மற்றும் mi3 மொபைல் விற்பனைகளிலும் சந்தித்தோம்.

      ரெட்மி நோட் (Redmi Note) - வது வாரா வாரம் வரும், அதிர்ஷ்டம் இருந்தால் கிடைத்து விடும். அனால் OnePlus One - நீங்கள் வாங்குவதற்கு உங்களுக்கு invite தேவை. invite பெறுவது மிகவும் கடினமான காரியம். முகநூல், கூகிள் +, ட்விட்டர் போன்றவற்றில் இதற்காக பல்வேறு குரூப் கள் உண்டு. அங்கு சென்று பார்த்தால், ஒரு invite- பெறுவது எவ்வளவு கடினம் எனப் புரியும். (நானும் கிட்டதட்ட முன்று மாதங்கள் கழித்துதான் invite  - பெற்றேன் ). இந்தியாவில் நீங்கள் இதை வாங்க உங்களுக்கு region specific invite தேவை. அதாவது அமெக்காவில்  ஒருவர் இந்த மொபைலை வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு சில நாட்களோ, மாதங்களோ கழித்து OnePlus நிறுவனம் மூன்று invite களை அனுப்பும். அதை அவர் அவரது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அனால் அவரது நண்பர் இந்தியாவில் இந்த invite  - பயன்படுத்தி OnePlus One -   வாங்க முடியாது.

      அது மட்டுமின்றி இந்திய invite -கும், மற்ற நாட்டு  invite - களுக்கும்  ஒரு முக்கிய வித்தியாசம் ஒன்று உள்ளது. மற்ற invite களை பயன் படுத்தி 24 மணி நேரத்திற்குள் நீங்கள் OnePlus One - வாங்க வேண்டும். இந்திய invite -கு இந்த கால அவகாசம் 48 மணி நேரமாக அதிகரிக்க பட்டுள்ளது.


     சரி ஏன் இந்த முறைகள் பின்பற்றபடுகின்றன. இரண்டு கம்பனிகளுமே சொல்லும் காரணம் demand மீட் செய்ய முடியாது என்பதுதான்ஆனால் இது ஒருவகையான எதிர்பார்பை ஏற்படுத்தி விற்பனையை பெருக்கும் செயலாகவே பார்க்கபடுகிறது. இதைப் பற்றி விரிவாக வரும் வாரங்களில் அலசுவோம்.
                                                                                              
                                                                                                 - சராசரி இந்தியன்

Wednesday 19 November 2014

துளித் துளியாய் - 15


துளித் துளியாய் - 59



கோழிமழை






அவனுக்கு எல்லாமே
அவங்க அம்மாதான்.
மழை எப்படி பெய்கிறது
எனக் கேட்டால்
அம்மா தண்ணீர் தெளிப்பதாக சொல்கிறான்.

மழையில் நனைந்த கோழி
இறகை உலர்த்தியது.
அங்கப்பார் கோழிமழை
பெய்கிறது என்கிறான்.

எவ்வளவு தண்ணி பாரேன் என
சாலையில் ஓடிய தண்ணீரை காட்டினான்.
எட்டி பார்க்காத தண்ணி
ஆத்துக்கு இழுத்துட்டு போயிடும் என்றேன்.
ஆறு இதவிட பெருசா
என கேட்கிறான்.

தினமும் மழை பெய்தால்
எவ்வளவு நல்லா இருக்கும்,
ஏன் பெய்ய மாட்டேங்குது என கேட்கிறான்.
அவனுக்காகவாவது தினம் வந்துவிட்டு போ மழையே.

Wednesday 29 October 2014

போதுமென்று நினைக்கிறேன்























இன்றைக்கும்
இந்த
நிசப்த
இரவினைத்
தூங்காது கடக்கப்போகிறேன்
என்று தெளிவாய்த் தெரிகிறது

மாதத்தின் கடைசி தேதி
பெருகிடும் தேவைகள்
பிடிக்காத அலுவல்கள்
அடம்பிடிக்கும் சோம்பல்
கருமேகங்கள் அற்ற வானம்
எப்போதும் அல்லாத வெயில்
நெரித்து தள்ளிய பேருந்து
புழுங்கிப் போன உடல்
குழம்பி கிடக்கும் மனம்
சவரம் செய்யாத முகம்
முடிக்க முடியாத சில கவிதைகள்
மாதங்கள் துவைக்காத போர்வை
நாற்றமெடுக்கும் காலுறைகள்
காற்றோட்டம் இல்லாத மெத்து
அடிக்கடி இரையும் பண்பலைகள்
சண்டையிடும் தெருநாய்கள்
பிடுங்கும் கொசுக்கள்
விரட்டும் வலைத்தள அரட்டைகள்
விடாத ஒற்றைத் தலைவலி

நெடுநேரமாய்
அழைப்பை ஏற்காத தலைவி

போதுமென்று நினைக்கிறேன்
இன்றைய இரவினை

தூங்காது கடப்பதற்கு