Friday, 20 June 2014

யாழிக்கு கவிதைகள்

































இலட்சம் இரவுகளை

கடந்த பின்னும்

உன் நினைவுகள் மட்டும்

நெஞ்சின் ஒரு ஓரமாய்

நிழலாடிக் கொண்டேயிருக்கிறது.


உதடுகள் விரியா

உன் மென் புன்னகையாகட்டும்,

புன்னகைக்கும் போது

கன்னத்தில் விழும் குழியாகட்டும்,

தாடைக்குக்கீழ் இருக்கும் மச்சமாகட்டும்,

காதோரத்து குழலை

சரிசெய்து கொண்டேயிருக்கும்

மெல்லிய விரல்களாகட்டும்,

எல்லாமே அப்படியே

அடி மனதில் பதிந்தேயிருக்கிறது.


உன் விரல் கோர்த்தபடி

ஒரு தொலைதூர பயணம்,

கையில் தேனீர் கோப்பையுடன்

உன்னுடன் நான் கதைக்கும்

ஒரு அந்திப்பொழுது,

நீ எதிர்பாரா நேரத்தில்

உன் உதட்டில் பதியும்

என் ஒற்றை இதழ் முத்தம்,

விடிந்த பின்னும்

நீண்டு கொண்டேயிருக்கும்

உன் மடியில் என் தூக்கம்...

இவற்றையே,

என் உறக்கமில்லா இரவுகளில்

நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.


இவையாவும் கனவிலும் நிறைவேறா

கானல் காட்சிகளென்பதை

நானும் அறிவேன்.

என் செய்வது...?

ஆசை யாரை விட்டது.

ஆசை பீறிடும்

அத்தகைய இரவுகளிலெல்லாம்

சாரல் நனைத்த

சாளர கண்ணாடியாய்

மனம் கலங்கியேயிருக்கிறது.


இந்த நொடியை

நான் கடந்தாக வேண்டும்.

அதுவும் இயல்பாக

கடந்தாக வேண்டும்.

கொஞ்சதூரம் நடந்துச்சென்று வரலாம்,

என மனம் அழைக்கிறது.

உதட்டின் ஓரத்தில்

ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு

அப்படியே உறங்கி போகிறேன்.

இந்த நொடியை

நான் கடந்தாக வேண்டும்,

அதுவும் மிக இயல்பாக...


Sunday, 15 June 2014

பூவரசம் பீப்பீ:

இத்திரைப்படத்தை நான் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு.. அதில் முக்கியமான சில காரணங்களில் தலையாய காரணமாக நான் நினைப்பது இது ஒரு பெண் இயக்குநரின் படம் என்பதையே.. எழுத்துலகை ஒப்பிடுகையில் திரையுலகில் பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை ஆரோக்கியமானதாக இல்லை.. விரல்விட்டு எண்ணுமளவுக்குத் தான் இருக்கிறது.. இது போன்ற இளம் பெண் படைப்பாளிகளை ஆதரிப்பது பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை வளர்வதற்கு மறைமுகமாக உதவும் என்ற எண்ணம் இருந்தாலும் அது மட்டுமே பிரதானமான காரணம் அல்ல.. குழந்தைகளைப் பற்றிய படம் என்பதும்.. ஒரு பெண்ணியப் படைப்பாளியின் பார்வையில் குழந்தைகள் படம் என்பதும்.. இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா என்பதும் கூட சில முக்கியமான காரணங்கள் தான்… இதுதவிர்த்து படத்தின் டீசரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது… (அது கண்டிப்பாக தியேட்டர்களில் ஒளிபரப்பான டீசர் அல்ல…)


திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட ட்ரைலர் இத்திரைப்படத்தை கோலிசோடா போன்ற வணிக சினிமாக்களின் மற்றொரு வடிவம் என்பதைப் போல காட்சிபடுத்தியதும், படத்தின் மீது ஏற்கனவே இருந்த ஆர்வம் கொஞ்சம் மட்டுப்பட்டது உண்மைதான்.. ஆனால் முழுதிரைப்படமாக பார்த்த போது இதன் மீது நான் வைத்திருந்த பெருத்த நம்பிக்கையை திரைப்படம் ஓரளவுக்காவது காப்பாற்றிக் கொண்டதில் எனக்கு சந்தோசமே.. கதையின் மையம் என்று பார்த்தால், ஆறாம் வகுப்பில் முழு ஆண்டுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருக்கும் மூன்று நண்பர்கள் ஒரு குற்றத்தை நேரில் பார்த்துவிடுகிறார்கள்.. அந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் கையில் சிக்க வைக்க அந்த சிறுவர்கள் மேற்கொள்ளும் முயற்சிதான் மொத்த கதையும்… இந்த மையக்கதையை என்னால் பெரிதாக சிலாகிக்க முடியவில்லை.. ஒப்புக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்கின்ற ரகம் மட்டும் தான்… ஆனால் இந்த மையத்தை நோக்கி கதை நகரும் போது, அந்த சிறுவர்களின் வாழ்வியல் அங்கங்களை சிறுசிறு அழகான மலராக அதனோடு சேர்ந்து கோர்த்திருப்பதுதான் என்னை கவர்ந்த அம்சம்..

இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான திரைப்படம் என்றோ..? அல்லது மிக அற்புதமான திரைக்கதையோட்டத்தை அது கொண்டிருக்கிறது என்றோ..? அல்லது இதுவரை பேசாத ஒரு பாடுபொருளை அது கொண்டிருக்கிறது என்றோ நான் சொல்லவரவில்லை… ஆனால் இது கண்டிப்பாக ஒரு மோசமான படைப்போ அல்லது வெறுப்பேற்றும் படைப்போ கிடையாது… ஒரு பெண் படைப்ப்பாளியிடம் இருந்து வந்திருக்கும் ஆரம்பகட்ட வரவேற்கத்தக்க முயற்சி அவ்வளவே… ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால், எல்லா ஆண்களுமே இந்தத் திரைப்படத்தை பாருங்கள் என்றே சொல்லுவேன்… (அப்படியென்றால் பெண் பார்க்கக்கூடாத படமா என்ற கேள்வியை கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்..) ஏன் ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றால், இந்தப் படத்தின் இயக்குநர் பெண் என்பதே என் பதில்..

ஒரு குழந்தை முதன்முறையாக பேசத் தொடங்கும் போது, எவ்வளவு ஆர்வமாக அதற்கு நாம் காதுகொடுக்கிறோம்… அந்தக் குழந்தைக்கு ஒவ்வொரு விசயமாக சொல்லிக்கொடுப்பதற்கு மட்டுமன்றி, அந்தக் குழந்தையின் புரிதலில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்வதற்கு தானே.. அந்தக் குழந்தைகளைப் போலத்தான், சில ஆண்டுகாலமாகத் தான் நம் நாட்டில் ஒரளவுக்கு பெண்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கின்றனர்.. அவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் நோக்கில் நம் காதுகளை அவர்களிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஏனென்றால் அவர்கள் ஒன்றுமே அறியாத குழந்தைகளைப் போல இல்லை.. அவர்கள் இந்த உலகத்தையும் ஆண் என்னும் தனக்கு அப்பாற்பட்ட ஓர் உலகத்தையும் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆண்களாகிய நாம் தெரிந்துகொள்ளவே பெண்களின் படைப்புகளை பார்க்கவும் படிக்கவும் வேண்டும் என்பது என் தனிப்பட்டக் கருத்து..

”பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கு தெரியும்… அது பொம்பளைக்கும் தெரியும்… அந்த ஆழத்திலே என்னவுண்டு யாருக்குத்தா தெரியும்…” என்று பாடினாலும் நடிகர் விவேக்கைப் போல் “இந்தப் பொண்ணுங்க மனசப் புரிஞ்சிக்கவே முடியலையே..” என்று புலம்பினாலும் அதில் பெரும்பாலான மனிதர்களின் மனநிலையில் குற்றவாளியாக முன்னிறுத்தப்படுவது பெண் தான்… பெண் தான் நினைக்கின்ற விசயங்களை வெளிப்படையாக சொல்வதில்லை… ஒளிவுமறைவுடன் இருக்கிறாள் என்கின்ற ரீதியிலேயே அது இருக்கிறது… அவர்களை நாம் எப்போது பேச விட்டோம்… அல்லது புரிந்துகொள்ள முயன்றோம் என்று நாம் நம்மையே  கேள்வி கேட்டுக் கொள்ள தயாராக இல்லை.. ஆக நான் சொல்ல நினைப்பது, முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.. பின்பு குற்றம் சாட்டலாம் என்பதே.. சரி எப்படி புரிந்து கொள்வது.. நம் மரபு சார்ந்த அறங்களின் படி ஒரு ஆண் தன் வாழ்க்கையில் அதிகப்படியான பெண்களுடன் பழகுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிக குறைவு.. ஆண்களுக்கே அந்த வாய்ப்பு குறைவென்றால், பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.. ஆனாலும் நம் சமூகத்தில் ஒரு பெண் ஆணைப் பற்றி புரிந்து கொள்கிறாள்… தெரிந்துகொள்கிறாள்.. எப்படி என்று கேட்டால் ஆண் பேசிக் கொண்டே இருக்கிறான்… அதுவும் பெண்களைப் பற்றி என்றால் வகை தொகை இல்லாமல் பேசிக் கொண்டே இருக்கிறான்… எழுதுகிறான்.. படம் எடுக்கிறான்… பெண்களுக்கு அறிவுரை சொல்லுகிறான்… போதிக்கிறான்… “அடங்கிப் போ, அளவுக்கு மீறி ஆசைப்பட்ட பெண் நன்றாக வாழ்ந்ததா.. சரித்திரமே இல்லை, ஆண்கள் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வார்கள், உலகம் முழுவதுமே கற்பழிப்பு நடக்கத்தான் செய்கிறது என்கிறான்.. இப்படிப் பேசப்பேச ஆணை பெண் புரிந்துகொள்கிறாள்…

இதுபோல ஒரு பெண் தான் என்ன நினைக்கிறாள் என்று அவள் பேசி நாம் கேட்டிருக்கிறோமா..? வெகு அரிதாகவே அது நிகழ்கிறது… இலக்கியங்களில் பேசுகிறார்கள்…. அம்பையின் ”சிறகொடிந்த பறவை”, ”அம்மா ஒரு கொலை செய்தாள்”, ”காட்டிலே ஒரு மான்” சூடாமணியின் ”நான்காவது ஆசிரமம்” என ஆங்காங்கே பேசுகிறார்கள்… இதைப் படித்தவர்கள் பெண்களின் உணர்வுகளை கொஞ்சமேனும் புரிந்து கொள்ளலாம்.. இலக்கியங்களில் பேசத் தொடங்கியவர்கள் இப்போது சினிமாவிலும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்… அவர்கள் பேசுவதை எல்லாம் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.. அது விவாதத்துக்கு உரியது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை… ஆனால் முதலில் அவர்கள் பேசட்டும்.. நாம் காதுகொடுத்து கேட்போம் என்பதே என் வாதம்… அதனால் தான் சொன்னேன்.. இது பெண் இயக்குநரின் திரைப்படம் கண்டிப்பாக ஆண்கள் பாருங்கள் என்று…

இத்திரைப்படத்தின் இயக்குநர் ஹலிதா சலீம். இவர் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.. இத்திரைப்படத்தில் எனக்கு மிகப்பிடித்த அம்சம் என்பது வசனங்கள் தான்.. பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியான பாலியல் கொடுமை என்னும் குற்றத்தை மையமாகக் கொண்டே கதை பின்னப்பட்டு இருக்கிறது… இதை மையமாகக் கொண்டு மையக் கதாபாத்திரமான அந்த சிறுவர்கள் பேசும் ஒரு வசனம் வருகிறது… “ டவுசரு மாட்டும் போது எங்க அப்பத்தா சொல்லும்.. டே இது கல்யாண சாமாண்டா.. பாத்து பத்திரமா வச்சிக்கணும்ன்னு… இப்பத்தான தெரியுது கல்யாண சாமா கொல பண்றது வரையும் போகுதுன்னு…” என்பதாக அந்தச் சிறுவன் பேசுகிறான்.. இதுவொரு வசனம்..!!!!...??? இது உனக்கு பிடிக்கவேறு செய்கிறதா..? என்று நீங்கள் கேட்கும் முன்னர் மற்றொரு காட்சியையும் விளக்கிவிடுகிறேன்.. எனக்குத் தெரிந்து தமிழ்திரைப்படங்களில் இப்படி ஒரு காட்சி இதற்குமுன்னர் நான் பார்த்ததே இல்லை… அதுயென்னவென்றால் சிறுவன் ஒருவன் முதன்முதலாக தன் தூக்கத்தில் விந்துவெளியேறியதை உணரும் காட்சி… அதை உணரும் அவன் போர்வையுடன் வெளியே சென்று அதை துவைத்துவிட்டு வருகிறான்… வரும்வழியில் ஒரு பெண்ணுக்கு சடங்கு நடந்துகொண்டு இருக்கிறது என்பதான பகடி…

இதெல்லாம் ஏன் எனக்குப் பிடித்திருந்தது என்று சொல்லும் முன், இன்னும் இரண்டு  காட்சிகளை விளக்கிவிடுகிறேன்… அந்த மூன்று சிறுவர்களும் வயல் வரப்புகளில் நடந்தபடி செல்ல.. அங்கே விளையாடிக் கொண்டு இருக்கும் அவர்களை விட வயதில் இளையவளான ஒரு சிறுமி அவர்களைப் பார்த்துக் கேட்கிறாள்… “இப்பல்லா ஏன் எங்கூட விளையாட வரமாட்டேன்றீங்க…” என்று கேட்க அந்த சிறுவர்கள் பதில் சொல்லாமல் செல்ல.. மீண்டும் அந்த சிறுமி கேட்கிறாள்… “ஏன் நீங்கெல்லா வயசுக்கு வந்துட்டீங்களா…?” அவர்கள் வாயடைத்துப் போய் அமைதியாக நடக்க.. அடுத்த காட்சியில் தான் அந்த சிறுவன் வயதுக்கு வருகிறான்… மற்றொரு காட்சி இந்த மூன்று சிறுவர்களும் தங்களது சீனியர்களின் வீட்டுக்கு செல்ல.. அங்கு அவர்கள் நீலப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. அதைப் பார்த்து அதிர்ச்சியுடன் திரும்பும் இவர்கள் பேசும் வசனம்… “டே ஏண்டா எல்லாப் பசங்களும் வளர்ந்ததும் கெட்டுப் போயிடுறாங்க...” என்பதாக இருக்கிறது இந்த வசனம்…

இந்த நான்கு விசயங்களுமே தேவையில்லாத திணிப்பு மாதிரி தெரிந்தாலும்.. இவை படத்தின் மையக்கதையோடு தொடர்பு உடையது தான்.. ஏனென்றால் மையக்கதை பாலியல் குற்றம் சார்ந்தது… அடுத்து நாம் பார்த்த நான்கு அம்சங்களுமே பாலியல் சார்ந்த அறிவு நம்மிடம் எப்படி இருக்கிறது என்பது தான்.. ஒரு ஆண் பருவம் அடைவதைப் பற்றி பேசுவதை தவறு பேசக் கூடாது என்று எண்ணும் நாம், அதே சூழலைக் கடக்கும் பெண்ணை ஊர் முன்னிறுத்தி அனைவரும் அறிவது போல் காட்சிப் பொருளாக்குவதன் முரணை எப்படி பொருள் கொள்வது… இப்படி ஆண்களை பொத்தி வைப்பது போல் ஊர் மேயவிடுவதும், பெண்ணை பொத்திவைப்பதாக எண்ணிக் கொண்டு காட்சிப் பொருளாக்குவதுமான வெறுப்பும் தான் ஒரு பெண்ணிடம் இருந்து காட்சியாக இப்படி வெளிப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.. ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் ஆணிடம் சேரக்கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுகிறாள்… அதனால் தான் ஒரு ஆண் தன்னுடன் விளையாட வராமல் மறுப்பதற்க்கும் அதுதான் காரணமாக இருக்குமோ என்று அவளுக்கு எண்ணத் தோன்றுகிறது..

மேலும் அந்த சிறுவன் பேசும் வசனமான “டே ஏண்டா எல்லாப் பசங்களும் வளர்ந்ததும் கெட்டுப் போயிடுறாங்க...” அதை ஒரு பெண்ணின் ஆண் சார்ந்த புரிதலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.. சிறுவயதில் தன்னோடு ஒன்றாகப் பழகிக் கொண்டு திரிந்த இவர்கள் நல்லவர்களாகத்தானே இருந்தார்கள்… இந்தக் குறிப்பிட்ட இடைவெளியில் ஏன் இப்படி இவர்கள் மாறிப்போனார்கள் என்ற பெண்ணின் மனநிலை சார்ந்த குழப்பமாகவோ…? அல்லது நாமும் இப்படி மாறிப்போய்விடுவோமா..? அப்படி மாறிவிடுவோம் என்றால் அது ஏன்..? என்பதான சிறுவர்களின் மனநிலையில் உள்ள குழப்பமாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன்.. இது தவிர்த்து கடைசியாக அந்த சிறுமி “உனக்கு என்னதா தெரியாது…?” என்ற கேள்விக்கு “என்னதா உனக்குத் தெரியாது” என்று சொல்கின்ற பதில் மொத்த ஆண் வர்க்கத்துக்குமான பெண்களின் பதிலாகவே தெரிகிறது..

மேலும் பொண்வண்டு விற்பது, பெண்களை பெண்களாக சிறுவர்கள் உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணம், நண்பனுடனான போட்டி, பிரிவு, இயலாமை என வாழ்க்கையின் பக்கங்களை காட்டும் இடங்களும் கூட இயல்பாகவே இருந்தன.. சிறுவர்மலரின் சிறுவர்களுக்கான நீதிநெறிக்கதைகளின் அனுபவமும் படத்தில் உண்டு..  எனக்குப் படத்தில் பிடிக்காத அம்சமே அந்தக் குழந்தைப் பருவக் காதல் தான்… ஆனால் அதையும் முடித்திருந்த விதம் எனக்கு நிறைவாகவே இருந்தது.. பூவரசம் பீப்பி என்ற தலைப்புக்கான ஜஸ்டிபிகேசன், சிறுவர்களை அசகசாயசூரர்களாக காட்டாமல் சிறுவர்களாக மட்டுமே காட்டி, அவர்கள் தங்கள் படிப்பறிவைப் பயன்படுத்தி வில்லன்களை மடக்குவதாக காட்டியிருப்பதும் ஒரு சின்ன ஆறுதல்… ஆனால் வில்லன்களின் பிண்ணனியில் பொட்டலம் மாற்றுவது, நட்சத்திர மீன் என வரிசையாக பல பிண்ணனிகளைக் கொடுக்காமல் ஏதேனும் ஒன்றிலேயே பயணித்திருந்தால் கதை இன்னும் வலுவாகியிருக்கும்… மேலும் குழந்தைகளுக்கான அறிமுகப்பாடலை தவிர்த்திருக்கலாம்.. ஆனால் வில்லன்களை மிகப்பலமான ஆட்களாக காட்டாமல், சாதாரணமான ஆட்களாக காட்டியிருந்ததும் பலம்…


ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா… ஈரம், விண்ணைத் தாண்டி வருவாயா என அவரது படங்களில் எல்லா ப்ரேமுமே அவ்வளவு அழகாக இருக்கும்.. இவரது ஒளிப்பதிவுக்காகவே பலமுறை பார்க்கின்ற காட்சிகள் உண்டு.. அது இந்தப் படத்துக்கும் பொருந்தும்.. மிகமிக அற்புதமான ஒளிப்பதிவு.. இசை அருள்தேவ்.. பாடல்களில் பெரிதாக இல்லை என்றாலும் பிண்ணனி இசையில் கவருகிறார்…. இன்னும் திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறதா என்று தெரியவில்லை… அப்படி ஓடிக்கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.. இது உங்களை விரக்தியடையச் செய்யாது… சில விசயங்களை நோக்கி உங்கள் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு வரவேற்க வேண்டிய முயற்சிதான் இந்த பூவரசம் பீப்பீ…

முண்டாசுப்பட்டி:

குறும்பட இயக்குநர்களின் அலை வீசும் காலம் இது. “காதலில் சொதப்புவது எப்படி, பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், வில்லா-2, சூது கவ்வும், பண்ணையாரும் பத்மினியும், வாயை மூடிப் பேசவும்” இந்த வரிசைப் பட்டியலில் புதிய வரவு இந்த முண்டாசுப்பட்டி.. மேற்சொன்ன படவரிசைகளை கவனித்தால், எந்தத் திரைப்படமும் வணிகரீதியாகவோ அல்லது கலை ரீதியாகவோ மிக மோசமாக சோடை போனதில்லை.. அதே நேரத்தில் அந்த வரிசைப் படங்களில் ஏதேனும் ஒன்றாவது நம் மனதில் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி, தனக்கென்று அசைக்கமுடியாத ஒரு இடத்தை பார்வையாளனிடம் அபகரித்துக் கொண்டிருக்கிறதா..? என்று கேட்டால் அதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.. ஆனாலும் பழமையான சர்க்கஸ் சிங்கம் போலப் பழக்கப்படுத்தப்பட்ட வளையங்களில் தாவிக்குதிப்பதும், மீண்டும் மீண்டும் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பின் வழியே மைதானங்களை சுற்றி சுற்றி வந்து பார்வையாளனை மகிழச் செய்ததுமான, அதரப் பழசான கதை திரைக்கதை என்னும் பந்தயக்குதிரைகளை பாதை மாற்றி கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு உலவவிட்டு, புதுவிதமான மகிழ்ச்சிகளில் பார்வையாளனை திக்குமுக்காடச் செய்த பெருமை, இந்தப் படைப்பாளிகளுக்கு கண்டிப்பாக உண்டு..


மேற்சொன்ன வரிசைப்படங்களில் சரிபாதியான படங்கள், முதலில் குறும்படமாக வந்து, பின்பு முழுநீளத் திரைப்படமாக விரிக்கப்பட்டவை.. அவை அதற்கே உரித்தான சிக்கலையும் உள்ளடக்கியவை.. இதனாலேயே காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை.. அது குறும்பட அளவிலும் என்னை ஈர்க்கவில்லை என்பது வேறுவிசயம்… ஆனால் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் அதை குறும்படமாக நான் பார்த்ததில்லை.. அது எனக்குப் பிடித்திருந்ததற்கு மிகமுக்கியமான காரணமாக நான் நினைப்பது, அது வாழ்வியலோடு தொடர்புடைய படைப்பாக அமைந்திருந்ததும், அதன் மையக் கதைச்சரடு வழக்கமான பாணியில் இல்லாமல் இருந்ததுமே… முண்டாசுப்பட்டி குறும்படமாக வந்த காலத்தில், அந்தக் கதைக்களனில் இருந்த மெல்லிய நகைசரடும், மூடநம்பிக்கை மீதான அந்த மறைமுகச் சாடலும் ஒரு மெல்லிய நகைப்பை வரவழைத்தது.. அதுவே முழுநீளத் திரைப்படமாக வரப்போகிறது என்று தெரிந்தவுடன், அது அந்தப் படக் குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றே தோன்றியது… ஆனால் அந்தச் சவாலை மிகச் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கின்றனர் முண்டாசுப்பட்டி படக்குழுவினர்…

முண்டாசுப்பட்டி குறும்படத்தை பெரும்பாலும் எல்லோரும் பார்த்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.. இருந்தாலும் அதைப் பார்க்காதவர்களுக்காக அதன் கதைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகம்.. “முண்டாசுப்பட்டி கிராமத்தின் மக்களுக்கு ஒரு விநோதமான நம்பிக்கை… புகைப்பட கருவியைக் கொண்டு நம்மை போட்டோ எடுத்தால் நாம் இறந்துவிடுவோம் என்று.. ஆனாலும் அந்தக் கிராமத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து இறக்கும் போது மட்டும் அவனது ஞாபகார்த்தமாக ஒரு போட்டோவை எடுத்துக் கொள்வர்.. இப்படி அந்தக் கிராமத்தில் உள்ள புகைப்படங்கள் எல்லாம் இறந்தநிலையில் உள்ளவர்களின் புகைப்படங்கள் தான்… இப்படிப்பட்ட அந்தக் கிராமத்தில் ஊர்ப் பெரியவர் இறந்து போகின்றார்.. அவரை புகைப்படம் எடுக்க இருவர் ஊருக்குள் வந்து போட்டோ எடுத்துச் செல்கின்றனர்… ஆனால் அந்தப் புகைப்படம் சரியாக வரவில்லை… அதற்குள் பெரியவரை எரித்துவிடுகின்றனர்.. இந்த உண்மையை ஊரில் சொல்ல பயந்துபோய், போட்டோ எடுக்க வந்த நண்பர்கள் இருவரும், வேறொரு நபரை பிணம் போல் அமர்த்தி போட்டோ எடுத்து, அதுதான் பெரியவரின் புகைப்படம் என்று சொல்லி சமாளிக்கின்றனர்… ஆனால் உண்மை தெரிந்து ஊரே அவர்களைத் துரத்த, அந்த மூடநம்பிக்கை கொண்ட ஊர் மக்களிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா…? இல்லையா..? என்பது அந்த குறும்படத்தின் க்ளைமாக்ஸ்..

இதுதான் 5-6 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தக் குறும்படத்தின் கதை.. இதை வைத்துக் கொண்டு ஒரு முழுநீளப்படம்.. அதுவும் இரண்டு மணிநேரம் இருபத்து எட்டு நிமிடங்களுக்கு… இந்த நிமிடக்கணக்கை பார்த்தவுடன் எனக்கு பயமே வந்துவிட்டது… அந்த ஐந்து நிமிடக் கதையை அளவுகோல் அளவுக்கு இவ்வளவு பெரிதாக இழுப்பதற்கு அதுயென்ன ”ஆசை” சாக்லேட் பேப்பரா…? கண்டிப்பாக சொதப்பி இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.. அந்த சொதப்பல் சில இடங்களில் வெளிப்படையாகத் தெரிந்தாலும், முழுப்படமாக பார்க்கும் போது மிகப்பெரிய இடையூறாக இல்லை… அந்த கிராமத்து மக்களுக்கு எப்படி அப்படி ஒரு மூடநம்பிக்கை வந்தது, என்பதற்கான முன்கதை வரலாற்று ரீதியாகவும் கற்பனை ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளும்படியே இருந்தது.. அந்த கிராமத்துக்கு ஒரு ஆபத்து என்பதாக ஜமீன் ஆனந்தராஜை அறிமுகப்படுத்தும் போது, அந்தக் கதாபாத்திரத்தில் இருந்த வலு, முடிக்கும் போது இல்லாமல் போனது ஒரு மென் சோகம்.. குறும்படத்தில் க்ளைமாக்சாக வரும் காட்சிதான் படத்தில் இடைவேளை பகுதி.. அதைப் பார்க்கும் போது மீண்டுமொரு அதிர்ச்சி… இனி பாதிப்படத்தை எப்படி ஓட்டப் போகிறார்கள் என்று… இருந்தாலும் க்ளைமாக்ஸையும் அதே போன்ற ஒரு தன்மையோடு கொண்ட காட்சியமைப்புடன் முடித்திருப்பதும் மற்றொரு சிறப்பு…. மூடநம்பிக்கை தொடர்பான கதைக்கு மூடநம்பிக்கையைக் கொண்டே ஒரு முடிவும் கொடுத்திருப்பதும் சிறப்பு..

இரண்டாம் பாதி எதிர்பார்த்தது போலவே பல இடங்களில் நகராமல் நொண்டி அடித்தது போல் முட்டிக்கொண்டு நின்றது… கதையை வளர்க்க வழக்கம் போல் காதலை கையில் எடுத்ததும் ஒரு குறை.. ஆனால் இந்தக் குறைகளை எல்லாம் இல்லாமல் போக்குவது மூன்றே மூன்று கதாபாத்திரங்கள் தான்.. அவர்கள், நாயகனின் நண்பனாக வரும் காளி வெங்கட், முனிஷ்காந்தாக நடித்திருக்கும் ராமதாஸ், மற்றும் அந்த சாமியார் கதாபாத்திரம்.. இந்த மூவர் மட்டுமே… இந்த மூவர் கதாபாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் படம் மிகப் பெரிய ஒரு சோர்வைக் கொடுத்திருக்கும் என்பதும் உண்மை.. சரி… இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், வழக்கம் போலத்தான் சிரிக்க வைக்கிறார்கள்… ஆனால் இவர்கள் சிரிக்கவைப்பது எல்லாம், நாம் சில ஆண்டுகளாக சிக்கிக் கொண்டு தவிக்கும் வழக்கமான ஒன்லைனர்களால் அல்ல… கதையோடு சேர்ந்த காட்சியமைப்புகளாலும், உடல்மொழிகளாலும் என்பது உண்மை.. ஆனாலும் சாமியாரின் காமெடிகளை எல்லோரும் ரசிப்பார்களா என்று உறுதியாக சொல்லமுடியாது..

இசை சீன் ரோல்டன்… வாயை மூடிப் பேசவும் திரைப்படத்தை விட இதில் சிறப்பான இசையை கொடுத்திருப்பதாக தோன்றியது… பிண்ணனி இசையில் பல இடங்களில் பொருத்தமான வித்தியாசமான ஒலித்தடங்களை கேட்க முடிந்தது… ஒரு எதிர்பார்ப்புள்ள இசையமைப்பாளராக வருவார் என்றே தோன்றுகிறது… வசனங்களும் படத்துக்கு பல இடங்களில் பெரிய ப்ளஸ்.. குறிப்பாக முனீஷ்காந்த வரும் இடங்கள்.. அதிலும் குறிப்பாக அந்தக் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் கிழவரிடம் இவர் பேசும் வசனங்களும் உடல்மொழியும் செமத்தியாக கைதட்டல் வாங்குகிறது… கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவார் என்றே தோன்றுகிறது.. எடிட்டிங் லியோ ஜான் பால்.. இன்னும் கூட பல இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம் என்றே தோன்றியது..

படத்தின் இயக்குநர் ராம்குமார். திருப்பூர்க்காரர் என்று சொல்கிறார்கள்.. நம்பிக்கையான வரவாக தெரிகிறார்.. பொறுத்திருந்து பார்க்கலாம்.. குறைகள் என்று பார்த்தால், படத்தின் நீளம், மற்றும் காதல் எபிசோடுகள்.. மற்றொரு முக்கியமான குறையாக நான் நினைப்பது, பெரும்பாலும் இதுபோன்ற குறும்பட இயக்குநர்களின் படங்களில் கதாபாத்திரங்களில் நிலைப்புத்தன்மை மற்றும் ஒரு சீரியஸ்னஸ் இருப்பதே இல்லை… ஓரிரு விதிவிலக்குகள் தவிர்த்து.. அவற்றை வெறும் பெரும்பாலும் ஒரு புனைவு மனநிலையிலேயே அணுக வேண்டியது இருப்பதால், அந்தக் கதாபாத்திரங்களுக்கு எதுவுமே நடக்காது என்பதையும் நாம் அனுமானித்து விடுகிறோம். இதுபோன்ற திரைப்படங்களைப் பார்க்கும் நமக்கு அவை மிகப்பெரிய ஆச்சரியத்தையோ அதிர்ச்சிகளையோ அழிப்பது இல்லை… அது தவிர்த்து வாழ்வியலின் சீரியஸ்னஸ் என்பதையும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் காண்பது அரிதினும் அரிதாகவே இருக்கிறது…


இருப்பினும் இது குறும்பட இயக்குநர்களின் வருகை நிமித்தமாக ஏற்பட்டு இருக்கும் ஒரு நல்ல மாற்றத்தில் இருக்கும் முக்கியமான குறை.. அதை வருங்காலங்களில் அவர்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதை தற்போது பெரிதாகப் பொருட்படுத்த தேவையில்லை… மொத்தத்தில் இந்த முண்டாசுப்பட்டி சிரிக்க வேண்டும் என்ற மனநிலையில் செல்லும் ரசிகனை கண்டிப்பாக ஏமாற்றாது என்பதை முண்டாசுப்பட்டியின் குலதெய்வம் ’வானமுனி’யின் மீது ஆணையிட்டுச் சொல்லலாம்…

Saturday, 7 June 2014

மஞ்சப்பை:

இயக்குநர் சற்குணத்தின் தயாரிப்பில் இருந்து, இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் திரைப்படம் மஞ்சப்பை.. இத்திரைப்படத்தின் ட்ரைலர் எனக்கு பிடித்திருந்தது.. அதனால் விமலின் எச்சரிக்கை முகம் போஸ்டரில் தெரிந்தும், துணிந்து இப்படத்தைப் பார்க்க முடிவு செய்திருந்தேன்.. ஆனால் முதல் நாள் இரண்டாம் காட்சிக்கே திரையரங்கு கிட்டதட்ட நிரம்பியிருந்ததைப் பார்த்தபோது மிகுந்த ஆச்சர்யமாகவே இருந்தது.. கண்டிப்பாக அந்தக் கூட்டம் விமலின் நடிப்பைக் காண வந்த கூட்டமாக இருக்காது என்று தெரியும்… ஒரு வேளை லட்சுமி மேனனுக்கான கூட்டமாக இருக்குமோ என்று தோன்றிய ஆருடத்தை உறுதி செய்வதைப் போல் லட்சுமிக்கான முதல் காட்சியில் ஆங்காங்கே கைதட்டலும் சீல்க்கை ஒலியும் இருந்தது… ஆனால் அதற்காக மட்டும் வந்த கூட்டமாக இருக்காது, திருப்பதி ப்ரதர்ஸ் வெளியீடு என்பதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறிப் போய் கூட்டம் வந்திருக்கும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்..


படம் ஒரு பாடலுடன் தொடங்கியது… அது மாஸ் ஹீரோ வகையறாக்களுக்கான  தனிநபர் துதி பாடும் பாடல் போல இல்லாமல், ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான அன்பைப் பற்றியப் பாடலாக இருந்தது ஒரு சின்ன ஆறுதல்… அந்தப் பேரன் வளர்ந்துவிட்ட விமலாக மாறி, வழக்கம் போல சாலையோர சந்திப்பில் லட்சுமியைப் பார்த்து, சைட் அடிக்கக்கூட நேரம் ஒதுக்காமல் அவசரகதியில் காதலில் விழும் அந்த நொடியில் இருந்து ஒரு இருபது இருபத்தைந்து நிமிடத்துக்கு நமக்கு பெருத்த சோதனை காலம்… விமலின் தாத்தாவாக வரும் ராஜ்கிரண் சென்னையில் காலடி வைக்கும் இடத்தில் இருந்து தான் படமே தொடங்குகிறது என்று நாம் நினைக்கிறோம்.. ஆனால் படத்தின் கதையென்ன… அது எங்கு தொடங்குகிறது என்பது படம் முடிந்தப் பிறகும் புரியாமல் முழிக்கும் மனநிலையில் தான் வெளிவருகிறோம்…

இயக்குநர் ராகவன் அவர்களுக்கு இது முதல்படம்.. படத்தின் கதை ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசம் என்றோ… அல்லது இந்த இயந்திரகதியான வாழ்க்கையால் நாம் இழந்திருக்கும் அன்பு, மனிதநேயம் இவைதான் கதை என்றோ… அல்லது தலைமுறை மாற்றத்தால் நாம் இழந்திருக்கும் நல்ல விசயங்கள் தான் கதை என்றோ அவர் சொல்ல முற்பட்டால், அதற்கான என் பதில் ”இவை எல்லாமே திரைப்படத்தில் இருக்கிறது… ஆனால் அவை காட்சிகளில் இருக்கிறதே தவிர கதையாக இல்லையே…” என்பதே.. இந்தப் பதிவைப் படிக்கின்ற உங்களுக்குப் புரியும் படி கதையை மூன்று நான்கு வரிகளில் சொல்கிறேன்… உங்களால் கதை எதைப்பற்றியது என்று தீர்மானிக்க முடிகிறதா..? என்று முயற்சித்துப் பாருங்கள்… “படித்து நகரத்தில் நல்ல வேலையில் இருக்கும் பேரனை தேடி வரும் ஒரு தாத்தாவின் சில பழமைவாத நடவடிக்கைகள் அங்கு பேரனோடு சுற்றத்தில் வசிப்பவர்களுக்கும் ஏன் ஒரு கட்டத்தில் அவனுடைய காதலிக்குமே தொல்லையாகத் தெரிகிறது… ஒரு கட்டத்தில் அந்த தாத்தாவின் முட்டாள்தனமான நடவடிக்கையால் பேரனே பெரும் பாதிப்புக்குள்ளாக அவன் தாத்தாவை திட்டிவிடுகிறான்… பின்னர் உங்களை சோகத்தில் ஆழ்த்துவதைப் போல் ஒரு க்ளைமாக்ஸ்…” இப்போது சொல்லுங்கள் படம் எதைப்பற்றி சொல்ல வருகிறது.

பொதுவாக மஞ்சப்பை என்று சொல்வது, பழமைவாதத்தில் ஊறிய நபர்களை, அல்லது இந்தக்கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறாத மனிதர்களை கிண்டல் செய்ய புழக்கத்தில் இருக்கும் வார்த்தை.. படத்தில் தாத்தாவாக வரும் ராஜ்கிரண் செய்யும் பல செயல்கள் பழமைவாத செயல்கள் தான்.. மரத்தில் ஏறி வேப்பங்குச்சி ஒடிப்பது, வீட்டு வைத்தியம் அதாவது பாட்டி வைத்தியம் செய்வது, நாம் மறந்த போன சத்தான உணவுகளை சாப்பிடக் கொடுப்பது, பக்கத்தில் வசிப்பவர்களுடன் உண்மையான பாசத்தோடு பழகுவது, யார் தப்பு செய்தாலும் உரிமையுடன் அதைத் தட்டிக் கேட்பது இப்படி தலைமுறை மாற்றத்தால் நாம் பல காலங்களுக்கு முன்பே தொலைத்திருக்கும் பல நல்ல விசயங்களைக் கடைபிடிக்கும் நபராக ராஜ்கிரண் வருவதால், அவரை முன் வைத்தே படத்தின் டைட்டில் மஞ்சப்பை என்று வைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்..

ஆனால் இப்படி பல நல்ல விசயங்களை நாம் இழந்திருப்பதால், நாம் எவ்வளவு பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதைத் தான் படம் பேசுகிறது என்றும் முழுமனதுடன் ஒப்புக்கொள்ள முடியவில்லை.. ஏனென்றால் அடுத்து ராஜ்கிரண் செய்யும் சில முட்டாள்தனமான நடவடிக்கைகள் கதை அதுவல்ல என்று சொல்லாமல் சொல்வதைப் போல் ஒரு மிகப்பெரிய முரணை கதையில் ஏற்படுத்திவிடுகிறது… மேலும் என்னதான் படிக்காத மனிதர்களாக இருந்தாலும் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொள்வார்களா..? என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.. அதிலும் குறிப்பாக தாத்தா செய்த முட்டாள்தனமான ஒரு நடவடிக்கை கூட நன்மையாக முடிந்தது என்று முடித்திருக்கும் முறை எல்லாம் மிகுந்த நாடகத்தன்மை… அதுபோக ஆங்காங்கே வரும் காதல் எபிசோடுகளும் பாடல்களும் வேறு அலுப்பை கொடுக்கிறது… இரண்டாம் பாதியில் வழக்கமான பாணியில் எல்லோரும் தாத்தாவை விரும்பத் தொடங்குவதுமான நாடகப் பாணியிலான காட்சிகள் எல்லாம் திரைக்கதையில் மிகப்பெரிய தொய்வு ஏற்படுத்தும் இடங்கள்..

படத்தின் நாயகன் கண்டிப்பாக ராஜ்கிரண் தான்.. சென்னைக்கு அவர் வந்து இறங்கும் அந்த இடம் முதல் இடைவேளை வரை படம் அலுப்பு தெரியாமல் குறைந்தபட்ச சுவாரஸ்யத்துடன் செல்கிறது... படத்தில் ராஜ்கிரண் அவர்களுக்கு நான்கு நிமிடம் வருவதைப் போல் ஒரு மாண்டேஜ் சாங்க் வருகிறது… செம்ம ரகளையான பாடல் அது… அதுபோக சில அற்புதமான காட்சிகளும் கூட இருக்கின்றது… உதாரணத்துக்கு அந்த “ஐ டோண்ட் நோ” காட்சியை சொல்லலாம்.. அதுபோலத்தான் கடற்கரையில் இறந்து போனவர்களுக்காக ஆதரவு சொல்ல ராஜ்கிரண் முனையும் காட்சியும்… இப்படி துண்டு துண்டாக ஆங்காங்கே சில காட்சிகள் நல்ல அனுபவத்தைக் கொடுத்தாலும் மொத்தமாக படம் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கத் தவறிவிடுகிறது… விமல் பிற படங்களுக்கு இதில் பரவாயில்லை என்று சொல்லலாம்.. தன் தாத்தாவை விட்டுக் கொடுக்காமல் தன் காதலியை திட்டும் இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார்… லட்சுமி மேனன் பாடல்களில் குறுகுறு ரியாக்‌ஷன்ஸ் காட்டி ஸ்கோர் செய்கிறார்.. ரகுநந்தனின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம்.. பிண்ணனி இசை ஈர்க்கவில்லை..

ஒரு திரைப்படம் பார்ப்பது என்பது, ஒரு ஆசிரியர் மாணவனின் தேர்வுத்தாளை திருத்துவதைப் போலத்தான்.. திருத்திக் கொண்டு இருக்கும் போதே, ஒரு கணத்தில் இவன் செண்டம் எடுப்பான் என்றோ, இவன் தேறவே மாட்டான் என்றோ..? இவன் ஜஸ்ட் பாஸ்தான் என்றோ… அடப்பாவி இந்தக் கேள்விக்கே பதில் தெரியலையாடா…. என்பது போன்றோ, ம்ம்ம்.. சூப்பர் செம்மையா ஆன்சர் பண்ணிருக்கானே.. கண்டிப்பா நல்ல மார்க் எடுப்பான் என்றோ ஏகப்பட்ட எண்ணங்கள் ஒவ்வொரு கேள்வியைக் கடக்கும் போதும் வந்து கொண்டே இருக்கும்.. அதுபோலத்தான் திரைப்படம் பார்க்கும் போதும்… இத்திரைப்படத்தின் ஆரம்பத்தில் சில நிமிடங்களைப் பார்க்கும் போது, “ம்ஹீம் இது தேறாது என்றே தோன்றியது. ராஜ்கிரண் வந்து சில காட்சிகள் சென்றவுடன் இது கண்டிப்பா டிஸ்டிங்க்‌ஷன் என்ற எண்ணம் தோன்றியது.. ஆனால் இடைவேளை முடிந்து இருபது நிமிடங்களில் ம்ஹீம் இவுங்களுக்கே அது பொறுக்கல… இது பர்ஸ்ட் க்ளாஸ் மட்டும்தான் என்று தோன்றியது… ஆனால் படம் முடியும் போது அதைக்கூட தொட்டதா…? என்ற சந்தேகம் தான் வந்தது..

இயக்குநரின் நோக்கமெல்லாம் நல்ல நோக்கமாகத்தான் தெரிகிறது.. ஆனால் அதைக் கொடுக்கின்ற முறையில் தான் கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறார். இயக்குநர் இரண்டாம் படத்தில் அந்தத் தவறுகளை சரி செய்தால், மிகச் சிறப்பான படங்களை இவரால் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது… மொத்தத்தில் இந்த மஞ்சப்பை, ராஜ்கிரணின் நடிப்பு மற்றும் அவர் வந்து செல்லும் எபிசோடுகளுக்காக, கண்டிப்பாக ஒரு முறை கொஞ்சம் பொறுமையுடன் பார்க்க வேண்டியிருக்கும்..

Wednesday, 4 June 2014

கோச்சடையானும் ரஜினி என்ற ஆளுமையும்:


ரஜினி.. தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத ஆளுமை.. நான் வலைபதிவில் எழுதத் தொடங்கி நூற்றுக்கும் மேற்ப்பட்ட பதிவுகள் எழுதிவிட்டேன்… ஆனால் இன்றுவரை ரஜினியைப் பற்றி எழுதுவதற்கான வாய்ப்புகள் அமையவே இல்லை.. முந்தைய பதிவான கிம் கி டுக் வரிசையில் ஓரிடத்தில் அவருடைய பெயரை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது, அவ்வளவே… கோச்சடையான் திரைப்படம் வெளிவந்து பத்து நாட்களுக்கும் மேலான பின்பு இந்தப் பதிவை எழுதுவதற்கான காரணம் கதை விவாதத்திலேயே காலம் கழிந்து கொண்டிருப்பதால், நேரமின்மை என்பது ஒன்று.. மற்றொன்று இந்தப் பதிவை கோச்சடையான் திரைப்படத்தின் பதிவாக மட்டுமே எழுத எனக்கு மனமில்லை… இதை ரஜினிக்கான பதிவாக எழுதவே எனக்கு விருப்பம்… இந்தப் பதிவு முழுக்க நான் அவரை சூப்பர் ஸ்டார் என்றோ…? தலைவர் என்றோ ரஜினிகாந்த் என்றோ பலருக்கும் பழக்கப்பட்ட பூடகமான பெயர்களில் அழைக்கப் போவதில்லை…. அந்தப் பெயர்களை விட ரஜினி என்ற பெயரில் ஏதோ ஒரு இனம் புரியாத கவர்ச்சியும் ஒரு விதமான நெருக்கமும் இருப்பதாக நான் உணர்கிறேன்… அதனால் இந்தப் பதிவு முழுக்க இவர் வெறும் ரஜினி மட்டுமே..


தமிழ் சினிமாவின் கால வரிசையை நியமிக்கும் முக்கியஸ்தர்களில் இந்த ரஜினி மிகமிக முக்கியமானவர்.. ஒரு சாதாரண பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தமிழ் திரைச்சூழலில் நடிப்பு நாயகனான கமலஹாசன் கால்பதிக்கத் தொடங்கியிருந்த அதே சூழலில், சிறுசிறு வேடங்களில் அறிமுகமாகி தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பாலும் படு வேகமான உடல்மொழியாலும் ரசிகர்களை மெல்ல மெல்ல தன்பால் ஈர்த்தவர்… இன்று அவருடைய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அவரது அதி தீவிர ரசிகர்கள் நடத்தும் கொலைவெறி கொண்டாட்டங்களை பார்க்கும் போது எரிச்சல்களும் அதிர்ச்சியும் ஏற்பட்டாலும், அதில் ஒரு ஆச்சரியம் கலந்திருப்பதும் உண்மை… அவரது திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகன் காத்திருக்கிறான்.. படம் வெளிவந்தவுடன் காவடி எடுக்கிறான்… அலகு குத்துகிறான்.. முடி காணிக்கை செலுத்துகிறான்.. பன்னீர் அபிஷேகம் பாலபிஷேகம் செய்கிறான்.. இப்படி ஒரு ரசிகன் ஒரு நடிகனை தன் கடவுளாக பூஜிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறான், என்றால் அந்த மனமாற்றத்தின் பிண்ணனியில் நிகழ்ந்த மர்மம் தான் என்ன என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை… ரஜினியின் திரைப்படங்கள் எத்தனையோ வந்திருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவரது அத்தனை திரைப்படங்களை விட அற்புதமான திரைக்கதையை கொண்டிருப்பது அவரது வாழ்க்கை தான் என்று எண்ணத் தோன்றுகிறது…
இன்றும் அவருடைய திரைப்படங்கள் வெளிவருகின்ற நாட்களில், அவரை எப்படியாவது அரசியலுக்கு அழைத்துச் சென்றுவிடும் ஆசையில் அணி வகுக்கும் பதாகைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது… இப்படி தன் எதிர்காலத்தையே அவரிடம் ஒப்படைக்கும் அளவுக்கு ஒர் ரசிகன் (அல்லது ஒவ்வொரு ரசிகனும்) உணர்ச்சிவசப்படுகிறான் என்றால், அந்த உணர்ச்சிவசப்படும் மனநிலையை வெறும் மடத்தனம், மூடத்தனம், அறியாமை என்னும் பழமைவாத வார்த்தைகளால் மட்டுமே பார்க்க எனக்கு மனமில்லை… அதன் உட்கூறாக ஏதோ உளவியல் சார்ந்த காரணிகளும் இருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடு எனக்கிருக்கிறது…. அந்தக் காரணிகள் என்னவாகவெல்லாம் இருக்கலாம் என்பதைப் பற்றிய விவாதமும், கோச்சடையான் திரைப்படத்தைப் பற்றி கொஞ்சம் வாதமும் தான் இந்த மொத்தப் பதிவும்…

சமீபகாலமாக சில இயக்குநர்கள் தங்கள் திரைப்படம் குறித்த தங்கள் பிரத்யேக பேட்டிகளில் ஒரு வாக்கியத்தை அடிக்கடி பயன்படுத்துவைப் பார்க்கிறேன்… ’அது ”நான் கருத்து சொல்வதற்காக படம் எடுக்கவில்லை… சினிமா அதற்கான களமும் அல்ல” என்பதாக இருக்கிறது அந்த வாக்கியம்..’ எனக்கு இதன் அர்த்தம் விளங்கவே இல்லை… அதுயெப்படி எந்தவொரு கருத்துமே சொல்லாமல் ஒரு திரைப்படம் நீங்கள் எடுக்க முடியும்… ஒரு இரண்டரை மணி நேர திரைப்படத்தில் நீங்கள் எதுவுமே சொல்லப் போவதில்லை என்றால், ஆடியன்ஸ் ஏன் அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்.. ஆக உங்கள் திரைப்படம் எந்தக் கருத்தையுமே சொல்லவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் கூட, பலதரப்பட்ட மனநிலையுடன் உங்கள் திரைப்படத்தைப் பார்க்கின்ற ஒவ்வொரு  பார்வையாளனுக்கும் உங்களது திரைப்படம் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது… ஒவ்வொரு பார்வையாளனும் உங்களுக்குத் தெரியாமல், ஏன்..? அவனுக்கே கூட தெரியாமல் ஏதோ ஒன்றை உங்களது திரைப்படங்களில் இருந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் இந்த ரஜினி…. மற்ற ஊர்களில் எப்படி என்று எனக்குத் தெரியாது.. ஆனால் நமது ஊரில் ஒரு திரைப்படம் என்பது வெறும் திரைப்படம் அல்ல… இன்னும் நம் ஊர்களில் திரைப்படம் என்பது… பல ரசிகர்களுக்கு அவர்களது வாழ்க்கையோடு உறவாடக்கூடியது… அப்படி உறவாடி உறவாடி ஒரு கட்டத்தில் வாழ்க்கையாகவே மாறிப் போவது தான் திரைப்படம்.. நாயகனின் இடத்திலோ அல்லது நாயகியின் இடத்திலோ அவர்களுக்குப் பதிலாக தங்களை பதிலீடு செய்து, படத்தின் காட்சிகளை தங்கள் வாழ்க்கை நினைவுகளின் மீள்பதிவுகளாகவோ அல்லது கனவுகளின் நனவுகளாக எண்ணி எக்கால களிப்படையும் மக்கள் இன்னும் கூட நம் ஊர்களில் அதிகம் தான்… இக்காலத்திலேயே அதிகம் என்றால் ரஜினியின் ஆரம்பகாலத்தில் கேட்கவா வேண்டும்…

சரி… இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கிற நீங்கள் ஆணாக இருக்கின்ற பட்சத்தில் உங்களிடம் ஒரு கேள்வி… உங்களுக்கு அனுஷ்காவைப் பிடிக்குமா…? பிடிக்கும் என்றால் நீங்கள் காரணம் சொல்லத் தேவையில்லை.. ஏனென்றால் நீங்கள் ஒரு ஆண்… சரி.. நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ யாராகவும் இருந்துவிட்டுப் போங்கள்.. உங்களிடம் மற்றொரு கேள்வி. உங்களுக்கு கமல்ஹாசனை பிடிக்குமா…? பிடிக்கும் என்றால் நீங்கள் காரணம் சொல்லத் தேவையில்லை.. ஏனென்றால் அவரது நடிப்பு அப்படிப்பட்டது…. சரி உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி. உங்களுக்கு ரஜினியை பிடிக்குமா…? பிடிக்காது என்றால் காரணம் சொல்லத் தேவையில்லை.. ஒரு வேளை நீங்கள் கமலின் ரசிகராகக் கூட இருக்கலாம்…. ஆனால் உங்களுக்கு ரஜினியை பிடிக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாக கண்டிப்பாக காரணம் சொல்லியே தீர வேண்டும்… இப்படியான ஒரு வினா-விடையை எடுத்துக் கொண்டு நம் சக நண்பரை நாம் அணுகினால், பெரும்பாலும் அந்த கடைசி வினாவிற்கான பதில் ”தெரியவில்லை.. ஆனால் பிடிக்கும்…” என்பதாகவோ அல்லது அவரது “ஸ்டைல்” பிடிக்கும் என்பதாகவோ அல்லது “அவரது குணம், பகட்டு இல்லாத வாழ்க்கை, எளிமை இப்படி ஏதேனும் ஒன்று பிடிக்கும்..” என்பதாகவோ தான் பதில்கள் பெரும்பாலும் இருக்கும்..

சரி.. அனுஷ்காவின் அழகுக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது…. கமலின் நடிப்புக்கும் சினிமாவுக்கும் தொடர்பு இருக்கிறது…. ஆக அனுஷ்காவின் ரசிகர்கள் அவரது அழகைக் காண அவரது திரைப்படத்துக்கு வருகிறார்கள்… கமலின் ரசிகர்கள் அவரது நடிப்பைக் காண அவரது திரைப்படத்துக்கு வருகிறார்கள்…. சரி… ரஜினியின் ஸ்டையிலுக்கும் சினிமாவுக்கும் என்ன தொடர்பு… ஸ்டைல் என்பது சினிமாவின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே இன்று வரை இருக்கிறது…  ரஜினியின் குணம், பகட்டில்லாத வாழ்க்கை, எளிமை இவற்றுக்கும் ரஜினி நடிக்கும் திரைப்படத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா…? இதில் எதைக் காண ரஜினியின் திரைப்படத்துக்கு இப்படி ஒரு கூட்டம் குமிகிறது…. இவர்கள் இப்படி குமிவதற்க்கு ஒரே ஒரு காரணம் தான்… இவர்கள் காண விழைவது ரஜினியை… ரஜினியை மட்டும் தான்… இப்படி மக்கள் ஒரு திரைப்படத்தை பார்க்க குவிவது, அந்த திரைப்படம் சார்ந்த ஏதோவொரு அம்சத்துக்காக அல்லாமல், ரஜினி என்னும் தனிமனிதனின் வாழ்க்கை சார்ந்த ஏதோவொரு அம்சத்துக்காக என்று மாறும் அந்தப் புள்ளியில் தான் திரைப்படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், சாமானிய மனிதனின் வாழ்க்கையாக மாறும் அதிசயப்புள்ளி அமிழ்ந்து இருப்பதாக நான் கருதுகிறேன்..

எம்.ஜி.ஆர் சிவாஜி என்னும் இரு பெரும் ஆளுமைகள் திரையுலகை ஆண்டு சென்றப் பின்னர், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த இரண்டு இடங்களையும் மிகச் சரியாக ஆக்ரமித்துக் கொண்ட இருவர் ரஜினியும் கமல்ஹாசனும் தான்…. முதல் இருவருக்கும் வெவ்வேறு கட்சிகள் சார்ந்த ஒரு அரசியல் பிண்ணனி இருந்தது என்பதும், அதுவும் கூட ஏதோவொரு வகையில் அவர்கள் மக்கள் மனதில் இடம்பிடிக்க வழி செய்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.. ஆனால் ரஜினி கமல் விசயத்தில் அப்படி இல்லை.. ஆரம்பகாலத்தில் இருவருமே எந்தவித தீவிரமான அரசியல் நிலைபாடும் இல்லாமல் இருந்தவர்கள் தான்… இதில் கமல் ஒரு நடனக் கலைஞர், சிறுவயதிலேயே திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் இப்படி சில சாதகமான அம்சங்கள் அவரது வாழ்க்கையை முன்னெடுத்ததாகக் கொள்ளலாம்.. ஆனால் ரஜினி விசயத்தில் அப்படி எதுவுமே இல்லை… அவருக்கு தமிழ் மொழி தெரியாது… மிகப்பெரிய பின்புலம் கிடையாது… வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்; மிகப்பெரிய அழகன் கிடையாது... எனக்குத் தெரிந்து தமிழ் திரையிலகில் பாகவதரின் காலம் தொட்டு எம்.ஜி.ஆர் காலம் வரை செக்கச் செவேல் என்று ஒரு சிவந்த மேனி இல்லாத ஒரு நாயகனையோ அல்லது நாயகியையோ அல்லது காமெடியனையோ ஏன் துணை நடிகரைக் கூட நான் பார்த்ததில்லை…. ஆனால் ரஜின் கமல் காலகட்டங்களில் தான் பாலசந்தர் பாரதிராஜா போன்றோரின் கைவண்ணத்தில் ஒப்பனை இல்லாத சில முகங்கள் சினிமாவின் சட்டகத்துக்குள் தென்படத் தொடங்கின… அதுவரை திரையுலக பிரமுகர்களை ஏதோ தேவலோக இந்திரர்கள், கன்னிகைகள் என்கின்ற ரீதியில் தான் மக்கள் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்…. ஆனால் தன்னுடைய உருவத்துடன் ஒப்பிடுவதற்கு ஏற்றார் போல் நாயகர்களை காணத் தொடங்கிய பின்னர் தான் நாயகனின் இடத்தில் தன்னைப் பதிலீடு செய்யும் மனோபாவம் தலைதூக்கத் தொடங்கியிருக்கலாம் என்றும் எண்ணுகிறேன்…

மேலும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தான் கருப்பாக இருக்கிறோம் என்பதே ஒரு மிகப்பெரிய மனக்குறையாக இருந்த காலங்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்… (எங்கள் நெருங்கிய சொந்தத்தில் ஒரு பெரியப்பாவுக்கு அந்த மனக்குறை உண்டு.. அவர் ஒரு தீவிர ரஜினி ரசிகரும் கூட…) அவர்களுக்கு அதே ரீதியில் யோசித்து யோசித்து தன்னம்பிக்கை என்பதும் கூட தளர்வாக இருக்கும்… அந்தக் காலகட்டத்தில் தான் கருப்பு என்பதும் ஒரு கலர்தான் என்பதை நமக்கு நினைவுறுத்தும் விதமாக திரையுலகில் ஒரு நட்சத்திரமாக ரஜினி மின்னத் தொடங்குகிறார்… அவரது அதீத தன்னம்பிக்கையுடன் கூடிய நடை உடை பாவனைகள் கூனிக் குருகி அமர்ந்திருந்தவர்களை எல்லாம் நிமிர்ந்து உட்காரச் செய்து புளகாங்கிதம் அடையச் செய்கின்றன… கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அவரைக் கொண்டாடத் தொடங்குகின்றனர்… அதே நேரத்தில் அவர் கச்சிதமாக எம்.ஜி.ஆர் விட்ட பாதையை பிடித்துக் கொள்கிறார்…. திராவிட சிந்தனைகள், பொதுவுடைமை கோட்பாடுகள், தத்துவங்கள், தாய்ப் பாசம் என கொஞ்சம் கொஞ்சமாக நூல் பிடித்து நூல் பிடித்து இன்று இந்த இமாலய உயரத்தை அடைந்திருக்கிறார்… இவரின் வழித்தோன்றிகளாக கருதப்படும் விஜயோ அஜீத்தோ சிவகார்த்திகேயனோ…? இவரது இடத்தைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லவே இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது…

ஏனென்றால் நீங்கள் நன்றாகப் பார்த்தால், ரஜினியின் எந்தத் திரைப்படத்திலுமே சமூகத்தைக் கெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கவே இருக்காது, உதாரணமாக படிக்காமல் சுற்றுவதை தவறில்லை என்று வாதிடுவது போன்ற காட்சிகளோ, குடி கூத்துக்கு வக்காலத்து வாங்குவதான காட்சிகளோ…? இம்மியளவும் இருக்காது… புகை பிடிக்கும் காட்சிகள் பல திரைப்படங்களில் வந்தாலும், அதை நியாயப்படுத்துவதான வசனங்கள் இருக்கவே இருக்காது… இப்படி தன் இமேஜை இம்மியளவும் மக்களிடம் சிதையாமல் பார்த்துக் கொண்டவர் ரஜினி… அதனால் தான் சொல்கிறேன்.. “தண்ணியடிச்சா தப்பாமா…? திட்றாங்க…. அப்பாம்மா…” என்று பீலிங்க் கொட்டும் சிவாவுக்கு அந்த இடமெல்லாம் சாத்தியமேபடாது என்று…

மேலும் மேலே சொன்ன மூவருமே ரசிகர்களாகக் கொண்டிருப்பது இளைஞர்கள் மற்றும் இளைஞிகளையே… இவர்களின் ரசனை நிலையானதாக இருப்பது கேள்விக்குறியே… ஆனால் ரஜினிக்கோ அவரது ரசிகர்கள் என்பவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் இருந்தே அவரது ரசிகர்களாக பிந்தொடருபவர்களாகவே இருப்பார்கள்… இவர்கள் அவ்வளவு எளிதில் மாறிவிடுவது இல்லை… ஏன் உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்… எனக்கு விவரம் தெரிந்து நான் முதன்முதலில் பார்த்த ரஜினி திரைப்படம் 1987ல் வெளிவந்த மனிதன் திரைப்படம்… அதைப் பார்த்த அனுபவம் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது… எனக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த இரண்டு விசயங்கள் உண்டு என்றால், ஒன்று தேங்காய் பர்ப்ஃபி… மற்றொன்று ரஜினி… இரண்டின் மீதும் இன்றுவரை கொண்ட ஆசை குறையவே இல்லை… இது எங்கள் குடும்பத்துக்கு மட்டும் தெரிந்த விசயம் இல்லை… எங்கள் உறவினர் வட்டத்தில் பலருக்கும் தெரிந்த விசயம்… என்னை சமாதானம் செய்யவேண்டும் என்றால், ஒரு ரஜினியின் புகைப்படம் கொடுத்தால் போதும்… இல்லை ஒரு ரஜின் திரைப்படத்துக்கு கூட்டிச் செல்கிறேன் என்று வாக்கு கொடுத்தால் போதும்.. சிலர் இதனை மனதில் வைத்துக் கொண்டு என்னைக் கிண்டல் செய்வது போல் என்னை ரஜினி என்றே அழைப்பர்… ரஜினியின் புகைப்படங்கள் எந்த பத்திரிக்கை புத்தகத்தில் வந்தாலும் அதை கத்தரித்து சேகரிப்பது என்பதும் அந்த காலகட்டங்களில் எனக்கு விருப்பமான பொழுதுபோக்கு… என்னைப் போலவே என் மாமன் மகன் ஒருவரும் தீவிர ரஜினி ரசிகர்… ஆனால் அவரது அப்பாவும் என் தாய் மாமாவுமான சந்திரன் மாமாவோ தீவிர கமல் ரசிகர்.. என் மாமன் மகனை சந்தோசப்படுத்துவதற்காக ஒரு கோடை விடுமுறையில் சிவகாசி நோக்கி பயணிக்கும் போது நான் என் தொகுப்பில் இருந்த ஒரு அழகான ரஜினி ஸ்டிக்கரை அவருக்காக எடுத்துச் சென்று, அதை இருவரும் சேர்ந்து அவரது தந்தையை வெறுப்பேற்றும் விதமாக நிலைக்கண்ணாடியில் ஒட்டி வைத்தோம்…. அவரும் சிரித்துக் கொண்டே விட்டுவிட்டார்…. இன்றும் அந்தப் புகைப்படம் அந்தக் கண்ணாடியில் இருக்கிறது… இன்றும் அதைப் பார்க்கும் போதெல்லாம் அப்போது இருந்த அந்த தீவிர ரஜினி மனநிலையை எண்ணி ஒரு புன் முறுவல் பூப்பதை தவிர்க்க முடிவதில்லை…

கோச்சடையான்:

சரி… இனி கோச்சடையான் பற்றி… ஏற்கனவே சொல்லியாயிற்று…. ரஜினியின் திரைப்படங்கள் என்பவை திரைப்பட நுட்பத்துக்காகவோ அல்லது திரைப்பட செறிவுக்காகவோ பார்க்கப்பட வேண்டியவையோ பார்க்கப்படுபவையோ அல்ல… அவை முற்றிலும் ரஜினிக்காக மட்டுமே பார்க்கப்படுபவை… இந்தக் கோச்சடையானும் கிட்டத்தட்ட அப்படித்தான்… மோசன் கேஃப்சரிங்க் என்னும் உடலசைவைப் படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு முதன்முதலாக இந்திய மொழிகளில் ஒன்றான தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்ற ரீதியில் மட்டும் இது திரையிலகம் சார்ந்தும் பேசப்படும் படமாக இருக்கும்.. அவை தவிர்த்து ஒரு முள்ளும் மலரும் போன்றோ பாட்ஷா போன்றோ ஒரு அற்புதமான கதையாடலுக்காகவோ அல்லது திரைக்கதை உத்திக்காகவோ பாரட்டப்படும் படமாக இருக்குமா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்பதே என் பதிலாக இருக்கும்..

அதற்காக ஒரு மோசமான கதையாடலோ திரைக்கதையோ இதில் இருக்கிறது என்று சொல்லவரவில்லை… புதுமையில்லாத சராசரி சுவாரஸ்யம் உள்ள கதையும் திரைக்கதையும் இருக்கிறது… ஆனால் அந்தக் கதையையும் திரைக்கதையையும் ரஜினி என்னும் பிம்பம் சிதைத்துவிடுவதும் உண்மை என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்… எப்படியும் நம் அனைவருக்குமே தெரியும்.. ரஜினி ஒருவரைக் கொல்ல முயலுகிறார் என்றால் கண்டிப்பாக அந்த ஆள் கெட்டவனாகத்தான் இருப்பான் என்று…. இதுபோன்ற ஒருமை சார்ந்த பிம்பங்கள்தான் திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் கொன்றுவிடுகிறது… ஆனாலும் படத்தில் சில சுவாரஸ்யமான இடங்களும் இருக்கின்றன… அதில் எனக்குப் பெரிதும் பிடித்த இடம் கோச்சடையான் தளபதி தன் நாட்டு வீரர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களை எதிரி நாட்டு மன்னனின் இடத்தில் பிணைக்கைதியாக விட்டுவிட்டு நாடு திரும்பும் இடம்… அந்த இடத்தில் ஒரு வசனம் வரும்… ”எல்லா போராட்டமும் உயிர் வாழ்வதற்குத்தானே..” என்கின்ற தொனியில் அமைந்த அந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது… அதுபோல் ராணாவை விட கொஞ்ச நேரமே வந்து செல்லும் கோச்சடையான் தான் வெகுவாக கவருகிறார்…

தன் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் பழைய பாணி கதைதான்… அதை கொஞ்சம் விறுவிறுப்பாக தந்திருக்கிறார்கள்…. பெரும்பாலும் குறை என்று சுட்டிக்காட்டப்படுவது தொழில்நுட்ப பிழைகளான மோசன் கேப்சரிங் பிண்ணனியைத்தான்… இதே தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்ட டின் டின் மற்றும் அவதார் போன்ற படங்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் கோச்சடையான் ஒன்றுமே இல்லைதான்… ஆனால் அவர்களின் பட்ஜெட் 1445 கோடி.. நம்முடையதோ வெறும் 120 கோடி… வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்…. அப்படி இருந்தும் இதை ஏன் செய்தார்கள் என்று கேட்டால், எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டுமே…. அதுதான் இங்கு ஆரம்பித்து இருக்கிறது என்று நான் சொல்லுவேன்…

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை… நாகேஸ் அவர்களை மீண்டும் நம் கண் முன்னே நடமாடவிட்டு அவரது உடல்மொழியை சாத்தியப்படுத்தியது என பாராட்ட பல விசயங்களும் இருக்கத்தான் செய்கின்றது… அதுபோல் குறைகளும் இல்லாமல் இல்லை… அதில் முக்கியமான குறையாகத் தெரிவது.. ரஜினியை முழுமையாக உணர முடியாமல் போவது… அவரது எக்ஸ்பிரஸ் வேகத்திலான எக்ஸ்பிரசன்கள் கூட இதில் ஆடி அசைந்து மெதுவாக வருவதைப் பார்க்கும் போது மோசன் கேஃப்சரிங்க் ரஜினியை வைத்துத்தான் பண்ணினார்களா என்கின்ற அளவுக்கு சந்தேகம் வருகிறது…. அதனாலயே சின்னக் சின்னக் குறைகள் கூட பூதாகரமாகத் தெரிவதையும் தவிர்க்க முடியவில்லை… அதுபோல ரஜினி மற்றும் நாகேஷ் அவர்களின் உருவ ஒற்றுமைக்கு உழைத்த அளவுக்கு மற்ற நடிகர்களின் உருவத்தை கொண்டு வருவதில் சிரத்தை மேற்கொண்டு உழைக்கவில்லை போலும்… நாசர், சண்முகராஜன், ஆதி போன்றவர்களை அவர்களின் குரலை வைத்துத்தான் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது… மேலும் மலைக்கு மலை தாவுவது போன்ற அதிசிரத்தையான ஹீரோயிசக் காட்சிகளை எல்லாம் தவிர்த்திருக்கலாம்… இதை ஒரு வேளை பிற நாட்டவர்கள் பார்க்க நேர்ந்தால், இந்தப் படம் போலத்தான் நம் சரித்திரக் குறிப்புகளும் இருக்கும் என்று எண்ணிக் கொள்வார்கள் அல்லவா..?

வசனங்கள் வழக்கம் போல் ரஜினியை மனதில் மையப்படுத்தியே எழுதப்பட்டதாக தெரிகிறது…. அதில் குறிப்பாக தன் சிறுவயது மகன்களான ராணா மற்றும் சேனாவுக்கு உபதேசம் செய்வது போல் சொல்கின்ற தத்துவங்கள் எல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ளத் தூண்டுபவை… நீ என்பது உன் பேர் அல்ல உன் உடல் அல்ல.. உன் உயிர் அல்ல.. உன் செயல் என்பதாக வரும் வசனம் மேலே நான் சொன்ன அவரது ஆளுமை அடையாளத்துக்கான பதில்… அதுபோல் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தும் மற்றொன்று ஆர்ட் டிபார்ட்மெண்ட்… மிகச் சிறந்த கற்பனை நயத்துடன் கட்டப்பட்டு இருக்கும் கட்டிடங்கள்…. அழகுணர்ச்சி பல இடங்களில் அள்ளுகிறது… அதுபோல ஆங்காங்கே தமிழர் பழக்கவழக்கங்களை பறை சாற்றுவதைப் போல் நம் அடையாளங்களை அள்ளித் தெளித்திருப்பதும் அருமை… அதற்காக செளந்தர்யாவுக்கு ஸ்பெசலான வாழ்த்துக்கள்… ரெஃபரன்ஸ்க்கு கூட எந்த தமிழ்படமும் கிடையாது…. முழுக்க முழுக்க இந்திய திரையுலகுக்கே புதிய தொழில்நுட்பம்… இருந்தும் துணிச்சலாக அதில் இறங்கியிருக்கும் அந்த தைரியமான முயற்சிக்காகவும் இந்த இளம் இயக்குநரைப் பாராட்டலாம்…

வெண் திரையில் ரஜினியைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என்ற ஏக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம்… அவரது அதகளமான பாடிலாங்க்வேஜ் போன்றவற்றை பார்க்கமுடியவில்லையே என்று ஏங்குபவர்கள் லிங்கா வரும் வரை காத்திருக்கலாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்… நானும் மாறித்தான் போயிருக்கிறேன்… ஆனால் ரஜினியோ ரஜினியின் திரைப்படங்களோ எந்தமாற்றமும் அடையவே இல்லை… சிறுவயதில் ரஜினி மீது இருந்ததைப் போலவே தேங்காய் பர்ஃபி மீது தீராத மோகம் உண்டு… பின்பு பல மாற்றங்களுக்கு பின்னர் இன்று அந்த அளவுக்கு அதன் மீது மோகம் இல்லை… அதே நேரத்தில் அதன் மீது வெறுப்பும் இல்லை… அதே போல்தான் ரஜினி படங்கள் மீதும் ரஜினி மீதும்… இவை உன்னதமான திரைப்படங்கள் இல்லை.. இவை காட்டுவது அப்பட்டமான வாழ்க்கை இல்லை… இவை ஒரு மனிதனை சீர்ப்படுத்த உதவாது என்பது நன்றாகவே தெரிகிறது… என்றாலும் ரஜினியின் திரைப்படங்கள் மனிதனை சீரழிக்கவும் செய்யாது என்கின்ற காரணத்தாலும் அவற்றை என்னால் இன்னும் வெறுக்கமுடியவில்லை என்பதாலும், ஒரு காலத்தில் நான் விரும்பிய தேங்காய் பர்ஃபியையும் ரஜினி படத்தையும் இன்றும் ஒரு கூட்டம் விரும்பிக் கொண்டிருக்கிறது என்பதாலும், இது போன்ற திரைப்படங்களை நான் புறக்கணிக்க முடியாத புன்னகையுடன் கடந்து செல்ல விரும்புகிறேன்….