Tuesday 19 February 2013

சொல்ல மறந்த கதை


















வானத்து நட்சத்திரங்களாய்
ஓயாத விசித்திரங்களாய்
உள்ளங்களெங்கும் ஊற்றெடுக்கும்
உண்மைக் கதைகளுண்டு

கண் நுழைந்து
கண்ணீரில் கரைந்த
காதல் கதைகளோ
நெஞ்சில்,
நெருஞ்சி முள்ளாகி
நித்தம் நித்தம்
நோவு தரும்

உற்றோரும்,பெற்றோரும்
உண்டாக்கி வைத்த
உயிர்க் கதைகளோ
காணும் இடமெல்லாம்
கண் நிறையும்
காட்சிகளாகி
ஆத்ம தீயின் நெய்யாய்
நிரம்பி வழியும்

கேட்கப்பட்டும்,மறுக்கப்பட்டும்
மறைந்த மன்னிப்புகளோ
மறுபிறவி கொண்டு
மன மதிலை
மறைந்திருந்து
அரித்து வரும்

காற்றில் கரைத்த கதைகளை
கனவதனில் கை வசமாக்கி
இரவுகளில் இருதயமும்
சிருங்கார இசையொன்று
பேசி வரும்

சொல்ல மறந்த கதைகளோ,
கனவுகளின் காரணங்களாகும்
காரியங்களின் வீரியமாகும்
மாற்றங்களின் மன்றங்களாகும்
மௌனங்களின் முகங்களாகும்
இன்பங்களின் இல்லறமாகும்
உலக சுழற்ச்சியின்
ஊன்றாகும்
புன்னகைப் பூச்சின்
பூரணமாகும்

எண்ணற்ற ,
வாழ்க்கை விரிசல்களை
வகைப்படுத்தும் இந்த
சொல்ல மறந்த கதைகளை
இதயத்தில்,
இறுக வைத்துக் கொள்வதும்
சுகமான வலிதானன்றோ?



                                                                      -கண்ணம்மா 



1 comment: