1526-ஆம் ஆண்டு இன்றைய ஆப்கானிஸ்தானின் பெர்கானாவிலிருந்து புறப்பட்ட ஒரு
புழுதிபுயல் டெல்லியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த, துப்பாக்கி என்றால்
என்னவென்றே அறிந்திராத, சுல்தான் இப்ராஹிம் லோடியின் பெரும் யானைப்படையை, தனது திறன்மிகுந்த
போர் வியூகத்தினாலும், துப்பாக்கி சத்தத்தினாலும் வீழ்த்தியழித்து, ஒரு மாபெரும்
சாம்ராஜ்யத்தை கட்டமைத்தது. துப்பாக்கியும், வாளும் ஏந்திய அந்த புயலின் பெயர்
பாபர், அவர் அமைத்த சாம்ராஜ்யம் மொகாலய சாம்ராஜ்யம். பானிப்பட் என்னுமிடத்தில்
நடைபெற்ற இந்த போரைத்தான் இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த போர் என்றும், ஒரு
சாம்ராஜ்யத்தின் வித்து என்றும் வரலாற்று ஆசிரியர்கள் புகழ்கிறார்கள். அதேபோல்
அல்லது அதற்கு நிகரான ஒரு போரை 600 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது கி.பி.880-ஆம்
ஆண்டு திருப்புறம்பியம் என்னுமிடத்தில் தமிழகம் கண்டது.
பானிப்பட் போர் இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்தது என்றால்,
திருப்புறம்பியம் போர் தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைத்தது. பல்லவர்களுக்கும்,
பாண்டியர்களுக்கும் நடைப்பெற்ற போரில் நடுவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தான்
சோழ மன்னன் விஜயாலயன். ஒரு சமயம் பல்லவன் அபராஜிதனுக்கும், மறுசமயம் பாண்டிய
மன்னன் வரகுண வர்மனுக்கும் மாறிமாறி ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழல். ஏனெனில் இரு
மன்னர்களுக்குமிடையே போர் நடைபெறுமிடம் சோழனின் இடம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு
உண்டு இல்லையா, அப்படித்தான் பாண்டிய, பல்லவர்களின் பலப்பரீட்சைக்கும் ஒரு
இறுதிப்போர் வந்தது. பாண்டியனுக்கு ஈழத்திலிருந்து ஆதரவு வந்தது. பல்லவனுக்கோ கங்க
மன்னனிடமிருந்தது ஆதரவு வந்தது. இப்போரில் யார் வென்றாலும் சோழநாடு குல நாசம்
அடையும் என்பது அப்போதைய சோழ மன்னன் ஆதித்தனுக்கு தெரிந்தேயிருந்தது. யாருக்கும்
ஆதரவில்லை என்றும் ஒதுங்கவும் முடியாது. போரை சந்தித்தே ஆகவேண்டும். ஆகையால்
பல்லவனுக்கு தன் ஆதரவை தந்தான் ஆதித்தன். மூன்று நாள் நடைபெற்ற போரில் பல்லவப்படையை
சிதறடித்தான் பாண்டியன், மிச்சம் என்று ஒரு சிறிய குதிரை படையேயிருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் முதுமையினால் ஓய்வெடுத்து கொண்டிருந்த விஜயாலய சோழன்
என்னும் கிழட்டு புலி போர்க்களம் புகுந்தது.
குலத்தை காப்பதற்காக போராடிய விஜயாலய சோழனின் வீரம் வைரல் போல மற்ற
வீரர்களுக்கும் பரவி, போரின் முடிவை மாற்றியமைத்தது. வெற்றி சோழனிடம் தஞ்சம்
புகுந்தது. அப்போது தஞ்சைக்கு தஞ்சம் புகுந்த அந்த வெற்றி அடுத்த நானூறு
ஆண்டுகளுக்கு, கட்டுக்கடங்காமல் கடக்கும் காவிரியை கண்கொட்டாமல் ரசிப்பதிலேயே
காலம் கடத்தியது. அதன் உச்சம் ராஜேந்திர சோழன்.
ராஜேந்திர சோழன் பிறந்த ஆண்டைப் பற்றி சரியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. ஆடி
மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் என்று மட்டும் சில செப்புதகடுகள்
தெரிவிக்கின்றன. கி.பி 1012-ஆம் ஆண்டு ராஜராஜசோழன் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும்
போது, தனக்கு அடுத்த வாரிசாக ராஜேந்திரசோழன் அரசாளும் பொருட்டு அவனுக்கு இளவரசர்
பட்டமளிக்கிறான். ராஜேந்திர சோழனின் தலைமையில் ஒரு பெரும்படை வடக்கு நோக்கி சென்று
ராஷ்ட்ரகூடர்களை ( தற்போதைய கர்னாடகாவும், மத்திய பிரதேசத்தில் சில பகுதிகளும்
இணைந்த பகுதி ) நிர்மூலமாக்கி, அவர்களை அடக்கி வைத்தது. இதுவே ராஜேந்திரசோழன் பட்டத்து
இளவரசனாக ஆனபிறகு ஏற்று நடத்திய முதல் போர் ஆகும். வெற்றியை கொண்டாடுவதெற்கெல்லாம்
நேரமில்லை, அடுத்த வேலை தயாராகவேயிருந்தது.
ராஜராஜசோழன் ஆரம்பித்து வைத்த ஈழப் போரை நிறைவேற்றும் பொறுப்பு தானாகவே
வந்தது. ஈழத்து மலைப்பிரதேசங்களில் ஒளிந்து கொண்டு அவ்வபோது வெளிவந்து
பாண்டியர்களுடனும், சேரர்களுடனும் சேர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த
ஈழத்தரசன் ஐந்தாம் மஹிந்தனை ஒழித்திடும் முனைப்புடன் புறப்பட்டது இந்த வேங்கியை
அழித்த வேங்கை. ஈழத்தின் ரோகண நாட்டின் மீது நடந்த இந்த படையெடுப்பில்
மஹிந்தனையும், அவனது பட்டத்து அரசிகளையும், இளவரசிகளையும் சிறைப்பிடித்து
தஞ்சைக்கு இழுத்து வந்தான். பராந்தக சோழன் காலத்திலிருந்தே சோழர்களுக்கு ஒரு
நிரைவேறா ஆசை இருந்து கொண்டுவந்தது. அது பாண்டியர்களின் மணிமகுடத்தையும், இந்திரன்
பாண்டியர்களுக்கு அளித்த ரத்னஹாரத்தையும் கைப்பற்றுவதேயாகும். பாண்டியர்களின் செல்வாக்கு
குறைய தொடங்கிய காலத்தில் அவை சிங்கள அரசர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவற்றை
பாதுகாக்கும் பொறுப்பும் அழிக்கப்பட்டது. ராஜராஜசோழனால் கூட கைப்பற்ற முடியாத
மகுடத்தையும், இந்திரனின் ரத்னஹாரத்தையும் கைப்பற்றினான் ராஜேந்திரசோழன்.
ஈழத்து படையெடுப்பிற்கு பிறகு சதிவேலைகளில் ஈடுப்பட்ட பாண்டியர்களை வேரோடு
அழிக்கும் பொருட்டு மதுரையை நோக்கி ஒரு படையெடுப்பை எடுத்தான். இதில் மதுரை நகரம்
முழுவதும் சூறையாடப்பட்டது. கிராமங்கள் அனைத்தும் முற்றிலுமாய் அழிக்கப்பட்டன.
ராஜராஜசோழனின் படையெடுப்புகளில் பொதுமக்களை ஒன்றும் செய்வதில்லை ஆனால் ராஜேந்திர
சோழனின் படையெடுப்புகளில் எல்லாம் சர்வநாசம் தான். எதையும் விட்டு வைப்பதேயில்லை.
மதுரை முடிந்தபிறகு, சேர தேசம் புகுந்தது அவனின் படை. கேரளத்தையும் முற்றாய்
அழித்துவிட்டுதான் அமைதியாய் அமர்ந்தது. அதுவும் கொஞ்ச காலத்திற்கு தான்.
கீழை சாளுக்கியத்தை ஆண்டு கொண்டிருந்த விமலாதித்யனுக்கு ராஜேந்திர சோழனின்
தங்கை குந்தவையை மணமுடித்து கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு ராஜநரேந்திரன்
என்னும் மகன் இருந்தான். அதே விமலாதித்யனுக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அவள்
மேலை சாளுக்கிய வம்சத்தில் வந்தவள். அவளின் மைந்தன் விஜயாதித்தன். ராஜேந்திரசோழன்
சேர படையெடுப்பில் தீவிரமாய் இருந்தபோது மேலை சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் தனது
அதிகாரங்களை மெல்ல மெல்ல கீழை சாளுக்கியத்தின் மீது திணித்து கொண்டிருந்தான்.
விமலாதித்யன் மறைவுக்கு பின் ராஜநரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் நடைபெற்ற
உரிமை போரில் ராஜநரேந்திரனுக்கு ஆதரவாக ராஜேந்திரனும் ( மறுமகனாச்சே விட்டு
கொடுக்க முடியுமா... ? ) விஜயாதிதனுக்கு ஆதரவாக ஜெயசிம்மனும் போரில் ஈடுப்பட்டனர்.
ஜெயசிம்மனை ஓடஓட விரட்டி, துங்கபத்திரை நதியையும் தாண்டி, சாளுக்கிய தலைநகர் வரை
விரட்டியடித்தது ராஜேந்திரசோழனின் படை. ராஜநரேந்திரனுக்கு வேங்கி மன்னனாக பட்டமும்
சூட்டப்பட்டது. கொஞ்ச காலத்திற்கு பிறகு மீண்டும் கீழை சாளுக்கியத்தின் மீது
படையெடுப்பு நடத்திய ஜெயசிம்மன், வேங்கியை கைப்பற்றி விஜயாதித்தனை மன்னனாக
அறிவித்தான். மீண்டும் ஒரு பெரும்படை திரட்டி ராஜநரேந்திரனுக்காக போரிட்ட
ராஜேந்திரசோழன் மீண்டும் ஜெயசிம்மனை ஓடஓட துங்கபத்திரை நதிக்கரைக்கு விரட்டினான்.
மீண்டும் ராஜநரேந்திரனே வேங்கி மன்னனாக முடிசூட்டப்பட்டாலும் சோழர்களின் ஒரு படை
அங்கேயே நிரந்தரமாக தங்கவைக்கப்பட்டது.
வந்ததுதான் வந்துவிட்டோம் அப்படியே கங்கைக்கும் சென்று வருவோமே என்பதுபோல, தன்
படையை கங்கையை நோக்கி செலுத்தினான். தெற்கே அவனை எதிர்க்க யாருமே இல்லாததால்
அவனின் வடக்கு நோக்கிய இந்த படையெடுப்பு சாத்தியமானது. சோழர்படை சென்ற இடமெல்லாம்
வெற்றி. எதிர்த்த மன்னர்களெல்லாம் சிறை பிடிக்கப்பட்டார்கள். இறுதியாக கங்கமன்னன்
மஹிபாலனையும் தோற்கடித்தான். தன்னிடம் போரில் தோற்ற மன்னர்கள் தலையில் கங்கை
நீரை கொண்டுவர செய்து தான் புதிதாக அமைத்த
கோயிலில் அபிசேகம் செய்ய வைத்தான். அதனாலேயே அந்த சோழபுர கோயிலுக்கு கங்கை கொண்ட
சோழபுரம் என்று பெயரும் வந்தது. கங்கையை வெற்றி பெற்றதோடு தன் பயணத்தை முடித்து
கொள்ளவில்லை அந்த படை. அப்படியே தொடர்ந்து வங்காளத்தையும் கைப்பற்றி, அஸ்ஸாம் வரை
சென்றது. அஸ்ஸாமில் விடாமல் தொடர்ந்து பெய்யும் மழை அவனது படையெடுப்பிற்கு தடையாக
இருந்திருக்கலாம்.படையெடுத்து சென்று வெற்றிகளை குவித்தாலும் எந்த நிலப்பரப்பையும்
தன்னுடைய நாட்டின் கீழ் சேர்த்து கொள்ளவேயில்லை. வடக்கேயிருந்த மன்னர்களுக்கு தன்
திறமையை காட்டி கொள்ளவே இந்த படையெடுப்பை பயன்படுத்தி கொண்டானோ என்று கூட
தோன்றுகிறது.
சோழர்களின் கடல்வழி வாணிகம் கடல் கொண்ட காவிரி பூம்பட்டிணம் தலைநகராய் இருந்த
காலத்திலிருந்தே பிரசித்திபெற்றது. ராஜேந்திரன் காலத்திலேயும் வாணிபம்
சிறப்பாகவேயிருந்தது. குறிப்பாக சீனர்களுடனான வாணிபம். சோழ-சீன வாணிபத்தை பொருத்து
கொள்ளமுடியாத ஸ்ரீவிஜயத்து மன்னன் (சிங்கப்பூர்) விஜயதுங்க வர்மன், சோழர்களின்
வாணிபத்திற்கு இடைஞ்சலை கொடுக்க, அவனுக்கு ஆரம்பித்தது பிணி. கடல் கடந்தா சோழன்
வந்து தாக்க போகிறான் என்ற மிதப்பும், அவர்களின் வாணிபமே தன்னால் தான் நடக்கிறது
என்ற அகங்காரமும் அவனை அவ்வாறு செய்ய வைத்தது. பொறுமை என்பது இருந்தால் பொறுத்து
பாக்கலாம், ராஜேந்திரனுக்கு தான் அது கிடையாதே, அலைகடலில் அனுப்பிவிட்டான் படையை.
கடாரத்தில் களமிறங்கிய சோழர்களின் படை ஸ்ரீவிஜயத்தை முழுவதுமாய் கைப்பற்றி
சூறையாடியது. அனைத்து செல்வங்களும் அபகரிக்கப்பட்டு தமிழகத்துக்கு
கொண்டுவரப்பட்டன. யானைபடையையும் விட்டுவைக்கவில்லை. ராஜேந்திரனின் இந்த கடல்வழி
படையெடுப்பு தற்போதைய இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு வரை சென்றது.
அன்னிய நாட்டிற்கு படையெடுத்து சென்ற முதல் மற்றும் கடைசி இந்திய மன்னன்
ராஜேந்திர சோழன் தான். கப்பற்படை வைத்திருந்த முதல் மன்னனும் இவனேயாவான். அதனால்
தான் தற்போதைய இந்திய கப்பற்படையின் ஒரு கப்பலுக்கு அவனின் பெயர்
வைக்கப்பட்டிருந்தது. அந்த கப்பலை கைவிட்டுவிட்ட இந்திய அரசு, அதற்கு பதிலாக புதிய
கப்பல் ஒன்றை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. அதற்கு முறையாக ராஜேந்திரனின் பெயர்தான்
வைக்க வேண்டும். ஆனால் தற்போதைய மோடி அரசு சாணக்கியா என்று பெயர் வைத்துள்ளது.
இப்பெரும் படையெடுப்புகளையும், அதனால் வெற்றிகளை மட்டுமே கண்ட ராஜேந்திர
சோழனின் இறுதி காலங்களை பற்றிய குறிப்புகள் கிடைக்க பெறவில்லை. ராஜேந்திர சோழனின்
சமாதி திருவண்ணாமலை மாவட்டம் நாட்டாரி என்ற ஊரில் உள்ளது. அங்கு எதற்காக சென்றான்,
எவ்வாறு இறந்தான் என்பதை பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை.
ராஜேந்திர சோழன் அரியணையில் ஏறி இந்த வருடத்துடன் ஆயிரம் வருடங்கள் நிறைவேறுகிறது.
ஆனால் அவனின் சிறப்பை பரப்பி, அவனுக்கு விழா எடுக்கத்தான் யாரும் இல்லை.
சோழர்களுக்கு விழா எடுத்தால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆகாது என்ற
அவநம்பிக்கையும் இதற்கு ஒரு காரணம். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ராஜேந்திர
சோழனுக்காக ஒரு விழா எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது அடித்த கடும்
புயலினால் பாராட்டு விழாக்கு அமைக்கப் பட்டிருந்த பந்தல் பறந்துவிட்டது. அதற்கு
பிறகு அந்த விழாவும் கைவிட பட்டுவிட்டது. விழா எடுக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக
கூறபடுகிறது. அரசு விழா எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் நாம் நம் மன்னன் பற்றி
பரப்புவது நம் கடமையல்லவா. நான் நிறைவாய் புரிந்துவிட்டதாய் நம்புகிறேன். நன்றி
வணக்கம்.
குறிப்புகள் :
1.
விக்கிபீடியா
2.
வந்தார்கள்
வென்றார்கள் – மதன்
3.
பொன்னியின் செல்வன் –
கல்கி
4.
கங்கை கொண்ட சோழன் –
பாலகுமாரன்.
நண்பா, ராஜராஜன் பற்றி ஓரளவிற்கு படித்துள்ளேன் ஆனால் ராஜேந்திரன் பற்றி படித்ததில்லை. நன்றி உங்கள் கட்டுரைக்கு...
ReplyDelete