இருள் மையச்சூழ்ந்து சந்திரன் மேலெழுந்து வளி வலியிழந்து சப்தமற்ற நடுநிசியில் தான் அவைகளை கண்டேன்.
ஒடவோ வேகமாக நடக்கவோ இல்லை.
எந்த வேலையும் இல்லாத சோம்பேறி நடையும் இல்லை.
மெதுவாக அசைந்து நான்கு கால்களை முன்வைத்து நடந்தது.
தனியாக வரும் என்னை பார்த்து அது குரைக்கவில்லை. பல நாள் என்னை பார்த்து பழகிய வழக்கமோ விட்டுவிட்டது.
அங்கே இரண்டு பெரிய நாய்கள் கொஞ்சி விளையாடுகின்றன. வலிக்காதவாறு வாயால் காதை கடித்து விளையாடுகின்றன. ஒன்றை ஒன்று புரட்டி தள்ளிவிடுகின்றன.
சில வயதான நாய்கள் குளிருக்கு சுகமாக சுருண்டு படுத்தப்படி எப்போதோ சாலையில் கடக்கும் வாகனங்களை கண்ணை மட்டும் திறந்து பார்க்கின்றன.
என் காலடி சத்தம் கேட்டு தாய் நாயின் கண்டிப்பை மீறி தைரியமாக குட்டி நாய்கள் சாலையின் மையம் வரை வருகின்றன. எட்டா இடம் அடைந்த மகிழ்வில் அந்த நாய் குட்டிகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. என் முகம் பார்த்து இவன் அருகில் செல்லலாமா கூடாதாவென்று திகைத்து நிற்கின்றன.
நான் உதடுகளை குவித்து "ச்சூ ச்சூ "என்று கனிந்து அழைத்தவுடன் என்னை கண்டு பயந்து ஓடுகின்றன.
பகலில் புரியாதவொரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இரவில் தங்களுக்கென ஓர் சுதந்திர சுகந்தமான வாழ்க்கை வாழ்கின்றன அந்த நடுநிசி நாய்கள்.
No comments:
Post a Comment