Wednesday, 29 October 2014

போதுமென்று நினைக்கிறேன்























இன்றைக்கும்
இந்த
நிசப்த
இரவினைத்
தூங்காது கடக்கப்போகிறேன்
என்று தெளிவாய்த் தெரிகிறது

மாதத்தின் கடைசி தேதி
பெருகிடும் தேவைகள்
பிடிக்காத அலுவல்கள்
அடம்பிடிக்கும் சோம்பல்
கருமேகங்கள் அற்ற வானம்
எப்போதும் அல்லாத வெயில்
நெரித்து தள்ளிய பேருந்து
புழுங்கிப் போன உடல்
குழம்பி கிடக்கும் மனம்
சவரம் செய்யாத முகம்
முடிக்க முடியாத சில கவிதைகள்
மாதங்கள் துவைக்காத போர்வை
நாற்றமெடுக்கும் காலுறைகள்
காற்றோட்டம் இல்லாத மெத்து
அடிக்கடி இரையும் பண்பலைகள்
சண்டையிடும் தெருநாய்கள்
பிடுங்கும் கொசுக்கள்
விரட்டும் வலைத்தள அரட்டைகள்
விடாத ஒற்றைத் தலைவலி

நெடுநேரமாய்
அழைப்பை ஏற்காத தலைவி

போதுமென்று நினைக்கிறேன்
இன்றைய இரவினை

தூங்காது கடப்பதற்கு

Thursday, 16 October 2014

அழகாய் தெரிந்த கண்கள்


மழை தூறி முடித்து
இரவாகிக் கொண்டிருந்தது
அந்த மாலை நேரம்

நீ யாரென்று நானும்
நான் யாரென்று நீயும்
அறிந்திடாத
நம்முடைய முதல் நாள்
சந்திப்பு அது

மழையின் ஈரம்
உன் கால்களை
விழுங்க சற்று
ஓரமாய்
ஒதுங்கி நடந்தாய்

குறுகலான அந்த
ஈரப் பாதையில்
இப்போது
எனக்கெதிரே நீ
உனக்கெதிரே நான்

யார் விலகி வழி
விடுவது என்று
குழம்பிய அந்த 
சில நொடிகள்
என் விழி
உன் விழியைப்
பருகியது

சிந்திக்கும் நேரங்கள்
தீர்ந்தது
உன் கண்களை
சந்தித்த அந்நேரம்
முதல்

அது நிமிடங்கள் தான்…

நிமிடங்கள் தான்
என்றாலும்
அப்போது
அந்த கண்கள்
ஏன் அழகாய்த் தெரிந்தன.

இனி
எதேட்சையாய்
நமக்குள் சில
சந்திப்புகள் நிகழ்ந்து விடின்
உன்னிடமிருந்து
என்னை 
எங்கனம் மீட்பது

என்ன நிகர் கண்டேனோ
தெரியவில்லை...

அது நிமிடங்கள் தான்
என்றாலும்
அப்போது
அந்த கண்கள்
ஏன் 
அழகாய்த் தெரிந்தன.


துளித் துளியாய் - 55