நெடுநாள் தவத்தை
உன் மூச்சு காற்று
தொட்டதிலிருந்து
ஏதோவாகிக்கொண்டிருக்கிறேன்
எனக்கென்று இருக்கும்
இந்தப் பாலைவனம்
அழகிய நந்தவனமாகிக்
கொண்டிருக்கிறது
என் நாட்குறிப்பின்
பக்கங்களில்
பகலும் அலைகிறது
நிலா
என் கவிதையின் வரிகளில்
தினமும் நடக்கிறது
விழா
நேரங்களை மதிப்பதில்லை
என்றாகிவிட்ட போது
தூக்கம் ஒரு தடையாகுமோ
பின்னிரவும் கடக்க
மின்மினிகள் மினுக்க
கண்மணியே உன்னிடம்
பேசியே விடிகிறது
உனக்கும் எனக்குமான
தூரங்கள் குறைந்து
கொண்டே
வருகின்றது
மாற்றங்களை விரும்பாத
மனதில்
நீ சேர்ந்து கொண்டிருக்கிறாய்
கடுகளவு என் உள்ளத்தில்
கடல் அளவு நீ
எப்படி சேமிப்பதுனை…
உன் கையிடம் சேராத
என் கைகளை
யாரிடமும் கொடுப்பதில்லை
என்றாகிவிட்டது
ஆமையாய் ஓடும்
நெடிய பொழுதினை
வேகமாய் விரட்டுகின்றேன்
ஏதோ ஆகிக் கொண்டிருக்கிறேன்
என்பது மட்டும்
புரிகிறது
யாருமற்ற உலகில்
நீயும் நானும் மட்டுமே
வாழ்வதாய்த் தெரிகிறது
மறைத்தே வளர்க்கும்
என் மீதான உன் பிரியம்
உனக்கே தெரியாமல்
அவ்வப்போது நீ சிந்திடும்
வேளைகளில் திக்குமுக்காடிப்
போகிறேன் அன்பே
வேண்டும்போதெல்லாம்
உன்னை
நினைக்கும் உரிமை
என் எண்ணத்திற்கு
எப்போதும்
உண்டு ஆகவே
உன்னை கேட்டு பெறப்போவதில்லை
என்றும்..
என்னைச் சுற்றி
மிதந்து கொண்டிருக்கும்
காற்று எப்போதெல்லாம்
என்னைத்
தொடுவதாய் உணர்கின்றேனோ
அப்போதெல்லாம்
நீ என்னைத் தொடுகிறாய்..
நீ குழப்பத்தில்
இருக்கும் போது
என்னைச் சுற்றிலும்
குழப்பங்கள்
சூழ்ந்து விடுகின்றது
உண்மையில்
ஏதோவாகிக்கொண்டிருக்கிறேன்....…
No comments:
Post a Comment