இயக்குநர் சற்குணத்தின் தயாரிப்பில் இருந்து,
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் திரைப்படம்
மஞ்சப்பை.. இத்திரைப்படத்தின் ட்ரைலர் எனக்கு பிடித்திருந்தது.. அதனால் விமலின் எச்சரிக்கை
முகம் போஸ்டரில் தெரிந்தும், துணிந்து இப்படத்தைப் பார்க்க முடிவு செய்திருந்தேன்..
ஆனால் முதல் நாள் இரண்டாம் காட்சிக்கே திரையரங்கு கிட்டதட்ட நிரம்பியிருந்ததைப் பார்த்தபோது
மிகுந்த ஆச்சர்யமாகவே இருந்தது.. கண்டிப்பாக அந்தக் கூட்டம் விமலின் நடிப்பைக் காண
வந்த கூட்டமாக இருக்காது என்று தெரியும்… ஒரு வேளை லட்சுமி மேனனுக்கான கூட்டமாக இருக்குமோ
என்று தோன்றிய ஆருடத்தை உறுதி செய்வதைப் போல் லட்சுமிக்கான முதல் காட்சியில் ஆங்காங்கே
கைதட்டலும் சீல்க்கை ஒலியும் இருந்தது… ஆனால் அதற்காக மட்டும் வந்த கூட்டமாக இருக்காது,
திருப்பதி ப்ரதர்ஸ் வெளியீடு என்பதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறிப் போய்
கூட்டம் வந்திருக்கும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்..
படம் ஒரு பாடலுடன் தொடங்கியது… அது மாஸ்
ஹீரோ வகையறாக்களுக்கான தனிநபர் துதி பாடும்
பாடல் போல இல்லாமல், ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான அன்பைப் பற்றியப் பாடலாக இருந்தது
ஒரு சின்ன ஆறுதல்… அந்தப் பேரன் வளர்ந்துவிட்ட விமலாக மாறி, வழக்கம் போல சாலையோர சந்திப்பில்
லட்சுமியைப் பார்த்து, சைட் அடிக்கக்கூட நேரம் ஒதுக்காமல் அவசரகதியில் காதலில் விழும்
அந்த நொடியில் இருந்து ஒரு இருபது இருபத்தைந்து நிமிடத்துக்கு நமக்கு பெருத்த சோதனை
காலம்… விமலின் தாத்தாவாக வரும் ராஜ்கிரண் சென்னையில் காலடி வைக்கும் இடத்தில் இருந்து
தான் படமே தொடங்குகிறது என்று நாம் நினைக்கிறோம்.. ஆனால் படத்தின் கதையென்ன… அது எங்கு
தொடங்குகிறது என்பது படம் முடிந்தப் பிறகும் புரியாமல் முழிக்கும் மனநிலையில் தான்
வெளிவருகிறோம்…
இயக்குநர் ராகவன் அவர்களுக்கு இது முதல்படம்..
படத்தின் கதை ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசம் என்றோ… அல்லது இந்த இயந்திரகதியான
வாழ்க்கையால் நாம் இழந்திருக்கும் அன்பு, மனிதநேயம் இவைதான் கதை என்றோ… அல்லது தலைமுறை
மாற்றத்தால் நாம் இழந்திருக்கும் நல்ல விசயங்கள் தான் கதை என்றோ அவர் சொல்ல முற்பட்டால்,
அதற்கான என் பதில் ”இவை எல்லாமே திரைப்படத்தில் இருக்கிறது… ஆனால் அவை காட்சிகளில்
இருக்கிறதே தவிர கதையாக இல்லையே…” என்பதே.. இந்தப் பதிவைப் படிக்கின்ற உங்களுக்குப்
புரியும் படி கதையை மூன்று நான்கு வரிகளில் சொல்கிறேன்… உங்களால் கதை எதைப்பற்றியது
என்று தீர்மானிக்க முடிகிறதா..? என்று முயற்சித்துப் பாருங்கள்… “படித்து நகரத்தில்
நல்ல வேலையில் இருக்கும் பேரனை தேடி வரும் ஒரு தாத்தாவின் சில பழமைவாத நடவடிக்கைகள்
அங்கு பேரனோடு சுற்றத்தில் வசிப்பவர்களுக்கும் ஏன் ஒரு கட்டத்தில் அவனுடைய காதலிக்குமே
தொல்லையாகத் தெரிகிறது… ஒரு கட்டத்தில் அந்த தாத்தாவின் முட்டாள்தனமான நடவடிக்கையால்
பேரனே பெரும் பாதிப்புக்குள்ளாக அவன் தாத்தாவை திட்டிவிடுகிறான்… பின்னர் உங்களை சோகத்தில்
ஆழ்த்துவதைப் போல் ஒரு க்ளைமாக்ஸ்…” இப்போது சொல்லுங்கள் படம் எதைப்பற்றி சொல்ல வருகிறது.
பொதுவாக மஞ்சப்பை என்று சொல்வது, பழமைவாதத்தில்
ஊறிய நபர்களை, அல்லது இந்தக்கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறாத மனிதர்களை கிண்டல் செய்ய
புழக்கத்தில் இருக்கும் வார்த்தை.. படத்தில் தாத்தாவாக வரும் ராஜ்கிரண் செய்யும் பல
செயல்கள் பழமைவாத செயல்கள் தான்.. மரத்தில் ஏறி வேப்பங்குச்சி ஒடிப்பது, வீட்டு வைத்தியம்
அதாவது பாட்டி வைத்தியம் செய்வது, நாம் மறந்த போன சத்தான உணவுகளை சாப்பிடக் கொடுப்பது,
பக்கத்தில் வசிப்பவர்களுடன் உண்மையான பாசத்தோடு பழகுவது, யார் தப்பு செய்தாலும் உரிமையுடன்
அதைத் தட்டிக் கேட்பது இப்படி தலைமுறை மாற்றத்தால் நாம் பல காலங்களுக்கு முன்பே தொலைத்திருக்கும்
பல நல்ல விசயங்களைக் கடைபிடிக்கும் நபராக ராஜ்கிரண் வருவதால், அவரை முன் வைத்தே படத்தின்
டைட்டில் மஞ்சப்பை என்று வைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்..
ஆனால் இப்படி பல நல்ல விசயங்களை நாம் இழந்திருப்பதால்,
நாம் எவ்வளவு பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதைத் தான் படம் பேசுகிறது என்றும்
முழுமனதுடன் ஒப்புக்கொள்ள முடியவில்லை.. ஏனென்றால் அடுத்து ராஜ்கிரண் செய்யும் சில
முட்டாள்தனமான நடவடிக்கைகள் கதை அதுவல்ல என்று சொல்லாமல் சொல்வதைப் போல் ஒரு மிகப்பெரிய
முரணை கதையில் ஏற்படுத்திவிடுகிறது… மேலும் என்னதான் படிக்காத மனிதர்களாக இருந்தாலும்
இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொள்வார்களா..? என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை..
அதிலும் குறிப்பாக தாத்தா செய்த முட்டாள்தனமான ஒரு நடவடிக்கை கூட நன்மையாக முடிந்தது
என்று முடித்திருக்கும் முறை எல்லாம் மிகுந்த நாடகத்தன்மை… அதுபோக ஆங்காங்கே வரும்
காதல் எபிசோடுகளும் பாடல்களும் வேறு அலுப்பை கொடுக்கிறது… இரண்டாம் பாதியில் வழக்கமான
பாணியில் எல்லோரும் தாத்தாவை விரும்பத் தொடங்குவதுமான நாடகப் பாணியிலான காட்சிகள் எல்லாம்
திரைக்கதையில் மிகப்பெரிய தொய்வு ஏற்படுத்தும் இடங்கள்..
படத்தின் நாயகன் கண்டிப்பாக ராஜ்கிரண் தான்..
சென்னைக்கு அவர் வந்து இறங்கும் அந்த இடம் முதல் இடைவேளை வரை படம் அலுப்பு தெரியாமல்
குறைந்தபட்ச சுவாரஸ்யத்துடன் செல்கிறது... படத்தில் ராஜ்கிரண் அவர்களுக்கு நான்கு நிமிடம்
வருவதைப் போல் ஒரு மாண்டேஜ் சாங்க் வருகிறது… செம்ம ரகளையான பாடல் அது… அதுபோக சில
அற்புதமான காட்சிகளும் கூட இருக்கின்றது… உதாரணத்துக்கு அந்த “ஐ டோண்ட் நோ” காட்சியை
சொல்லலாம்.. அதுபோலத்தான் கடற்கரையில் இறந்து போனவர்களுக்காக ஆதரவு சொல்ல ராஜ்கிரண்
முனையும் காட்சியும்… இப்படி துண்டு துண்டாக ஆங்காங்கே சில காட்சிகள் நல்ல அனுபவத்தைக்
கொடுத்தாலும் மொத்தமாக படம் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கத் தவறிவிடுகிறது… விமல் பிற
படங்களுக்கு இதில் பரவாயில்லை என்று சொல்லலாம்.. தன் தாத்தாவை விட்டுக் கொடுக்காமல்
தன் காதலியை திட்டும் இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார்… லட்சுமி மேனன் பாடல்களில்
குறுகுறு ரியாக்ஷன்ஸ் காட்டி ஸ்கோர் செய்கிறார்.. ரகுநந்தனின் இசையில் இரண்டு பாடல்கள்
ஓகே ரகம்.. பிண்ணனி இசை ஈர்க்கவில்லை..
ஒரு திரைப்படம் பார்ப்பது என்பது, ஒரு ஆசிரியர்
மாணவனின் தேர்வுத்தாளை திருத்துவதைப் போலத்தான்.. திருத்திக் கொண்டு இருக்கும் போதே,
ஒரு கணத்தில் இவன் செண்டம் எடுப்பான் என்றோ, இவன் தேறவே மாட்டான் என்றோ..? இவன் ஜஸ்ட்
பாஸ்தான் என்றோ… அடப்பாவி இந்தக் கேள்விக்கே பதில் தெரியலையாடா…. என்பது போன்றோ, ம்ம்ம்..
சூப்பர் செம்மையா ஆன்சர் பண்ணிருக்கானே.. கண்டிப்பா நல்ல மார்க் எடுப்பான் என்றோ ஏகப்பட்ட
எண்ணங்கள் ஒவ்வொரு கேள்வியைக் கடக்கும் போதும் வந்து கொண்டே இருக்கும்.. அதுபோலத்தான்
திரைப்படம் பார்க்கும் போதும்… இத்திரைப்படத்தின் ஆரம்பத்தில் சில நிமிடங்களைப் பார்க்கும்
போது, “ம்ஹீம் இது தேறாது என்றே தோன்றியது. ராஜ்கிரண் வந்து சில காட்சிகள் சென்றவுடன்
இது கண்டிப்பா டிஸ்டிங்க்ஷன் என்ற எண்ணம் தோன்றியது.. ஆனால் இடைவேளை முடிந்து இருபது
நிமிடங்களில் ம்ஹீம் இவுங்களுக்கே அது பொறுக்கல… இது பர்ஸ்ட் க்ளாஸ் மட்டும்தான் என்று
தோன்றியது… ஆனால் படம் முடியும் போது அதைக்கூட தொட்டதா…? என்ற சந்தேகம் தான் வந்தது..
இயக்குநரின் நோக்கமெல்லாம் நல்ல நோக்கமாகத்தான்
தெரிகிறது.. ஆனால் அதைக் கொடுக்கின்ற முறையில் தான் கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறார்.
இயக்குநர் இரண்டாம் படத்தில் அந்தத் தவறுகளை சரி செய்தால், மிகச் சிறப்பான படங்களை
இவரால் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது… மொத்தத்தில் இந்த மஞ்சப்பை, ராஜ்கிரணின்
நடிப்பு மற்றும் அவர் வந்து செல்லும் எபிசோடுகளுக்காக, கண்டிப்பாக ஒரு முறை கொஞ்சம்
பொறுமையுடன் பார்க்க வேண்டியிருக்கும்..
Nandri Inba Pakirnthu kondamaikku
ReplyDelete