Tuesday, 21 April 2015

மாடர்ன் டே கம்யூனிஸ்ட்


சகா, இங்க உட்காரலாமா…
சகாவா…?
சக குடிமகன சகானு சொல்றது தப்பு இல்லையே…!
ஓ! நீங்க அப்பிடி வரீங்க… உட்காருங்க, எனக்கும் கம்பெனி இல்லாம போர் அடிக்குது. நான் கூட அன்பே சிவம் கமல் மாதிரி கம்யூனிஸ்ட்டோனு நினைச்சுட்டேன்.
கிட்டதட்ட அப்படித்தான்னு வைச்சுக்குங்களேன்.
ம்ம்… எங்க வொர்க் பண்றீங்க…
வேலை தேடுறது தான், இப்போதைக்கு என் வேலை.
பாத்தா, காலேஜ் முடிச்சு ரெண்டு, மூணு வருசம் ஆனா மாதிரி இருக்கு. இன்னுமா வேலை தேடுறீங்க…
இல்ல சகா, நாலு அஞ்சு கம்பெனி மாறியாச்சு. எந்த இடத்துலயும் நமக்கு செட் ஆகல. ஐ.டி முழுக்க சுயநலவாதிங்க தான்  நிறைய இருக்காங்க. அவங்க கூட என்னால இணைஞ்சு வேலை செய்ய முடியல.
ஹல்லோ…, எங்கள பாத்தா உங்களுக்கு செல்ஃபிஷ் மாதிரி இருக்கா…
அப்படி இல்ல சகா…, இப்போ உங்க நண்பர் ஒருத்தர், உங்களுக்கு ரொம்ப பழக்கம், அவர் ஒரு வொர்க்கஹாலிக்னு வைச்சுக்கங்களேன்.
வொர்க்கஹாலிக்கா அப்பிடினா…!?
ஆல்கஹால்க்கு அடிமை ஆனா ஆல்கஹாலிக், வொர்க்குக்கு அடிமை ஆனா வொர்க்கஹாலிக்.
ஓ.கே. காட் இட். கன்டினியூ…
இன்னொரு நண்பர் இருக்கார், அவர் சுமார்ட் வொர்க்கர். எல்லா வொர்க்கையும் அந்த நண்பர்ட்ட கொடுத்துட்டு, இவருக்கு தெரிஞ்ச நல்ல இங்க்லீஷ்ஷ வைச்சு எல்லா மீட்டிங்க்லயும் நல்லா பேசி, நல்ல பேரு எடுத்துட்டு போயிருவார். இப்போ அப்ரைசல் டைம்ல யாருக்கு நல்ல ரேடிங்க் கொடுப்பாங்க.
மேனஜரியல் பாயிண்ட் ஆப் வியூல இருந்து பாக்குறப்போ கண்டிப்பா சுமார்ட் வொர்க்கற்கு தான் அதிகம் கொடுப்பாங்க. ஏன்னா மீட்டிங்கல அவன் விவரிச்சு சொல்றத வச்சு அவன் தான் அத பண்ணி இருப்பான்னு மேனஜர் நினைப்பான். பின்னாடி ஹார்ட் வொர்க் பண்ணவன பத்தி அவனுக்கும் ஒன்னும் தெரியாது.
அப்சலூட்லி…, அந்த சூழ்னிலைல நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க.
கண்டிப்பா நான் அந்த சிச்சுவேசன்ல இருக்க மாட்டேன், ஏன்னா ஐ ஆம் ஒன் ஆப் தி சுமார்ட் வொர்க்கர்.
நான் என்ன பண்ணேன் தெரியுமா… நேரா அவன மேனஜர்க்கிட்ட அழைச்சுட்டு போயி, ஏன் இவனுக்கு ரேடிங்க் கொடுக்கலுனு கேட்டேன். எனக்கு சிம்பிளா ஒரு லெட்டர கொடுத்து வெளில அனுப்பிட்டாங்க, ஆனா அவனுக்கு கான்ஃபடென்சியல் விசயத்த வெளில சொல்லிட்டான்னு, ப்ளாக் மார்க் வைச்சு, எந்த கம்பெனிலயும் ஜாயிண்ட் பண்ணவிடாம பண்ணிட்டாங்க. தன்னுடைய சம்பளத்த பத்தி தன்னுடைய நண்பர்ட்ட பேசுறது கான்ஃபடென்சியல்னா எங்க சார் போறது. அதனால தான் ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிச்சு, இதெல்லாம் தட்டிக்கேட்டுட்டு இருக்கோம்.
“சோ… நீங்க ஒரு கம்யூனிஸ்ட்…, கார்ப்பரேட் கம்யூனிஸ்ட். நல்லா இருக்கு… கார்ப்பரேட் கம்பெனிகள்ல புரட்சி பண்ற, புரட்சி பாய்ஸ்.  போன வருசம் ஒரு படம் வந்துச்சே, அதுல இட்லி கம்யூனிசம்னு ஒன்னு சொன்னாங்களே, அதவிட இது நல்லா இருக்கு… கார்ப்பரேட் கம்யூனிஸ்ட்.” சொல்லிவிட்டு மிச்சமிருந்த கோப்பை மதுவை முழுதாக குடித்தான் கேன்டி….
கேன்டி, கந்தசாமி என்ற தன் பெயரை கார்ப்பரேட் உலகத்திற்காக கேன்டி என்று மாற்றிக் கொண்ட, ஒரு பன்னாட்டு கம்பெனியின் உயர்நிலை ஊழியர். பத்து வருடத்திற்கும் மேலான கார்ப்பரேட் அனுபவம். கொஞ்சம் வெள்ளரிகளையும், சில க்ரீன் சாலட்களையும் சைட்-டிஷ்ஷாக சாப்பிட்டுவிட்டு நிதானமாக தன் பேச்சை தொடர்ந்தார். எந்த கம்பெனில வேலை பாத்தீங்க…?
இது இந்த ஒரு கம்பெனில மட்டும் நடந்த விசயம் இல்ல சகா, நிறைய கம்பெனில பாத்தாச்சு.., எல்லா கம்பெனிகளிலேயும் எல்லா கங்காணிகளும் ஒரே மாதிரி தான் இருக்காங்க. சில கம்பனிகள்ல, என்ன காரணம்னு கூட சொல்லாம வெளில அனுப்பிட்டாங்க. நான் வேலை பாத்த கம்பெனிலலாம் ஆஃபர் லெட்டர்லாம் கிடையாது, நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கோங்கனு சொல்வாங்க, நானும் போவேன், ரெண்டு மூணு மாசம் போகும் சாலெரி கொடுக்க மாட்டாங்க, ஏன்னு கேப்பேன், வெளில அனுப்பிடுவாங்க. தட்ஸிட். அப்புறம் வழக்கம் போல ரெஸ்யூம் அப்டேட், கம்பெனிகள், ட்ராஃபிக், கடன் பிரச்சனை, கடல் காத்து, ஃபேஸ்புக்ல சமூக பிரச்சனை, வாட்ஸப்ல காதல் பிரச்சனைகள்னு ஓடிட்டு இருக்கு. தன் கையிலிருந்த கோப்பையை விரக்தியாக பார்த்தபடியே சொல்லிமுடித்தான் அந்த கம்யூனிஸ்ட்.
அப்ப நீ கம்யூனிஸ்ட் இல்ல… ஒரு ரெஸ்யூம் அப்டேட்டர் என்று சொல்லிவிட்டு அவனுக்காக காத்திருக்காமல் தன் கோப்பையை முடித்தான் கேன்டி. அவன் கையில் இன்னும் இருக்கும் கோப்பையை பார்த்துவிட்டு முடிச்சுவிடுங்க பாஸ், போயி ஒரு தம் பத்த வைப்போம் என்றபடி முன்னால் நடந்தான் கேன்டி.

ஜி… சொல்றேன்னு கோவிச்சுக்காதிங்க, எப்போ மன்மோகன் சிங், வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அழைப்பு விடுவிச்சாரோ அப்பவே கம்யூனிசம் செத்துபோச்சு. இப்ப போய் நான் புரட்சி பண்றேன், கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள இணைச்சு சங்கம் ஆரம்பிக்கபோறேன், என்ன மாதிரி வேலையில்லாதவங்கள சேர்த்து போராடபோறேன்னு சொல்லி வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிக்காதிங்க… என்ன பாருங்க… டாக்ஸ்லாம் பிடிச்சே மாசம் ஒரு லட்சம் சாலெரி வருது, வருசா வருசம் நல்ல ஹைக் வேர கிடைக்குது, வைஃப் வேர சம்பாதிக்கிறா, புதுசா ஃப்ளாட் வாங்கியாச்சு, புள்ளைங்க சிட்டிலயே பெரிய ஸ்கூல்ல படிக்கிறாங்க, டெய்லி கார்ல தான் கொண்டுபோய் விட்டுட்டுவரேன். ஐயம் செட்டில்ட். இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க… வீட்ல இருந்தா போர் அடிக்குமேனு ஆஃபிஸ்க்கு போறேன் அவ்வளவு தான். என சொல்லிவிட்டு கடைசி ஃபஃப் தம்மை இழுத்துவிட்டு… வாங்க சீக்கிரம் முடிப்போம், வீட்டுக்கு போகனும். என சொல்லிவிட்டு மிச்சமிருந்த சரக்கை நோக்கி நடந்தான் கேன்டி, கேன்டியை பின் தொடர்ந்தான் ரெஸ்யூம் அப்டேட்டர்.

ஜி… உங்க பேரு என்ன சொன்னீங்க…
நான் இன்னும் சொல்லவேயில்ல சகா.
இட்ஸ் ஓ.கே. நீங்க சொல்லவேணாம். உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. உங்க ரெஸ்யூம் எனக்கு ஃபார்வர்ட் பண்ணுங்க, நான் ரெகமெண்ட் பண்ணா எங்க கம்பெனில கண்டிப்பா எடுத்துக்குவாங்க.
தாங்க்ஸ் ஃபார் எவெரிதிங்க் சகா, பட் ஐ கேன் மேனேஜ், நானே பாத்துக்கிறேன்.
யோவ், புரியாம பேசாதயா… உனக்கு ஏன் எந்த கம்பெனிலயும் வேல கொடுக்கலனு தெரியுமா… உன் ஃப்ரண்ட்ட மட்டும் ப்ளாக் லிஸ்ட்ல வைக்கல, உன்னையும் தான் வைச்சு இருப்பாங்க. எங்க போனாலும் வேல கிடைக்காது. நான் சொன்னா என் ஹெச்.ஆர் கேப்பான்யா, லாஸ்ட் டைம் திருநெல்வேலி போனப்போ அல்வாலாம் வாங்கி கொடுத்து கர்ரெக்ட் பண்ணி வச்சுருக்கேன். கண்டிப்பா நீ ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணு நான் பாத்துக்கிறேன்.
சொல்லிவிட்டு எழுந்து சென்ற கேன்டி, அடுத்த நாள் தாமதமாக விழித்து, அவசரஅவசரமாக அலுவலகத்தை அடைந்தான். அதற்குள்ளாகவே அவன் அட்டன்ட் செய்ய வேண்டிய கிளைன்ட் மீட்டிங் முடிந்து இருந்தது. தலைவலி டேப்ளட் போட்டுக்கொண்டே மெயில் செக் பண்ண ஆரம்பித்தான். ஹெச்.ஆரிடமிருந்து வந்த ஒரு குறிப்பிட்ட மெயிலிலேயே அவனின் விழிகள் நிலைகுத்தி இருந்தன.

சார்.., மீட்டிங்க் நல்லபடியா முடிஞ்சுடுச்சு சார். கிளைன்ட்ஸ் ஆர் ஹேப்பி. ப்ராஜக்ட்டுக்கு ஓ.கே சொல்லிட்டாங்க, அன்ட் நவ் ஆன்வர்ட்ஸ் ஐயம் தி ப்ராஜக்ட் மானேஜர் ஃபார் திஸ் ப்ராஜக்ட். ப்ளீஸ் என்ன விஸ் பண்ணுங்க சார் என்று சொல்லிவிட்டு கை நீட்டினான் பேடி என்கிற பத்மநாபன். என்ன நடக்கிறது என்று புரியாத நிலையிலேயிருந்த கேன்டி வேண்டா வெறுப்பாய் கைகுழுக்கிவிட்டு ஹெச்.ஆர் அறையை நோக்கி, அவனை வேலையை விட்டு நீக்கியதற்கான காரணமறிய படபடப்புடன் நடந்தான்.
ஹாய் கேன்டி… வொய் ஆர் யூ ஸோ லேட்…? ஐ திங்க் யூ காட் மை மெயில். திஸ் ஈஸ் யுவர் லாஸ்ட் வீக் இன் திஸ் கம்பெனி, ப்ளீஸ் சர்ரெண்டர் யுவர் அஸ்ஸெட்ஸ் அசாப் அண்ட் மை பெஸ்ட் விஸெஸ் ஃபார் யுவர் ப்ரைக்ட் ஃப்யூச்சர். என சொல்லிவிட்டு வெளில போட நாயே என டீசன்ட்டாக சொல்வதை போல் கதவை நோக்கி கைகளை நீட்டினான் ஹெச்.ஆர்.
எதுவுமே பேச முடியாமல் வந்த ஆத்திரங்களையும் அழுகையும் அடக்கிக்கொண்டு வெளியேறினான் கேன்டி.
மிஸ்டர்.கேன்டி ஒன் மினிட், ஐ ஃபர்கெட் டு சே ஒன் திங்க். திஸ் அல்வா ஈஸ் வெரி டேஸ்டி அன்ட் யம்மி…
பட்டென கதவு சாத்தப்படும் சத்தம் மட்டுமே அந்த கணத்தில் அங்கிருந்தது.

சகா… என்ன சகா ஆச்சு, ரெண்டு நாளா ஆளையே காணோம்,
என்ன சகா என்ன மறந்துட்டீங்களா, நான் தான் சகா ரெஸ்யூம் அப்டேட்டர்…
யோவ்… ஓடி போயிரு… நான் செம காண்டுல இருக்கேன். எந்த நேரத்துல உனக்கு நான் வேலை வாங்கிதரேன்னு சொன்னேனோ, எனக்கு என் வேலை போயிடுச்சு… இப்ப என்ன பண்றதுனே தெரியாம உக்காந்து இருக்கேன்.
சகா…, ஏன் சகா ஃபீல் பண்றிங்க, நீங்க தான் செட்டில்ட் ஆச்சே. வீடு இருக்கு, கார் இருக்கு, வைஃப் வேர சம்பாதிக்கிறாங்க…
வீட்டுக்கு இன்னும் ஈ.எம்.ஐ முடிக்கலையா, புள்ளைங்கள படிக்க வைக்கிறதுக்காக பெர்சனல் லோன் எடுத்தேன் அதையும் இன்னும் அடைக்கல, கிரடிட் கார்ட் பில் கூட வந்துடுச்சு, வைஃப்ட காசு கேட்டா கேவலமா பாக்குறா, பெட்ரோல் போட காசு இல்லாம இன்னைக்கு ஒரு நாள் பஸ்ல போங்கடனா.., பஸ்லயா… நாங்களா… ஐயயோ அந்த கிரவுட்ல, வேர்வ நாத்ததுல நாங்க எப்பிடி போகறதுனு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போகாம லீவு போட்டுட்டு உக்காந்துட்டானுக. இது எல்லாத்துக்கும் மேல வீட்ல நீங்க சும்மா தானே இருக்கீங்க, எதுக்கு தண்டமா வேலைக்காரிக்கு சம்பளம்னு சொல்லி அவள நிப்பாட்டிட்டு என்ன வீட்டுவேல பாக்க சொல்றாயா. வீட்ல இருக்க முடியாம இங்க வந்தா, நீ வேற டார்ச்சர் பண்ற…
எதுக்கு வீட்டுக்கு அனுப்புனாங்க…? ரீசன் ஏதாவது சொன்னாங்களா…?
பெர்ஃபார்மன்ஸ் பத்தலயாம். பத்து வருசமா இதே பெர்ஃபார்மன்ஸ் தானே கொடுத்துட்டு இருக்கேன். பத்து வருசத்துக்கு முன்னாடி நட்டத்துல ஓடிட்டு இருந்த கம்பெனி இப்போ இந்தியாவிலேயே டாப் ரிவென்யூ கம்பெனியா இருக்கே எப்பிடி, எல்லாம் எங்களாலதான். வாரக்கணக்குல வீட்டுக்கு போகாம கம்பெனியே கதினு கடந்து உழைச்சு, ஒவ்வொரு ப்ராஜக்ட்டையும் முடிச்சு, கிளைன்ட கன்வின்ஸ் பண்ணி, இதான் அவன் கேட்ட ப்ராஜக்ட்னு அவன நம்ப வைச்சு, எப்படிலாம் கம்பெனிக்கு ஃப்ராஃபிட் வாங்கி கொடுத்தோம்னு தெரியுமா, நேத்து வந்த அந்த சின்ன பசங்களுக்கு. நான் வாங்கி கொடுத்த அல்வாவ சாப்டுகிட்டே எனக்கு அல்வா கொடுக்கிறான்யா அவன். அவன மட்டும் வெளில பாத்தேன், சங்க அறுத்திறேன் பாரு.
அவன ஏன் சகா திட்டுறீங்க… அவன் வெறும் அம்பு மட்டும் தான். எய்தவன் கம்பெனிகாரன், அவன என்ன பண்றதுனு யோசிங்க.
கம்பெனிகாரன என்னயா பண்ணமுடியும், ஏதாவது எதிர்த்து கேட்டா என்னயும் உங்க லிஸ்ட்ல சேர்த்துடுவானுக… அப்புறம் எங்கயும் வேலை கேட்டு அழைய முடியாது…
அவிங்க ஒரு சங்கம் வச்சு நம்மள ஆட்டும் போது, நாம ஒரு சங்கம் வச்சு அவிங்கள ஆட்ட முடியாதா சகா.
இதுலாம் பேசுறதுக்கு தான்யா நல்லா இருக்கும். பிராக்டிக்கலா நடக்குமானு யோசிச்சு பாரு.
ஏன் சகா நடக்காது, எந்த மன்மோகன் சிங் வெளிநாட்டு கம்பெனிகள கூப்பிட்டு கம்யூனிசத்த அழிச்சார்னு சொன்னீங்களோ, அதே மன்மோகன் சிங் தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தையும் கொண்டு வந்தாரு. அதுல போட்டு ஏன் தூக்குனாங்கனு கேள்வி கேளுங்க. ஒழுங்க பதில் வரலனா கோர்ட்டுக்கு போவேன்னு மிரட்டுங்க.
நடக்குமாய்யா…
ட்ரை பண்ணுங்க சார்…



No comments:

Post a Comment