Sunday, 16 August 2015

நின் கனவு இனி என் கனவு...




நொடித்து அடங்க
எத்தனையோ மூச்சுக்கள்
இங்கே
உலாவிக்கொண்டிருக்கின்றது...
நீர் ஏன் மாய்ந்தீர் ஐயா...

உமக்காக பிராத்தனை
செய்யக் கூட
எங்களுக்கு  நீர்
காலம் கொடுக்கவில்லை

கற்கள் நிறைந்த
பாதையில்
புற்கள் மிதிக்க
கற்றுக் கொடுத்தீரே..
இனி
முட்கள் நிறைந்ததொரு
பாதை வருகிறது...
வழி நடத்த வாரீரோ


கட்டவிழ்க்க முடியாத
ஆயிரமாயிரம்
முடிச்சுக்கள்  அப்படியே
கிடக்க
இனி எப்படி ஐயா
அவிழ்ப்போம் சில
இறுகிய அரசியல்
முடிச்சுக்களை...

நின் உடல் கொண்ட மயானம்
அது ஒரு ஓரத்தில் கிடக்கட்டும்...

முதலில்
அங்கிருந்து எழுந்து வந்து
உம் தடயங்களைப்
பாரும்..

உமக்காக
வீதிகள் தோறும்
விளக்குகள்...

பள்ளிகள் தோறும்
உம் படங்களை ஏந்தித்
திரியும் மழலைகள்

சாலைகள் தோறும்
நின் கனவுகளை தூவிச்
செல்லும் இளைஞர்கள்
என நின் உருக்களைப் பாரும்

எல்லோர் வீட்டிலும்
நெருங்கிய தங்கள் சொந்தத்தை
இழந்த தவிப்பு இன்னும்
அகலவில்லை

ஐயனே
இவைகள்
சாயங்கள் அல்ல வெளுக்க..
நின் அன்பின் வெளிப்பாடுகள்..

என்றும் எங்களை
புத்தி மாறிப்
போகவிடாது உமது
முத்தான புத்தகங்கள்

நின் போல் எவரும்
இனி பிறக்கப் போவதில்லை
பிறப்பினும்
நின் போல் இறக்கப்போவதில்லை
இறப்பினும்
நின் போல் நிலைக்கப்போவதில்லை

கனவுகள் பல சுமந்து
தூங்குவது எளிதல்ல
நீர் தூங்கவில்லை..
நின் பணிகளை எங்களுள்
விதைத்து விட்டு
சற்று இளைப்பாறிக் கொண்டுதான்
இருக்குறீர்கள்

இமயத்தின் சாரலாம்
சிந்து, கங்கையை
யமுனை, கோதா வழியே
காவிரி, வைகையில் இணைத்து..
நின் பாதங்களை நனைத்த பின்னே தான்
மூடும் எங்கள்
இமைகளுக்கு நிரந்தர
ஒய்வளிப்போம்..

நின் கனவு இனி என் கனவு

Saturday, 15 August 2015

கனவுலகின் காவலன்





அகண்ட தோள்கள்
ஆழமான கண்கள்
மிடுக்கான தோற்றம்
நின் மேல் 
என் நாட்டம் 

யார் இவன்?
கனவுலகின் காவலனா
இல்லை,
காவியம் சொல்லும்
காதலனா?

தோழிகளின் உச்சரிப்பும்
தொலைக்காட்சியின் நச்சரிப்பும்
உள் ஊடுருவா நிலை!!!
நீ வரும் நேரமாகிவிட்டது...

பதிந்திடா கால் தடமும்
பகிர்ந்திடா பல் மொழியும்
பாவையன்றி,
நீ அறிவாயோ?

ஏனோ 
வழக்கம் போல்
இன்றும் நீ வரவில்லை!!
இதயம் இடியிடிக்க
இமைகள் மழையடிக்க
கன்னமிரண்டும்
கரைந்தே விட்டது.

கண் கானா ஏக்கமும்
தரை தட்டும் தாக்கமும்
என்னை முட்ட
கனவலைகளில்  கால் பதிக்கிறேன்.

மீண்டும்,
அதே ஒற்றை ரோஜாவுடன்
மொட்டை மாடியில் நீ!

நிஜத்தில் வராத
நெருடல்களை மறைத்து
நின்னருகில் நான்!

நீ கனவுலகின் காவலன்
நான் உனதருமை நாயகி

Thursday, 6 August 2015

தேசத் தந்தை : அப்துல் கலாம்







என்னவென்று தொடங்க உன்னைப் புகழ,
சர்வமுமாக நிறைந்திருக்கிறாய் புனிதனே!

புண்ணியம் தேடி கால் நனைக்கும் கடைத்தீவினில்
உன் முதல் மூச்சை விட்டு, கண்ணீர் சிந்தி,
அதன் பாவம் கழித்தாயே!

திரும்பும் திசையெங்கும் கடல்,
உன்னை சூழ்ந்து ஆட்கொள்ள முயல,
சராசரி மனிதனாக நீயிருந்திருந்தால்,
கடல் தாண்டாத வெறும் உடலாக மட்டுமே இருந்திருப்பாய்.

கைக்கு எட்டா உயரம், விண்னை கிழிக்கும் பயணம்
இதுவல்லவா உன் இதயம் சொன்ன கனவு!

ஒரு துறையில் சிறந்து விளங்க பலர் சிரமப்பட,
சிறுபுன்னகை செய்துக்கொண்டே கால் பதித்த
ஒவ்வொரு பணியிலும் சிறந்து, வாகை சூடிய
தனித்துவன் நீயல்லவா!

சிறுபாண்மையில் பிறந்து,பெருங்கனவு கண்டு
வேறுப்பட்ட உலகுமுன் கண்டதை நிறைவேற்றி,
திறமைக்கு தடையில்லையென நிருபித்த
உயர்ந்த உயிரொளி நீயல்லவா!

உறக்கத்தில் காண்பது கனவன்று, உன்னை
உறங்கவிடாதிருப்பதே கனவென்று,
புதுவழிக் காட்டி, நம்பிக்கை ஊட்டி,
என்போன்ற இளைஞர்களுக்கு வழி காட்டியானாய்,
வழித்துணையும் ஆனாய்!


ஆசிரியர்,
அணு விஞ்ஞானி,
இசை கலைஞர்,
எழுத்தாளர்,
முதல் குடிமகன்,
எத்தனை பரிணாமம் நீ எடுத்தாய்,
அத்தனையிலும் உன் பெயர் பதித்தாய்!

மனதுக்கு பிடித்த காரியத்தை செய்து கொண்டே
உயிர்நீத்தல் எத்தனை பெரிய உன்னதம்!
உன் கடைசி நொடியிலும் மாணவர்கள் மனதில்
கனவு விதைகளை விதைத்துத் தானே சென்றிருக்கிறாய்!

இனி,
எம் மதத்தில் பிறந்தவனும் தன் மகனுக்கு
நின் பெயர் வைக்’கலாம்’,