Wednesday 22 July 2015

புதைந்த ரகசியங்கள்....










அக்காவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது.

புத்தன் போல

தூங்கிக்கொண்டே அவன் சிரிக்கையில்,

வலி நிறைந்த கண்களோடு

அவனையே ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

சத்தியமாக அவனின் சிரிப்பினில்

அவள் வேறு எதையோ கண்டுக்கொண்டிருக்கிறாள்.

எப்போதும் அவள் காதுகளில்

இசை ஒலித்து கொண்டேயிருக்கிறது.

குழந்தையின் அருகில் படுத்து

சில பாடல்களையும் முணுமுணுத்துக்கொள்கிறாள்

எத்தனை நாள் தாகமோ இது

நிதானமாக அனுபவித்து கொண்டிருக்கிறாள்.

சாளரத்தில் முகம் புதைத்து

முன்பு போலவே

கனவினில் மிதக்கிறாள்.

நினைவு திரும்புகையில்

முகமும் நனைந்திருக்கிறது.

பூங்குழலியை தான்

பிடிக்கும் அவளுக்கு.

ஆனால் இப்போதெல்லாம்

நந்தினியைப் பற்றியே அதிகம் பேசுகிறாள்

என்ன ஆயிற்று என்று கேட்க

எனக்கு மனமே வரவில்லை.

என்றோ இழந்த ஒன்றுடன்

இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்

என்பது மட்டும் புரிகிறது எனக்கு.

எல்லாம் முடிந்து,

தன் வீட்டிற்கு செல்லும்போது,

யாழியுடன் பேசினாயா

என வினவுகிறாள்.

அவளுக்காகவே சொல்கிறேன்

எனக்கு இப்போதெல்லாம்

ஆதித்த கரிகாலனை தான்

பிடித்திருக்கிறது அக்கா…

No comments:

Post a Comment