Sunday, 22 February 2015

பெட்டி - சிறுகதை


                             
நானும் என் அறையும்
        நான் இந்த நகரத்திற்கு வேலையின் நிமித்தமாக வரவேண்டிய கட்டாயம். நான் இங்கு என் நண்பர்களோடு வந்தேன். நாங்கள் இங்கு ஒரு ஆண்கள் விடுதியில் தங்கினோம். என்னோடு சேர்த்து மொத்தம் 10 பேர் எங்களுக்கென்று தரப்பட்ட வீட்டில். அதில் இரண்டு அறைகள், ஒரு சமையற்கட்டு, ஒரு வராந்தா. வந்த இரண்டு மாதம் மட்டும் தான் அனைவரும் சேர்ந்து இருந்தோம். ஒருவர் பின் ஒருவராக வேறு வேறு இடத்திற்கு சென்றார்கள். கடைசியாக நான் மட்டுமே மீதம் இருந்தேன். அனைவரும் வெளியேறிய பின்னர் தான் முதன்முதலில் அதை சமையற்கட்டின் மேலேயிருந்த தட்டில் பார்த்தேன். அது ஒரு கருப்பு நிறப் பயணப்பெட்டி. அது பெரியதாக இருந்தது. நல்ல தரமான நிறுவனத்தின் பெட்டி அது. அதன் விலை எப்படியும் 2000ரூ மேல் இருக்கும். அதை பார்த்த கணமே என்னோடு தங்கியிருந்த யாரோ ஒருவர் இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்று முடிவெடுத்தேன். அதை கீழேயிறக்கி திறந்துப் பார்த்தப்போது அதில் ஏதுமில்லை. வெறுமையாக இருந்தது. இருந்தப்படியே அதை மேலே வைத்துவிட்டேன்.
தெரியாத உரிமையாளர்
        என்னோடு தங்கியிருந்த மற்றவர்களுக்கு கைபேசியில் தொடர்புக்கொண்டு இந்த பெட்டிப் பற்றி கேட்டேன். யாரும் இதனை உரிமைக்கொள்ளவில்லை. அடுத்த நாள் அனைவருக்கும் விரிவாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்க்கும் யாரும் பதிலளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் கைபேசியில் அழைத்து கேட்டப்போதும் யாரும் அது தன்னுடையது தான் என்று கூறவில்லை. எங்களைத் தவிர வேறுயாரும் அந்த அறையில் தங்கியிருந்தார்களா என்று வீட்டு உரிமையாளரிடம் கேட்டேன். நாங்கள் தான் முதன்முதலில் இந்த வீட்டில் தங்குவதாகும் இதற்கு முன்னர் யாரும் தங்கவில்லையென்று சொன்னார். யாருக்கும் சொந்தமில்லாமல் அது ஒரு அநாதை பெட்டியாக காட்சியளித்தது.
உரிமை கோருதல்
என் நண்பர்கள் வீட்டைவிட்டு காலிசெய்து போன சில மாதங்களில் இரண்டு வடகத்தி இளைஞர்கள் அந்த வீட்டில் தங்க வந்தார்கள். சில வாரம் கழித்து அவர்கள் சமையற்கட்டில் இருந்த பெட்டிப் பற்றி என்னிடம் கேட்டார்கள். என் நண்பர்களில் யாரோவொருர் இதை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்றேன். அதிலொருவன் கடைசிவரை யாரும் இதை தேடி வரவில்லையென்றால் தான் அந்தப் பெட்டியை எடுத்துக்கொள்வதாக சொன்னான். நான் அதை மறுத்து, மீண்டும் ஞாபகம் வந்து அந்த நண்பனே எடுத்துக்கொள்வான் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் சில மாதங்களில் வேறு இடத்திற்கு சென்றனர். நானும் அந்த பெட்டி சமையற்கட்டில் இன்னும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். பின் இன்னொருவன் அந்த வீட்டிற்கு தங்க வந்தான். அவனும் சில நாட்கள் கழித்து அந்த பெட்டிப் பற்றி விசாரித்தான். அதே காரணத்தை இவனிடமும் கூறினேன். பெட்டி அப்படியே அங்கேயே இருந்தது.
நஞ்சு தலைக்கேறியது
        ஒரு சனிக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் பெட்டியை கீழேயிறக்கி பார்த்தேன். அது மிகவும் அழுக்காகயிருந்தது. அதை சுத்தப்படுத்தி நீரால் கழுவி மீண்டும் அதை புதியதைப் போல் காணச்செய்தேன். அதை பார்க்கும்போது எனக்கு அதை நானே எடுத்துக்கொள்ளாம் என தோன்றியது. ஆனால் மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. மீண்டும் அதை மேலே வைத்தேன். வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் அதை பார்த்து அதனைப்பற்றி கேட்டுக்கொண்டேயிருந்ததால் அதை எடுத்து என் அறையின் மேலே வைத்துவிட்டேன். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதை சுத்தப்படுத்தி வைத்தேன். இன்னமும் அதை யாரும் உபயோகிக்காமல் தனியாகவேயிருந்தது. அது அங்கே தான் இருக்கிறதாவென்று அடிக்கடி பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன்.
பெட்டியைக் காணவில்லை
        ஒரு நாள் பணி முடிந்து அறைக்கு திரும்பிய போது, எதேச்சையாக மேலேப் பார்த்தேன். பெட்டியை காணவில்லை. சமையற்கட்டில் பார்த்தேன், இன்னோரு அறையில் பார்த்தேன், வீட்டின் பிறப்பகுதியில் தேடினேன். காணவில்லை. பின் என் அறைக்கு வந்து என் கட்டிலில் அமர்ந்தப்போது நான் அதை என் பக்கத்தில் இருக்கும் குமார் கட்டிலின் அடியில் கண்டேன். அதை தூக்கியப்போது அது கனமாகயிருந்தது. திறந்துப்பார்த்தப்போது அதில் அவனுடைய துணிகள் இருந்தது. அதை அப்படியே வைத்துவிட்டேன். குமார் வந்தவுடன் அவனிடம் கேட்டதற்கு யாருக்கும் பயனப்படாமல் இருப்பதால் தான் உபயோகபடுத்திக் கொள்வதாக கூறினான். என் நண்பன் ஞாபகம் வந்து கேட்டால் திருப்பி தந்துவிடுவதாக சொன்னான். நான் ஏதோவொரு கவலையுடன் தலையசைத்து அமர்ந்துவிட்டேன்.
குழப்பம் ஆரம்பம்
        குமார் பெட்டியை எடுத்துக்கொண்டதில் இருந்தே அதை பற்றி நிறைய நினைக்க ஆரம்பித்தேன். அடிக்கடி பெட்டியை பார்த்துக்கொண்டேன். அவன் இல்லாத சமயத்தில் அதனை திறந்துப் பார்த்தேன். இந்த துணிகள் வைப்பதற்கா இவன் இதை பயன்படுத்துகிறான் என்று கோபமாக வந்தது. வேறு இடமா இல்லையென்று கடிந்துக்கொண்டேன். முன் பழகியதுப்போல் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வேறு மாறி அவனிடம் பழக ஆரம்பித்தேன். கேட்ட கேள்விக்கு பதில், சரியாக முகம் காட்டி பேசாதிருத்தல் என அவனிடம் பெரியதாக எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.
பெட்டிப் புறப்பட்டது
        ஒரு நாள் பணி முடித்து வீடு திரும்பியப்போது அவன் அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டான். எப்போதும் இல்லாமல் ஏன் இன்று இதை எடுத்துக்கொண்டு போகிறான் என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். இத்தனை நாள் கொண்டுப்போகவில்லையே, திரும்பக்கொண்டு வருவானா இல்லை அங்கேயே யாருக்காவது கொடுத்துவிடுவானா என்று பல கேள்விகள். எனக்கு எல்லைக்கு மீறி கோபம் தருவதாகயிருந்தது அவன் அதை என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் எடுத்து சென்றது.  பெட்டி எனக்கு தெரிந்து அதன் முதல் பயணத்தை ஆரம்பித்தது.
மனப்போர்
        அன்று இரவு தூக்கமே வரவில்லை. வெகு நேரமாக அதை பற்றியே யோசித்துக் கொண்டுயிருந்தேன். மீண்டும் மீண்டும் அதே கேள்விகள். அடுத்த நாள் குளிக்கும் போதும் இதே கேள்விகள். பெட்டி திரும்ப வருமா இல்லை அப்படியே போய்விடுமா. அவனின் உருவத்தை பெட்டியோடும் பெட்டி இல்லாமலும் கற்பனை செய்து பார்த்து கொண்டேயிருந்தேன். அதை பற்றி நினைக்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு சிறு பைத்தியமாக இல்லை ஒரு பைத்தியமாக முழுதாக மாற ஆரம்பித்தேன்.

கண் திறந்த உறையாடல்
        ’ஜான், எப்படி இருக்கடா?’
        ’நல்லாயிருக்கேன் டா, நீயி?’
        ’ம், ஏதோ இருக்கேன் டா’
        ’என்னடா குரல் சரியில்லை. என்னாச்சு?’
        ’ஒண்ணுமில்லடா. நல்லாதான் இருக்கேன்’
        ’மச்சி, உன்ன ஏழாவது படிக்கறப்ப இருந்து எனக்கு தெரியும். உன் குரல் வச்சே உன்னோட மனசு நல்லாயிருக்கா இல்லையானு கண்டுபுடிச்சிருவேன். சொல்லு என்னாச்சுனு சொல்லு’
        ’ஆமாம் டா, மனசு சரியில்ல டா. ரெண்டு மூனு நாளா ஒருமாறி இருக்கு’
        ’யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா? எதாச்சும் பிரச்சனையா?’
பெட்டியின் கதையை முழுதாக அவனிடம் சொன்னேன்.
        ’டேய், நான் ஒண்ணு கேக்கட்டுமா?’
        ’கேள்றா’
        ’நீ யாரு டா?’
        ’உன் நண்பன்’
        ’எனக்கில்ல, இந்த உலகத்தில நீ யாரு?’
        ’ஒரு மனுசன்’
        ’மனுசனா பொறந்த எல்லாதுக்குமே இதே நோய் தான் இருக்கு. ஆசை. ஆசை. அவனவன் அவன் எல்லைக்கு மேல ஆசப்படுறான். அவனுக்கு சொந்தமில்லாத ஒரு பொருள் மேல ஆச வச்சு, நாயா பேயா அது பின்னாடி அலைஞ்சு பைத்தியமா மாறிப்போறான்’
        ’இல்ல டா, அது வந்து…’
        ’நிறுத்துடா. பேசுறத நிறுத்து. பெரிய சமத்துவவாதி, பகுத்தறிவாதினு பேசுற. ஒரு பகுத்திறிவாதி இப்படி தான் அடுத்தவன் பொருள் மேல ஆச வச்சு அலைவானா? உனக்கு சொந்தமில்லாத ஒரு பொருள் பத்தி கவலபடுறியே அது பேரு என்ன? கொஞ்சமாவது யோசிக்க வேணாம்? வெக்கமாயில்ல உனக்கு?’
        ’ஆனா அது என் கூட இருந்த யாரோ ஒருத்தனோடுது தானே. அதனால..’
        ’உன்னோடுதில்லல. யாரும் வந்தானா அது எனக்கு சொந்தமின்னு?’ நீ சம்பாரிச்ச காசுல வாங்கல, உங்க அப்பா வாங்கி தரல. அப்புறம் ஏன்?’
        ’ஏன்னு தெரியலடா’
        ’உனக்கு தெரியும் நான் சாவோட எல்லைக்கு போயிட்டு வந்தவன். ஆம்புலன்ஸ்ல நினைச்சுட்டேன் அவ்ளோ தான் நான். இனி புழைக்க மாட்டேனு டாக்டர் சொன்னப்ப நீயும் தானே இருந்த. ஆனா இப்ப உன்கிட்ட பேசுறேன்’
        ’சாரிடா’
        ’அந்த எல்லைய பாத்ததால சொல்றேன். எதுவுமே உனக்கோ எனக்கோ சொந்தமில்ல. எதுவும் நிரந்தரமில்ல. தேவயில்லாத ஒரு விசயத்த மனசுல போட்டுகிட்டு இப்படி குழம்பிப்போயிருந்த பாக்க நல்லாவாயிருக்கும். நமக்கு முடிக்க வேண்டிய வேல நிறையாயிருக்கு. அத பத்தி கவலபடு. அத விட்டுட்டு இது எதுக்கு. போ போயி வேற வேலய பாரு, மேட்ச் பாரு, பாரதியார் கவித படி, கத எழுது. அத விட்டுட்டு பெட்டி இருந்துச்சாம் இவன புடிச்சுகிட்டு விடாம துரத்துச்சாம்னு’
        ’சாரிடா, இனி அத பத்தி நினைகல டா. எனக்கு இப்ப தான் புரியுது. சனியன் யாருகிட்டயோ எங்கேயோ இருந்துட்டு போகுது. அத பத்தி இனி கவலபட மாட்டேன் டா’
        ’சரி விடு, அடுத்து எப்ப ஊருக்கு வர?’
        ’தெரியலடா, வந்த சொல்றேன்.
        ’கண்டிப்பா சொல்லு, பாக்கலாம்’
        ’பாக்கலாம்’
குமாரின் வருகை
        குமார் சில நாட்கள் கழித்து வந்தான். அவன் என்னிடம்
        ’என்னனா ரொம்ப சந்தோசமா இருக்கீங்க? என்ன விசயம்?’
        ’கொஞ்ச நாளாவே ஒரு சனியன் என்ன புடிச்சி இருந்துச்சு, இப்ப அத ஓட வச்சுட்டேன். அதான் நிம்மதியா இருக்கேன்’
        ’சரி சரி’
பெட்டி குமாரின் கட்டிலுக்கடியில் இருந்தது. அது என்னை பார்த்து மொறைபதுப்போல் இருந்தது. நான் அதை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன்.


இயல்பு நிலைக்கு அருகில்...





பைத்தியக்காரனாகிய நான்,
சில காலம்
இயல்பு நிலைக்கு
திரும்பலாம் என்றிருக்கிறேன்.
எப்படி என்றா கேட்கிறீர்கள்…

ஒரு ரயில் நிலையத்தில்
குண்டு வெடிப்பு நிகழ்ந்தால்,
சிதறிய இரத்தம் உறைவதற்குள் – நீங்கள்
இயல்பு நிலைக்கு திரும்புவீர்களே,
அதை போல…

ஒரு பச்சிளம் குழந்தை
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால்,
அந்த வலி மறையுமுன்பே - நீங்கள்
இயல்பு நிலைக்கு திரும்புவீர்களே,
அதை போல…

மீத்தேன் வாயு போராட்டத்தை ஆதரித்தோ,
ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்தோ,
ஒருநாள் அடையாள கடையடைப்பு
போராட்டத்தை நிகழ்த்தி,
இயல்பு நிலைக்கு திரும்புவீர்களே,
அதை போல…

ஐந்து வருடத்திற்கு ஒருவரை
ஆட்சி கட்டிலில் அமர்த்தி
உங்களை சுரண்ட அனுமதித்துவிட்டு,
டீக்கடையில் அமர்ந்து
இட்லி கம்யூனிசம் பேசிவிட்டு
வீராவேசமாய் எழுந்து போவீர்களே
அதை போல…

இவையெல்லாம் விட,
தலைக்கேறிய போதையால்
விபத்தில் சிக்கி மூளை சிதறியவனையும்,
சாக்கடையில் விழுந்து
பிதற்றி கொண்டிருப்பவனையும்
சர்வ சாதரணமாய் கடந்து
இன்னொரு குவாட்டர் சொல்வீர்களே
அதை போல…