Sunday 24 August 2014

யாழிக்கு கவிதைகள்


தொலைதொடர்பின் உச்சத்தில்

நானிருக்கிறேன்.

தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே

நீ இருக்கிறாய்.

எங்கே இருக்கிறாய் யாழி…?

எப்படி இருக்கிறாய்…?


நெடுஞ்சாலை பயணத்தில்

சாளரக்காற்று தலைவருடி சென்றாலே

நீ தலைகோதும் ஞாபகம்

வந்து விடுகிறதே,

நீ உன் துப்பட்டாவை

சரிசெய்யும் போதுகூடவா

என் ஞாபகம் உனக்கு வரவில்லை!.


கதைத்து கதைத்து

காது சூடேறிய பின்னும்

ஏதோ ஒன்று மிச்சமிருப்பதாய் எண்ணி

விடியும் வரை பேசிக்கொண்டிருந்தாயே…?

இன்று ஒரு “ஹாய்”

சொல்லக்கூடவா உனக்கு நேரமில்லை!.


எது பிடிக்கும்

எது பிடிக்காது

என எத்தனை விவாதங்கள் செய்திருப்போம்

எனக்கு பிடித்த அந்த பாடலை

அத்தனை எளிதாக

உன்னால் கடக்க முடிகிறதா என்ன..


தொடும் பூவிடும் முத்தம் இதமா,

நானிடும் முத்தம் இதமா,

என ஆய்வு செய்து

ஆய்வறிக்கை வெளியிட்ட நாட்கள்

நினைவு நியூரான்களில்

நீட்சியாய் நீண்டு கொண்டேயிருக்கிறதே…

நீளும் பகல் பொழுதுகளில்

என் நினைவுகள் உன்னுள் நிறையவேயில்லையா !?


எல்லாம் போகட்டும்

இதற்கு மட்டும் பதில் சொல்

பிரியும் வேளையிலெல்லாம்

இன்னும் ஒரேஒரு தடவ

உன்ன கட்டிப் பிடிச்சுக்கவா

என்று சொல்லி

ஆயிரமுறை கட்டிக்கொண்டாயே

இன்று எதேச்சையாய் என்னை

எதிரில் சந்திக்கும் போது

என்ன நினைத்து கொண்டாய்.



இதே கேள்விகளை

நீ என்னிடத்திலும் கேட்கலாம்.

இதோ.. பதில்களை

தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

அதீத நெருக்கத்தினால்

ஜலதோஷத்தையே பகிர்ந்து கொண்டவர்கள்

தானே நாம்…

1 comment:

  1. Super Yoki.. Arumaiyanathoru kavithai.,... Yaalikku Kavithaikal always beauty...

    ReplyDelete