Saturday, 10 September 2016

உன் அதீத பார்வை


இன்றாவது நீ
கடைவீதி வரும்பொழுது
உன்னோடு நான்
பேசியாக வேண்டும்

மழைக்கான
காற்று அங்கும் இங்குமாய்
வீசிக் கொண்டிருக்கிறது   

மழைக்கு முன்
உன்னைக் காண வேண்டும்
பேச வேண்டும்
இதுவே
ஓடிக் கொண்டிருந்தது
மனதில்

 மெது மெதுவாய்
என்னை முந்திக் கொண்டிருக்கிறது
மழை

அகன்ற வீதியில்
         மழையும் காற்றும்        
மும்மரமாய் பேச
இனி எங்கனம் தேட

நிச்சயம்
நீ என்னைக் கடந்து
சென்றிருக்க மாட்டாய்

எதிர் திசையில்
தூரமாய்
வழியெங்கும்
வளையல் கடைகள்.

நீ இருப்பதற்கான
சாத்தியக்கூறுகள்
தென்பட
காத்திருக்கிறேன்

அதோ மழையில்
நீளும் கைகள்
உனதோ

கைகளை நனைத்துக்
கொண்டிருப்பது
நீயே


நேரெதிர் திசை
உன் பார்வைக்கு
எட்டிய தொலைவு
மேலும் வலுக்கிறது மழை

அது நீயே தான்.

மழை ஒருபுறம்
பயம் ஒருபுறம்

உன்னை
ஓரிரு நிமிடங்கள்
மட்டுமே பார்த்து
பழகிய எனக்கு
இன்று
மழை தருகிறது நேரம்…

எப்போதுமல்லாமல்
இன்று தான்
உன்னை அத்தனை
நேரம் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்

பேரழகி நீ

உனக்கும் எனக்குமான
இடைவெளியில்
என்னை உனக்கு
காட்டிக்கொள்ள
ஏதாவது செய்தாக
வேண்டும்

உன் தூர விழி கொண்டு
என்னை நீ
பார்த்தாக வேண்டும் 

விழும் மழையையும்
எழும் பயத்தையும்,
விலக்கி
உன்னிடம் நான்
பேசியாக வேண்டும்

மேகம் விலகிய
மறுநொடி விண்ணில்
சிமிட்டும் விண்மீனைப் போல்
நீ பார்ப்பது என்னையோ

ஏது செய்யப்போகிறேன்

உன் பார்வையின்
அர்த்தம்
எதுவாகினும்
நீ பார்த்தாய்…

மழை விட்டு
குடையுடன் நீ வீடு சேர
சிறிது நேரத்தில்
மீண்டும் பிடிக்கிறது
மழை

இந்த இரவை
நனைத்துக் கொண்டிருக்கும்
தூறல் போல்
என் மனதை மென்மையாய்
நனைத்துக் கொண்டிருக்கிறது
உன்னிடமிருந்து
வந்த அந்த

அதீத பார்வை

No comments:

Post a Comment