நிலம், நீர், நெருப்பு,
ஆகாயம், காற்று என பஞ்ச பூதங்களை தெய்வமாக
கொண்டாடிய மனிதன் ஏனோ ஆறாவதாய் மின்சாரத்தையும் அதில் சேர்க்க மறந்துவிட்டான்.
அந்த பூதம் பட்டணத்திற்கு மட்டுமல்ல பட்டிக்காட்டிற்கும், பழங்குடியினர்க்கும்
கூட இன்று அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. மனிதன் வாழ்வதற்கு காற்றுக்கு இணையாக
இன்று மின்சாரத்தின் தேவையும் உள்ளது. மின்சாரம் செயற்கை சக்தி ஆகையால் தான்
அதற்கு அங்கு இடம் தரப்படவில்லை என்றும் வாதிடலாம், ஆனால்
மின்சாரத்தின் மூலமே மின்னல் தான். மின்சாரத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால்
மின்னலிலிருந்து தான் தொடங்க வேண்டும்.
ஏ.ஐ.ஒப்பாரின்
உயிரினத் தோன்றல் கோட்பாடு அடிப்படை வேதியியல் கூட்டுப் பொருட்களுடன், மின்னல், புறஊதாக்
கதிர்களின் தொடர் செயல்பாடுகளால் உலகில் முதல் உயிரி தோன்றியிருக்கலாம்
என்பதாகும்.
ஒப்பாரின் கருத்தை
ஆய்வுக்குட்படுத்திய மில்லர் மற்றும் யுரே, வளிமண்டலத்தில்
நிறைந்திருக்கும் வாயு மூலக்கூறுகளான ஹைட்ரஜன், மீத்தேன்,
அம்மோனியா ஆகியவற்றுடன் நீரையும் சேர்த்து ஒரு குடுவையில் வைத்து
குளிர்வூற்றினர், அதாவது செயற்கை முறையில் பனிப்பாறைகளை
உருவாக்கினர். அதில் பல லட்சம் வோல்ட் மின்சாரத்தை ஒரு குறிப்பிட்ட கால
இடைவெளியில் தொடர்ந்து செலுத்தி வந்தனர். அதாவது செயற்கை முறையிலான மின்னலை
செலுத்தி வந்தனர். அவர்களின் ஆய்வு முடிவு ஒரு உயிரி தோன்றுவதற்கான அனைத்து
மூலக்கூறுகளும் அதில் நிறைந்திருப்பதை உலகிற்கு அறிவித்தது.
மிக மிக குறைந்த
வெப்ப நிலையும், மிக மிக அதிக
வெப்ப நிலையும் ஒரே நேரத்தில் வாயு மூலக்கூறுகளுடன் இணைந்தால் அமினோ அமிலங்கள்
உருவாகும் என்பதே அந்த ஆய்வின் முடிவு. ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா மழை, மின்னல், ஹைட்ரஜன்,
மீத்தேன், அம்மோனியா இவையெல்லாம் இணைந்தால்
அங்கே ஒரு உயிரி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
பெஞ்சமின்
ஃப்ராங்க்ளின்
மின்னியலின் தந்தை
என்றழைக்கப்படும் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் தான் முதன்முதலில் மின்னலில் இருப்பது
ஒரு விதமான மின்சக்தி என்பதையும், அதில்
நேர்முனை(POSITIVE) மற்றும் எதிர்முனை(NEGATIVE) மையங்கள் இருக்கின்றன. அவை சக்தியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு
கடத்துகின்றன என்பதையும் தெரிவித்தார். இவரின் இந்த அடிப்படை கருத்தே தாமஸ் ஆல்வா
எடிசன் என்னும் நவீன உலகின் சிற்பிக்கு அடிப்படை ஆதாரமாகியது.
தாமஸ் ஆல்வா எடிசன்
எடிசன்
கண்டுப்பிடித்த மின்விளக்கு, உலகை
மீண்டும் உருவாக்கியது. டங்ஸ்டன் மின்னிழையில் மின்சாரத்தை செலுத்தி ஒளிரச்செய்த
எடிசனின் கண்டுப்பிடிப்புகள் அனைத்தும் மின்சாரத்தைச் சார்ந்தே இருந்தது. இங்கே
தொடங்கப்பட்ட மின்சாரத்தின் பயணம், கம்பியில் கடத்தப்படும் மின்சாரத்தைப்
போலவே வேகமாய் வளர்ந்தது.
மின்சாரத்தை
எதிலிருந்து வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்றாலும்,
உற்பத்திக்காகும் செலவு முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது.
மின்சாரத்தை எதிர்க்காலத்திற்காக சேமித்தும் வைக்கமுடியாது. மின்சாரத்தை
பயனீட்டிற்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் கம்பி வழி இழப்பும் அதிகம்.
மின்சாரத்தை வீணாக்காமல் சேமிப்பது கூட உற்பத்திக்கு சமம்.
அணுமின் சக்தியை விட, சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியே
சிறந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு குஜராத் மாநிலம். உலகிலேயே மிகப்பெரிய
சோலார் மின்உற்பத்தி மையங்கள் அமைத்து மிகப்பெரிய வெற்றியை கண்டிருக்கிறது
அம்மாநிலம். ஆறுகள், வாய்க்கால்கள், ஓடைகள்
ஆகியவற்றின் மேற்பரப்பில் சோலார் தகடுகளால் மூடி மின்சாரத்தை உற்பத்தி செய்து
பெரிய அளவில் சாதனைப் புரிந்துள்ளது. தமிழக அரசும் இப்போது இந்த சோலார் முறையை
கட்டாயம் ஆக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.
காற்றாலை
மின்சாரத்தை பெருக்காமல் நாம் கைவிட்டதும் இப்போது நிலவும் மின்பற்றாக்குறைக்கு
ஒரு மிகப்பெரிய காரணியாகும். நீங்கள் என்னை கைவிட்டாலும் நான் உங்களை கைவிட
மாட்டேன் என்று நம்மை முழு இருளில் சிக்காமல் காத்துவருவதும் இது தான். கடற்கரை
ஓரப் பகுதிகள் முழுவதும் காற்றாலைகளை நிறுவி மின்உற்பத்தியில் என்றோ தன்னிறைவு
அடைந்திருக்கலாம். ஏனோ தடுமாறி நிற்கிறது அரசு. தமிழக அரசு தற்போது, மழைநீர்
சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கியது போல சோலார் திட்டத்தையும்
கட்டாயமாக்கவிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், மழைநீர்
சேகரிப்பு திட்டத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டதுபோல் இத்திட்டத்தையும் விட்டுவிடக்கூடாது
என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
யோகி
No comments:
Post a Comment