தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்கியதில் 2
மீனவர்கள் பலி. நாம் எளிதாக கடந்து செல்லும் ஒருசில தினசரி செய்திகளில் இதுவும்
ஒன்று. ஏன் எந்த ஒரு ஊடகமும் இந்திய மீன்வர்கள் பலி என்றோ, இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்றோ செய்தி வெளியிடுவதில்லை. தமிழகம்
இந்தியாவிலிருந்து புறக்கணிக்கப்பட்ட மாநிலமா என்ன.
இந்த கேள்வியை என்னை கேட்க வைத்ததே ஒரு வடஇந்திய தோழன்
தான். அவனுடன் அரசியல் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது நான் தமிழக மீனவர்கள்
நிலை பற்றி பேச நேர்ந்தது. அப்போது அவன் சொன்னது தான் எனக்கு பேரதிர்ச்சியை
ஏற்படுத்தியது. தமிழக மீனவர்கள் என்றால் விடுதலை புலிகள் இல்லையா என்றான்.விடுதலை
புலிகளை தாக்குவதாக தான் இத்தனை நாட்கள் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது தனிப்பட்ட ஒரு மாநிலத்தின் பிரச்சனையாக பார்க்கப்படும் வரை இத்தகைய விளைவுகள்
தான் நமக்கு கிடைக்கும். இது இந்திய நாட்டின் பிரச்சனையாக மாற்றப்பட வேண்டும்.
ட்வீட்டரில் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசை
கண்டித்து மத்திய அரசின் கவனத்தை திருப்பும் முயற்சியில் தொடங்கப்பட்ட ஒரு
கையெழுத்து இயக்கம் TNFISHERMAN. இதற்கு ஆதரவு
கேட்டு பிரபல பின்னணி பாடகியிடம் இந்த இயக்கத்தினர் சென்ற போது மீன்களை
கொல்பவர்களை கப்பல்படை கொல்லக்கூடாதா என்று விளக்கம் தெரிவித்துள்ளார். இதற்கு
பின் நடந்த வாத விவாதங்களே அந்த பாடகி அளித்த ஆபாச புகாருக்கு வித்தாக
அமைந்துள்ளது. நமது மெத்த படித்த சமூகமே நம்மை புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது நாம் எப்படி
மற்றவர்களை திசை திருப்ப முடியும்.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக தமிழர்கள் அதிகம்
நம்பியிருக்கும் ஒரு தொழிலான மீன்பிடி தொழிலுக்கும் மீனவர்களுக்கும் அரசாங்கங்கள்
இழைத்துள்ள துரோகங்களை கணக்கிட்டு சொல்லமுடியாது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை
வார்த்து கொடுத்தார் இந்திரா காந்தி. ஒரு நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டிற்கு
அன்பளிப்பாக வழங்கிய கூத்து தான் கச்சத்தீவு துரோகம். இதற்கு அப்போதைய தமிழக
அரசும் தமிழர்களும் எந்த அளவிற்கான போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்று தெரியவில்லை.
ஒரு பிரதமருக்கு நாட்டை கூறுப்போட்டு விற்கும் அதிகாரமும் இருக்கிறதா என்றும்
தெரியவில்லை.
தமிழின போராளிகளும், தமிழின தலைவர்களும் மத்தியிலும்
மாநிலத்திலும் போதிய அதிகாரத்தில் இருந்தபோது கூட மீனவர்களின் துயரம்
துடைக்கபடாமல் தொடர்கதையாகவே நீள்கிறது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன்
கச்சத்தீவை மீட்போம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டதோடு முதல்வர்
அவர்களின் செயல்பாடும் முடிந்துவிட்டது. ஆட்சியில் இருந்த, இருக்கும்
இரு திராவிட கட்சிகளும் மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசை கண்டிப்பதை விடுத்து
உங்கள் ஆட்சியில் தான் அதிகபடியான மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்று மாறிமாறி
சட்டமன்றத்திலேயே குறைகூறி அடித்துக்கொண்ட கேலிக்கூத்துகளும் உண்டு.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
மீனவர்கள் போராடுவதற்கான காரணமே அணுக்கழிவுகள் தான். அந்த கழிவுகளை எங்கே கொண்டு
சென்று புதைப்பீர்கள். கடலில் என்றால் கடல்வளமும் மீன்வளமும் பாதிக்கப்படாதா. இந்த
கேள்விக்கு இதுவரை விளக்கம் தராமலேயே மத்திய அரசும் மாநில அரசும் மக்களின்
போராட்டத்தை ஒடுக்குவதிலேயே குறியாய் இருக்கிறது.
நமது பரம எதிரி என போற்றப்படும் பாகிஸ்தானும் நாமும் பகிர்ந்துகொள்ளும்
கடல் எல்லையில் கூட இந்திய மீனவர்கள் கண்ணியமாக தான் நடத்தபடுகின்றனர். இந்த
இடத்தில் எதிரியைவிட துரோகியே அதிக ஆபத்தானவன் என்பதும் நாம் அறிந்துகொள்ள
வேண்டியதாகிறது.
நம் மீனவர்கள் சர்வதேச எல்லையை கடப்பதால் தான்
தாக்கப்படுகிறார்கள் என கூறப்படுகிறதே ஏன் நம் மீனவர்கள் நம் எல்லையை
கடக்கிறார்கள் என கேட்கிறீர்களா... சர்வதேச கடல் எல்லை என்று அங்கே
வைக்கப்பட்டிருப்பது நீரில் மிதக்கும் ஒரு தக்கை. தக்கை ஒரே இடத்தில் நிலையாக
இருக்கும் என்று எனக்கு தெரிந்து இதுவரை எந்த அறிவியலும் உணர்த்தியதில்லை.
கச்சத்தீவு பகுதியில் நமக்கும் மீன்பிடிக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆனால் இந்த
பகுதிக்குள் செல்லும் மீனவர்களே அதிகம் தாக்கபடுகின்றனர். இத்தனைக்கும்
கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயில் திருவிழாவில் இரு நாட்டு மீனவர்களும்
பங்கேற்கின்றனர்.
ஏன் இலங்கை கப்பல்படை ரோந்து பணியில் ஈடுபடுவது போல் இந்திய
கப்பல்படை ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை.
மீனவர்கள் எல்லையை தாண்டிவிட்டால் ஏன் எச்சரிக்கை விடபடாமல்
தாக்கப்படுகின்றனர்.
கைது செய்யப்படும் மீனவர்களின் நிலை என்ன...?
இது ஏன் ஒரு எல்லை பிரச்சனையாக பார்க்கப்படாமல் ஒரு மாநில
பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சனையில் ஊடகங்களின் நிலை என்ன...?
இந்த விவகாரத்தில் இன்னும் நிறைய கேள்விகள் விடை அறியப்படாமலேயே
இருக்கிறது.
இனியாவது இதை இந்திய பிரச்சனையாக மாற்ற முயற்சிப்போம்.
இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்றே செய்தி வெளியிடுவோம். கச்சத்தீவை மீட்போம்.
அப்பாவி மக்கள் தாக்கப்படாமல் தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுப்போம்.
சின்னப்பையன்
No comments:
Post a Comment