Sunday, 15 June 2014

முண்டாசுப்பட்டி:

குறும்பட இயக்குநர்களின் அலை வீசும் காலம் இது. “காதலில் சொதப்புவது எப்படி, பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், வில்லா-2, சூது கவ்வும், பண்ணையாரும் பத்மினியும், வாயை மூடிப் பேசவும்” இந்த வரிசைப் பட்டியலில் புதிய வரவு இந்த முண்டாசுப்பட்டி.. மேற்சொன்ன படவரிசைகளை கவனித்தால், எந்தத் திரைப்படமும் வணிகரீதியாகவோ அல்லது கலை ரீதியாகவோ மிக மோசமாக சோடை போனதில்லை.. அதே நேரத்தில் அந்த வரிசைப் படங்களில் ஏதேனும் ஒன்றாவது நம் மனதில் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி, தனக்கென்று அசைக்கமுடியாத ஒரு இடத்தை பார்வையாளனிடம் அபகரித்துக் கொண்டிருக்கிறதா..? என்று கேட்டால் அதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.. ஆனாலும் பழமையான சர்க்கஸ் சிங்கம் போலப் பழக்கப்படுத்தப்பட்ட வளையங்களில் தாவிக்குதிப்பதும், மீண்டும் மீண்டும் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பின் வழியே மைதானங்களை சுற்றி சுற்றி வந்து பார்வையாளனை மகிழச் செய்ததுமான, அதரப் பழசான கதை திரைக்கதை என்னும் பந்தயக்குதிரைகளை பாதை மாற்றி கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு உலவவிட்டு, புதுவிதமான மகிழ்ச்சிகளில் பார்வையாளனை திக்குமுக்காடச் செய்த பெருமை, இந்தப் படைப்பாளிகளுக்கு கண்டிப்பாக உண்டு..


மேற்சொன்ன வரிசைப்படங்களில் சரிபாதியான படங்கள், முதலில் குறும்படமாக வந்து, பின்பு முழுநீளத் திரைப்படமாக விரிக்கப்பட்டவை.. அவை அதற்கே உரித்தான சிக்கலையும் உள்ளடக்கியவை.. இதனாலேயே காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை.. அது குறும்பட அளவிலும் என்னை ஈர்க்கவில்லை என்பது வேறுவிசயம்… ஆனால் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் அதை குறும்படமாக நான் பார்த்ததில்லை.. அது எனக்குப் பிடித்திருந்ததற்கு மிகமுக்கியமான காரணமாக நான் நினைப்பது, அது வாழ்வியலோடு தொடர்புடைய படைப்பாக அமைந்திருந்ததும், அதன் மையக் கதைச்சரடு வழக்கமான பாணியில் இல்லாமல் இருந்ததுமே… முண்டாசுப்பட்டி குறும்படமாக வந்த காலத்தில், அந்தக் கதைக்களனில் இருந்த மெல்லிய நகைசரடும், மூடநம்பிக்கை மீதான அந்த மறைமுகச் சாடலும் ஒரு மெல்லிய நகைப்பை வரவழைத்தது.. அதுவே முழுநீளத் திரைப்படமாக வரப்போகிறது என்று தெரிந்தவுடன், அது அந்தப் படக் குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றே தோன்றியது… ஆனால் அந்தச் சவாலை மிகச் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கின்றனர் முண்டாசுப்பட்டி படக்குழுவினர்…

முண்டாசுப்பட்டி குறும்படத்தை பெரும்பாலும் எல்லோரும் பார்த்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.. இருந்தாலும் அதைப் பார்க்காதவர்களுக்காக அதன் கதைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகம்.. “முண்டாசுப்பட்டி கிராமத்தின் மக்களுக்கு ஒரு விநோதமான நம்பிக்கை… புகைப்பட கருவியைக் கொண்டு நம்மை போட்டோ எடுத்தால் நாம் இறந்துவிடுவோம் என்று.. ஆனாலும் அந்தக் கிராமத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து இறக்கும் போது மட்டும் அவனது ஞாபகார்த்தமாக ஒரு போட்டோவை எடுத்துக் கொள்வர்.. இப்படி அந்தக் கிராமத்தில் உள்ள புகைப்படங்கள் எல்லாம் இறந்தநிலையில் உள்ளவர்களின் புகைப்படங்கள் தான்… இப்படிப்பட்ட அந்தக் கிராமத்தில் ஊர்ப் பெரியவர் இறந்து போகின்றார்.. அவரை புகைப்படம் எடுக்க இருவர் ஊருக்குள் வந்து போட்டோ எடுத்துச் செல்கின்றனர்… ஆனால் அந்தப் புகைப்படம் சரியாக வரவில்லை… அதற்குள் பெரியவரை எரித்துவிடுகின்றனர்.. இந்த உண்மையை ஊரில் சொல்ல பயந்துபோய், போட்டோ எடுக்க வந்த நண்பர்கள் இருவரும், வேறொரு நபரை பிணம் போல் அமர்த்தி போட்டோ எடுத்து, அதுதான் பெரியவரின் புகைப்படம் என்று சொல்லி சமாளிக்கின்றனர்… ஆனால் உண்மை தெரிந்து ஊரே அவர்களைத் துரத்த, அந்த மூடநம்பிக்கை கொண்ட ஊர் மக்களிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா…? இல்லையா..? என்பது அந்த குறும்படத்தின் க்ளைமாக்ஸ்..

இதுதான் 5-6 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தக் குறும்படத்தின் கதை.. இதை வைத்துக் கொண்டு ஒரு முழுநீளப்படம்.. அதுவும் இரண்டு மணிநேரம் இருபத்து எட்டு நிமிடங்களுக்கு… இந்த நிமிடக்கணக்கை பார்த்தவுடன் எனக்கு பயமே வந்துவிட்டது… அந்த ஐந்து நிமிடக் கதையை அளவுகோல் அளவுக்கு இவ்வளவு பெரிதாக இழுப்பதற்கு அதுயென்ன ”ஆசை” சாக்லேட் பேப்பரா…? கண்டிப்பாக சொதப்பி இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.. அந்த சொதப்பல் சில இடங்களில் வெளிப்படையாகத் தெரிந்தாலும், முழுப்படமாக பார்க்கும் போது மிகப்பெரிய இடையூறாக இல்லை… அந்த கிராமத்து மக்களுக்கு எப்படி அப்படி ஒரு மூடநம்பிக்கை வந்தது, என்பதற்கான முன்கதை வரலாற்று ரீதியாகவும் கற்பனை ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளும்படியே இருந்தது.. அந்த கிராமத்துக்கு ஒரு ஆபத்து என்பதாக ஜமீன் ஆனந்தராஜை அறிமுகப்படுத்தும் போது, அந்தக் கதாபாத்திரத்தில் இருந்த வலு, முடிக்கும் போது இல்லாமல் போனது ஒரு மென் சோகம்.. குறும்படத்தில் க்ளைமாக்சாக வரும் காட்சிதான் படத்தில் இடைவேளை பகுதி.. அதைப் பார்க்கும் போது மீண்டுமொரு அதிர்ச்சி… இனி பாதிப்படத்தை எப்படி ஓட்டப் போகிறார்கள் என்று… இருந்தாலும் க்ளைமாக்ஸையும் அதே போன்ற ஒரு தன்மையோடு கொண்ட காட்சியமைப்புடன் முடித்திருப்பதும் மற்றொரு சிறப்பு…. மூடநம்பிக்கை தொடர்பான கதைக்கு மூடநம்பிக்கையைக் கொண்டே ஒரு முடிவும் கொடுத்திருப்பதும் சிறப்பு..

இரண்டாம் பாதி எதிர்பார்த்தது போலவே பல இடங்களில் நகராமல் நொண்டி அடித்தது போல் முட்டிக்கொண்டு நின்றது… கதையை வளர்க்க வழக்கம் போல் காதலை கையில் எடுத்ததும் ஒரு குறை.. ஆனால் இந்தக் குறைகளை எல்லாம் இல்லாமல் போக்குவது மூன்றே மூன்று கதாபாத்திரங்கள் தான்.. அவர்கள், நாயகனின் நண்பனாக வரும் காளி வெங்கட், முனிஷ்காந்தாக நடித்திருக்கும் ராமதாஸ், மற்றும் அந்த சாமியார் கதாபாத்திரம்.. இந்த மூவர் மட்டுமே… இந்த மூவர் கதாபாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் படம் மிகப் பெரிய ஒரு சோர்வைக் கொடுத்திருக்கும் என்பதும் உண்மை.. சரி… இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், வழக்கம் போலத்தான் சிரிக்க வைக்கிறார்கள்… ஆனால் இவர்கள் சிரிக்கவைப்பது எல்லாம், நாம் சில ஆண்டுகளாக சிக்கிக் கொண்டு தவிக்கும் வழக்கமான ஒன்லைனர்களால் அல்ல… கதையோடு சேர்ந்த காட்சியமைப்புகளாலும், உடல்மொழிகளாலும் என்பது உண்மை.. ஆனாலும் சாமியாரின் காமெடிகளை எல்லோரும் ரசிப்பார்களா என்று உறுதியாக சொல்லமுடியாது..

இசை சீன் ரோல்டன்… வாயை மூடிப் பேசவும் திரைப்படத்தை விட இதில் சிறப்பான இசையை கொடுத்திருப்பதாக தோன்றியது… பிண்ணனி இசையில் பல இடங்களில் பொருத்தமான வித்தியாசமான ஒலித்தடங்களை கேட்க முடிந்தது… ஒரு எதிர்பார்ப்புள்ள இசையமைப்பாளராக வருவார் என்றே தோன்றுகிறது… வசனங்களும் படத்துக்கு பல இடங்களில் பெரிய ப்ளஸ்.. குறிப்பாக முனீஷ்காந்த வரும் இடங்கள்.. அதிலும் குறிப்பாக அந்தக் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் கிழவரிடம் இவர் பேசும் வசனங்களும் உடல்மொழியும் செமத்தியாக கைதட்டல் வாங்குகிறது… கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவார் என்றே தோன்றுகிறது.. எடிட்டிங் லியோ ஜான் பால்.. இன்னும் கூட பல இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம் என்றே தோன்றியது..

படத்தின் இயக்குநர் ராம்குமார். திருப்பூர்க்காரர் என்று சொல்கிறார்கள்.. நம்பிக்கையான வரவாக தெரிகிறார்.. பொறுத்திருந்து பார்க்கலாம்.. குறைகள் என்று பார்த்தால், படத்தின் நீளம், மற்றும் காதல் எபிசோடுகள்.. மற்றொரு முக்கியமான குறையாக நான் நினைப்பது, பெரும்பாலும் இதுபோன்ற குறும்பட இயக்குநர்களின் படங்களில் கதாபாத்திரங்களில் நிலைப்புத்தன்மை மற்றும் ஒரு சீரியஸ்னஸ் இருப்பதே இல்லை… ஓரிரு விதிவிலக்குகள் தவிர்த்து.. அவற்றை வெறும் பெரும்பாலும் ஒரு புனைவு மனநிலையிலேயே அணுக வேண்டியது இருப்பதால், அந்தக் கதாபாத்திரங்களுக்கு எதுவுமே நடக்காது என்பதையும் நாம் அனுமானித்து விடுகிறோம். இதுபோன்ற திரைப்படங்களைப் பார்க்கும் நமக்கு அவை மிகப்பெரிய ஆச்சரியத்தையோ அதிர்ச்சிகளையோ அழிப்பது இல்லை… அது தவிர்த்து வாழ்வியலின் சீரியஸ்னஸ் என்பதையும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் காண்பது அரிதினும் அரிதாகவே இருக்கிறது…


இருப்பினும் இது குறும்பட இயக்குநர்களின் வருகை நிமித்தமாக ஏற்பட்டு இருக்கும் ஒரு நல்ல மாற்றத்தில் இருக்கும் முக்கியமான குறை.. அதை வருங்காலங்களில் அவர்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதை தற்போது பெரிதாகப் பொருட்படுத்த தேவையில்லை… மொத்தத்தில் இந்த முண்டாசுப்பட்டி சிரிக்க வேண்டும் என்ற மனநிலையில் செல்லும் ரசிகனை கண்டிப்பாக ஏமாற்றாது என்பதை முண்டாசுப்பட்டியின் குலதெய்வம் ’வானமுனி’யின் மீது ஆணையிட்டுச் சொல்லலாம்…

1 comment:

  1. சிரித்து சிரித்து வயிறு வலித்தது, சில இடங்களில் தலையும் வலித்தது

    ReplyDelete